Sunday, January 13, 2019

அரசியல் அமைப்பு குறித்து அரசாங்கம் பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறது - கேலி செய்த தவராசா.

அரசியல் அமைப்பு குறித்து அரசாங்கம் பகல் கனவு கண்டு கொண்டிருப்பதாக, வட மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா குறிப்பிட்டார். சமகால அரசியல் நிலைமைகள் குறித்து இன்றைய தினம் அறிக்கையொன்றை வெளியிட்டு உரையாற்றிய போதே, சி.தவராசா இந்த விடயத்தை கூறினார்.

நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு எனப் பல தடைகளைத் தாண்டி அரசியலமைப்பு வரைபு நிறைவேற்றப்படும் என்பது, உண்மையில் சாத்தியமற்ற விடயமென அவர் கூறினார்.

அரசியல் அமைப்பு சபையில் கடந்த வெள்ளிக்கிழமை புதிய அரசியல் அமைப்பிற்கான வரைவு சமர்ப்பிக்கப்பட்ட போது, அங்கு பிரசன்னமாகியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருந்தது. 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் வெறுமனே 56 பேர் மட்டுமே அங்கு பிரசன்னமாகி இருந்துள்ளனர்.

அது மாத்திரமன்றி, பொது எதிரணியினர் இதற்கு அதரவு வழங்க மாட்டார்கள் என்பது நன்றாக தெரிந்திருந்தும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் அரசுடன் இணைந்திருப்பதன் மூலம் இதனை சாதிக்க முடியும் என்ற, ஓர் நம்பிக்கை தரும் கருத்தும் நிலவுகின்றது.

இந்த அரசியல் அமைப்பு, முழுமையான தமிழ் மக்களின் அபிலாசைகளான சமஸ்டி, இணைந்த வடக்கு கிழக்கு என்பவற்றை வழங்குவதற்கான சொற்பதங்கள் அடங்கிய ஒரு வரைபாக இல்லாவிட்டாலும், சமஸ்டிக் குணாம்சங்கள் அடங்கிய, மத்திக்கும் மாகாணங்களுக்கும் இடையில் ஒரு தெளிவான அதிகாரப்பகிர்வினை உள்ளடங்கிய வரைபாக இருக்கின்றது.

எனினும் அரசியலமைப்பு சபையின் அங்கீகாரத்தைப் பெறுவது மட்டுமல்லாது அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு எனப் பல தடைகளைத் தாண்டி இவ்வரைபு நிறைவேற்றப்படும் என்பது ஒரு பகல் கனவு என்றே கருதவேண்டியுள்ளது என சி.தவராசா தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com