Monday, May 20, 2019

சுயபரிசோதனை- பாகம்-1 வை எல் எஸ் ஹமீட்

அது ஒரு ரம்மியமான காலம். நமக்கென்று தனியான இஸ்லாமிய கலாச்சாரம். இஸ்லாமிய இலக்கியம். இஸ்லாமியக் கலை. பொல்லடி, கிராமியக்கவி, குரவை, ஆராத்தியெடுத்தல்....அப்பப்பா, எத்தனையோ கலை அம்சங்கள்.

மீலாதென்றால் ஊரெல்லாம் களைகட்டும். ஒரு கந்தூரி என்றால் அந்த நார்சாவிற்காக அந்த ஊரே அன்று எதிர்பார்ப்புடன் இருக்கும். திருமண நிகழ்வுகள் கலாச்சார பாரம்பரியங்களால் கலகலக்கும். நினைக்கும்போதே இனிமையாக இருக்கிறது. அந்தக்காலத்தை மீண்டும் ஒரு முறை தரிசிக்க முடியாதா? என்ற ஏக்கம் பிறக்கிறது.

மார்க்கம் என்பது வேறு. கலாச்சாரம் என்பது வேறு. முஸ்லிம்களைப் பொறுத்தவரை கலாச்சாரம் மார்கத்திற்கு முரணாக இருக்கக்கூடாது. அவ்வளவுதான்.

உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் மார்க்கம் ஒன்றுதான். ஆனால் மாறுபட்ட கலாச்சாரம் உண்டு. இலங்கையில் நம் தாய்வழி பெரும்பாலும் தமிழ்ப்பரம்பரை. சில இடங்களில் சிங்களப் பரம்பரை.

நமது கலாச்சாரம் தமிழ்த்தாய் வழியின் கலாச்சாரத்தை ஒட்டியது. நமது தந்தைமார் இஸ்லாத்திற்கு நேரடியாக முரணில்லாத தமிழ்ப்பண்பாட்டுக் கலாச்சார மரபுகளைத் தடுக்கவில்லை. அதனால்தான் இன்றும் தாலி கட்டும் மரபு இருக்கின்றது.

சில மரபுகள் வழக்கொழிந்துவிட்டன. உதாரணம் திருமணத்தன்று மாப்பிள்ளை வீட்டார் மணப்பெண் வீட்டிற்கு சென்று மணப்பெண்ணுக்கு மருதாணி இடல். இதில் மார்க்க முரண் ஏதுமில்லை.

இவ்வாறு தமிழ்க்கலாச்சாரப் பின்னணியில் சில இஸ்லாமிய நடைமுறைகளும் இணைந்து நமக்கென்று தனித்துவமான இஸ்லாமிய கலாச்சார நடைமுறைகள் ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் வழக்கிலிருந்தது.

அடுத்த சமூகங்கள் நமது கலாச்சாரத்தை மதித்தார்கள். பல சந்தர்ப்பங்களில் நமது கொண்டாட்டங்களில் அவர்களும் கலந்துகொண்டார்கள்.

திசை மாறியது


நவீன கொள்கைகளுடன் குர்ஆன், ஹதீஸ்களுக்கு பாரம்பரியமாக வழங்கப்பட்டுவந்த வியாக்கியானங்கள், தொகுக்கப்பட்ட சட்டங்கள் தூக்கிவீசப்பட்டு எப்பொழுது புதிய வியாக்கியானங்கள், சட்டங்களுடன் இயக்கங்கள் உருவாகினவோ அப்பொழுதே அனைத்தும் திசைமாற ஆரம்பித்துவிட்டன.

அதுவரை இஸ்லாமாக அல்லது கலாச்சாரமாக இருந்தவையெல்லாம் சிர்க்குகளாகவும் பித்அத்களாகவும் மாறின. அப்போதெல்லாம் ரமளான் வந்துவிட்டால் காலையில் ஆண்கள் தொழிலுக்கு செல்ல, மத்தியானம் சமையல் வேலையும் இல்லாமல் ஓய்வாக இருக்கும் பெண்மணிகளுக்காக காலையில் பயான்கள் பள்ளிவாசல்களில்இடம்பெறும். சில இடங்களில் வெட்டை வளவுகளில் கொட்டில் கட்டி பயான் நடைபெறும்.

