Saturday, January 26, 2019

சில பங்காளிக் கட்சிகள், பங்கு கேட்க தொடங்கியதால் தற்போது இனவாத விஷம் பரவியுள்ளது. பைசர் முஸ்தபா.

சிறுபான்மை கட்சிகள், பிரதான கட்சிகளின் பங்காளிகளாக மாறி, பங்கு கேட்பதன் விளைவாகவே நாட்டில் தற்போது இனவாதம் ஏற்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தேர்தல்களின் போது இனம் மற்றும் மதத்துக்கு அப்பால், இலங்கையர் என்ற ரீதியில் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விகிதாசார முறைமையின் கீழ் எவ்வாறான பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டார்கள்? என்பது எம் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.

பணம், அதிகாரத்துக்கு ஆசைப்பட்டவர்களாகவே அவர்கள் இருந்தார்கள். இதனாலேயே, நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டன.

இதனை மாற்றியமைக்க வேண்டும் என்றே, நாம் 2017ஆம் ஆண்டு தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தினோம். அதற்கிணங்கவே, உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் இடம்பெற்றது.

இலங்கை வாழ் மக்கள், தமது இன, மதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவருக்கே வாக்களித்து வருகிறார்கள். அவர்கள் தொடர்பில் எந்தவொர ஆய்வையும் மேற்கொள்ளாமல் வாக்களிக்கிறார்கள்.

இந்த கலாசாரத்தை நாம் மாற்றியமைக்க வேண்டும். இலங்கை முன்னேற்றகரமான பாதையில் செல்ல வேண்டுமென்றால் சரியான பிரதிநிதிக்கு நாம் வாக்களிக்க வேண்டும். இந்த விடயத்தில் நாம் இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றிணைய வேண்டியது அவசியமாகும்.

சில சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், பெரிய கட்சிகளின் பங்காளியாக மாறி, தற்போது தமது பங்கை கேட்டு வருகிறார்கள்.

இதனாலேயே, தேவையில்லாத இனவாதம் என்ற விஷம் பரவுகிறது. தொகுதி வாரி முறைமையின் ஊடாக தொகுதிக்கு பொறுப்புக்கூறும் பிரதிநிதியைக் கொண்டுவர வேண்டும் என்று நாம் முயற்சித்தோம்.

அத்தோடு, பெண்களின் பிரதிநிதித்துவத்தையும் நாம் பலப்படுத்த நடவடிக்கைகளை எடுத்தோம். இதன் பிரதிபலனாகவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெண் பிரதிநிதித்துவத்தை 25 வீதமாக நாம் அதிகரித்தோம்.

நாடாளுமன்றில் தற்போது இருக்கும் பெண் பிரதிநிதிகள், அவர்களது கணவன் உள்ளிட்ட உறவினர்களின் தொடர்ச்சியாகவே இருக்கிறார்கள். சுயாதீனமான பெண்கள் பிரதிநிதித்தவம் குறைவாகவே இருக்கிறது. இவற்றை மாற்றியமைக்க நாம் முயற்சித்தோம். இதற்காக புதிதாக எல்லை நிர்ணயத்தையும் மேற்கொண்டோம்.

எனவே இன, மதங்களை விடுத்து நாம் அனைவரும் இலங்கையராக சிந்திக்க வேண்டும். 30 வருடங்களாக நாம் யுத்தத்தால் பிரிந்திருந்தோம். இனியும் இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றிணைய வேண்டும்.

மேலும், பெண் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த நாம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 25 வீத பிரதிநிதித்துவம் எந்தக் காரணம் கொண்டும் குறைக்கப்படக் கூடாது.

அத்துடன் எந்த முறையில் தேர்தல் நடைபெற்றாலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதற்குத் தயாராகவே உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com