Tuesday, February 26, 2019

போதைப் பொருள் கடத்தல் வலைப்பின்னலைக் கண்டுபிடிக்க, தொலைபேசி உரையாடல்களைத் தொடர்கிறது பொலிஸ்

அண்மையில் கைப்பற்றப்பட்ட பெருமளவான ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களின் தொலைபேசி கலந்துரையாடல் அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, சந்தேகநபர்கள் பயன்படுத்திய தொலைபேசி சிம் அட்டைகளின் நிறுவனங்கள் ஊடாக, அவர்கள் மேற்கொண்ட உரையாடல்கள் கண்டறியப்படவுள்ளன.

உள்நாட்டு மற்றும் வௌிநாட்டில் செயற்படும் புலனாய்வுப் பிரிவினருடன் தகவல்களை பரிமாறி, விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில், கொள்ளுப்பிட்டியில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தொகை, டுபாயிலுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரால், தெற்காசிய நாடொன்றைச் சேர்ந்த மற்றுமொரு கடத்தல்காரரூடாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த கடத்தல்காரர் டுபாயில் உள்ளதாகவும் இந்தக் கடத்தலுடன், மாகந்துரே மதூஷின் குழுவினருக்கு தொடர்பில்லை என விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கொள்ளுப்பிட்டி, வர்த்தக கட்டடத் தொகுதியின் கைப்பற்றப்பட்ட 294 கிலோ 490 கிராம் நிறையுடைய ஹெரோயின் போதை பொருளின் பெறுமதி 3,533 மில்லியன் ரூபா ஆகும்.

இந்த நிலையில், சந்தேகநபர்கள் இருவரையும் மார்ச் முதலாம் திகதி வரை தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினருக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com