பயான் ஆரம்பமாகமுதல் சிறுவர்கள் பைத்துப் படிப்பார்கள். அதேபோல் தறாவீஹிற்கு முன்னும் பைத்துப் படிப்பார்கள். இனிமையான நாட்கள். அவைகளெல்லாம் ஒழிந்தோடின.

அக்காலத்தில் பெரும்பாலான பள்ளிவாசல்களில் ஒலி பெருக்கியில்லை. எல்லோருடைய வீடுகளிலும் வானொலிப் பெட்டிகளும் இல்லை. ‘அலாம்’ மணிக்கூடுமில்லை. பல இடங்களில் மணிக்கூடே இல்லை. சஹருக்கு மக்களை எழுப்புவதற்கு பக்கீர் பாவா மார்கள் றபான் அடிப்பார்கள். இனிமையான நாட்கள். அதில் என்ன தவறு கண்டார்களோ? ராப்பிச்சைக்காரன் என்றார்கள். எப்படியெல்லாமோ கேவலப்படுத்தினார்கள். அவையெல்லாம் இன்று வழக்கொழிந்துவிட்டன.

புதிய கலாச்சாரம்

இயக்கங்கள் தொழுகைக்கு அழைப்போம்; என்றார்கள். நல்லதுதானே என மக்களும் நினைத்தார்கள். அவர்கள் படிப்படியாக பள்ளிவாசல்களைப் பிடித்தார்கள். பள்ளிவாசல்களைப் பிடிக்கும்வரை மௌலிது ஓதும் பள்ளிகளில் மௌலிதுக்கு ஒத்துழைப்பார்கள். கந்தூரி கொடுக்கும் பள்ளிகளில் கந்தூரிக்கும் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். பள்ளிகளைப் பிடித்ததும் அவற்றை மெதுமெதுவாக நிறுத்துவார்கள். அவ்வாறு ஒரு ராஜதந்திரம்.

பள்ளிகளை lodges ஆக மாற்றினார்கள். சமைத்தார்கள். உண்டார்கள். தங்கினார்கள். காலையிலும் மாலையிலும் கஸ்துபோனார்கள். அவையெல்லாம் பரவாயில்லை. தோப்பு, ஜுப்பா என்று ஆண்களுக்கும் கறுத்த ஹபாயா, முகத்திரை என்று பெண்களுக்கும் அறிமுகப்படுத்தினார்கள். அந்நியவர்க்கு மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கே அவை புதிதாகத்தான் இருந்தன.

பொதுவாக உலமாக்களை ஹஸ்ரத் என்று மரியாதையாக அழைப்பதுண்டு. இப்பொழுது யார் உலமா? யார் உலமா இல்லை; என்று தெரியாது. சில நேரங்களில் தோப்புப்போட்ட பாமரனையும் ஹஸ்ரத் என்று அழைக்கின்ற நிலை.

காலப்போக்கில் இந்த ஆடைகள் கணிசமான முஸ்லிம் ஆண்களும் பெண்களும் வரித்துக்கொண்ட புதிய கலாச்சார ஆடையாக மாறத்தொடங்கியது. அந்நியவர்கள் சந்தேகப்பார்வை பார்க்கத் தொடங்கினார்கள். இது இலங்கையா? அரேபியாவா? இது என்ன புதிய ஆடைக் கலாச்சாரம்; என்று. ஆனாலும் அவர்களின் உணர்வை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில் யுத்தம் நடந்துகொண்டிருந்தது. முஸ்லிம்களையும் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை.

கடும்போக்குவாதம்

எது எவ்வாறிருந்தபோதிலும் மேற்சொன்ன தரப்பினர் ஒரு மிதவாதப்போக்கைக் கைக்கொண்டனர். யாருடனும் முட்டிமோதிக்கொள்வதில்லை. ஆனால் கடும்போக்குவாத இயக்கங்களின் தோற்றம் நிலைமையை இன்னும் மோசமாக்கியது. பட்டது, தொட்டதெல்லாம் சிர்க், பித்அத் என்று பட்டம் சூட்டுவதில் கில்லாடியாக இருந்தார்கள்.

