Tuesday, January 1, 2019

இஸ்லாமியர்களை அமெரிக்காவுக்கு அடிமையாக்க முற்பட்ட முன்னாள் சவூதி மன்னர் அப்துல் அசீஸ். முகம்மத் இக்பால் (பகுதி 2)

வரலாற்றை பார்த்ததிலிருந்து புரிந்துகொண்ட சவூத் குடும்பத்தின் பசுந்தோல் போற்றிய அரசியல்

அமெரிக்காவுக்கு இராணுவ தளம் அமைப்பதற்கு சவூதி அரேபியா மறுப்பு தெரிவித்திருந்தால், மத்தியகிழக்கில் உள்ள எந்த அரபு நாடுகளும் அமெரிக்காவுக்கு இடம் வழங்கியிருக்காது.

கட்டார் உட்பட மத்திய கிழக்கில் மன்னர் ஆட்சி நடைபெறுகின்ற அனைத்து நாடுகளும் அப்போது சவூதி அரசுக்கு கட்டுப்பட்டே முடிவுகளை மேற்கொண்டது.

இன்று வரைக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்று வருகின்ற எந்த அவலங்களும், இலட்சக்கணக்கான இஸ்லாமியர்களின் படுகொலைகளும் ஏற்பட்டிருக்காது. இந்த அனைத்து அழிவுகளுக்கும் சவூதி அரேபிய ஆட்சியாளர்களே காரணமாகும்.

யேமன் நாட்டில் ஹூதி (ஹௌதி) இஸ்லாமிய இயக்க போராளிகள் நடாத்திய தொடர் போராட்டத்தினால், யேமன் நாட்டை முழுமையாக கைப்பேற்ற இருந்த சந்தர்ப்பத்தில், ஹூதி போராளிகளின் நிலைகள் மீது சவூதி அரேபியா தொடர்ச்சியான விமான தாக்குதல்களை நடாத்தியது.

கடந்த வருடத்திலிருந்து நடைபெற்றுவருகின்ற இந்த கொடூரமான தாக்குதலினால், யேமன் நாட்டை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் என ஏராளமான அப்பாவி இஸ்லாமிய மக்கள் கொல்லப்பட்டார்கள். இதனால் சர்வதேச ரீதியில் சவூதி அரேபியா பலத்த கண்டனத்தினை எதிர்கொண்டது.

ஆயிரக்கணக்கில் அப்பாவி ரோஹிங்கிய முஸ்லிம்கள் மியன்மாரில் கொலை செய்யப்பட்டபோது அம்மக்களை பாதுகாக்கும்பொருட்டு அந்த நாட்டு இராணுவ நிலைகள் மீது சவூதி விமான தாக்குதல் நடாத்தியிருந்தால் உலக முஸ்லிம்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். சவூதியின் செல்வாக்கு அதிகரித்திருக்கும்.

அல்லது இஸ்லாமியர்களின் புனித பிரதேசமான பாலஸ்த்தீனை ஆக்கிரமித்து இருக்கின்ற யூதர்களுக்கு எதிராக இவ்வாறு தாக்குதல் நடாத்தியிருந்தால் உலக முஸ்லிம்களின் கதாநாயகர்களாக இவர்களை உலகம் ஏற்றுக்கொண்டிருக்கும்.

ஆனால் யேமன் நாட்டில் தனது பொம்மை ஆட்சியாளரை பாதுகாக்கும் பொருட்டு விமான தாக்குதல் நடாத்தி அப்பாவி இஸ்லாமியர்களை சவூதி அரசு கொலை செய்தது.

தனது குடும்ப ஆட்சியை விமர்சித்து கட்டுரைகள் எழுதிய ஜமால் கசோக்கி அவர்கள் இலக்குவைக்கப்பட்டு அவரை கொலை செய்வதற்கு மிகவும் நுட்பமான முறையில் திட்டம் தீட்டப்பட்டு இறுதியில் அது அம்பலமாகியுள்ளது. இதனால் சர்வதேச ரீதியில் சவூதி ஆட்சியாளர்களுக்கு பாரிய தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.

ஜமாலின் கொலை விவகாரத்தில் துருக்கி அதிபரின் பகிரங்க குற்றச்சாட்டுக்களை சவூதி அரசு சவாலுக்குட்படுத்தவில்லை. மாறாக துருக்கி அதிபரை சமாளிப்பதற்கே முயற்சித்தார்கள்.

இரண்டு புனித ஸ்தளங்கள் அங்கு இருப்பதனால் உலக அரங்கில் சவூதி அரேபியா தன்னை பசுந்தோல் போற்றிய புலியாக காண்பித்துக்கொன்டு மத்தியகிழக்கில் தன்னைவிட யாரும் மிஞ்சிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்துவருகின்றது.

அவ்வாறு தலையெடுக்கும் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுக்கு எதிராக தனது நண்பரான அமெரிக்காவைக்கொண்டு படை நடவடிக்கைகள் மூலமாக அழித்தொழிக்கும் நடவடிக்கைகளுக்கு பின்னணியில் எப்போதும் சவூதி அரேபியா இருந்து வருகின்றது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஈரான் மீது படையெடுப்பினை மேற்கொள்ளுமாறு அமெரிக்காவுக்கு அழுத்தம் தெரிவித்த இரகசிய விவகாரம் ஊடகங்களில் வெளியானதனால், சர்வதேச ரீதியில் சவூதி அரேபியா வசமாக மாட்டிக்கொண்டது.

சவூதியின் இவ்வாறான அனைத்து செயல்பாடுகளுக்கும் கட்டார் தவிர்ந்த ஏனைய மன்னராட்சி நடைபெறுகின்ற அரபு நாடுகள் தங்களது குடும்ப ஆட்சியை பாதுகாப்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு வழங்கி வருகின்றது.

எனவேதான் ஜமால் கசோக்கி மட்டுமல்ல மத்தியகிழக்கில் நடைபெற்ற ஏராளமான கொலைகள் மற்றும் இஸ்லாமிய தலைவர்களுக்கும், இஸ்லாமிய நாடுகளுக்கும் எதிரான அமெரிக்காவின் படையெடுப்புக்களுக்கு பின்னணியில் அரச குடும்பத்தினர்கள் உள்ளார்கள் என்பது சவூதி அரேபியாவின் சவூத் குடும்ப வரலாற்றை புறட்டிப் பார்த்ததிலிருந்து புரிந்துகொள்ள முடிகின்றது.

முற்றும்.

இஸ்லாமியர்களை அமெரிக்காவுக்கு அடிமையாக்க முற்பட்ட முன்னாள் சவூதி மன்னர் அப்துல் அசீஸ். முகம்மத் இக்பால் (பகுதி 1)


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com