Saturday, April 6, 2019

கொழுந்துவிட்டெரியும் பிரதேசவாதத்தீயை அணைக்க முடியாதா? இப்பிரச்சினையைத் தீர்க்க முடியாதா? வை எல் எஸ் ஹமீட்

சாய்ந்தமருது உள்ளூராட்சி கோரிக்கையினால் எழுந்த சூடான சூழ்நிலையில் சில நியாயங்களைப் புரியவைப்பதற்காக பல ஆக்கங்களை எழுதியிருக்கின்றேன். சில நியாயங்களை எழுதுவதைத் தவிர்ந்துகொண்டேன். ஏனெனில் அவை நியாயங்களாக, யதார்த்தங்களாக இருந்தபோதிலும் இவ்விடயம் உணர்வுகளோடும் சம்பந்தப்பட்டது; உணர்ச்சி வசப்பட்டநிலையில் அங்கு subjective பார்வையே மேலோங்கியிருக்கும். அப்பொழுது நியாயங்களும் சிலவேளை பிழையாகத் தெரியும்.

இந்நிலையில், யாருடைய உள்ளத்தையும் புண்படுத்திவிடக்கூடாது; என்ற ஒரு எண்ணப்பாட்டில் அந்நியாயங்களை எழுதுவதைத் தவிர்ந்துகொண்டேன். ஆனாலும் உள்ளூராட்சி தேர்தலுக்குப்பின் ஓரளவு அமர்ந்திருந்த சூழ்நிலை மீண்டும் உசுப்பிவிடப்பட்ட நிலையில் சில யதார்தங்கள் வெளிப்படையாக எழுதப்பட்டே ஆகவேண்டும்; ஒரு சில, எந்த யதார்த்தங்களையும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் கடும்போக்காளர்கள் சிலவேளை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நேர்மையாக சிந்திக்கின்ற படித்த, இரு ஊர்களின் சுமூக உறவை யாசிக்கின்ற சாய்ந்தமருது மக்கள் புரிந்துகொள்வார்கள்; என்ற நம்பிக்கையில் எழுதுகின்றேன்.

இப்பிரச்சினை உருவாக்கப்பட்டது அரசியல்வாதிகளால், அதற்கு மீண்டும் உயிர்கொடுத்திருப்பதும் அதே அரசியல்வாதிகளே, என்பதை கடந்த பதிவில் சுட்டிக்காட்டியிருந்தேன்.

அதேநேரம் அரசியல்வாதிகளுடனான பிரச்சினை சக ஊருக்கெதிரான பிரச்சினையாக மாற்றப்பட்டதையும் அவ்வாக்கத்தில் மேலெழுந்தவாரியாக சுட்டிக்காட்டியிருந்தேன்.

அரசியல்வாதிகளுடனான பிரச்சினை, அவர்களுக்கெதிரான கோபம், போராட்டம் அனைத்தும் நியாயமானதே! ( வன்முறையைத்தவிர), ஆனால் அவை ஊர்களுக்கெதிரான பிரச்சினையாக உருமாறி சிலர் இதயத்தில் சீல் வைக்கப்பட்டவர்களைப்போன்று எந்த நியாயங்களையும் ஏற்றுக்கொள்ள ஆயத்தமில்லாமல் அரைத்த மாவையே அரைத்து துவேசத்தைக் கக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

மறுபுறம், சில நியாயமாக சிந்திக்கக்கூடிய, நிதானமாக முகநூல்களில் எழுதக்கூடிய சகோதரர்கள்கூட, மற்றவர்களைப்போன்று துவேசமாக, வக்கிரமாக எழுதாதபோதும் தங்களது உரிமையை, நியாயமான கோரிக்கையைப் பெற்றுக்கொள்ள அடுத்த ஊர் தடையாக இருக்கிறதே; என்ற ஆதங்கத்தை அவ்வப்பொழுது மிகவும் நாகரீகமாக வெளிப்படுத்துகிறார்கள்.