அவர்கள் மாத்திரம்தான் இஸ்லாத்தை அறிந்தவர்கள்; என்கின்ற ஒரு உணர்வு அவர்களுக்கு. இப்பொழுதுகூட முகநூலில் அவர்களுக்கு மாறாக எழுதுகின்றவர்களை “ நீங்கள் இஸ்லாத்தைப் படியுங்கள், உங்களுக்கு இஸ்லாம் தெரியாது’ என்றுதான் குறிப்பிடுகின்றார்கள்.

அவர்களின் இஸ்லாத்தைப் படிக்கவேண்டிய தேவை முஸ்லிம்களுக்கு இல்லை. அல்லாஹ், அவனது திருத்தூதர் ( ஸல்) அவர்கள் மூலமாக இறக்கிவைத்த இஸ்லாத்தைத்தான் படிக்கவேண்டும்; இவர்கள் கூறுகின்ற அல்லது புரிந்துவைத்திருக்கின்ற இஸ்லாத்தையல்ல; என்பது அவர்களுக்குப் புரியாது.

அவர்கள் அவர்களது தலைக்குத் தட்டுப்படுவதையெல்லாம் வியாக்கினமாக கூறுவதை ஏற்கவேண்டிய தேவை முஸ்லிம்களுக்கு இல்லை. மாறாக, பலநூறு ஆண்டுகளாக இமாம்கள், உலமாக்கள் கொடுத்துவந்த வியாக்கியானங்களின்படி நடப்பதுவே முஸ்லிம்களுக்கு பாதுகாப்பானது; என்பதை உணர்ந்துகொள்ளும் ஆற்றலும் அவர்களுக்கு இல்லை.

இவர்களைப் பின்பற்றுவோர் குர்ஆன், ஹதீசைப் பின்பற்றுகின்றோம் என்று எண்ணிக்கொண்டு இந்த இயக்கங்கள் அல்லது சில தனிப்பட்ட மௌலவிகள் குர்ஆன், ஹதீசின் பெயரால் கூறுவதையெல்லாம் இஸ்லாமாக நினைத்துக்கொண்டிருப்பவர்கள் சத்தியத்தை எவ்வாறு புரிவார்கள். தான் பின்பற்றும் மௌலவி காலங்காலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவந்ந ஒரு ஹதீசை மறுத்தாற்கூட அது சரியென ஏற்றுக்கொள்ளும் இவர்கள் தங்களுக்குத்தான் மார்க்கம் தெரியும்; என நினைத்தால் அந்த மார்க்கத்தை முஸ்லிம்கள் எதற்காக தெரிந்துகொள்ள வேண்டும்?

ஒரு முஸ்லிம் எப்பொழுது குர்ஆன், ஹதீசிற்கு காலங்காலமாக இமாம்கள், உலமாக்கள் கொடுத்துவந்த ஏகோபித்த வியாக்கியானங்களை தூக்கிவீசிவிட்டு இந்த இயக்கங்கள் அல்லது தனிப்பட்ட சில மௌலவிக்கள் கொடுக்கும் வியாக்கியானத்தை உண்மையென்று நம்ப ஆரம்பிக்கின்றானோ அந்தக்கணமே அவன் குர்ஆன், ஹதீசின் உண்மையான பொருள்கோடலில் இருந்து தூரமாகிவிட்டான்.

சுருங்கக்கூறின் குர்ஆன், ஹதீசுடன் இருப்பதாக எண்ணிக்கொண்டு குர்ஆன், ஹதீஸை விட்டுத் தூரமாகிவிட்டான். இப்பொழுது அவனை அதே குர்ஆன், ஹதீசின் பெயரைக் கூறி பயங்கரவாதியாக மாற்றுவது கடினமல்ல.

குர்ஆன், ஹதீசிற்கு வெளியே, குர்ஆன், ஹதீசின் பெயரால் வழிகேட்டில் இருப்பவர்களை இன்னுமொரு வழிகேட்டிற்கு திருப்புவது கடினமல்ல. குர்ஆனைக்கொண்டு நல்வழி பெறுபவர்களும் உண்டு, வழிகெட்டுப் போகின்றவர்களும் உண்டு; என்று குர்ஆன் கூறுவது இவர்களைத்தானோ என்னவோ!

