Thursday, December 20, 2018

அமல்-எதுவரை? எழுகதிரோன்

தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளட்) சார்பில் தேசிய கூட்டமைப்பில் இணைந்து கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார் சதாசிவம் வியாளேந்திரன். கிழக்கு பல்கலைக்கழகத்தில் தனது இளமானி பட்டத்தையும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுமானி பட்டத்தையும் பெற்றுக்கொண்ட இவர் அரசியலுக்கு புது முகமாகவே களமிறங்கினார்.

ஆனால் தனது முதல் வரவிலேயே அத்தேர்தலில் அவருடன் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரையும் ஓரங்கட்டி வெற்றியீட்டினார். அரசியல் அனுபவமும் மக்களிடையே பிரபலமும் கொண்டிருந்த கொண்ட செல்வராஜா, அரியநேந்திரன் போன்றவர்கள் இந்த தேர்தலில் தோல்வியை தழுவினர். ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராக இருந்த யோகேஸ்வரன் வெற்றியீட்டிய போதிலும் கூட அவரால் குறைவான விருப்பு வாக்குகளையே (34039 ஆயிரம்) இத்தேர்தலில் பெற முடிந்தது.

இளம் வாக்காளர்களை கவர்வதிலும் இளம் சந்ததியினரின் தேவையறிந்து செயற்படுவார் என்கின்ற நம்பிக்கையை மக்களிடத்தில் பரப்புவதிலும் வெற்றியடைந்த சதாசிவம் வியாளேந்திரன் 39321 ஆயிரம் விருப்பு வாக்குகளை பெற்று தனது வெற்றியை உறுதி செய்தார்.

தனது இளம் பராயத்தையும் ஆரம்ப கல்வியையும் வெப்பவெட்டுவான் என்றழைக்கப்படும் பின்தங்கிய படுவான்கரை பிரதேசத்தில் கடந்துவந்த இவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான காலத்திலிருந்து தமிழரசு கட்சியினரின் மேட்டுக்குடி அரசியலை ஏற்றுக்கொள்ள முடியாதவராகவே தன்னை அடையாளப்படுத்தி வந்தார்.

தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் (புளட்) சார்பிலான வேட்பாளர் இட ஒதுக்கீட்டின் ஊடாக மட்டக்களப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இவர் போட்டியிட்ட போதிலும் இவருக்கோ இவரது குடும்ப உறுப்பினர்கள் யாருக்குமோ முன் பின் புளட் அரசியலுடன் தொடர்புகள் இருந்ததாக அறிய முடியவில்லை.

வெளியேற்றம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதியன்று பிரதமர் ரணில் விக்கரமசிங்காவை அப்பதவியிலிருந்து நீக்கி புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சவை நியமித்தார்.
இந்த சர்ச்சைகளுடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அமல் என்றழைக்கப்படும் சதாசிவம் வியாளேந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறினார். கூடவே மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான புதிய அமைச்சரவையில் பிரதேச அபிவிருத்தி பிரதியமைச்சராக பதவி பிரமாணமும் செய்துகொண்டார்.

ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை தேசிய அரசியலில் பாரிய குழப்பங்களுக்கு வழிவகுத்தது. அதே போல சதாசிவம் வியாளேந்திரனின் நடவடிக்கையும் வடக்கு-கிழக்கு மாகாண அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கியது.

சதாசிவம் வியாளேந்திரனின் வெளியேற்றத்தை அடுத்து உடனடியாகவே நவம்பர் 4 ல் வவுனியாவில் கூடிய புளட்டின் மத்தியகுழு அவரை கட்சியின் உபதலைவர் பதவியிலிருந்தும் உறுப்புரிமையிலிருந்தும் விலக்கியது.
தமிழரசு கட்சியினர் வழமைபோலவே துரோக குற்றச்சாட்டுக்களை அள்ளிவீசினர். அத்தோடு அவர்களின் பின்னணியில் வியாளேந்திரனுக்கு எதிரான ஒரு சிறு ஆர்ப்பாட்டத்தையும் மட்டக்களப்பில் நடத்தினர். ஆனாலும் மட்டக்களப்பு சார்ந்த சமூக வலைத்தளங்களில் பங்கெடுக்கும் இளம் சமூகத்தினரால் அவரது நடவடிக்கை பற்றிய ஆதரவான கருத்துக்கள் அதிகம் பதிவு செய்யப்பட்டு வந்தன.