இவர்கள் இவ்வாறு நினைப்பதற்கு பிரதான காரணம் இந்த சபையைப் பெற்றுக்கொள்வது தங்களது “உரிமை”, அது “நியாயமான கோரிக்கை”, என்று நம்புகிறார்கள். அவ்வாறு பிரச்சாரகாரர்களால் நம்பவைக்கப்பட்டிருக்கின்றார்கள்; எந்த அளவு என்றால் வெளியூரில் உள்ளவர்கள்கூட அது அவர்களது உரிமை, நியாயமான கோரிக்கை; என்று கருத்துத்துத் தெரிவிக்குமளவு செய்யப்பட்டிருக்கின்றது.

ஏன் கல்முனையில் இருந்து எழுதுகின்ற சகோதரர்கள்கூட அது உங்களது உரிமை, நியாயமான கோரிக்கை, ஆனால் எங்களுக்கு இவ்வாறான ஒரு பிரச்சினை இருக்கின்றது; எனவே நான்காகப் பிரிக்கவேண்டும்; என்கிறார்கள்.

இதனைக்கேட்கின்றவர்கள் உங்களுடைய பிரச்சினையை நீங்கள் பாருங்கள்; எங்களை நாங்கள் ஆளவேண்டும்; எனக் கேட்பது எங்கள் உரிமை; உங்களது எல்லைப் பிரச்சினை ஒருபோதும் தீர்க்கமுடியாது; எங்களுக்கு எல்லைப் பிரச்சினை இல்லையே!; அப்படியானால் எங்களது பழைய எல்லையைத் தருவீர்களா?, கல்முனையைப் பாதுகாப்பதற்கு எங்களது உரிமை, எங்களது நியாயமான கோரிக்கையைத் தாமதிக்கவேண்டுமா? சாய்ந்ததருது பிரிந்தாலும் மருதமுனை, நற்பிட்டிமுனை இருக்கிறது; அவர்களின் துணையுடன் கல்முனையைப் பாதுகாக்கலாம்; ( அதாவது தமிழர்களைவிட ஆசன எண்ணிக்கை கூடுகிறது; இந்த ஊர்கள் இணையும்போது); எனவே, எங்களது உரிமையை, எங்களது நியாயமான கோரிக்கையை முதலில் நிறைவேற்றுங்கள்; என்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இளைஞர்களும் இந்தக் கோணத்தில் மூளைச்சலவை செய்யப்படுவதால் இந்த இரண்டு ஊர்களுக்குமிடையில் ஒரு பாரிய நிரந்தர வெடிப்பு வந்துவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது.

இந்நிலையில் சபை பெறுவது உரிமையா? அது நியாயமான கோரிக்கையா? அல்லது வெறும் அபிலாஷை அல்லது விருப்பம் என்ற சொற்பதங்களுக்குள் உள்ளடக்கப்படவேண்டியதா? என்பதை 21ம் நூற்றாண்டில் வாழுகின்ற நாம் அறிவியல்ரீதியாக சற்று ஆராயவேண்டும்.

இதன் நோக்கம் தனிச்சபைக் கோரிக்கையை மழுங்கடிப்பதல்ல. தனிச்சபைக் கோரிக்கையினால் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பிரதேசவாத வெறியையும் ஆவேசத்தையும் தணிப்பதுடன் ஒருவர் தன்அபிலாஷையை, விருப்பத்தை அடுத்தவருக்குப் பாதிப்பில்லாமல் அடைய ஒரு கூட்டுமுயற்சியில் ஈடுபடத்தூண்டுவதாகும்.

உரிமையா?

தனிச்சபை பெறுவது “ உரிமை” என்றால் அது எந்த அடிப்படையில்? இது முதலில் ஆராயப்பட வேண்டும்.

1987இற்குமுன் தனிச்சபை இருந்தது; எனவே அதை மீண்டும் பெற்றுக்கொள்வது நம் உரிமை என்கிறீர்களா?அப்படியானால் அன்று நாடுபூராகவும் பிரேமதாசவின் திட்டத்தின்கீழ் இணைக்கப்பட்ட அனைத்து சபைகளுக்கும் அந்த உரிமை இருக்கவேண்டும்.

ஒருவருக்கு உரிமை இருந்தால் அந்த உரிமையை வழங்க கடமைப்பட்ட ஒருவர் இருப்பார். உதாரணமாக நாம் நமது வீட்டில் நிம்மதியாக தூங்குவது நமது உரிமை. எனவே, அடுத்த வீட்டுக்காரன் நம்மைத் தொந்தரவு செய்யுமளவு வானொலியின் சத்தத்தையோ, வேறு ஒலிகளையோ எழுப்பாமல் நமது அமைதியை உறுதிப்படுத்துவது அவன் கடமை. அவன் தவறும்போது அவனுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கலாம்.

