Monday, January 28, 2019

பிடியாணை உத்தரவை விலக்கிக் கொள்ள எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு கடும் கண்டனம்.

பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை விலக்கிக் கொள்ள முன்னெடுக்கப்பட்ட தீர்மானத்தை தமது தரப்பு வன்மையாக கண்டிப்பதாக, பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சர்வதேச இனப் படுகொலையை தடுப்பது மற்றும் தண்டிப்பது தொடர்பான நிலையம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்த தமிழர்களை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவுக்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் பிரித்தானிய அரசாங்கத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் அரசியல் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதால், குறித்த உத்தரவை பெப்ரவரி மாதம் முதலாம் திகதி தளர்த்த, நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

எனினும் இந்த நடவடிக்கையை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாதது என்று, சர்வதேச இனப் படுகொலையை தடுப்பது மற்றும்  தண்டிப்பது தொடர்பான நிலையம் அறிக்கை ஒன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை ஏற்றுக் கொண்டது. இது 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் திகதிக்குப் பின்னர் இந்த பிரச்னை பரவலாக வெளிவந்தது.

இதேவேளை இலங்கை அரசாங்கமானது பிரித்தானிய நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமது சமர்ப்பித்தல்களை, பொதுநலவாய மற்றும் வெளிவிவகார அலுவலகங்களுக்கு முன்வைத்துள்ளது என, இலங்கை வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சரோஜா சிறிசேன தெரிவித்தார்.

இருப்பினும், இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், இராணுவப் பேச்சாளர் மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் ஆகியோர், பிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிரான பிடியாணை உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என்ற தவறான கருத்தை மக்கள் மத்தியில் முன்வைத்துள்ளனர். இந்த செயற்பாடானது முழுக்க முழுக்க வெட்கக் கேடானது.

அத்தோடு குறித்த உத்தரவு தொடர்பில் பொதுநலவாய மற்றும் வெளிவிவகார அலுவலகங்கள் நீதிமன்றத்துடன் தொடர்பு கொண்டதாகவும், இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறியிருந்தார்.

இருப்பினும் நீதிமன்ற விடயங்களில் பொதுநலவாய மற்றும் வெளிவிவகார அலுவலகங்கள், எவ்வாறு வெஸ்ட்மினிஸ்டர் நீதவான் நீதிமன்ற தீர்ப்பில் தலையீடு செய்ய முடியும்?” என்று தற்போது கேள்வி எழுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com