Friday, January 11, 2019

ஹிஸ்புல்லாவுக்காக தொழுகையை கைவிட்ட முஸ்லிம்களும் , தொழிலை கைவிட்ட தமிழர்களும். பீமன்

கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் கிழக்கின் ஆளுநராக எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டிருந்தார். அவரது நியமனத்தை பல்வேறுபட்ட தரப்புக்கள் பல்வேறு கோணத்தில் எதிர்த்தன. இவ் எதிர்ப்புக்கு பின்னணியில் இருக்கும் இரண்டு பிரதான காரணகர்த்தாக்களாவன

ஒன்று குறுகிய அரசியல் லாபம்.

இரண்டாவது அப்பதவிக்காக போட்டியிட்டோர் அது கிடைக்காமையால் ஒழிந்திருந்து மேற்கொள்ளும் சூழ்ச்சிகள்.

மேற்படி இரு குழுவினரின் இணைச் சதியாக இன்று ஹர்த்தால் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் ஹர்த்தாலின் வெற்றி தோல்வி சம்மந்தமாக பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் மக்கள் அடைந்தது யாதென்பது பேசப்படவேண்டியதாகும்.

தொழுகையை கைவிட்ட இஸ்லாமியர்கள்.

இஸ்லாமியர்களை பொறுத்தவரை உலகளாவிய ரீதியில் வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகை மிக முக்கியமானதாகும். அரபு நாடுகளில் வெள்ளிக்கிழமை ஒரு பூரண விடுமுறை நாளாகவுள்ளது. இலங்கைபோன்ற இஸ்லாமியர்கள் சிறுபான்மையினராக வாழுகின்ற சில நாடுகளில் இஸ்லாமியர்கள் தங்களது தொழுகைக்கேற்றவாறு வெள்ளிக்கிழமையை வடிவமைத்துக் கொண்டுள்ளனர்.

அவர்கள், வெள்ளிக்கிழமைகளில் பெரும்பாலும் 11 மணியுடன் தமது வியாபார ஸ்தலங்களை பூட்டி மிகுதி அரை நாளையும் தொழுகைக்காகவும் பிற தேவைகளுக்காகவும் பயன்படுத்திக்கொள்வர். அவ்வாறு 11 மணியின் பின்னர் வியாபார ஸ்தாபனங்கள் மற்றும் பிற அலுவலகங்களை பூட்டாத முஸ்லிம்கள் இஸ்லாமியர்களாக கருதப்படமாட்டார்கள். அவர்கள் மீது ஒரு சமூக வெறுப்பு ஏற்படும். இது இஸ்லாத்திற்கு அல்லது அல்லாகுத்தாலாவுக்கு செய்கின்ற பிரதிக்கடனாகக்கூட கணிக்கப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் இன்று ஹிஸ்புல்லாவிற்கு எதிராக விடுக்கப்பட்டிருந்த ஹர்த்தாலுக்கான அழைப்பு 'அல்லாகுத்தாலாவா அன்றில் ஹிஸ்புல்லாவா' என்ற நிலைக்கு முஸ்லிம் வர்த்தகர்களை தள்ளிவிட்டிருந்தது.

கிழக்கின் ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா அல்லாகுத்தாலாவிலும் மேலானவர், அவருக்கு எதிரான ஹர்த்தாலை அல்லாகுத்தாலாவை புறந்தள்ளி வைத்து நாம் காப்போம் என்ற நிலைக்கு கிழக்கின் வர்த்தகர்களை கொண்டு சென்றுள்ளது. அவர்கள் கடைகளை அடைத்து தொழுகைக்கு செல்லாது ஹிஸ்புல்லாவிற்கு எதிரான ஹர்த்தாலை தோற்கடித்துள்ளனர். எனவே அல்லாகுத்தாலா கொடுக்கின்ற பாரிய கொடைகளிலும் பார்க்க கிழக்கின் வர்த்தகர்களுக்கு ஹிஸ்புல்லா கொடுக்கவேண்டும். கொடுப்பார் என்ற நம்பிக்கையும் உண்டு. அதுவே ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்தோரது எதிர்பார்ப்பாகவும் இருந்திருக்கலாம். காரணம் என்னவென்றால் இனவாத அரசியல் என்பது திண்மக்கழிவு முகாமைத்துவத்தில் மேற்கொள்ளப்படும் மீள்சுழற்றி மாதிரி (றீசைக்கிளிங்)



தொழிலைக் கைவிட்ட தமிழர்கள்.

இன்று ஹிஸ்புல்லாவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக அறிவிப்பு விடுத்தவர்கள், குறிப்பிட்ட பிரதேசங்களிலுள்ள அன்றாடம் உழைத்து உண்ணும் (கூலித் தொழிலாளிகள் முதல் வியாபாரிகள் வரை) பட்டாளி வர்க்கத்தின் அடுப்பில் பூனை படுக்க விட்டுள்ளனர். இந்த மக்களின் இன்றைய நாள் வருமானம் பூச்சியம். இன்றைய சாப்பாட்டுக்கு அவர்கள் கடனாளிகளாயிருப்பர். ஆனால் அந்த கடனை அடைப்பதற்கு எவரும் எந்த வழியையும் காட்டப்போவதில்லை என்பது மாத்திரம் வரலாற்றில் நாம் கற்றுக்கொண்ட பாடம்.



ஹிஸ்புல்லாவும் எதிர்ப்பவர்களும்.

ஹிஸ்புல்லா ஒரு அப்பழுக்கற்ற அரசியல் விபச்சாரி என்பது மாத்திரமல்ல சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் பாஷையில் சொல்வதானால் ஊழலின் மொத்த வடிவம்.

இன்று ஹிஸ்புல்லா மீதான எதிர்ப்பானது, அவர் ஒரு முஸ்லிம் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக இடம்பெறுகின்றதா என்ற கேள்வி இருக்கின்றது.

கடந்த காலங்களில் எத்தனையோ தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலில் நின்றபோதும், மன்சூர் மற்றும் அஹமட் போன்ற பழைய அரசியல்வாதிகளை தமிழ் மக்களே பாராளுமன்றுக்கு அனுப்பினர். அவர்களும் அவ்வாறே அந்த மக்களுக்கு நியாயமாக நடந்துள்ளனர். அவர்கள் எந்தக்கட்டத்திலும், தமிழ் மக்களின் ஆணைக்கு எதிராக அந்த மக்களின் பிரதிநிதி என்ற ஸ்தானத்திலிருந்து விலகிச் சென்றதில்லை.

ஆனால் பல தடவைகளில் கணிசமானளவு தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று அல்லது புலிகளின் உதவியுடன் ஒருசில பகுதி தமிழ் மக்களை வாக்களிக்காமல் பண்ணி பாராளுமன்று சென்ற பின்னர் அதே பலத்தை வைத்து கோயிலை இடித்துக் கொண்டினேன், சுடலையை தரை மட்டமாக்கினேன் என்று மன்சூரோ அல்லது அஹமட் போன்றோரோ என்றும் கூக்குரல் இட்டதில்லை.

எனவே இங்கே தமிழ் மக்கள் ஹிஸ்புல்லாவின் நியமனம் தொடர்பாக அச்சம் கொள்கின்றார்கள் என்றால் அது காரணமற்றது என்று யாராலும் எழுந்தமானமாக சொல்லிவிடமுடியாது.

இருந்தபோதும் ஹிஸ்புல்லாவின் நியமனத்திற்கு எதிராக ஊழையிடுகின்ற கருணா மற்றும் யோகேஸ்வரன் போன்றோர் உண்மையில் ஹிஸ்புல்லாவின் நியமனம் தமிழ் மக்களுக்கு ஆரோக்கியமானதல்ல என்ற உணர்வில்தான் மக்களை தூண்டுகின்றார்களா? என்பதுதான் கேள்வி.

கருணா இன்று தமிழ் மக்களை முஸ்லிம் மக்களுக்கு எதிராக தூண்டி, தன்னை ஓர் தமிழ் பக்தன் எனக் காண்பிக்க முற்படுகின்றார், முஸ்லிம்களுக்கு எதிராக கருத்திடுவதன் ஊடாக தனது வாக்கு வங்கியை நிரப்ப முடியும் என எண்ணும் கருணாவின் முஸ்லிம்களுடனான உறவு என்பது மக்கள் அறியவேண்டியதாகும்.