அதேபோன்று, சபை பெறுவது நமது உரிமையானால் அதைத் தருகின்ற “ கடமை” அரசுக்கு இருக்கவேண்டும். அவ்வாறாயின் அன்று நாட்டில் இணைக்கப்பட்ட அனைத்து சபைகளையும் வழங்கவேண்டிய கடமை அரசுக்கு இருக்கவேண்டும். அது சரியா? அன்று இணைத்தது; அரசின் கொள்கையோடு சம்பந்தப்பட்டது.

எனவே, அன்று நாம் தனிச்சபையாக இருந்ததனால் இன்று தனிச்சபை கேட்பது உரிமையாகாது. அவ்வாறாயின் அது சகலசபைகளுக்கும் இருக்கவேண்டும்.

தகுதி உரிமையா?

எங்கள் சனத்தொகை, பிரதேச செயலகம், வங்கிகள் போன்ற ஒரு நகரசபையாகத் தேவையான அனைத்து தகுதிகளும் எங்களுக்கு இருக்கின்றது. எனவே சபை பெற்றுக்கொள்வது எங்கள் உரிமையில்லையா? என்பது அடுத்த கேள்வி.

இவை இருந்தால் அது உரிமையல்ல. அது eligibility. உதாரணமாக ஒரு வருடத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவர் பல்கலைக்கழகம் செல்ல தகுதி பெறுகிறார்கள். ( eligibility) ஆனால் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. Eligibility உரிமையானால் பல்கலைகழகம் கட்டாயம் கிடைக்கவேண்டும். கிடைக்கின்றதா?

ஒரு குறித்த பதவி வெற்றிடத்திற்கு தகைமையுள்ள பலர் விண்ணப்பிக்கின்றனர். அனைவருக்கும் eligibility இருக்கின்றது. எல்லோருக்கும் கிடைப்பது உரிமையா? எனவே, சபைபெற தகமை இருக்கின்றது; என்பதனால் அது உரிமையாகிவிடாது.

சம உரிமை ( equal right)

இதே தன்மையுள்ள எல்லோருக்கும் அந்தத் தகைமை இருக்கின்றது; என்ற ஒரே காரணத்திற்காக வழங்கிவிட்டு நமக்குத் தராவிட்டால் அப்பொழுது சம உரிமை பாதிக்கப்பட்டிருக்கின்றது. எனவே, அதனைப் பெறுவது நம் உரிமை எனலாம். அவ்வாறாயின் கொழும்பு மாநகரசபை எத்தனை சபைகளாக பிரிக்கப்பட வேண்டும். எனவே, இங்கு சம உரிமையும் பாதிக்கப்படவில்லை.

நம்மை நாமே ஆளுவது நமது உரிமை இல்லையா?

இது அடுத்த கேள்வி: உள்ளூர் ‘ஆட்சி’, ஆட்சி என்ற சொல் பாவிக்கப்பட்டாலும் இது Self-Rule என்ற அர்த்தத்தில் வருகின்ற ஆட்சியல்ல. இது சில உள்ளூர் நிர்வாகங்களை செய்வதாகும். அவ்வாறு “ ஆட்சி” என்றுதான் எடுத்துக்கொண்டாலும் அந்த உரிமை ஒவ்வொரு ஊருக்கும் அல்லது குறித்த தகமையுள்ள எல்லா ஊர்களுக்கும் உள்ளதா? என்ற கேள்வியை எழுப்பினால் மேல் கூறப்பட்ட விடைகளுக்குள்ளேயே செல்லவேண்டி ஏற்படும்.

தம்மைத் தாமே ஆளும் உரிமை என்பது “ சுய நிர்ணய உரிமையுடன் சம்பந்தப்பட்டது” ஒவ்வொரு ஊருக்கும் தனித்தனி சுயநிர்ணய உரிமை இருக்கின்றதா? அவ்வாறு இருந்தால் உள்ளூராட்சி சபையல்ல, மாகாணசபையல்ல, ஆகக்குறைந்தது Nation State வரையாவது செல்லலாம்.

