Tuesday, March 19, 2019

அரச அமைச்சரான அப்பாவியான என்னை குறை கூறாதீர்கள் - அமைச்சர் மனோ

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் போராடுவது போன்று அரசிற்குள் இருந்தும் நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேஷன் தெரிவித்துள்ளார். யாழ் நல்லூர் துர்க்காதே மணி மண்டபத்தில் நடைபெற்ற கம்பன் விழாவில் கலந்தகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் மனோ கணேஷன், தமிழ் மக்களுக்காக எனது பதவியையும் தூக்கி எறிந்துவிட்டு வெளியே வரத் தயாராகவே இருக்கின்றேன். ஆகவே ஒரு அரச அமைச்சராக அப்பாவியான என்னை குறை கூறாதீர்கள். மொழி, கலை, கலாசாரம், பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்கள் பேணி பாதுகாக்கப்பட்டு இழந்தவற்றை மீட்டெடுத்து உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இங்கு எனக்கு முன்னதாக உரையாற்றிய சுரேஷ் பிரேமச்சந்திரன் பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கூறியிருந்தார். குறிப்பாக தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகளை விமர்சித்தும் இருந்தார். உண்மையில் அந்தத் திணைக்களம் தொடர்பில் நானும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அதன் செயற்பாடுகள் தொடர்பில் அந்த திணைக்களத்தின் பணிப்பாளரிடம் பல கேள்விகளையும் நேரடியாகவே கேட்டிருக்கின்றேன்.

அண்மையில் நாடளுமன்றக் குழுவாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளரைச் சந்தித்துக் கலந்துரையாடி இருந்தோம். குறிப்பாக வவுனியா வெடுக்குநாறி மலை, முல்லைத்தீவு, திருகோணமலை ஆகிய இடங்களில் தொல்பொருள் திணைக்களம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் நானும் நாடளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் நேரடியாகவே பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கேள்விகளையும் எழுப்பியிருந்தோம்.

அந்த திணைக்களம் தான்தோன்றித்தனமாகவே செயற்படுகின்றது. அவர்களைப் பொறுத்தவரையில் இந்த நாடு என்பது சிங்கள பௌத்த நாடு என்ற ஒரே நோக்கம் மட்டும் தான் இருக்கின்றது. அத்தகைய சிங்கள பௌத்த வரலாறு தான் நாட்டுக்கு இருப்பதாகவும் எண்ணுகின்றனர். அதனால் தமிழ் வரலாறுகளை அவர்கள் கவனத்தில் எடுப்பதில்லை.

வடக்கு கிழக்கில் பௌத்த சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவை பௌத்த அடையாளங்கள் பௌத்த இடங்கள் என்ற தோரணையில் செயற்படுகின்றனர். ஆகவே அவ்வாறு பௌத்த சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவை சிங்கள பௌத்த சின்னங்கள் அல்ல என்பதையும் தமிழ் பௌத்த சின்னங்கள் என்றும் நாம் சொல்ல வேண்டும்.

ஆகவே தான் இந்த நாட்டிற்கு சிங்கள பௌத்த வரலாறு இருப்பது போன்று தமிழ் வரலாறும் உண்டு என்று நாங்கள் கூறுகின்றோம். அத்தோடு சிங்கள பௌத்த வரலாறு மாத்திரம் தான் இந்த நாட்டிற்கு இருக்கின்றது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்வொம் என்று எதிர்பார்க்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம். அத்தோடு தமிழர்களுக்கு இந்த நாட்டில் வரலாறு இருக்கின்றது என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். இதற்கமையவே கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் எனது அமைச்சினூடாக இலங்கை வரலாறுகள் அடங்கிய ஒரு நூலை வெளியிட்டிருக்கின்றேன்.

அந்த நுாலை மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க , இரா. சம்மந்தன் ஆகியோர் முன்னிலையில் வெளியிட்டு அதன் பிரதிகளையும் அவர்களுக்கு வழங்கி வைத்திருக்கின்றோம். தமிழ் மக்களின் வரலாறுகளை உள்ளடக்கிய அந்த நூலை சம்மந்தனிடம் கொடுத்த பின்னர் அது தொடர்பில் அவர் என்னைப் பாராட்டி வாழ்த்துவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர் அப்படி ஏதும் செய்யவில்லை.