அதிருப்திகள்

புளட் அமைப்பின் பிரதிநிதியாக இவர் இருந்தபோதும் அதன் தலைவர் சித்தார்தரை போல தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் மக்கள் விரோத அரசியல் நிலைப்பாடுகள் குறித்து ஒருபோதும் கள்ள மெளனம் காத்து தலைமை விசுவாசத்தை காட்டவில்லை. மாறாக கிழக்கு மாகாணத்தின் சிக்கலான அரசியல் பிரச்சனைகளை கண்டுகொள்ள மறுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியலை தொடர்ச்சியாக கண்டித்தும் விமர்ச்சித்துமே வந்திருக்கின்றார் வியாளேந்திரன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் ஆதரவுடன் உருவாகிய 'நல்லாட்சி' காலத்தில் மட்டக்களப்பில் தொடங்கப்பட்ட கல்குடா மதுபான தொழிற்சாலையும் புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலையும் அகற்றப்பட வேண்டும் என்பதில் இவர் தீவிர அக்கறை கொண்டிருந்தார். அவை தொடர்பான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் பலவற்றிலும் கலந்து கொண்டார். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவமோ இது பற்றிய மக்களின் அபிலாசைகளை கண்டு கொள்ள மறுத்தது. ரணில் அரச சார்பு நிலைப்பாடு எடுத்தது.

மேற்கத்திய நாடுகளுக்கு செல்வதன் ஊடாக தமது குடும்ப வறுமையை போக்கி எதிர்கால வாழ்வை வளம்படுத்திக்கொள்ள முடியாத மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் வாழும் பல்லாயிரம் இளைஞர்களுக்கு உள்நாட்டு வேலைவாய்ப்புக்கள் மட்டுமே ஒரே தெரிவாக இருக்கின்றது. அதற்காகவே இன்றுவரை அவர்கள் படித்துவிட்டு அரச வேலைவாய்ப்புகளை நம்பியிருக்கின்றனர். இதன் பிரதிபலிப்பாக மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் பல வருடங்களாக உண்ணாவிரதங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் "நான் அரசிடம் வேலைவாய்ப்புக்களை கேட்டால் ஆயிரக்கணக்காக பெற்றுக்கொள்ளாலாம். ஆனால் அது எமது அரசியல் தீர்வுக்கான கருமங்களை பாதிக்கும் "என்று தமிழ் தேசியகூட்டமைப்பின் சம்பந்தன் சொல்லுவது போல ஒற்றைவழிப்பாதையில் குருட்டுத்தனமாக மக்களை அழைத்து செல்லவே தமிழ் தேசிய கூட்டமைப்பு விரும்புகின்றது. ஆனால் கொழும்பிலும் வெளிநாடுகளிலும் தத்தமது குடும்பங்களோடு வாழாது சொந்த நிலத்தில் மக்களோடு மக்களாக வாழும் வியாளேந்திரன் போன்ற இளந்தலைமுறை அரசியல்வாதிகள் இப்படி கண்மூடித்தனமாக செயற்பட முடியாது என்பதே களயதார்த்தமாகும்.

