Monday, May 20, 2019

ரிஷாத், அசாத்சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை அரச பதவிகளில் வைத்துக்கொண்டு பிரச்சினைக்கு தீர்வு தேட முடியாது. ரத்ன தேரர்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அதிபயங்கர நிலைமைக்கான தீர்வினை அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ஆளநர்களான அசாத்சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை அரச அதிகாரங்களில் வைத்துக்கொண்டு காண முடியாது என்றும் அவர்கள் உடனடியாக அப்பதவிகளிலிருந்து தூக்கி எறியப்படவேண்டும் என்றும் அத்துரலிய ரத்ன தேரர் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முழு அரசாங்கத்தின் கவனயீனமே இவ்வாறு மிலேச்சத்தனமான சம்பவம் நடைபெறுவதற்கு இடமளித்துள்ளது என்றும் அதற்கான பொறுப்பினை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் ரணில் விக்கிரமசிங்க போன்றவர்களை பிரதமராக்கி நாம் தவறிழைத்து விட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.

அவரது செவ்வியின் முழுவடிவம் :

கேள்வி:- இலங்கையில் அடிப்படைவாதம் பாரிய அளவில் பரவியுள்ளதாக எந்த அடிப்படையில் கூறுகின்றீர்கள்?

பதில்:- தீவிரவாத தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரானை எடுத்துக்கொண்டால் அவருக்கு மனைவி, அழகான குழந்தைகள் இருக்கின்றார்கள். ஆனால் அவர் அனைத்தையும் மறந்து தனது உயிரை மாய்க்கும் அளவிற்கு சிந்தித்திருக்கின்றார். இஸ்லாம் மதத்தின் அடிப்படைவாதக் கருத்துக்குள் உள்வாங்கப்பட்டு மூளைச் சலவை செய்யப்பட்டே இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார். இதனை விட இந்த தற்கொலை தாக்குதலில் உயிர்களை மாய்த்தவர்கள் தமது குடும்பத்தார், சிறு குழந்தைகள் என அனைவரையுமே மாய்க்கும் அளவிற்கு முடிவுகளை எடுத்திருக்கின்றார்கள். பெண்ணே உயிரை மாய்க்கும் முடிவை எடுத்திருக்கின்றார்.

ஆகவே இவ்வாறான பாரதூரமான அடிப்படைவாதம் எவ்வாறு வேரூன்றியது என்று சிந்திக்க வேண்டும். உலகத்தில் இஸ்லாமிய வஹாப் வாத நிலைப்பாட்டினால் அடிப்படைவாதம் உருவெடுக்கின்றது. இந்த வஹாப் வாதம் கடந்த 20 வருடங்களாக இலங்கையினுள் பாரிய அளவில் உள்ளீர்க்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய கல்வியின் பெயரில் பாடசாலைகளில், மத்ரஸாக்களில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய தலைவர்களால் இவ்வாறு அடிப்படைவாதத்தை நோக்கிய கற்பித்தல் நடைபெற்றுவருகின்றது. ஆகவே, இந்த விடயங்களை தடுப்பது பற்றிச் சிந்திக்காது அடிப்படைவாதத்தினை இல்லாதொழிப்பது பற்றி பேசுவதில் பயனில்லை.

கேள்வி:- அடிப்படைவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பில் புலனாய்வுத்தகவல்கள் முன்கூட்டியே கிடைத்ததாக கூறியுள்ளீர்களே. அவை எந்தகாலப்பகுதியில் கிடைத்தன? எவ்வாறான தகவல்கள் கிடைத்திருந்தன என்பதை கூற முடியுமா?

பதில்:- ஆம், இரண்டு வருடங்களுக்கு முன்னதாக என்று கருதுகின்றேன். ஆபத்தான அடிப்படைவாதக்குழுக்கள் எமது நாட்டினுள் இருப்பதாக புலனாய்வு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்திருந்தன. இந்த தகவல்கள் அரசாங்கத்திடத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. அத்தருணத்தில் நானும் அவ்வகையான குழுக்கள் பற்றிய சில தகவல்களை அரசாங்கத்திடத்தில் விரிவாக கூறியிருந்தேன்.

