Monday, January 7, 2019

தோல்வியடைந்த பொறிமுறையாக மாறியமைக்கு, இரு பிரதான கட்சிகளே பொறுப்பு கூற வேண்டும் - வேலுகுமார்.

கூட்டு ஒப்பந்தம் தோல்வியடைந்தமைக்கு , நாட்டின் இரு பிரதான கட்சிகளும் பொறுப்புக் கூற வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் குறிப்பிட்டுள்ளார்.

இன்று கண்டியில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு, கருத்து வெளியிட்ட போதே, நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் இவ்வாறு கூறினார். “தொழிலாளர்களுக்கு அனுகூலம் கிடைக்கும் வகையிலேயே கூட்டு ஒப்பந்த முறைமை உருவாக்கப்பட்டது. இந்த கூட்டு ஒப்பந்தம், சிறப்பானதொரு சம்பள நிர்ணய முறையாகவும் உலக நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், கூட்டு ஒப்பந்தம் இலங்கையில் ஏன் தோல்வி அடைந்துள்ளது? என்பது குறித்து விரிவாக நாம் ஆராய வேண்டும். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள், ஆரம்பகாலம் முதலே குறுகிய அரசியல் நோக்கங்களைக் கைவிட்டு, தூரநோக்குடன் செயற்பட்டிருந்தால் தற்போது அடிப்படைச் சம்பளமானது ஆயிரத்தை தாண்டியிருக்கும்.

எனினும், இரண்டு வருடங்களுக்கு ஒருதடவை மிக குறுகிய அளவிலான சம்பளமே தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இது மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும். இதை ஆட்சியிலுள்ளவர்களும் கண்டுகொள்ளவில்லை.

அப்போதே கூட்டு ஒப்பந்தத்தில் அரசு தலையிட்டு வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக நிவாரணங்களை வழங்கியிருந்தால், இவ்வாறு கூட்டு ஒப்பந்தம் தோல்வி அடைந்திருக்காது என வேலுகுமார் கூறியுள்ளார்

இந்த பொறுப்பை ஆட்சியில் இருந்த அரசாங்கங்களும், எதிரணியுமே ஏற்க வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com