மட்டுமல்லாம் மார்க்கத்தைப் பேசுவார்கள், அது அவர்களின் தொண்டைக்குழியைத் தாண்டாது; என்றதும் இவர்களைத்தானோ தெரியவில்லை.

இவர்கள் ஊருக்கு ஊர் பள்ளி கட்டத்தொடங்கினார்கள். ஒரு ஊருக்குள் பல ஜும்ஆக்களை உருவாக்கினார்கள். ஒரு ஊரில் இரண்டு ஜும்ஆ நடந்தால் முதல் நடக்கின்ற ஜும்ஆதான் செல்லுபடியாகும்; என்பது கற்றறிந்த உலமாக்களின் அபிப்பிராயம். இவர்களுக்கு அது எதைப்பற்றியும் கவலையில்லை.

அந்நியவர்கள் பார்த்தார்கள், ஒரு புறம் நாளுக்கு நாள் பள்ளிவாசல்கள் முளைக்கின்றன; மறுபுறம் இலங்கை முஸ்லிம்களெல்லாம் அரேபிய முஸ்லிம்களாகிக் கொண்டிருக்கின்றார்கள்; இந்த பௌத்த நாட்டை இஸ்லாமிய நாடாக்கிவிடுவார்களோ! என்ற ஓர் அச்ச உணர்வு அவர்களை ஆட்கொண்டது.

யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டது. தமிழர்கள் நாட்டின் ஒரு பகுதியைத்தான் தனிநாடாக கேட்டார்கள். முஸ்லிம்கள் மொத்த நாட்டையையுமே ஒரு இஸ்லாமிய நாடாக்கிவிடமுன் யுத்த வெற்றியோடு இவர்களையும் ஒரு கை பார்த்துவிடவேண்டுமென்ற உணர்வு அவர்களில் ஒரு பகுதியினருக்கு ஏற்பட்டது.

சுதந்திர இலங்கையின் தொடர் அரசியலே இனவாதத்தின்மேல் கட்டியெழுப்பப்பட்டதுதான் வரலாறு. அதனால்தான் 30 வருட யுத்தத்தை அனுபவிக்க வேண்டியேற்பட்டது. ஐம்பதுகளில் இலங்கையையைப்போல் சிங்கப்பூரை கட்டியெழுப்ப லீகுவான்யூ ஆசைப்பட்டார். நாம் அதற்குமேல் எங்கேயோ சென்றிருக்க வேண்டும். ஆனால் இன்றும் அடுத்த நாடுகளிடம் கையேந்தும் நிலையில் இருக்கின்றோம். ஆனாலும் இதிலிருந்து எந்த அரசியல் பாடத்தையும் படிக்க நம் நாட்டுத் தலைமைகள் தயாரில்லை.

எனவே, முஸ்லிம்கள் தங்களை இலங்கை முஸ்லிம்கள் என்ற நிலையில் இருந்து அரேபிய முஸ்லிம்களாகமாற்றி நாட்டைக்கைப்பற்றப்போகிறார்கள் என்ற சிலரது உணர்வுகளுக்கு சில அரசியல்வாதிகள் அவர்களது அரசியல் ஆதாயத்திற்காக நன்றாகத் தீமூட்டினார்கள். அது ஹலால் பிரச்சினை, அபாயாப் பிரச்சினை, மாடறுக்கும் பிரச்சினை என்று விசுவரூபம் எடுக்க ஆரம்பித்தது.

ஹலால் பிரச்சினையில் நாம் விட்டதவறு

ஹலால் சான்றிதழ், பொதிசெய்யப்பட்ட உணவுகளுக்குத்தான் முக்கியம். அதை நிறுத்தினால் நமது வர்த்தகர்கள் ஹலால் உணவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்திருப்பார்கள். ஆனால் அடுத்த சமூக ஏற்றுமதியாளர்கள் தொழிற்சாலைகளை மூடவேண்டி ஏற்பட்டிருக்கும். பல்லாயிரக்கணக்கான அவர்களது தொழிலாளர்கள் தொழில் இழந்திருப்பார்கள்.

