Monday, December 24, 2018

எனக்கு சர்வதேச ரீதியில் நல்ல மதிப்புள்ளது. ஆனாலும் கட்சிக்குள் கழுத்தறுப்பு. நிதியமைச்சுக்காக அழுகின்றார் ரவி.

கட்சிக்குள்ளேயே தனக்கு கழுத்தறுப்பு நடந்ததாலேயே நிதி அமைச்சுப் பதவி கிடைக்கவில்லை என்று ஐ.தே.கவின் உப தலைவரான ரவிகருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

2015 ஜனவரி 08 ஆம் திகதி நல்லாட்சி உதயமான பின்னர் நிதி அமைச்சராக ரவிகருணாநாயக்க நியமிக்கப்பட்டார். காலப்போக்கில் அவரிடமிருந்து நிதி அமைச்சுப் பறிக்கப்பட்டு, வெளிவிவகார அமைச்சு ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் பிணைமுறி விவகாரம் சூடுபிடித்ததால் தாமாகவே முன்வந்து அமைச்சுப் பதவியை துறந்து – ஆளுங்கட்சியின் பின்வரிசை எம்.பியாக செயற்பட்டார். 'சூழ்ச்சி'மூலம் ஆட்சி கவிழும்வரை எம்.பியாகவே செயற்பட்டார்.

எனினும், புதிய அரசில் ரவிக்கு நிதி அமைச்சுப் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்ப்புகள் வலுத்ததால் மங்களவிடமே நிதி அமைச்சு கையளிக்கப்பட்டது.இதுதொடர்பில் வினவியபோதே ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

'சர்வதேச மட்டத்தில் எனக்கு நற்பெயர் இருக்கின்றது. ஆனால், கட்சியிலுள்ள ஒருசிலர் அதை ஏற்கமறுக்கின்றனர். இது கவலைக்குரிய விடயமாகும்.

இவ்வாறானதொருநிலை ஏற்படுவதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் காரணம் அல்ல. கட்சிக்குள் இருக்கும் ஒருசிலரே சூழ்ச்சிசெய்தனர்.

எனினும், எத்தகைய சவால்கள் வந்தாலும் அவற்றுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்கவேண்டும். எதிர்காலத்தில் இவர்கள் எவ்வாறு செயற்படுகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கட்சியின் பின்வரிசை எம்.பிக்கள் எல்லாம் ஓரணியில் நிற்கும்போது, ஒற்றுமையை குழப்பும் நோக்கிலேயே இத்தகைய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.' என்றும் ரவி கருணாநாயக்க தெரிவித்தார் என 'மௌபிம' என்ற சிங்கள பத்திரிகை இன்று (24) செய்தி வெளியிட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com