அதனடிப்படையில் அரசாங்கத்திற்கு அடிப்படைவாதிகள் சம்பந்தமான தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்தன. எனவே, அரசாங்கம் எதுவும் தெரியாது என்று கூறி தப்பித்துக்கொள்ள முடியாது.

கேள்வி:- ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் மற்றும் இத்தகைய தாக்குதல்கள் நடத்தவல்லவர்கள் இருக்கின்றார்கள் உள்ளிட்ட தகவல்களும் கிடைத்திருந்தனவா?

பதில்:- ஐ.எஸ் அமைப்புடன் நேரடியாக தொடர்புடையவர்கள் என்றில்லை. ஆனால், அடிப்படைவாதிகள் மற்றும் உலக தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்புடையவர்கள் ஆகவே, ஆபத்தினை ஏற்படுத்தக்கூடியவர்கள் என்ற அளவிற்கே தகவல்கள் கிடைத்திருந்தன. அத்தகவல்களே அரசாங்கத்திடத்தில் கையளிக்கப்பட்டன.

கேள்வி:- இந்த தகவல்கள் அரசாங்கத்திடம் வழங்கப்பட்டதாக பொதுப்படையாக கூறுகின்றீர்கள். ஆனால் ஜனாதிபதி, பிரதமர் போன்றவர்கள் யாராவது இதன்போது இருந்தார்களா?

பதில்:- ஆம், ஜனாதிபதியிடத்தில் தான் தகவல்கள் முன்வைக்கப்பட்டன.

கேள்வி:- தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டு விளக்கங்கள் அளிக்கப்பட்ட பின்னர் அந்தச்சந்திப்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்கள் எடுக்கப்படவில்லையா?

பதில்:- தகவல்கள் விளக்கமாக ஜனாதிபதியிடத்தில் முன்வைக்கப்பட்டன. அதன்போது தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை. அதற்கு அடுத்து என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று என்னால் பதிலளிக்க முடியாது.

ஆனால் அடிப்படைவாதக்குழுக்கள் பற்றிய தகவல்கள் முன்கூட்டியே அறியப்பட்டிருந்தன என்பதை தான் என்னால் கூற முடியும்.

கேள்வி:- அடிப்படைவாதக்குழுக்கள் சம்பந்தமாகவும், தாக்குதல்கள் சம்பந்தமாகவும் முன்கூட்டியே அறியப்பட்டிருக்கின்ற நிலையில் அதுகுறித்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லையே?

பதில்:- ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முழு அரசாங்கத்தின் கவனயீனமே இவ்வாறு மிலேச்சத்தனமான சம்பவம் நடைபெறுவதற்கு இடமளித்துள்ளது. அதற்கான பொறுப்பினை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

ரணில் விக்கிரமசிங்க போன்றவர்களை பிரதமராக்கி நாம் தவறிழைத்து விட்டோம். கடந்த காலங்களில் புலனாய்வுத்துறை உட்பட முழு பாதுகாப்புத் துறையையும் பலவீனப்படுத்தும் செயற்பாடுகளையே அரசாங்கம் செய்துள்ளது. அதன் பிரதிபலனையே தற்போது அனுபவிக்கின்றோம். இன்னமும் ஆறுமாதங்களில் நாட்டை பாதுகாக்கின்ற - நேசிக்கின்ற புதிய தலைமைத்துவத்தினை நாம் கொண்டுவருவதே ஒரே தீர்வாக அமையும்.

கேள்வி:- தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று மூன்று வாரங்களின் பின்னர் இனமுறுகலை ஏற்படுத்தும் சம்பவங்கள் தோற்றுவிக்கப்படுகின்றவே?

பதில்:- இதனைக் கட்டுப்படுத்த வேண்டியது ஆட்சியாளர்களின் பாரிய பொறுப்பாகின்றது. ஆட்சியாளர்கள் அரசியல், சமய தலைவர்களை ஒருங்கிணைத்து இனமுறுகல்களை தோற்றுவிக்காத செயற்றிட்டமொன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஆனால் ஆட்சியாளர்கள் அதனை செய்வதாக இல்லை. அரசியல் இலாபத்தினை ஈட்டுவதற்கே விளைகின்றார்கள்.

