Saturday, April 6, 2019

இரட்டை குடியுரிமை சமாச்சாரம் முடிவு. ஜூன் மாதத்தில் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்.

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அவரது இரட்டை குடியுரிமை தடையாகவுள்ளதாக பெரிதும் பேசப்பட்டு வந்த நிலையில், அமெரிக்கா சென்றுள்ள அவர் தனது அமெரிக்க பிரஜா உரிமையை ரத்துச் செய்வதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு முடித்துள்ளதாக அறியமுடிகின்றது.

கடந்த 26ம் திகதி லண்டன் நோக்கி புறப்பட்ட அவர் அங்கு சில சந்திப்புக்களை மேற்கொண்டுவிட்டு அமெரிக்கா புறப்பட்டார். அமெரிக்காவில் இவ்வாரம் தனது இரட்டை பிரஜா உரிமையை ரத்துச் செய்யும் விடயத்தை மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பான விண்ணப்பத்தை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கொழும்பிலுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தில் சமர்ப்பித்திருந்தபோதும், அதற்கு தேவையான மேலதிக ஆவனங்களை இவ்வாரம் அமெரிக்க வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சகத்தில் நேரடியாக சென்று சமர்ப்பித்துள்ளார்.

இலங்கையில் அவர் தேர்தல் களத்தில் குதித்தல் சவாலானது எனக் கருதும் தரப்பு ஒன்று அமெரிக்காவில் கோத்தபாய மீது குற்றவியல் வழக்கு ஒன்றை பதிவு செய்து அவரது இரட்டை குடியுரிமை வாபஸ் பெறுவதில் சிக்கல்களை ஏற்படுத்த முயற்சித்தது. இருந்தபோதும், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டு அவை கைவிடயப்பட்டுள்ளதாக இலங்கைநெட் நம்பகமாக அறிகின்றது.

அமெரிக்காவில் முன்னாள் பாதுகாப்பு செயலருக்கு பலத்த வரவேற்புக்கள் அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா வாழ் சக்திவாய்ந்த இலங்கையர்கள் பலர் அவரை சந்தித்து தமது ஆதரவினை தெரிவித்துள்ளனர் எனவும் இலங்கைநெட் அறிகின்றது. அவர் எதிர்வரும் 16ம் திகதி இலங்கை வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com