நாடக அரங்கேற்றங்களுடன், மலையகத்தில் பாரிய போதை ஒழிப்பு ஊர்வலம்.
போதை ஒழிப்பு வாரத்தின் இறுதி நாளான இன்று, நாட்டின் பல பகுதிகளில் போதை ஒழிப்பு பேரணிகளும், விழிப்புணர்வு செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன
அதன்படி மலையகத்தில் ஹட்டன், நோர்வூட் தமிழ் மகா வித்தியாலய மாணவர்களால் நோர்வூட் நகரில் விழிப்புணர்வுப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் போதைப் பொருளுக்கு எதிரான பாதாதைகளை ஏந்தி, நகரில் ஊர்வலமாக சென்றதுடன். நகரின் இரண்டு இடங்களில் வீதி நாடகங்களையும் அரங்கேற்றியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருட்களால் ஏற்படும் விளைவுகள், அதனைத் தடை செய்வதற்கு மாணவர்கள் எடுக்க வேண்டிய முதன்மை நடவடிக்கைகள் தொடர்பாக, இந்த வீதி நாடகங்களின் மூலம் சமூகத்திற்கு தெளிவுபடுத்தப்பட்டது.
போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் பெருந்தோட்ட மக்கள் எவ்வாறான சமூக, பொருளாதார, சுகாதார பாதிப்புகளை எதிர்நோக்குகின்றன என்பது பற்றியும் இந்த பேரணியின் போது, தெளிவுப்படுத்தப்பட்டது.
இதேவேளை போதைப்பொருளுக்கு எதிராக நயினா தீவுப்பகுதியில் இன்றைய தினம் விழிப்புணர்வுப் பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நயினா தீவு மகா வித்தியாலய மாணவர்கள் இந்த பேரணியை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேரணி நயினாதீவு மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு, பாடசாலையைச் சூழவுள்ள வீதிகளில் பேரணியாக சென்றது. இதன்போது மாணவர்களால் பல்வேறுபட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
மாணவர்கள் பேரணியாகச் செல்லும்போது போதைப் பொருளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக் கருவில் உருவான போதை ஒழிப்பு வாரத்தின் இறுதி நாளான இன்று தீவுப்பகுதியில் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment