Thursday, January 24, 2019

சோளத்தைப் போல ஏனைய பயிர்களையும் படை புழு தாக்கினால் நாட்டு மக்கள் பட்டினியில் வாழ நேரும். - எச்சரிக்கை

படை புழு சோளத்தை மாத்திரம் அன்றி ஏனைய பயிர்களையும் தாக்குகின்ற பட்சத்தில் நாட்டு மக்கள் அனைவருமே பஞ்சம், பட்டினி ஆகியவற்றுக்கு ஆளாக நேரும் என்று அம்பாறை மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம். எப். ஏ. சனீல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

படை புழுவை அடையாளம் கண்டு கட்டுப்படுத்துதல் மற்றும் அழித்தல் தொடர்பான விழிப்பூட்டல் பேரணியும், அறிவூட்டல் கூட்டமும் காரைதீவு சண்முகா வித்தியாலயத்தில் காரைதீவு விவசாய விரிவாக்கல் நிலையம், கமநல சேவைகள் திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் காரைதீவு விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் போதனாசிரியர் பா. பிரதீப் தலைமையில் இன்று (24) வியாழக்கிழமை காலை இடம்பெற்றன. இவற்றில் காரைதீவு கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். சிதம்பரநாதன், நிந்தவூர் வலய உதவி விவசாய பணிப்பாளர் ஏ. ஏ. அப்துல் மஜித், பயிர் பாதுகாப்பு பாட விதான உத்தியோகத்தர் ஏ. ஜெய்லாப்தீன், மறு வயல் பயிர் செய்கைக்கான பாட விதான உத்தியோகத்தர் எஸ். எச். ஏ. நிஹார், பாடசாலை அதிபர், காரைதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், விவசாய பெருமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பிரதம விருந்தினர் சனீல் இங்கு பேசியவை வருமாறு,

உண்மையிலேயே அம்பாறை மாவட்டம் மட்டும் அன்றி இலங்கை முழுவதுமே இப்பொழுது இக்கட்டான சூழ்நிலையிலே உள்ளது. இந்த நேரத்தில் காரைதீவில் இவ்வாறான நிகழ்வு நடத்தப்படுவது குறித்து மகிழ்ச்சி அடைகின்றேன். துக்கமான தருணத்திலும் மகிழ்ச்சி அடைகின்ற நேரமாக இது உள்ளது.

படை புழு வெளிநாட்டில் இருந்து வந்து இப்போது இலங்கையின் சோள பயிர் செய்கைக்கு தாக்கத்தை ஏற்படுத்தி ஏனைய பயிர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்த கூடிய தீவிர தன்மையை காட்டுகின்றது. வேறு படை புழுக்கள் இலங்கையில் காணப்பட்டன. நெல்லில் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற படை புழு, தக்காளியை தாக்குகின்ற படை புழு போன்றவற்றை உதாரணத்துக்கு சொல்லலாம். ஆனால் இவை குறிப்பிட்ட தாவிர வர்க்கத்துக்கே தாக்கத்தை ஏற்படுத்துவனவாக இருந்தன. ஆனால் தற்போதைய படை புழு சோளத்துக்கு பிரதானமாக தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள போதிலும் ஏனைய பயிர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்த கூடிய சாத்திய கூறு இருக்கின்றது. கிட்டத்தட்ட 100 பயிர்களுக்கு இதன் தாக்கம் ஏற்படலாம் என்பதை ஏற்கனவே அறிய தந்திருக்கின்றோம்.

கடந்த ஒக்டோபர் மாதம் அளவில் தேசிய விவசாய விழிப்புணர்வு வாரத்தில் விழிப்பூட்டல் பிரசாரங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டன. அப்போது இந்த படை புழு இலங்கையில் இருந்ததாக தகவல் இல்லை. ஆயினும் அப்போது இதன் தாக்கம் இந்தியாவில் இருப்பதாக அறிந்திருந்த விவசாய திணைக்களம் உடனடியாக துண்டு பிரசுரங்களை விநியோகித்து இருந்தது.அம்பாறை மாவட்டத்தில் தீவிரமாக இப்பிரசாரங்கள் முடுக்கி விடப்பட்டு இருந்தன என்று நான் நம்புகின்றேன். ஏனென்றால் முதலில் மகாஓயாவிலும் அடுத்த நாள் தமணவிலும்தான் இந்த படை புழுவின் தாக்கம் கண்டு பிடிக்கப்பட்டது. அதாவது இலங்கையில் அம்பாறையில்தான் இந்த படை புழு கண்டு பிடிக்கப்பட்டது என்று சொல்வதை காட்டிலும் இந்த படை புழுவை கண்டு பிடிப்பதற்கான ஏற்பாடுகள் இம்மாவட்டத்தில் முடுக்கி விடப்பட்டதன் காரணமாக இம்மாவட்டத்தின் விவசாயிகளும், விவசாய திணைக்களமும் அதீத அக்கறையுடனும், விழிப்புடனும் செயற்பட்டதால் இந்த படை புழு இங்கு அடையாளம் காணப்பட்டது என்று சொல்வதே பொருத்தமானதாக இருக்கும். ஏனென்றால் அம்பாறை மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் இது சம்பந்தமாக விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. விசேடமாக சோள பயிர் செய்கை மேற்கொள்ளப்படுகின்ற பிரதேசங்கள் மீது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

