Saturday, January 12, 2019

ஜனாதிபதிக்கும், புதிய ஆளுநர்களுக்கும் இடையில் சந்திப்பு.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் வைத்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, பொது மக்களுக்கான, சேவைகளையும், தேவைகளையும் முறையாகவும், வினைத்திறனாகவும் மேற்கொள்வதோடு அரசாங்கத்தின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக தாம் புதிதாக நியமித்த ஆளுநர்கள், நேரடி தலையீடுகளை மேற்கொண்டு பணியாற்றுவார்கள் என்று நம்புவதாக கூறினார்.



நேற்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது, மாவட்ட ரீதியாகவும், ஜனாதிபதி செயலகத்தினாலும் செயற்படுத்தப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

பொருளாதார மற்றும் சமூக ரீதியாக பொதுமக்களை, மேம்படுத்தி சுபீட்சம் மிக்க சிறந்த குடிமக்களாக உருவாக்கும் நோக்குடன், பல்வேறு விசேட செயற்திட்டங்கள் ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ், ஜனாதிபதி செயலகத்தினால் தற்போது செயல்படுத்தப்பட்டு வருவதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது 

போதைப்பொருள் ஒழிப்பு தேசிய செயற்திட்டமும், பொதுமக்களை வறுமையிலிருந்து மீட்பதற்கான கிராம சக்தி தேசிய செயற்திட்டமும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த ஜனாதிபதி, 
நாட்டின் இளைஞர் சமுதாயத்தை போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுவிப்பதற்கான மேலதிக நடவடிக்கைகளையும் முன்னெடுக்க தயாராக உள்ளதாக தெரிந்தார். 

இந்த மாதம் 21 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையான காலப்பகுதி தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் சீர்கேடுகள் தொடர்பில், சமூகத்தை விழிப்பூட்டும் பல வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

குறிப்பாக பாடசாலை மாணவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை இலக்காகக்கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில், உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்த ஜனாதிபதி, அந்த வேலைத்திட்டங்களில் ஆளுநர்கள் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என பணிப்புரை விடுத்தார். 

இந்த சந்திப்பில் கலந்து கொண்ட புதிய ஆளுநர்கள், மக்களின் நலனை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டங்களில் தமது முழுமையான பங்களிப்பை வழங்குவதாகவும், தெரிவித்தனர். 

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com