இத்தகைய மக்களின் தேவைகளை அணுகுதல் என்கின்ற அடிப்படையிலிருந்தே வியாளேந்திரன் போன்றவர்களுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்குமான விரிசலைகளை புரிந்து கொள்ள முயல வேண்டும். ஏனெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் பேசப்படுகின்ற தேசியம், சுயநிர்ணயம் என்கின்ற வெற்று கோசங்களை விட வியாளேந்திரன் போன்றவர்களது தேர்தல் பிரச்சாரங்கள் பல்லாயிரம் இளைஞர்இயுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்கள் பற்றிய உறுதி மொழிகள் வழங்கப்பட்டன. ஆனால் அவற்றை பேசாது மக்களிடம் வாக்கு கேட்கவோ இளைஞர்களை தன்னை நோக்கி ஈர்ந்திழுக்கவோ முடியாதென்பதை அவர் அறிந்திருந்தார். ஏனெனில் அவரின் பின்னால் அணிதிரண்டவர்கள் பாரம்பரிய தமிழரசு கட்சியின் வேட்டிகட்டிய வயோதிப தூண்கள் அல்ல. மாறாக ஆயிரமாயிரம் படித்த இளைஞர்களின் பிரதிநிதியாகவே அவர் தேர்தலை எதிர்கொண்டார். இப்படியாகத்தான் அவரது பாரிய வெற்றி சாத்தியமாயிற்று.

ஆனால் இந்த உறுதி மொழிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பினுள் இருந்து கொண்டு நிறைவேற்ற முடியாது என்பதை அவருக்கு காலமே உணர்த்தியது.

அவர் பாராளுமன்ற உறுப்பினராகியபோதும் வேலைவாய்ப்புக்கள் பற்றிய அவரது வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றமுடியாது போயிற்று. அத்தோடு தமிழ் தேசிய கூட்டமைப்பின் 'நல்லாட்சி' மீதான அரசியல் தீர்வு கனவுகளும் கானல் நீராகி கொண்டு போவதையிட்டு அவர் மட்டுமல்ல அனைத்து மக்களும் அதிருப்தி கொள்ளத்தொடங்கினர்.

மறுபுறம் கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முஸ்லீம் காங்கிரசுடன் இணைந்து நடாத்திய கூட்டாசியின் தோல்வியானது கிழக்குமாகாண தமிழர்களுக்கு பாரிய மனக்குறைகளை ஏற்படுத்தியுள்ளது. இனஉறவை வளர்ப்பதற்கு பதிலாக மென்மேலும் இனவிரிசல்களையே அது ஏற்படுத்தியுள்ளது. இதன்காரணமாகவும் கிழக்கு மாகாண தமிழர்கள் சமூக பொருளாதார அபிவிருத்தியில் மேலும் அடிநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக உணருகின்றனர். இதற்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொறுப்பற்ற தன்மையே என்கின்ற குற்றச்சாட்டுக்கள் மக்களிடம் நிறையவே உண்டு. தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் என்கின்ற வகையில் எதிர்கால கிழக்கு மாகாண சபை பற்றிய மக்களின் ஆதங்கங்களையிட்டு கவனம் கொள்ள வேண்டிய தேவை வியாளேந்திரன் போன்றவர்களுக்கு உண்டு.

"கிழக்கு வடக்கு மாகாண சபைகள் கலைக்கப்பட்டத்திலிருந்து அடுத்த தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வடக்கில் காட்டும் தீவிரம் கிழக்கில் காட்டவில்லை." என்கின்ற குற்றச்சாட்டை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வியாளேந்திரன் பகிரங்கமாகவே முன்வைத்தார்."யாழ்பாணத்திலோ கொழும்பிலோ இருந்து கொண்டு கிழக்கின் அரசியல் தலை விதியை யாரும் தீர்மானிக்க முடியாது" என்று அவர் முகத்திலறைந்தாற் போல் சொன்னார். அப்போதே அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டு வெளியேற தயாராகி விட்டார் என மட்டக்களப்பில் பரவலாக பேசப்பட்டமை நினைவு கூரத்தக்கது.

