தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு நியாயமானதே - அனுர குமார திஸநாயக்க
தமக்கு ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என, பெருந்தோட்ட மக்கள் முன்வைத்து வரும் கோரிக்கை நியாயமானதே என்று, ஜேவிபியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற ஒத்திவைப்பு வேளை மீதான பிரேரணையை சமர்ப்பித்ததன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க உரையாற்றினார். இதன்போதே அவர் இந்த விடயத்தை சபைக்கு கொண்டு வந்தார்.
இந்த மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் பொறுப்பு அரசாங்கத்தை மட்டுமே சாரும். தோட்டப்புறங்களில் குறை நிறை கொண்ட குழந்தைகளின் பிறப்பு 25 சதவீதத்தை தாண்டுகிறது. தோட்டப்புற மாணவர்களின் வருடாந்த பல்கலைக்கழ நுழைவு, 120க்கும் 150 க்கும் இடைப்பட்ட மட்டத்தில் காணப்படுகிறது.
இதனால் தோட்டப் புற மக்கள் கல்வியிலும், சுகாதாரத்திலும் கைவிடப்பட்ட நிலையில் உள்ளார்கள். இந்த நிலைமை மாற வேண்டும். இந்த மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதன் மூலமே, மலையகத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என, ஜேவிபியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க கூறியுள்ளார்.
அவரின் உரையில் ஒரு பகுதி வருமாறு:-
“பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கை நீதியானதாகும். அதைக் கோரி அவர்களாலும், அமைப்புகளாலும் நடத்தப்பட்டுவரும் போராட்டங்களும் நியாயமானவையாகும். எனவே, தோட்டத்தொழிலாளர்களின் கோரிக்கையை இலகுவில் நிராகரித்துவிடமுடியாது. அதைப் புறந்தள்ளிவிட்டு அரசியல்வாதிகளாலும் பயணிக்கமுடியாது.
நாட்டில் இன்று என்ன நடக்கின்றது? இன்று நேற்று அல்ல 200 வருடகால வரலாற்று முழுவதிலும் மலையக மக்களுக்கு இங்கு துரோகங்களே இழைக்கப்பட்டன. பிரஜாவுரிமை பறிப்பு, நாடு கடத்தல், கல்வியில் புறக்கணிப்பு எனப் பல விடயங்களைக் குறிப்பிடலாம்.
இற்றைக்கு 150 வருடங்களுக்கு முன்னர் தென்னிந்தியாவிலிருந்துவந்து சுமார் 100 தொழிலாளர்கள் இலங்கையிலுள்ள துறைமுகத்தில் இறங்கினால், பெருந்தோட்டங்களுக்கு நடைபயணமாகச் செல்லும்போது மலேரியா உட்பட ஏனைய நோய்த் தாக்கங்களுக்குள்ளாகி 50 பேர் உயிரிழக்க நேரிடும்.
தோட்டப் பகுதிகளுக்குச் சென்று உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும்போது 25 பேர் வரை பல்வேறு காரணங்களால் உயிரிழக்க நேரிடும். 25 பேர் மட்டுமே உயிருடன் எஞ்சுவார்கள் எனப் பத்திரிகையொன்றில் தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு வலிகளை சுமந்துவந்த மக்கள் இங்கு வஞ்சிக்கப்படுகின்றனர்.
மலையகத்தில் வறுமை தலைவிரித்தாடுகின்றது. வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கையும் இரட்டிப்பாகியுள்ளது. தனிநபர் வருமானமும் ஏனைய மக்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகவே இருக்கின்றது.
நான்கு பேர்கொண்ட குடும்பமொன்று அடிப்படை தேவைகளைப் பூர்த்திசெய்துகொண்டு வாழ்வதற்கு 54 ஆயிரத்து 990 ரூபா அவசியம் என அரச புள்ளிவிபரங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஆனால், தோட்ட மக்களுக்கு இத்தொகையில் இரண்டிலொரு பங்கே கிடைக்கின்றது.
இதை வைத்துக்கொண்டு அவர்கள் எப்படி வாழ்வது? மொத்த வருமானத்தில் ஏனைய மக்கள் 35 சதவீதத்தை உணவுக்காக செலவிடும் நிலையில், மலையக மக்கள் 51 சதவீதத்தை அதற்காக செலவிடுகின்றனர். அம்மக்களுக்காக ஏனைய சலுகைகள் எதுவும் இல்லை.
மந்தபோசனையுடன் குழந்தைகள் பிறக்கின்றனர். கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் பல பிரச்சினைகள் உள்ளன.
தோட்டப்பகுதிகளில் வாழ்பவர்களில் 47 வீதமானோர் சாதாரண தரப் பரீட்சை எழுதவில்லை. 12.8 வீதமானோரே உயர்தரம் பயின்றுள்ளனர். 2 வீதமானோரே பல்கலைக்கழகம் செல்கின்றனர்.
வருடாந்தம் சுமார் 28 ஆயிரத்து 700 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படுகின்றனர். அப்படியானால் தோட்டப் பகுதிகளிலிருந்து 120 மற்றும் 150 மாணவர்களே பல்கலைக்கழகம் செல்கின்றனர். சனத்தொகை விகிதத்துடன் ஒப்பிட்டால் இது மிகவும் குறைவான சதவிகிதமாகும்.
இப்படி கல்வி, சுகாதாரம், தாய்மொழி, போஷாக்கு என அனைத்து வழிகளிலும் பெருந்தோட்டத்தொழிலாளர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். எதற்காக இந்தப் பாகுபாடு?
எனவே, மலையக மக்களின் வாழ்வாதார உரிமைகளை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். அம்மக்களை வாக்களிப்பு இயந்திரமாக மட்டும் பயன்படுத்தக்கூடாது.
ஏனைய மக்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளும், சலுகைகளும் அவர்களுக்குக் கிடைக்கவேண்டும்.
கொழும்பில் ஹோட்டலில் வேலை செய்வதற்கும், மலசலகூடம் கழுவுவதற்கும், வீட்டு வேலைசெய்வதற்கும் மட்டும் மலையக இளைஞர்களைத் தேடாமல், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
குறைந்தபட்சம் தோட்டத்தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும்.
அரச நிர்ணயங்களுக்கு அமைய அவர்களுக்கு சுமார் 1,291 ரூபா வழங்கப்படவேண்டும்” – என்றார்.
ஏனைய தொழிற்துறையில் உள்ளவர்களின் சம்பளத்தையும், தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தையும் ஒப்பிட்டுப் பேசி, தொழிலாளர்களின் கோரிக்கையை நியாயப்படுத்திய அநுரகுமார திஸாநாயக்க, பல புள்ளிவிபரங்களையும் வெளியிட்டார்.
கம்பனிகளுக்கு அடிபணியாது, அனைத்து மலையக எம்.பிக்களும் தொழிலாளர்களின் பக்கம் நிற்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
0 comments :
Post a Comment