கருணாவின் மிகச் சிறந்த நண்பர்கள் என பத்துப்பேர் கொண்ட பட்டியலை எடுத்தீர்களானால் அதன் முதல் 9 பேரும் முஸ்லிம்களாக இருப்பார்கள். கருணாவின் உறவினர்களில் கருணா மிகவும் நேசிக்கின்ற உறவினர்கள் என்று நீங்கள் எடுத்துக்கொண்டால், அவர்களிலும் முதல் 9 பேரும் முஸ்லிம்களாக இருப்பார்கள் என்பது நான் அறிந்த விடயம். கருணாவின் சகோதரி ஒருவர் முஸ்லிம் நபர் ஒருவரை திருணம் செய்து இன்றைக்கு 30 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றார். அந்த முஸ்லிம் குடும்பம் கருணாவினாலும் அவரது இதர குடும்ப அங்கத்தவர்களாலும் மிகவும் நேசிக்கப்படுகின்றது. இவ்வாறு கருணா அச்சமூகத்துடன் உறவு கொண்டாடிக்கொண்டுதான் முஸ்லிம்கள் மீது தமிழ் மக்களை ஏவி விடுகின்றார். இது கண்டனத்திற்குரியவிடயமாகும்.

எனது கற்பனைக்கெட்டியவரை ஹிஸ்புல்லா பதவியேற்கப்போகின்றார் என்பதை அறிந்தவுடன் அவரை வாழ்த்திய முதலாவது நபராக கருணாவே இருந்திருப்பார். கருணா பேசுகின்ற விடயங்களை இவ்வாறு ''நீ என்னை பேசு'' என ஹிஸ்புல்லாவே தடம் போட்டுக்கொடுத்திருப்பார். அதன் பிரதிபலிப்பை நாம் இன்று காண்கின்றோம். தேர்தலில் ஹிஸ்புல்லாவை தோற்கடித்த முஸ்லிம் சமூகம் ஏன் இன்று ஜூம்மாவுக்கு செல்லாமல் ஹிஸ்புல்லாவிற்காக வரிந்து கட்டி நிற்கின்றது. கருணா மற்றும் யோகேஸ்வரன் போன்ற அரசியல் அனாதைகளின் இனவாதம் முஸ்லிம்கள் மத்தியில் சரிந்து கிடந்த ஹிஸ்புல்லாவின் செல்வாக்கினை நிமிர்த்தி நிறுத்தியுள்ளது.

ஆனால் முஸ்லிம் மக்கள் உணரவேண்டிய விடயம் ஒன்று உள்ளது. ஹிஸ்புல்லா ஒன்றும் முஸ்லிம் மக்களின் சேவகனோ அன்றில் அவர் முஸ்லிம்களுக்காகவே தமிழ் மக்களை நிந்திக்கின்றார் என்பதெல்லாம் வெறும் பொய். இதே ஹிஸ்புல்லா புலிகளுடன் பல்வேறு ஒப்பந்தங்களை செய்து கொண்டவர். புலிகள் மோட்டார் சைக்கிளில் வந்து முஸ்லிம்களை சுட்டுவிட்டு ஓடிக்கொண்டிருந்தபோது, புலிகளுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கிக்கொடுத்தவர்.

ஹிஸ்புல்லா மோட்டார் சைக்கிள் வாங்கிக்கொடுத்த விவகாரம் மாட்டியபோது அவர் ஆடிய நாடகம் அருவருக்கத்தக்கது. அவ்விடயம் தென்பகுதியில் சூடுபிடித்தபோது, தான் குண்டு துளைக்காத வண்டியில் வருவேன் நீங்கள் எனது வண்டிக்கு சுடவேண்டும் என நாடகம் போட்டவர்தான் ஹிஸ்புல்லா. அவ்வாறே புலிகளும் ஹிஸ்புல்லாவின் வாகனம்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். சந்திரிகா மேலதிக பாதுகாப்புக்கு உத்தரவிட்டார். அத்துடன் மோட்டார் சைக்கிள் தொடர்பான விசாரணை கோப்பு தூக்கி வீசப்பட்டது.

எனவே ''அரசியல் காவாலிகளின் இறுதிப்புகலிடம் தேசப்பற்று'' என்ற ஜவகர்லால் நேரு அவர்களின் கூற்றை மக்கள் ஏற்று எமது அரசியல் காவாலிகள் தொடர்பில் மக்கள் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும்.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com