இந்த யதார்த்தத்தை சூழல்களை புறந்தள்ளிவிட்டு வியாளேந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறியமையை நோக்க முடியாது. இது வெறும் துரோகி, தியாகி வார்த்தை ஜாலங்களுக்கூடாக ஒற்றை பரிமாணமாக தீர்ப்பு சொல்லக்கூடிய விடயமல்ல .

ஏனெனின் அவரது வெளியேற்றத்தை தொடர்ந்து அவர் பிரதியமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டார் என்பதை வைத்துக்கொண்டே வியாளேந்திரன் மீதான விமர்சனங்கள் வெளிவருகின்றன. அவர் பதவியை மட்டும் குறி வைப்பதாயின் புளட்டின் உபதலைவராகவும் கிழக்கில் புளட்டின் பிரதிநிதியாகவும் இருப்பவருக்கு காலமெல்லாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சியின் ஒதுக்கீடு கிடைக்கும். அவருக்கு இருக்க கூடிய தனிப்பட்ட செல்வாக்குடன் அவர் தொடர்ந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்புக்கள் நிறையவே உண்டு.

இலங்கையில் தமது சொந்த வாழ்வை வளம்படுத்திக்கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பை விட சிறந்த தொழில்தரு நிறுவனம் இல்லாதிருக்கும் போது அவர் அதை விட்டு விலக வேண்டிய அவசியமில்லை.

கிழக்கின் தனித்துவ போக்குகள்

ஒரு பாரம்பரிய அரசியல் வரலாற்று தொடர்ச்சியுடன் வியாளேந்திரனின் வெளியேற்றம் அவதானிக்கப்பட்ட வேண்டும். கிழக்கு மாகாணத்தை பொறுத்த வரையில் தமிழ் தேசியவாத முகாமிலிருந்து இத்தகைய வெளியேற்றங்கள் அதிசயமானவையோ புதியவையோ அல்ல. கிழக்கின் பல்லின சூழலின் சமூக பொருளாதார அரசியல் சிக்கல்களும் விசேடமானவை. வடக்கிலிருந்து எடுக்கப்படும் இவை சார்ந்த அரசியல் முடிவுகள் எப்போதும் தோல்வியையே தழுவி வந்திருக்கின்றன. கிழக்கு மாகாணசபையின் இரண்டாவது ஆட்சிக்காலம் இதற்கு நல்ல உதாரணமாகும்.

வடக்கு தலைமைகள் மீதான அதிருப்திகளை வெளிக்காட்ட காலத்துக்கு காலம் இது போன்ற வெளியேற்றங்கள் அவ்வப்போது இடம்பெற்றே வருகின்றன. 1977 ஆம் ஆண்டு தேர்தலில் பொத்துவில் தொகுதியின் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராக தமிழர் விடுதலை கூட்டணியில் சார்பில் தெரிவான எம்.சி.கனகரெத்தினம் ஐக்கிய தேசிய கட்சிக்கு மாறினார். அதன்பின்னர் மாவட்ட அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்தார். அதனுடாக பெரும்பாலான வேலைவாய்ப்புக்களை மக்களுக்கு பெற்றுக்கொடுத்தார். ஆனால் அவரை தொடர்ந்து அரசியல் செய்ய முடியாதவாறு கொன்றழித்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து வந்த இளைஞர்களான உமா மகேஸ்வரன், பிரபாகரன், செல்லக்கிளி போன்றோரே துரோகி என்று அவரை சுட்டுக்கொன்றனர்.