எனவே, இங்கு “உரிமை”என்ற சொல் பொருத்தமற்றது; என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இங்கு “ உரிமை, உரிமை” என்கின்ற உணர்வு இளைஞர்களுக்கு ஊட்டப்படுகின்றபோது அது அடுத்த ஊருக்கெதிராக ஒரு பிரதேசவாத வெறியாக மாறுகிறது. அடுத்த ஊர் அந்த உரிமையைத் தடுக்கின்றது; என்ற அடிப்படையில். இதைப்பற்றி சிந்திப்போம் சகோதரர்களே!

நியாயமான கோரிக்கை


“நியாயமான கோரிக்கை” என்ற பதம் பொருத்தமா?

நியாயம் அல்லது நீதி கோருவது பிரதானமாக இரண்டு அடிப்படையில். ஒன்று நடந்த அநீதிக்கு தீர்வு அல்லது நீதி கேட்பது. இரண்டு நடக்கப்போகும் அநீதியைத் தடுக்க தீர்வு கேட்பது.

1987 இல் இணைத்தது அநீதி என்கிறோமா? அவ்வாறாயின் அது முழு நாட்டுக்கும் பொருந்தும் என்பது ஒரு புறமிருக்க, கல்முனையில் இணைத்த அனைத்து சபைகளுக்கும் அது பொருந்தவேண்டுமே! அவ்வாறாயின் கல்முனையும் தனது அன்றைய சபையைக் கேட்பது நியாயமாகத்தானே இருக்கவேண்டும். அவ்வாறு கல்முனைக்கு வழங்காமல் அடுத்த ஊருக்கு வழங்கினால் அது அநியாயமில்லையா? சம உரிமை மீறப்படாதா?

எனவே, எங்கு பாவிக்கப்படவேண்டிய சொற்கள் எங்கு பாவிக்கப்படுகின்றன; என சித்தித்துப்பாருங்கள். கல்முனை, நீங்கள் பிரிக்கும்போது சம உரிமையைப் பேணுங்கள், அது எமது உரிமை, எங்களுக்கு சம உரிமையை மறுத்து அநியாயம் செய்துவிடாதீர்கள்; என்று அரசிடம் விடுக்கும் நியாயமான கோரிக்கையைப் பார்த்து ஏன் கோபப்படுகிறோம்; சகோதரர்களே!

புரிகின்றதா நாம் தவறான பாதையில் செல்கின்றோம்; அர்த்தமில்லாமல் இரு ஊர்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்த முற்படுகிறோம்; என்று.

மதப்பற்று என்பது தன் மதம் சிறக்கவேண்டுமென நினைப்பது, செயற்படுவது. மதவாதம் என்பது அடுத்த மதத்தவர்களை நசுக்கி தன் மதத்தவர்களை வாழவைப்பது.

ஊர்ப்பற்று என்பது தன்னூர் சிறக்கவேண்டுமென நினைப்பது. ஊர்வாதம் என்பது அடுத்த ஊரை நசுக்கி, அதற்கு அநியாயம் செய்து தன் ஊரை வாழவைக்க முயல்வது.

தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், மேலே கூறியிருப்பவை உங்கள் கோரிக்கை தொடர்பாக அல்ல. மாறாக கோரிக்கையும் உரிமையென்றும் நியாயமென்றும் அடுத்த ஊர் அந்த உரிமையை, நியாயமான கோரிக்கையைத் தடுக்கிறார்கள்; என்றும் இரு ஊர்களுக்குள்ளும் ஏற்படுத்தப்படும் பிளவுகள் தொடர்பானதாகும்.

கோரிக்கை

இப்பொழுது கோரிக்கை தொடர்பாக பார்ப்போம்

குறித்த கோரிக்கைக்குப் பொருத்தமான பதம் ‘ அபிலாஷை, விருப்பம்’ என்பதாகும். உதாரணமாக தம்மைத்தாமே ஆள தமிழர்கள் அதிகாரம் கேட்பது அவர்களது அபிலாஷை, தனிநாடும் அவர்களது அபிலாஷை. சமஷ்டியும் அவர்களது அபிலாஷை. அபிலாஷைகள் எல்லாம் உரிமையல்ல. அபிலாஷைகள் நியாயமாக இருக்கலாம், இல்லாமல் இருக்கலாம்.

