Saturday, February 2, 2019

இலங்கை கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட படகுகள் சீஷெல்ஸ் நாட்டுக்கு அன்பளிப்பு.

இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளை முன்கொண்டு செல்வதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதியிடம் சீஷெல்ஸ் உப ஜனாதிபதி, உறுதியளிப்பு

இலங்கை கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட இரண்டு கடலோர ரோந்து படகுகளை சீஷெல்ஸ் நாட்டுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதியின் தலைமையில் நேற்று (01) முற்பகல் கொழும்பு துறைமுக வளாகத்தில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் நிறுவனத்தில் இடம்பெற்றது.

இலங்கைக்கும் சீஷெல்ஸ் நாட்டுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடந்த 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சீஷெல்ஸுக்கு மேற்கொண்ட அரசமுறை பயணத்தின்போது வழங்கிய உறுதிமொழிக்கிணங்க இலங்கையின் அன்பளிப்பாக இந்த கடற்படை படகுகள் சீஷெல்ஸ் நாட்டுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த கடற்படை ரோந்து படகுகள் வெலிசரை கடற்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள கடலோர ரோந்து படகுகள் நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் சர்வதேச நியமங்களுக்கேற்ப தயாரிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை கடற்படை தொழிநுட்பத்தை பயன்படுத்தி கடற்படை பொறியியலாளர்களின் மேற்பார்வையின் கீழ் ஆறு வாரகால குறுகிய காலப்பகுதியில் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இது போன்ற மற்றுமொரு படகையும் இலங்கையிடமிருந்து கொள்வனவு செய்வதற்கு சீஷெல்ஸ் அரசாங்கம் இலங்கை கடற்படையிடம் விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்த படகுகளை கையளிக்கும் நிகழ்வுக்கு சீஷெல்ஸ் நாட்டின் உப ஜனாதிபதி வின்சன்ட் மெரிடன் இலங்கைக்கு வந்திருந்ததுடன், ஜனாதிபதியினால் படகுகளை கையளிப்பதற்கான ஆவணங்கள் அவரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் கொன்ரட் மெடரிக், பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி அட்மிரால் ரவீந்ர விஜேகுணரத்ன, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா, கடற்படை பணிக்குழாம் பிரதானி ரியர் அட்மிரல் ஜகத் ரணசிங்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதே நேரம் சீஷெல்ஸ் உப ஜனாதிபதி வின்சன்ட் மெரிடன் அவர்கள் நேற்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகைதந்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடினார்.

ஜனாதிபதி​ைமைத்ரிபால சிறிசேவைின் சீஷெல்ஸ் நாட்டுக்கான விஜயத்தின்போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளை முன்னெடுப்பது பற்றி இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், சகோதர நாடுகள் என்ற வகையில் இரு நாடுகளினதும் மக்களின் சுபீட்சத்திற்காக அந்த இணக்கப்பாடுகளை பலமாக முன்னெடுத்துச்செல்ல அர்ப்பணிப்புடன் உள்ளதாக சீஷெல்ஸ் உப ஜனாதிபதி தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையில் சுற்றுலா மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கு முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித்திட்டங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாகவும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

ஜனாதிபதி சீஷெல்ஸ் உப ஜனாதிபதியை மகிழ்ச்சியுடன் வரவேற்றார். சீசெல்ஸ் ஜனாதிபதி டெனி போ வின் வாழ்த்துச் செய்தியையும் சீஷெல்ஸ் உப ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளித்தார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com