இலங்கை- சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தத்தில் குறைபாடுகள் நிலவுகின்றன- ஜனாதிபதி.
இலங்கை- சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தத்தில் குறைபாடுகள் நிலவுவதாக ஜனாதிபதி, மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
சிங்கப்பூருக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், சிங்கப்பூர் பிரதமருக்கும் இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே, ஜனாதிபதி இந்த விடயத்தை சுட்டிக்காட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக, சுற்றுலா மற்றும் தொழிற்துறை உறவுகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் இந்த சந்திப்பில் வைத்து இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடினர்.
இந்த சந்திப்பில் வைத்து இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கிடையே கைச்சாத்தாகியுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த ஒப்பந்தத்தை தயாரிக்கும் போது ,இலங்கை தரப்பில் ஒரு சில குறைபாடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த குறைபாடுகளை சீர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை ஆசிய வலயத்திற்கு மாத்திரமன்றி உலகத்திற்கே அச்சுறுத்தலாக மாறியுள்ள போதைப்பொருள் சவாலை வெற்றி கொள்வதற்கு ஒன்றிணைந்து செயற்படுவதன் முக்கியத்துவம் தொடர்பில், இதன்போது இரு நாட்டு தலைவர்களும் கவனம் செலுத்தினர்.
போதைப் பொருள் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு, தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக சிங்கப்பூர் பிரதமர் இதன்போது உறுதியளித்தார்.
சிங்கப்பூரில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் இலங்கையர்களுக்காகவும், அந்த நாட்டில் உயர்கல்வி கற்கும் இலங்கை மாணவர்களின் நலன்புரி தேவைகளுக்காகவும் சிங்கப்பூர் அரசாங்கம் வழங்கும் ஒத்துழைப்புக்காக ஜனாதிபதி சிங்கப்பூர் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.
0 comments :
Post a Comment