மேலும், பொதுமக்கள் ஒருவிடயத்தினை புரிந்துகொள்ள வேண்டும். இனங்களுக்கு இடையிலான முரண்பாட்டு நிலைமைகள் தோற்றம் பெறுவதால் சர்வதேசத்தின் தலையீட்டிற்கே அது வழிவகுக்கும். ஆகவே கூடிய வரையில் அதற்கான தூண்டல்களை வழங்கினாலும் அதிலிருந்து விலகியிருந்து நாட்டின் எதிர்காலம் பற்றிச் சிந்திக்க வேண்டும். உடலால் மோதுவதைவிடவும் மூளையால் சிந்திப்பதே மிக முக்கியம்.

இதனைவிடவும், தீவிரவாதத்தினை கட்டுப்படுத்துவதற்கு புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தினை அமுலாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அமைச்சரவையில் அனுமதி பெறப்பட்டு பாராளுமன்றக் குழுவிற்கு அனுமதிபெறப்பட்டுள்ளது. யாரின் தேவைக்காக இந்தச் சட்டம் கொண்டுவரப்படுகின்றது. புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தினை கொண்டுவருவதை விடவும் அரசியல் தலைமைத்துவங்களின் பங்கேற்புடன் தேசிய செயற்பாட்டு சபையை உடன் நிறுவ வேண்டும். இதுவே நாட்டின் நல்லிணக்கத்தினை பாதுகாப்பதற்கு உதவும். மேலும் முஸ்லிம் தலைமைகளும் வெளிப்படையாக முன்வந்து செயற்பட வேண்டும்.

கேள்வி:- அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத்சாலி ஆகியோர் மீது எந்த அடிப்படையில் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றீர்கள்?

பதில்:- தற்கொலை தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டவர்களுடன் காணப்படும் தொடர்புகள் உட்பட பல விடயங்களில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குறித்த தகவல்கள் இருக்கின்றன. அதனடிப்படையில் அவர் மீது பலத்த சந்தேகங்கள் உள்ளன. ஆகவே அவரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டியது அவசியமாகின்றது.

அதேபோன்று மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோர் பாரிய இனவாத கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். ஆகவே, அவர்களிடத்திலும் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. எனவே அமைச்சுப்பதவியிலும், ஆளநர் பதவியிலும் இவர்களை தொடர்ந்தும் நீடித்திருக்கும் வகையில் பேணிக்கொண்டு பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தேட முடியாது.

ஆகவே, அவர்களை உடனடியாக அரச அதிகாரத்திலிருந்து நீக்க வேண்டும். அதன் பின்னர் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

கேள்வி:- அரசாங்கத்தில் தீர்மானிக்கும் சக்திகளில் ஒன்றாக இருக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தரப்பு காணப்படுகின்ற நிலையில் அவர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றி பெறும் என்று கருதுகின்றீர்களா?

பதில்:- ஆம், தற்போது அவர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை 64 உறுப்பினர்களின் கையொப்பத்துடன் சபாநாயகரிடத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலும் பல உறுப்பினர்கள் ஆதரவளிப்பதாக என்னிடத்தில் கூறியுள்ளார்கள். குறிப்பாக, ஐ.தே.கவின் உறுப்பினர்களும் ஆதரவளிப்பதாக கூறியுள்ளார்கள்.

கேள்வி:- ஐ.தே.க தரப்பில் அவ்வாறு ஆதரவளிப்பது பற்றிக்கூறப்படவில்லை என்று உறுதியாக தெரிவிக்கப்படுகின்றதே?

பதில்:- இரண்டு உறுப்பினர்கள் ஊடக சந்திப்பில் அவ்வாறு கூறியிருக்கலாம். ஆனால் ஐ.தே.க.உறுப்பினர்கள் ஆதரவளிப்பதாக கூறியுள்ளார்கள். நாட்டின் எதிர்காலத்தினை சிந்திப்பவர்கள் எதிர்க்க மாட்டார்கள். ஆகவே, அதுபற்றி தற்போது குழப்பமடைய வேண்டியதில்லை.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com