அவர்களின் அபிலாஷையான தனிநாட்டை அரசு ஏற்கவில்லை. சமஷ்டியை சிலர் ஏற்கின்றனர். சிலர் மறுக்கின்றனர். அதேபோன்று அதிகாரப்பகிர்வும். அதனால்தான் அதிகாரப்பகிர்வுடன் சேர்த்து தமது சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரிக்க வேண்டுமென்று தமிழர்கள் கோருகின்றனர். அப்பொழுது அவையனைத்தும் அவர்களது உரிமையாகிவிடும்.

எனவே, உரிமை என்ற சொல்லைப் பாவித்து ஊர்களைப் பிரித்துவிடாமல் இருப்போம். நமது அபிலாஷைக்கு யாரும் எதிர்ப்பில்லை. ஒற்றுமையாக அடைய முயற்சிப்போம். வீண் வாதங்களை ஓரம் கட்டுவோம்.

எங்களது பழைய எல்லையைத் தருவீர்களா?

தமிழர்கள் கேட்கும் எல்லையை வழங்க முடியாது; என்று ஒரு ஊர் சொன்னால் அடுத்த பக்கம் அப்படியானால் எங்களது பழைய எல்லையைத் தருவீர்களா? என்கிறார்கள்.

அவ்வாறாயின் தமிழர் கேட்கின்ற மொத்த town ஐயும் உங்களது சபைக்காக தாரைவார்க்க வேண்டுமென்கிறீர்களா? இவ்வாறு கூறுவதற்கு கலிமாச்சொன்ன ஒரு சகோதர முஸ்லிமுக்கு மனசு வருகின்றதா?

அதேநேரம், உள்ளூராட்சி எல்லையைப் பொறுத்தவரை அவ்வாறு பழைய எல்லையென்ற பிரச்சினை கல்முனை- சாய்நதமருதில் இல்லை; என்பதை அறிவீர்களா? 1987இலும் இன்றும் ஒரே எல்லைதான் என்பது தெரியுமா?

நீங்கள் கூறும் எல்லை குறிச்சியோடு அதாவது பிரதேச செயலகத்தோடு சம்பந்தப்பட்டது. குறிச்சிக்கும் வட்டாரத்திற்கும் வித்தியாசம் புரியாதவர்களா முகநூலில் பிரதேசவாதம் பேசுகிறார்கள்?

இந்த குறிச்சி எல்லைப் பிரச்சினையில் எதுவித பங்குமில்லாமல் பழி சுமந்தவன் நான்; இல்லை, வேண்டுமென்று அரசியலுக்காக வக்கிரத்தனமாக பழி சுமத்தப்பட்டவன் நான். ( இது தொடர்பாக ஏற்கனவே தெளிவுபடுத்தியிருக்கின்றேன்) மாகாணசபையில் மக்களின் வாக்குகளைப் பெற்றவர்கள் உயிருக்கு அஞ்சி நாட்டைவிட்டு வெளியேறிய நிலையில் ஒரு தசாப்தத்திற்குமேல் தலைவரின் செயலாளராக சாய்ந்தமருது மக்களுக்கு தோள்கொடுத்த ஒருவன்.

எனது அரசியல் அனுபங்களை ஒரு தொடராக எழுதவேண்டும்; என்ற எண்ணம் இருக்கின்றது; இன்ஷாஅல்லாஹ், அப்பொழுது பல விடயங்களை இளைய தலைமுறை அறிந்துகொள்ளமுடியும். சாய்ந்தமருது மார்க்கட் குண்டுவெடிப்பின்போது, அல்லது S T F சாய்ந்தமருது கடற்கரையில் நின்றவர்களை கொத்தாக அள்ளிச்சென்றபோது, மாளிகைக்காட்டில் பணம்கொடுக்காமல் மீன் பறித்த பொலிசாருக்கும் மீனவர்களுக்கும் கைகலப்பேற்பட்டபோது, இவ்வாறு இன்னும் எத்தனையோ இக்கட்டான சூழ்நிலைகளில் களத்தில் நின்றது யார்; என்பது புரியும்.