விளைவு; மீண்டும் ஹலால் சான்றிதழை வழங்குங்கள் என்று நம் காலடிகளுக்கு வந்திருப்பார்கள். எனவே, சிறிது காலமாவது நாம் ஹலால் சான்றிதழை நிறுத்தியிருக்க வேண்டும். சகோதரர் ஆசாத் சாலி அந்தக்கருத்தை முன்வைத்தார். ஆனால் ஜம்மியத்துல் உலமா தவறிழைத்துவிட்டது.

இந்தப் பின்னணியில் பேரினவாதம் முஸ்லிம்களுக்கெதிரான தனது பிடியை இறுக்கிக்கிக் கொண்டுவந்து முதலாவது அரங்கேற்றத்தை அளுத்கமயில் நிறைவேற்றியது.

அது கின்தோட்டை, திகன என்று தொடர்ந்து இன்று குருநாகல், நீர்கொழும்பு என்று அதன் இன்னுமொரு கட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. இன்றைய இந்த நிலைமைகளுக்கு நம் அரசியல் தலைமைகளின் பலவீனங்களும் பாரிய காரணங்களாக அமைந்திருக்கின்றன. அது வேறாக ஆராயப்படவேண்டும்.

இன்று நமது அரசியல் பிரதிநிதித்துவங்களிடமிருக்கின்ற மிகப்பெரிய பலவீனம் முஸ்லிம்களுடைய நியாயங்களை தெட்டத்தெளிவாக பேசும் ஆற்றல் இல்லாமையாகும். நமது தரப்பு நியாயங்களைச் சொல்வதற்கு பாராளுமன்றம் ஒரு முக்கிய தளமாகும். ஆனால் அதை ஓரளவு பயன்படுத்துகிற ஒரேயொருவராக அமைச்சர் ஹக்கீம் மாத்திரமே இருக்கின்றார்.

கடந்தகாலங்களைவிட இம்முறை அவரது பாராளுமன்ற, ஊடக மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான உரைகள், பேட்டிகள் ஓரளவு திருப்திகரமாக இருந்தன. ஆனாலும் இன்னும் பேசவேண்டிய, தெளிவுபடுத்தவேண்டிய எவ்வளவோ நியாயங்கள் தேங்கிக்கிடக்கின்றன. அவற்றைப்பேசும் ஆற்றல் நமது ஏனைய பிரதிநிதிகளிடம் இல்லை; என்பது மிகவும் கவலையானது.

அமைச்சர் ஹக்கீமுக்கு சிறிய ஓர் ஆலோசனை: அவரது பேசுகின்ற, எழுதுகின்ற style ஆனது euphemism ஆகும். இது ராஜதந்திரிகளுடன், வெளிநாட்டு ஊடகங்களுடன் பேசுவதற்கு சிறந்த style ஆகும். சிலர் ஹக்கீமினுனைடைய பேச்சுக்கள் diplomatic என்று கூறுவார்கள். ஆனால் அது diplomatic அல்ல. மாறாக அது Euphemistic.

Euphemistic language உம் diplomatic language உம் அண்ணளவாக வெளிப்பார்வையில் ஒரே தோற்றத்தில்தான் இருக்கும். ஆனால் எல்லா இடங்களிலும் euphemistic style பிரயோசனமளிக்காது. சாதாரண பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்குக்குப் போய்ச்சேரவேண்டுமானால் அது plain language ஆக இருக்க வேண்டும்.

இதனைக் குறிப்பிடுவதற்குக் காரணம் இன்று முஸ்லிம்களுக்காக அர்த்தமுள்ளதாக ஓரளவாவது பேசக்கூடிய ஒரேயொரு மக்கள் பிரதிநிதியாக அவர் மாத்திரம்தான் இருக்கின்றார். ரணில் விக்கிரமசிங்க ஐ நா வில் பேசுவதை கிராமப்புற தேர்தல் மேடைகளிலும் பேசி தோல்வியடைவதுபோல் ஹக்கீமினுடைய பேச்சும் இருந்துவிடக்கூடாது. இடத்திற்கு பொருத்தமான style ஐ அவர் கைக்கொள்ள வேண்டும்.

( தொடரும்).

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com