Tuesday, January 1, 2019

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் புதிய தகவலை வெளியிட்ட எஸ்.பி திசாநாயக்க

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின்போது, எந்த கட்சியிலிருந்து வேட்பாளரை போட்டியிட வைப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிற்கும் மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாக எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகவியலாளர்களை இன்றைய தினம் சந்தித்தபோதே அவர் மேற்படி தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிக்கும் பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கியே இந்த அரசாங்கத்தை மீளப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஆனால் பிரதமர் பதவியை பெற்றுக்கொண்ட பின்னர், ரணில் விக்கிரமசிங்கவினால் கொடுத்த வாக்குறுதிகளைநிறைவேற்ற முடியவில்லை. இதனால், அரசாங்கத்திற்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த அரசாங்கம் தொடர்ந்தும் நீடிக்குமா என்பதில் நம்பிக்கை இன்மை காரணமாகவே பொதுத் தேர்தலுக்குச் செல்ல வேண்டும் என நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறோம்.

இதனிடையே மாகாணசபைத் தேர்தலை நடத்தி மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளவேண்டும். மேலும், சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் இந்த அரசாங்கத்துடன் இணைந்துக் கொள்ள வேண்டும் என சந்திரிக்கா அம்மையார் கூறியுள்ளார். ஆனால் சந்திரிகா அம்மையார் கூறுவதுபோல் செய்தால் எல்லா விடயங்களுக்கும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் தலையாட்ட வேண்டியேற்படும். அதற்கு அவர்கள் இணங்கினால், தாராளமாக இணையலாம். இதற்கு நாம் எப்போதும் எதிர்ப்பினை வெளியிட மாட்டோம்.

அத்துடன் ரணில் விக்கிரமசிங்கவின் கட்சியினர் சிலரும் எங்களோடு இணைந்து செயற்பட தயாராகவே இருக்கிறார்கள். முஸ்லிம், தமிழ், மலையக கட்சிகளின் கூட்டணியுடன் ஜனாதிபதித் தேர்தலில் நாம் களமிறங்கவுள்ளோம். எனினும், ஜனாதிபதித் தேர்தலின்போது எந்தக் கட்சியிலிருந்து வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தான் தீர்மானிக்க வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள இருவருக்கும் இடையில் சிறந்த புரிந்துணர்வொன்று ஏற்பட்டுள்ளது. இருவரும் என்ன தீர்மானம் எடுப்பார்கள் என்பதை நாம் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்றும் நாடாளுமன்ற் உறுப்பினர் எஸ் பி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com