புலிகள் தங்கள் சுயலாபங்களுக்காக மாகாண சபை முறையை நிராகரித்தனர். பாராளுமன்றில் டக்ளஸ்
மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டுமென, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை விடுத்தார். மாகாணசபைத் தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தின்போது அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
இதனிடையே விவாதத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, மாகாணசபை முறை மக்களுக்கு பெறுமதியான ஒரு சந்தர்ப்பமாகும் என்று குறிப்பிட்டார். அதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என அம்மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விடுதலைப் புலிகள் அமைப்பு தங்களின் குறுகிய நோக்கத்திற்காக மாகாணசபை முறையை நிராகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை தேர்தலை காலம் தாழ்த்துவதற்கான எந்தவொரு தேவைப்பாடும், ஐக்கிய தேசிய கட்சிக்கு இல்லையென பாராளுமன்ற உறுப்பினர் சிட்னி ஜயரட்ன தெரிவித்தார். தனிப்பட்டவர்களின் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தாது, நாட்டிற்கு தேவையான வகையில் தேர்தலை நடத்த வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார்.
பழைய முறையிலோ அல்லது புதிய முறையிலோ தேர்தல் நடத்தப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஜனநாயகத்தை உறுதி செய்வதற்கு மக்களின் வாக்குரிமை பாதுகாக்கப்பட வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார்.
மாகாணசபைத் தேர்தலை புதிய முறையில் நடத்துவதில் சிக்கல் இருக்குமாயின் பழைய முறையிலாவது தேர்தலை நடத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். உள்ளுராட்சி தேர்தல் முறையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, மேலும் அந்த முறையை வலுப்படுத்த வேண்டுமெனவும் அவர் கூறினார்.
இதேவேளை தேர்தலை பிற்போடுவதற்கு தான் ஒரு போதும் முயற்சி எடுக்கவில்லையென, பாராளுமன்ற உறுப்பினர் பைசல் முஸ்தபா தெரிவித்தார்.
இன்று கூடிய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, அவர் இதனை கூறினார். இதன்போது, தனது அமைச்சுப் பதவிக் காலத்தில் முன் உதாரணமான இரண்டு சட்ட மூலங்களை முன் வைத்ததாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை மாகாண சபைகளை நடைமுறைப்படுத்தாவிடின், பிரதேசங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தடைப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.
அத்துடன் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாதமையினால் பொதுமக்களுக்கான சேவைகள், தடைப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்த தெரிவித்துள்ளார்.
தேர்தலை காலம் தாழ்த்துவதானது, ஜனநாயகத்திற்கு எதிரான செயல்பாடு என்று, மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment