Sunday, February 10, 2019

தேசிய அரசாங்கத்தை ஆதரிப்பதில் இருந்து, சுதந்திர கட்சி உறுப்பினர்கள் விலகல்.

கட்சியில் இருந்து கிடைத்த அழுத்தம் காரணமாக, தேசிய அரசாங்கத்தை ஆதரிக்கும் செயற்பாட்டில் இருந்து, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் பின்வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர். ஆனால் அவர்கள் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக, சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியால் உருவாக்கப்படவுள்ள தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்தால், அவர்களுக்கு எதிராக ஒழுக்கயீன நடவடிக்கை எடுக்கப்படும் என, அறிவிக்கப்பட்டதை அடுத்தே அவர்களில் பெரும்பாலோர், இந்த நடவடிக்கையில் இருந்து பின்வாங்குவதற்கு முடிவு செய்துள்ளதாக அறிய முடிகின்றது.

சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு ஆர்வமாக உள்ளனர். ஆனால் நாடாளுமன்றில் பெரும்பான்மை இல்லாத அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க, அவர்கள் தயாரில்லை.

தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான தீர்மானம் அடுத்த நாடாளுமன்ற அமர்வில் முன்வைக்கப்படவுள்ளது. இருப்பினும் ஏற்கனவே இந்த தீர்மானம் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், சபாநாயகருக்கு தீர்மானத்தை சமர்ப்பித்த பின்னர், நாடாளுமன்றில் சமர்ப்பிக்க ஐந்து நாட்கள் காலஅவகாசம் தேவை என, அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல கூறியுள்ளார்.

அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸுடன் கைகோர்த்து, ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்க ஐக்கிய தேசிய முன்னணி முயற்சித்து வருவதாகவும் அவர் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com