Monday, February 18, 2019

கம்பஹா கிராம சக்தி மக்கள் இயக்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று கம்பஹா – ஹேனகம பகுதியில் கிராம சக்தி மக்கள் இயக்கத்தின் செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. தனியார் துறையின் பங்களிப்புடன் தற்போது இந்த திட்டம் நாடளாவிய ரீதியில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுவதன் நோக்கம் மக்களை, தங்கி வாழும் மனநிலையிலிருந்து சுயமாக எழுவதற்கு உதவுவது ஆகும்.

மக்களின் வாழ்வாதார வழிகளை அபிவிருத்தி செய்வதற்காக கிராம சக்தி மக்கள் இயக்கத்தின் மூலம் பல்வேறு திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் இவ்வாறன திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து இன்று இடம்பெறவுள்ள செயற்குழுக் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2018 ஆம் ஆண்டு கம்பஹா மாவட்டத்திற்கு 39 மில்லியன் ரூபா கிராமசக்தி சங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 2,373,000 மக்கள் தொகையைக் கொண்ட கம்பஹா மாவட்டத்தின் வறுமையின் அளவு 2.0% ஆவதுடன், 1,281,000 மக்கள் தொகையைக் கொண்ட களுத்துறை மாவட்டத்தின் வறுமையின் அளவு 2.9% ஆகும்.

மாகாணத்தின் அரசியல் தரப்பு மற்றும் அரச அதிகாரிகள் ஆகிய இருதரப்பினரின் பங்களிப்பில் இடம்பெறவுள்ள இக்கூட்டத்தில் மேல் மாகாண மக்கள் முகங்கொடுத்துவரும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு சாத்தியமான துரித தீர்வுகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மேல் மாகாண கிராமசக்தி சங்கங்கள் மற்றும் சில தனியார் நிறுவனங்களுக்கிடையே கிராமசக்தி சங்கங்களிலிருந்து புதிய உற்பத்திகளை கொள்வனவு செய்வது தொடர்பில் சில உடன்படிக்கைகள் இன்று கைச்சாத்திடப்படவுள்ளன.

இதுவரை செயற்படுத்தப்பட்ட சமூக நலன்புரி வேலைத்திட்டங்களுடன் ஒப்பிடுகையில் கிராமசக்தி வேலைத்திட்டத்தில் பல சிறப்பம்சங்களை காணக்கூடியதாக உள்ளது. ஜனசவிய, சமுர்த்தி, திவிநெகும ஆகிய வேலைத்திட்டங்களை நுட்பமாக அவதானித்ததன் பின்னர் கிராமசக்தி வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டது. அந்த வேலைத்திட்டங்கள் அனைத்தையும் விட முற்போக்கானதும் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டமாக கிராமசக்தி செயற்பட்டு வருகிறது.

முதன்முறையாக அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு கீழ்ப்படியாமலும் கிராமிய மக்கள் ஒன்றிணைந்து, ஒற்றுமையாக முடிவெடிக்கும் சந்தர்ப்பத்தை கிராமசக்தி மக்கள் செயற்திட்டம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. கிராமத்தின் அபிவிருத்தி தொடர்பான அனைத்து முடிவுகளும் கிராமசக்தி சங்கங்களினாலேயே மேற்கொள்ளப்படுகின்றன.

அரச துறை, தனியார் துறை மற்றும் மக்கள் ஆகிய முத்தரப்பையும் ஒன்று சேர்க்கும் மக்கள் இயக்கமாக கிராமசக்தி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் முக்கியத்துவமளித்து உருவாக்கப்பட்ட முதலாவது தேசிய ரீதியான பொருளாதார நலன்புரி வேலைத்திட்டமும் கிராமசக்தி மக்கள் செயற்திட்டமேயாகும்.

உற்பத்திகளை மேம்படுத்துதல், கீழ் மட்ட வறுமையிலிருந்து விடுபடுதல் ஆகிய இரண்டு விடயங்களும் ஒரே கண்ணோட்டத்தில் கிராமசக்தி செயற்திட்டத்தின் ஊடாக நிறைவேற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com