சுனாமி இன, மத , மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் இந்நாட்டு மக்கள் அனைவரையும் தாக்கியது போல படை புழு எல்லாருடைய பயிர்களையுமே தாக்குகின்றது. இது பயங்கரமானது. அம்பாறை மாவட்டத்தில் தமண, மகா ஓய, பதியத்தலாவ ஆகிய பிரதேசங்களில்தான் கூடுதலாக சோளங்கள் பயிரிடப்பட்டு உள்ளன. இங்கு ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிலும் 2500 ஏக்கருக்கு மேல் உள்ளன.இங்கு நாம் விழிப்புணர்வுகளை மேற்கொண்டபோது இங்குள்ள விவசாயிகள் முஸ்பாத்தியாகவும், நேர விரயமாகவுமே முதலில் எடுத்து கொண்டனர். ஆனால் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குள் 75 வீதத்துக்கும் அதிகமான அளவில் விளைச்சலை பெற்று கொள்ள முடியாத அளவு படை புழுவின் தாக்கம் இடம்பெற்று உள்ளது. எனவே விவசாய திணைக்களம் தனித்து செயற்பட்டு செய்ய கூடிய வேலையாக இந்த படை புழு அழிப்பு நடவடிக்கையை கூற முடியாது உள்ளது.

சுனாமி வந்தபோது எல்லா திணைக்களங்களும், எல்லா மக்களும் சேர்ந்து செயற்பட்டு ஒன்றிணைந்து செயற்பட்டதன் மூலமே சுனாமியின் தாக்கத்தில் இருந்து விடுபட முடிந்தது. ஆனால் இந்த படை புழுவின் தாக்கம் சுனாமியின் தக்கத்தை விட பயங்கரமானதும் பாரதூரமானதும் ஆகும். இதை ஒழுங்காக கட்டுப்படுத்த தவறினால் எத்தனையோ சுனாமிகள் வருவதை காட்டிலும் பயங்கரமானதாக இருக்கும். ஆபிரிக்க நாடுகள் ஒரு காலத்தில் மிகவும் செழிப்பானவையாக இருந்தன. ஆனால் பிற்பாடு பஞ்சத்துக்கு பெயர் பெற்றன. வரட்சி, இவ்வாறான படை புழுக்களின் தாக்கம் ஆகியவற்றின் காரணமாகவே அங்கு பஞ்சம், பட்டினி சூழ்ந்து கொண்டது. அங்கு எலும்பும் தோலுமாக பிள்ளைகள் பிறக்கின்றன. இதே போன்ற ஒரு கட்டம் இந்த படை புழுவின் தாக்கம் காரணமாக இலங்கைக்கு நேரலாம் என்று அஞ்ச வேண்டி உள்ளது. சோளத்தை பிரதானமாக தாக்குகின்ற இந்த படை புழு ஏனைய சில பயிர்களைகளையும் தாக்குவதாக சில தகவல்கள் வந்து உள்ள போதிலும் நம்பகரமான தகவல்கள் ஒழுங்காக இன்னும் வரவில்லை. அவ்வாறான தகவல்கள் வராதிருக்க இறைவனை நாம் பிரார்த்திப்போம். சோளத்துடனேயே இந்த படை புழு போய் விட்டால் நம் எல்லோருக்கும் நல்லதுதான். ஏனென்றால் நூறு பயிர்களையும் இது தாக்குமாக இருந்தால் மிஞ்சுவதற்கு எந்த பயிரும் இல்லாமல் போய் இலங்கையர் அனைவரும் பஞ்சம், பட்டினியில்தான் வாழ நேரும்.

சோள செய்கையை பொறுத்த வரை அம்பாறை மாவட்டத்தில் உள்ள 31,000 ஏக்கருக்கும் நஷ்டம் தலா 75000 ரூபாய் என்று சொன்னாலும் மொத்தம் 230 கோடி ரூபாய் வரை நஷ்டம் என்று கூறலாம். இதே நிலை நெல்லுக்கு ஏற்பட்டால் தாக்கம் எப்படி இருக்கும் தெரியுமா? அந்த நஷ்டத்தை இலக்கத்தில் சொல்ல என்னால் சொல்ல முடியாது.

மாணவர்கள் சாதுரியமும், புத்தி கூர்மையும் நிறைந்தவர்கள். ஆகவேதான் முக்கியமாக விழிப்பூட்டப்படுகின்றார்கள். மாணவர்கள் அனைவரும் சுனாமியின்போது பெற்ற அதே அனுபவத்தை இந்த படை புழு தொடர்பாகவும் பெறுதல் வேண்டும். இந்த புழுவை பயிர்களில் எங்காவது கண்டால் உடனே அழிக்க வேண்டும். விவசாய திணைக்கள உத்தியோகத்தர்களுக்காகவோ, பெற்றோர்களுக்காகவோ, உறவினர்களுக்காகவோ காத்திருக்க கூடாது.

உண்மையிலேயே விவசாயம் உயிர் நாடி ஆகும். எல்லா உணவுகளே விவசாயத்தின் விளைச்சல்களாகத்தான் இருக்கின்றன. விவசாயி சேற்றில் கால் வைக்கா விட்டால் நாம் சோற்றில் கை வைக்க முடியாது. எனவே விவசாயத்துக்கும், விவசாயிக்கும் ஏற்படுகின்ற தாக்கம் நாட்டுக்கும், வீட்டுக்கும் ஏற்படுகின்ற தாக்கமே ஆகும். அதே நேரம் காரைதீவு சோள பயிர் செய்கையில் பெரிதாக ஈடுபடவில்லை என்பதால் அஜாக்கிரதையாக இருக்க கூடாது என்றும் ஏனைய பிரதேசங்களில் உள்ள விவசாயிகளுக்கு விழிப்பூட்டுங்கள் என்றும் கேட்டு கொள்கின்றேன்.

(எஸ்.அஷ்ரப்கான்).







0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com