Tuesday, February 5, 2019

நாட்டினை ஸ்தம்பிதம் அடையச் செய்யும் வேலைநிறுத்தப் போராட்டங்கள்.

நாளைய தினம் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுமார் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட அதிபர்களுக்கு, இரண்டாம் மொழி கல்வியினை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை, தற்போது வரை வெளியிடப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் யோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக தாம் இரண்டு தடவைகள் அமைச்சர் மனோ கணேசனுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்ததாகவும், எனினும் இதுவரையில் இதற்கான உரிய தீர்வு எட்டப்படவில்லை எனவும், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் யோசப் ஸ்ராலின் குறிப்பிட்டார்.

அத்துடன் தமக்கான தீர்வு விரைவில் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, நாளை காலை 10 மணியளவில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என, அவர் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலை தாதியர் இருவரின் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களில் வெளியாகிய செய்தி, அனைத்து தாதியர்களுக்கும் அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ள தாதியர்கள், இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை யாழ். போதனா வைத்தியசாலையின் தாதியர்கள், அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்தோடு, குறித்த சம்பவம் தொடர்பில் வெளியாகிய செய்திக்கு வைத்தியசாலைப் பணிப்பாளரால் மறுப்பு அறிக்கை வெளியிட வேண்டும் எனவும், தாதியர்கள் இதன்போது வலியுறுத்தினர்.

இதன் காரணமாக வைத்தியசாலையின் வைத்திய சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளளதோடு, நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

எனினும் தம்மை பற்றி வெளியாகிய இந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என தெரிவித்தும், இந்த செய்தியை வெளியிட்டவர்களை கண்டித்தும் குறித்த வேலை நிறுத்த போராட்டம், யாழ் போதனா வைத்தியசாலையின் மருத்துவ தாதியர்களால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சுங்க திணைக்களத்தின் பணியாளர்கள் முன்னெடுத்து வரும் சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் காரணமாக, தமக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து, இன்றைய தினம் புறக்கோட்டை மொத்த வர்த்தக உரிமையாளர்கள் சங்கம், கடையடைப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

சுங்க திணைக்கள பணிப்பாளர் திருமதி சார்ள்ஸ், பதவியில் இருந்து நீக்கப்பட்டு அந்த இடத்திற்கு மற்றுமொருவர் நியமிக்கப்பட்டமையை கண்டித்து, சுங்க திணைக்களத்துடன், 14 ற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து, இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன .

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com