அதேபோன்று பெருந்தலைவர் இராஜதுரை அவர்களை "1978ஆம் ஆண்டு சூறாவளி அழிவுகளை பார்வையிட வந்த பிரதமர் பிரேமதாசாவை வரவேற்க சென்றார்" என்கின்ற நொண்டி சாட்டை வைத்து அவரை அமிர்தலிங்கம் கட்சியிலிருந்து வெளியேற்றினார். இராஜதுரையும் அதன்பின்னர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து அமைச்சரானார். அதனால் மட்டக்களப்பு பாரிய அபிவிருத்திகளை கண்டது. சுமார் பன்னிரு வருடங்கள் அவர் அமைச்சராக இருந்து மக்கள் பணியாற்றினார். 1989ஆம் தேர்தலில் சுதந்திரமாக போட்டியிடக்கூடிய சூழ்நிலை இன்மையால் அவர் மட்டக்களப்பில் போட்டியிடவில்லை. அதன்பின்னர் அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஆனால் இவர்களையெல்லாம் யாழ்ப்பாண மேட்டுக்குடி அரசியல் துரோகிகளாகவே சித்தரித்து வந்துள்ளது. தமது எழுபது வருடகால அரசியலின் அடையாளமாக ஒரு செங்கல்லைத்தானும் காட்டமுடியாதவர்கள். மாற்று வழியில் பயணித்து இந்த மண்ணை வளப்படுத்திய தலைவர்களை பார்த்து துரோகிகள் என்பது விந்தையானது.

தமிழரசு கட்சியோடு முரண்பட்டு கட்சி மாறி அரசியல் செய்வோரையும், தேசிய கட்சிகளில் இணைந்து பணி செய்பவர்களையும் தமிழரசு கட்சியினர் துரோகிகள் என தூற்றி வருவது வழமையானதுதான்.

ஆனால் அவர்களின் அரசியல் உரிமைகளை அங்கீகரித்து அதனை நாகரீகமாக எதிர்கொள்ள முடியாமல் வன்முறை மூலமும் பழிவாங்கலூடாகவும் தம்மை நிலைநிறுத்தி கொள்ளுவதே தமிழரசு கட்சியினரது மேட்டுக்குடி குணாம்சமாகும். ஆனால் இத்தகைய ஏக தலைமைத்துவ திணிப்பு என்பது எப்போதும் ஜனநாயகத்துக்கு விரோதமானது என்பதே உண்மையாகும்.

டிசெம்பர் 16ஆம் திகதி புதிய பிரதமராக மீண்டும் ரணில் விக்கிரமசிங்க நியமனமாகியுள்ளதோடு வியாளேந்திரனின் 50 நாள் அமைச்சர் அந்தஸ்தும் முடிவுக்கு வந்துள்ளது. வியாளேந்திரன் தற்போது தனிமனிதன். அரசியலுக்கு ஸ்தாபனம் என்பது மிக அவசியமாகும். ஏனெனில் தனிமரம் தோப்பாகாது என்பது அரசியலுக்கு அச்சோட்டாக பொருந்தும். தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறியுள்ள வியாளேந்திரன் தனது எதிர்கால அரசியல் தொடர்பில் எப்படியான பாதையை தெரிவு செய்ய வேண்டும்? என்கின்ற கேள்விக்கு அவர் விடையை கண்டடைய வேண்டும்.

இந்த இடத்தில் அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டு வெளியேறிய பின்னர் அளித்த பேட்டியில் அவர் தெளிவாக முன்வைத்த ஒரு கருத்து கவனம் கொள்ளப்பட வேண்டியதொன்றாகும்.. அதாவது "அபிவிருத்தி பணிகளுக்காக ஒரு போதும் உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது அபிவிருத்தியையும் உரிமைக்குரல்களையும் ஒருமித்து சமாந்தரமாக கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இன்றுஏற்றப்பட்டுள்ளது".என்கின்றார் அவர்.

இந்த இடத்தில்தான் அபிவிருத்தியையும் உரிமையையும் இணைத்து பயணிக்க கூடிய ஓரசியல் போக்கு எப்படியிருக்க வேண்டும்?என்கின்ற கேள்வி எழுகின்றது. அதற்கு கடும்போக்கு தேசியவாதமோ, ஐக்கிய தேசிய கட்சியுடனான சரணாகதி அரசியலோ ஒரு போதும் முன்னுதாரணமாக இருக்க முடியாது.

தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டு வெளியேறி பிரதியமைச்சராக பதவி பிரமாணம் செய்து கொண்ட போதிலும் அவர் பிரதமர் மகிந்த ராஜபக்சவோ அல்லது ஜனாதிபதி மைத்திரிபாலவோ அங்கம் வகிக்கும் தேசிய கட்சிகள் எதனதும் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ளவில்லை என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும். தேசிய கட்சிகளில் இணைந்திருந்து கொண்டு அபிவிருத்தியை நோக்கி மட்டும் திறம்பட செயற்பட முடியும். ஆனால் உரிமைசார் கேள்விகளை கறாராக முன்வைக்க முடியுமா? இல்லை என்பதை அதற்கான உறுதியான பதிலாகும். எனவே தேசிய கட்சிகளில் அவர் இணைவதற்கான முடிவு அவரிடம் இல்லையெனலாம்.

இளமையும் துடிப்பும் மிக்க வியாளேந்திரன் போன்றவர்கள் தமிழ் தேசிய போலிகளின் துரோக பூச்சாண்டிகளை கண்டு அஞ்சாது தமது அரசியல் பயணத்தை தொடரவேண்டும். தம்மீதான குற்றச்சாட்டுகளுக்கும் பழிப்புரைகளுக்கும் கிழக்கின் தனித்துவ அரசியலுக்கூடாகவே அவர் பதிலிருக்க வேண்டும். யாழ்பாணத்து மேட்டுக்குடி பிரச்சாரங்களுக்கும் நெருக்குவாரங்களுக்கும் அஞ்சாது ஒருகிழக்கின் மனிதனாக தலைநிமிர்ந்து நிற்கவேண்டும்.

தமிழ் தேசிய போலிகளால் இதுவரை காலமும் துரோகிகள் என தூற்றப்பட்டவர்களான நல்லையாதான் மட்டக்களப்புக்கு முகவரியை தந்தவர் என்பதும், தேவநாயகம்தான் கிழக்கு பல்கலைக்கழகத்தை தந்தவரெவென்பதும், இராஜதுரைதான் இசை நடன கல்லூரியை தந்தவரென்பதும், சந்திரகாந்தன்தான் முப்பது வருட அழிவுகளிலிருந்து கிழக்கு மாகாணத்தை புதுப்பொலிவு காணச்செய்தவரென்பதும் வரலாறு கற்றுத்தந்த படமாகும். எனவே இந்த "துரோகிகள்" இல்லாது தமிழரசு கட்சியோடு மட்டும் குப்பை கொட்டிக்கொண்டிருந்தால் கிழக்கு மாகாணம் இன்று வெறும் மயானக்காடாகவே காணக்கிடைக்கும்.

கிழக்கின் அரசியல் சிக்கல்களுக்கு அந்த மண்ணிலே இருந்து உருவாகும் அரசியல் கட்சியினால்தான் ஒரு சரியான பாதையை காட்ட முடியும் என்பதை மக்கள் நன்கே உயர்ந்து வரும் காலமிது. அந்த வகையில் கடந்த உள்ளுராட்சி தேர்தலில் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது பாரிய நம்பிக்கையின்மையை வெளிக்காட்டியுள்ளனர்.

எனவே இந்த தேசியவாத போலிகளிடமிருந்து வெளியேறி கிழக்கு மாகாண அரசியலை பொறுத்தவரையில் வியாளேந்திரன் போன்றவர்கள் கிழக்கின் தனித்துவத்துக்கான தலைமையை பலப்படுத்துவது மட்டுமே அவர் முன்னுள்ள வரலாற்று கடமையாகும். தனித்துவ கட்சியுடன் பயணிக்கும் தலைமை மென்மேலும் பலம்பெறும் போது அபிவிருத்தி அரசியலோடு இணைத்து உரிமைசார் விடயங்களில் ஒரு பேரம்பேசும் சக்தியாக கிழக்கு மக்களால் எழுந்து நிற்க முடியும்.


நன்றி உண்மைகள்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com