அவ்வாறு ஆவலோடு எதிர்பார்த்த நிலையில் நேரடியாகச் சந்தித்த போதும் கூட நூல் தொடர்பில் அவர் எதனையும் கூறவில்லை. ஆக அவர் அந்த நூலைப் படித்தாரோ என்று தெரியவில்லை என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனாலும் இந்த நூலை தற்போது சிங்களத்தில் மொழி பெயர்ப்புச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அவ்வாறு செய்கின்ற போது பாரிய எதிர்ப்புக்கள் வரலாம். அது பிரச்சினை அல்ல. எந்த எதிர்ப்புக்களையும் எதிர்கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன்.

சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனை என்பது இன்று நேற்று வந்த சிந்தனை அல்ல. அது நீண்டகாலமாகவே அவர்களிடம் இருக்கின்ற ஒரு சிந்தனை தான். இந்த நாடு சிங்கள பௌத்த நாடு என்ற சிந்தனையின் அடிப்படையில் இந்த நாட்டிற்கு முழுமையான சொந்தக்காரர்கள் தாம் தான் என்ற ஒரே எண்ணப்பாடு அன்றில் இருந்து இன்றுவரை அவர்களிடத்தே இருக்கின்றது.

ஆக இதனை தற்போதைய அரசாங்கம் மாத்திரம் தான் உறுதிப்படுத்துவதாக நினைக்கக் கூடாது. நாட்டில் ஆட்சிக்கு வருகின்ற பச்சை, நீலம், சிவப்பு என மைத்திபால அனைத்து ஆட்சியாளர்களும் இதனைத் தான் செய்கின்றார்கள். இதனையே இங்குள்ள பலரும் எதிர்கிக்னறனர்.

அது போன்றே அரசிற்குள்ளே இருந்து கொண்டு நானும் எதிர்த்து வருகின்றேன். நீங்கள் அரசின் அமைச்சர்கள் தான். ஆனால் தமிழ் மக்களின் பல பிரச்சினைகளுக்காக நீங்கள் வெளியே இருந்து போராடுகின்றீர்கள், நாங்கள் அரசிற்கு உள்ளே இருந்து போராடுகின்றோம். ஆகவே, எங்கள் இலக்குகள் ஒன்று தான். ஆகையினால் அரசிற்குள்ளே இருக்கின்ற அமைச்சர் வந்துவிட்டார் என்று அப்பாவியான என்னைக் குறை சொல்ல கூடாது.

இதற்காக நானும் பதவிகளைத் தூக்கி எறிந்து விட்டு வெளியெ வரலாம். அவ்வாறு அரசில் இருந்து வெளியே வருவதற்குத் தயாராகத் தான் இருக்கின்றேன். ஆனால் அவ்வாறு வந்தால் அடுத்து என்ன செய்வது என்ற நிலையும் உள்ளது. ஆகவே எமது செயற்பாடுகள் அனைத்தும் கூட்டிணைக்கப்பட வேண்டியது மிக மிக அவசியமானது.

ஆகவே தமிழ் மக்களின் இருப்பை பாதுகாக்க கட்சி பேதமில்லாமல் தமிழர்களாக நாங்கள் அனைவரும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டும்.

இதேவேளை அரசியலமைப்பு உருவாக்கப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதனுர்டாக இடைக்கால அறிக்கையும் வெளி வந்துவிட்டது. ஆனால் அந்த அறிக்கை எல்லாம் ஒரு ஆவணமாகவே இருக்கிறது. அதாவது பண்டா, செல்வா ஒப்பந்தம் முதல் டட்லி- செல்வா ஒப்பந்தம், முணசிங்க ஆவணம், சந்திரிகாவின் அரசியல் பொதி, என அனைத்து ஒப்பந்தங்கள், ஆவணங்களுடன் இன்றைக்கு ரணில் விக்கிரமசிங், மகிந்த ராஜபக்‌ஷ ஆகியோரின் பேச்சுக்களும் ஆவணங்களும் என அனைத்தும் ஆவணங்களாக நூலகத்தில் அழகாக வைக்கப்பட்டிருக்கின்றது.

இதனோடு சேர்ந்து இறுதியாக வந்த ஆவணம் தான் இடைக்கால அறிக்கையாகும். ஆகவே எங்களுடைய வேலைத் திட்டங்களை கட்சி பேதங்களுக்கு அப்பாற்றபட்டதாக முன்னெடுத்துச் செயற்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேஷன் மேலும் தெரிவித்துள்ளார்.

...............................

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com