Saturday, January 26, 2019

59 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றமிழைத்துள்ளார்கள் - மோதல் தொடர்பான அறிக்கை பிபிசி க்கு கசிந்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 14, 15, 16 ஆம் திகதிகளில் ஏற்பட்ட தொடர்பில் 59 உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென, இது தொடர்பில் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு சபாநாயகருக்கு வழங்கிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமான BBC செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் நியமிக்கப்பட்ட விசாரணை குழு நாடாளுமன்றத்தில் பொருத்தப்பட்ட காணொளிகள் மூலம் கிடைத்த செம்மைப்படுத்தப்படாத காணொளிகளை அவதானித்து தமது அறிக்கையை கையளித்துள்ளது. இதற்கமைய, 59 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது நாடாளுமன்ற அதிகாரம் மற்றும் சிறப்புரிமைகள் சட்டத்தின் சரத்துக்களுக்கு எதிராக நடந்துகொண்டமை விசாரணை அறிக்கையில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

இதில் 54 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் 4 உறுப்பினர்கள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் ஒருவரும் அடங்குகின்றார்கள். இவர்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரசன்ன ரணவீரவின் பெயர், அதிகத் தடவைகள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக BBC தெரிவித்துள்ளது.

அக்ராசனத்தின் மீது நீர் ஊற்றியமை, பொலிஸ் அதிகாரிகளை தாக்கியமை மற்றும் பொலிஸார் மீது ஒருவித திரவத்தை விசிறியமை உள்ளிட்ட 12 குற்றச்சாட்டுகள் பிரசன்ன ரணவீரவின் மீது முன்வைக்கப்பட்டுள்ளது. இவர் தவிர, இந்திக்க அனுருத்தவிற்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவை, சபாநாயர் மீது நீர் விசிறியமை, குப்பை வாளியை வீசியமை மற்றும் புத்தகத்தை வீசியமை ஆகிய குற்றச்சாட்டுகள் ஆகும். திலும் அமுணுகம சபாநாயகரின் ஒலிவாங்கியை சேதப்படுத்திய குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளனர். சபாநாயகர் மீது தண்ணீர் போத்தலை வீசியமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

பாலித தெவரப்பெரும மற்றும் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோருக்கு எதிராக கத்தியைப் போன்ற ஏதேனுமொன்றை கையில் வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீது, சபாநாயகரின் மேசை மீதிருந்த ஒலிவாங்கியை சேதப்படுத்தியமை, பொலிஸ் அதிகாரிகளிருந்த திசை நோக்கி கதிரையை வீசியமை, புத்தகத்தை வீசியமை ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் அதிகாரிகளைத் தள்ளி அவர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து, பொலிஸ் அதிகாரிகளை அச்சுறுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெர்னாண்டோ மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. நிஷாந்த முத்துஹெட்டிகமவும் ரஞ்சித் சொய்சாவும் செங்கோல் வைக்கப்படும் மேசையைக் கவிழ்த்தமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். பத்ம உதயஷாந்த மீது தமது பாதணியில் ஏதேவொன்றைக் கொண்டுவந்து தண்ணீர் பாத்திரத்தில் கலந்தமை, காமினி ஜயவிக்ரம பெரேரா மற்றும் விஜித ஹேரத் ஆகியோர் இருந்த திசை நோக்கி திரவத்தை வீசியமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சுமார் மூன்று நாட்கள் நீடித்த குழப்ப நிலை காரணமாக சொத்து சேதம், வரி நீங்கலாக மூன்று இலட்சத்து 25ஆயிரம் ரூபா என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக விசாரணைக்குழு சபாநாயகருக்கு கையளித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை சபாநாயகருக்கு கையளிக்கப்பட்ட அறிக்கை, அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com