மறைந்த தலைவர் ஒருமுறை அம்பாறை பங்களாவில் வைத்துக் கூறினார், “ சாந்ந்தமருது- கல்முனை பிரதேசவாதத்தை வை எல் எஸ் ஹமீட்டை வைத்தே உடைக்க வேண்டுமென்று சொன்னார்”. அதை அங்கு சிலர் கேட்டுக்கொண்டு நின்றார்கள். அதுதான் வினையானது. பழிசுமத்தியவர்களுக்கு தீர்ப்புக்கொடுக்க அல்லாஹ் போதுமானவன்.

சாய்ந்தமருது பிரிந்தாலும் கல்முனைக்குப் பாதிப்பில்லை.

இது அடுத்த வாதம். அன்புள்ள சகோதரர்களே, எதைவைத்து இதைச் சொல்கிறீர்கள். மருதமுனை, நற்பிட்டிமுனையை வைத்துத்தானே! உண்மையில் மருதமுனை, நற்புட்டிமுனை சகோதரர்கள் கல்முனைமீது எப்போதும் அக்கறைகொண்டவர்கள்; என்பது வேறுவிடயம். ஆனால் அருகேயுள்ள, சுமார் 40% திருமண உறவுகளால் பின்னிப் பிணைந்த ஊரே கல்முனைக்கு என்ன நடந்தால் என்ன, எங்களது கோரிக்கை நிறைவேறினால்போதும்; என்று நினைக்கும்போது மருதமுனையும் நற்பிட்டிமுனையும் தங்கள் அரசியல் நிலைப்பாடுகளை உதறித்தள்ளிவிட்டு ஒவ்வொரு உள்ளூராட்சித் தேர்தலிலும் கல்முனையைப் பாதுகாக்க கல்முனையுடன் இணைந்து அரசியல் நிலைப்பாடுகளை எடுப்பார்கள்; என்று எதிர்பார்ப்பது நியாயமா?

எத்தனை கட்சிகள். எத்தனை நிலைப்பாடுகள். இவைகள் அனைத்தும் உதறித்தள்ளப்படும் என நினைக்கிறீர்களா? கடந்த உள்ளூராட்சிசபைத் தேர்தலில் சாயந்தமருது பிரிந்தாலும் கல்முனைக்குப் பாதிப்பதில்லை; என நிரூபித்ததாக கூறுகிறீர்கள். அனைத்தையும் தலைகீழாக கூறுகிறீர்கள்.

அவ்வாறெனில் ஏன் தமிழ்த்தரப்பின் ஒரு பிரிவுடன் இணைந்து ஆட்சியமைக்கவேண்டியேற்பட்டது, வாக்களிக்காமல் இருந்தவர்கள் எத்தனைபேர்? என்பதையெல்லாம் சிந்தித்தீர்களா? இவர்களை நம்பி பல ஆயிரம் கோடி கல்முனையில் முஸ்லிம்களின் சொத்துக்களை ஆபத்தில் விடவேண்டுமா?

கல்முனை மாநகரைப் பாதுகாக்கும் பொறுப்பு கல்முனையிடமே இருக்க வேண்டும்


ஒன்றில் தற்போதைபோல் ஒன்றாக இருக்க வேண்டும். பிரிவதாயின் ஒரு சிறிய risk ஐக் கூட கல்முனை ஏற்கமுடியாது. அந்தவகையில் பிரிவதாயின் கல்முனை மாநகரைப் பாதுகாக்கும் பொறுப்பு கல்முனையிடமே இருக்க வேண்டும். அப்பொழுது அவர்களது கட்சி அரசியலை, மாகாண, பொதுத்தேர்தலின்போது பார்த்தாலும் மாநகரசபைத் தேர்தலில் கட்சி வேறுபாடுகளுக்கப்பால் ஒன்றுபடுவார்கள்.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் அத்தனை கட்சிகள் போட்டியிட்டும் சுமார் 75% ஒற்றுமைப்படவில்லையா? ஒற்றுமைப்பட்டும் தமிழ்தரப்பின் தயவுடன்தானே ஆட்சிபிடிக்க முடிந்தது. மாநகரசபை கல்முனையின் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் இந்நிலை வந்திருக்குமா? ஏன் சிந்திக்க மறுக்கின்றோம். ஏன் விதண்டாவாதம் பேசுகின்றோம்

உடனடியாக நிர்வாகம் அமைக்கமுடியுமா?

