Wednesday, January 2, 2019

24 மணித்தியாலங்களில் மட்டும் 11 உயிரிழப்புக்கள்!

கடந்த 24 மணித்தியாலங்களில் கொலை மற்றும் வாகன விபத்துக்களில் சிக்கி 11 பேர் பலியாகியுள்ளதாக, காவல்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ரத்தினபுரி - தெய்யத்தேக பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில், இரண்டு நபர்களால் தாக்கப்பட்ட ஒருவர் பலியானார். இந்த கொலைச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பலியானவர் 35 வயதானவர் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை காலி - ஹபராதுவ - அங்குனுக்கஹ பகுதியில் இரு சகோதரர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில், இளைய சகோதரர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு பதிவாகியுள்ளது. இதேநேரம், காலி - குடுக்காம - குருந்த பகுதியில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் கொல்லப்பட்ட நபர் ஒருவரின் உடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் நேர்ந்த விபத்துக்களில் சிக்கி 8 பேர் பலியாகினர். நீர்கொழும்பு பிரதான வீதியின் தியகம்பல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகினர். பாரவூர்தியொன்றும், உந்துருளியொன்றும் மோதியதில் காயமடைந்த உந்துருளியின் சாரதியும், அவருடன் உடன் சென்றவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும் அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதே நேரம் கலேவெல - யட்டிகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காவல்துறை அதிகாரியொருவர் பலியானார். அவர் செலுத்திச் சென்ற உந்துருளி, பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன் மோதியத்திலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

அத்துடன் நீர்கொழும்பு கல்கந்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 18 வயதான இளைஞர் ஒருவர் பலியானதுடன், மொரகஹகென பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் பலியாகினர். இதனிடையே நேற்றைய தினம் 29 வயதான பிரித்தானிய பிரஜை ஒருவர், லக்சபான நீர்வீழ்ச்சியின் அபாயகர பகுதிக்குச் சென்று மூழ்கியதில் அவர் பலியானார். குறித்த பிரித்தானிய பிரஜை 29 வயதானவர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com