நாளை சாய்ந்தமருதுக்கு தனிச்சபை பிரகடனப்படுத்தினாலும் நாளைமறுதினம் தேர்தல் நடக்குமா? இல்லை. தேர்தலுக்கு இன்னும் மூன்று அல்லது நான்கு வருடம் போகும். அதுவரை கல்முனை மாதகரசபையுடன்தான் இருக்கவேண்டும். எனவே, இவ்வளவு கசப்பான அதீத அவசரத்தில் அர்த்தமிருக்கின்றதா?

உங்களுக்கு இரண்டு தெரிவுகள் இருக்கின்றன. நீங்கள் தெரிவுசெய்த கையாலாகாத, உங்களை ஏமாற்றிய அரசியல்வாதிகள் TNA ஐயை மீறி இப்பொழுது உங்களுக்கு எதுவும் தரப்போவதில்லை.

எனவே, ஒன்றில் அடுத்த தேர்தல்வரை பொறுத்திருங்கள். தேர்தலில் இந்த கையாலாகாதவர்கள் அனைவரையும் துரத்திவிட்டு ஒரு புதிய நெஞ்சுரமுள்ள அணியை உருவாக்க முயற்சியுங்கள். அதனை நீங்கள் தனியாக செய்யமுடியாது. ஏனைய ஊர்களுடனும் முடிந்தால் மொத்த மாவட்டத்துடனும் பேசுங்கள். அம்பாறை மாவட்ட மொத்தப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு முன்மாதிரியாக இருங்கள்.

அல்லது இந்த நான்கு ஊர்களும் அவசரமாக பேசுங்கள். அடுத்த பொதுத்தேர்தலில் ஒரு சுயேட்சைக்குழுவை இறக்க முயற்சி செய்யுங்கள். இப்பொழுதே வேட்பாளர்களைத் தேடுங்கள். அந்த செய்தி இந்த கையாலாகத தலைவர்களுக்குப் போனால்போதும், ரணிலின் காலில் விழுவார்கள் தங்கள் அரசியல் இருப்பைப் பாதுகாத்துக்கொள்வதற்காக.

இந்த ஆலோசனையை உள்ளூராட்சித் தேர்தலுக்குமுன்பும் முன்வைத்திருந்தேன். அன்று இந்த நான்கு ஊர்களும் இணைந்து ஒரு சுயேட்சையை நிறுத்த முற்பட்டிருந்தால் அப்பொழுதே பிரச்சினை தீர்ந்திருக்கும். ஆனால் பிரிந்து ஊர்வாதம் பேசினோம். கர்வம், Ego என்பவற்றிற்குள் முடங்கிக் கிடந்தோம். எதைச் சாதித்தோம். பிரிந்து நிற்கும்வரை இனியும் சாதிக்கப்போவதில்லை. இரண்டு ஊர்களும் கசப்பைத்தான் வளர்க்கும்.

பிரிவினையை நாடுவது சாய்ந்தமருது என்ற அடிப்படையில் இதில் முதல் முன்னெடுப்பை நீங்கள் செய்வது மிகவும் பொருத்தமானது.

அதேநேரம் கல்முனை பொறுப்பில்லாமல் நடந்துகொள்ள முடியாது. குறிப்பாக, அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும்போதாவது தமிழ் பிரதேச செயலகம் அவர்கள் கேட்கும் எல்லையால் வழங்கப்பட சாத்தியம் இருக்கிறது.

காரணம் TNA ஜனாதிபதித் தேர்தல் நிபந்தனையில் இதையும் முன்வைப்பார்கள். முஸ்லிம் வாக்குகள் இலவசமாக கிடைக்கும்; என அரசுக்குத் தெரியும், வட கிழக்கிற்கு வெளியே அவர்களுக்கு எழுதிவைத்த வாக்குகள். வட கிழக்கில் அருமைக் கட்சிகள் பெற்றுக்கொடுக்கும். எனவே, தமிழ்த்ரப்பைத் திருப்திப்படுத்தவே அரசு முனையும். எல்லாவற்றையும் இழக்கப்போகிறோம்.

எனவே, சாய்ந்தமருதுதான் பேசவேண்டும்; என்று எதிர்பார்க்காமல் நீங்களும் முயற்சி செய்யுங்கள். இன்னும் சொல்லப்போனால் மேலே கூறியதுபோல் இப்பிரச்சினையைத் தீர்ப்பதில் அவசரப்பட வேண்டியது சாயந்தமருதல்ல, கல்முனை.

நிர்வாகங்கள் அரசியல் வாதிகளின் பொக்கட்டிலிருந்து வெளியேறுங்கள். அரசியல்வாதிகளைத் திருப்திப்படுத்துவதை விட்டுவிட்டு ஊரைப்பாருங்கள்.

சகல ஊர் உலமாக்களே!

நீங்கள் தீனைச் சுமந்தவர்கள். மக்களுக்கு வழிகாட்டவேண்டியவர்கள். நீங்களாவது முன்வரமாட்டீர்களா இம்முன்னெடுப்பைச் செய்வதற்கு. இம்முன்னெடுப்பைச் செய்வதற்கு நீங்கள் மிகச்சிறந்தவர்கள் அல்லவா!

மருதமுனை, நற்பிட்டிமுனை நிர்வாகிகளே!

நீங்கள் இப்பிரச்சினையில் நேரடியாக சம்பந்தப்படாதவர்கள். நடுநிலையாய் இதனை முன்னெடுப்பதற்கு உங்களைவிட பொருத்தமானவர்கள் இல்லை. எனவே, முன்வருவீர்களா?

நாம் தகுதியான தலைமைத்துவங்களை, பிரதிநிதித்துவங்களை தெரிவுசெய்திருந்தால் இவ்வாறான ஒரு வேண்டுகோள் விடுக்கவேண்டி ஏற்பட்டிருக்காது. அவர்கள் எப்பொழுதோ இதனைச் சாதித்தருப்பார்கள். என்ன செய்வது நாம் எல்லோரும் அத்தவறை செய்துவிட்டோம்.

இப்பொழுது இவர்களைத் தண்டிப்பதல்ல பிரச்சினை. அதனைத் தேர்தல் வரும்போது பார்க்கலாம். இப்பொழுது நமது காரியத்தைச் சாதிக்கவேண்டும். மேலே கூறியதுபோல் ஜனாதிபதித் தேர்தலுக்குமுன் தமிழ்த்
தரப்பு அனைத்தையும் சாதிக்கும் வாய்ப்பு பலமாக இருக்கின்றது. நாம் அனைத்தையும் இழக்கும் வாய்ப்பிருக்கிறது. கண்கெட்டபின் சூரிய நமஸ்காரத்தால் பிரயோசனம் இல்லை.

இதைச் சாதிப்பதற்கு தற்போதிருக்கும் ஒரே வழி இந்த சுயேச்சை முன்னெடுப்புத்தான். கடந்தகால கசப்புகள் எதைப்பற்றியும் பேசவேண்டாம்.

கல்முனை நான்காகப் பிரிப்பு. தமிழ்ப்பிரதேச செயலகம் மூடல் அல்லது நான்கு பிரிப்பில் தமிழருக்கு தீர்க்கப்பட்ட எல்லைக்குள் ஒரு சபை, ஒரு செயலகம்.

இது உடனடியாக செய்யப்படவேண்டும். இல்லையெனில் சுயேச்சை களமிறக்கப்படும். இதுதான் கோசமாக இருக்க வேண்டும். நீங்கள் ஏற்பாடுகளைச் செய்யுங்கள். வேட்பாளர்களைத் தயார்படுத்துங்கள். ஆனால் பெரும்பாலும் சுயேச்சை இதற்காக நிறுத்தவேண்டி ஏற்படாது. அடிவயிற்றில் கைவைக்கப்போகிறார்கள் எனத் தெரிந்ததும் அனைத்தும் நடக்கும்.

இதை ஒரு பாடமாகவைத்து எதிர்காலத்தில் எல்லா ஊர்களும் தமது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளலாம். பாம்பிற்கு மண்டையில்தான் அடிக்கவேண்டும். தயாரா?

ஒற்றுமைப்படுவோமா?

அம்பாறை மாவட்ட மொத்த முஸ்லிம்களே! இது கல்முனைத்தொகுதிப் பிரச்சினை எனப்பாராமல் சமூகப் பிரச்சினையாகப் பாருங்கள். உங்களது ஒத்துழைப்பையும் முழுமையாக வழங்குங்கள்..

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com