Monday, December 17, 2018

ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்கிவிட்டு இருத்தி வைத்து 41 நிமிடங்கள் போட்டுத்தாக்கிய மைத்திரி.

நேற்று ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதிவியேற்றுக்கொண்டார். அதன் பின்னர் பதிவியேற்பு வைபவத்தில் கலந்துகொண்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் முன்னிலையில் மைத்திரிபால சிறிசேன 41 நிமிடங்கள் பேசினார். அப்பேச்சில் ஐக்கிய தேசியக் கட்சியையும் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் நேரடியாக போட்டுத்தாக்கினார்.

அவர் அங்கு பேசுகையில் :

2015 ஜனவரி 08 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் பெற்ற பெரு வெற்றியில் நாட்டு மக்கள் பல்வேறு நோக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் கொண்டிருந்தனர். சுமார் 04 வருடங்கள் கடந்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில் குறிப்பாக கடந்த காலத்தில் நாம் அரசாங்கம் என்றவகையில் பெற்றுக்கொண்ட வெற்றிகள், செய்த நல்ல பணிகள் பல உள்ள அதேநேரம், பல துரதிஷ்டவசமான நிகழ்வுகளும் உள்ளன. நாம் அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட்டமை குறித்து மகிழ்ச்சியடைவதைப் போன்று எதிர்பார்த்த இலக்கை நோக்கி நாட்டை கொண்டு செல்ல முடியாமல் போன விடயத்தில் நாம் நாட்டு மக்களின் பக்கமே நிற்கிறோம். இந்த நிலைமையை எதிர்காலத்தில் எவ்வளவு தூரம் வெற்றிகொள்ளக்கூடியதாக இருக்கும் என்பது பற்றி எனக்கு தெரியாது.

2015 தேர்தல் வெற்றியை தொடர்ந்து அமைச்சரவை நியமிக்கப்பட்டது முதல் எமது தேர்தல் உறுதிமொழிகள் மீறப்பட்டமை பற்றி நான் உங்களுக்கு கூறியுள்ளேன். விஞ்ஞானபூர்வமான அடிப்படையில் அமைச்சரவை ஒதுக்கப்பட வேண்டும் என்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. நிபுணர் குழுவொன்றை அமைத்து அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. என்றாலும் அந்த ஆவணங்கள் பார்க்கப்பட்டனவா? என்பது பற்றி எனக்கு தெரியாது.

அன்றிலிருந்து இடம்பெற்றுவரும் நிகழ்வுகளில் குறிப்பாக நாம் எதிர்பார்க்காத பல துரதிஷ்டவசமான நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. நல்ல விடயங்கள் என்று பார்க்கின்றபோது நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தியமை, மக்களின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டமை, 19ஆவது திருத்தம், சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டமை என்பனவற்றை குறிப்பிட முடியும். 19ஆவது திருத்தத்தின் நன்மையாக சுயாதீன ஆணைக்குழுக்களை அமைப்பதிலுள்ள முன்னேற்றத்தை மட்டுமே நான் பார்க்கிறேன். மறுபக்கத்தில் அதனை நான் இன்று ஒரு அரசியல் பிரச்சினையாகவே காண்கிறேன். அதேபோன்று 19 ஆவது திருத்தத்தில் சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டதை போன்று நாட்டின் ஏனைய பதவி நியமனங்களில் அரசியலமைப்பு சபை எவ்வளவு தூரம் பக்கசார்பற்றதாக, நியாயமானதாக இருந்தது என்பதில் எனக்கு பிரச்சினை உள்ளது. இன்று பிரதம நீதியரசரிலிருந்து சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர், சுயாதீன ஆணைக்குழுக்கள் வரை அனைத்தையும் அரசியலமைப்பு சபையே நியமிக்கின்றது. நான் கண்ட முக்கியமான விடயம் என்னவென்றால் அரசியலமைப்பு சபையில் நீதித்துறை நியமனங்களின் போது நீதித்துறையில் உள்ள சிரேஷ்ட நீதிபதிகளின் பெயர்கள் முன்வைக்கப்படுகின்றபோது அவை நிராகரிக்கப்பட்டன.

நீதித்துறையில் சில நீதிபதிகள் தொடர்பில் அவர்களுக்கு சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில் நியமனங்களை வழங்குவதில்லை என என்மீது குற்றச்சாட்டு உள்ளது. அவ்வாறு குற்றச்சாட்டுக்குள்ளாக காரணமாக பெயர்களையும் நான் அரசியலமைப்பு சபைக்கு அனுப்பியிருக்கிறேன் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். அரசியலமைப்பு சபை அவற்றை நிராகரித்துள்ளது. இதன் மூலம் நீதித்துறையில் சிரேஷ்ட நீதிபதிகளாக இருக்கின்றவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எனவே நீதிபதிகளை நியமிக்கின்றபோது அரசியலமைப்பு சபை பின்பற்றும் நடைமுறைகள் எவ்வளவு தூரம் பக்கசார்பற்றது, நடுநிலையானது என்பதில் பிரச்சினையுள்ளது. இதனை உறுதிப்படுத்துவதற்கான பல விடயங்கள் என்னிடம் உள்ளன.

நாம் முகங்கொடுத்த மிக மோசமான அனுபவத்தை எடுத்துக்கொண்டால் அப்போதைய அரசாங்கத்தில் இருந்த பாரிய தவறுகளின் காரணமாகவே மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை தோல்வியுறச் செய்து, 62 இலட்சத்து 50 ஆயிரம் மக்கள் என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்தனர். அந்த வகையில் அடிப்படையான விடயம் ஊழல், மோசடி என்பனவாகும். ஊழலுக்கும் மோசடிக்கும் எதிராகவே மக்கள் நேய அரசாங்கமொன்று அமைக்கப்பட்டது 2015 ஜனவரி 08 ஆம் திகதி தமது வாக்குகளின் மூலம் அவ்வாறு தெரிவுசெய்யப்பட்டு மூன்று மாதம் நிறைவடைவதற்கு முன்னரே இடம்பெற்ற மத்திய வங்கி கொள்ளை, 2015 ஆம் ஆண்டு இரண்டு சந்தர்ப்பங்களில் இடம்பெற்ற நிகழ்வுகள் என்வனவற்றின் ஊடாக நாம் ஊழலுக்கு எதிராக முன்னெடுத்த போராட்டம் முழுமையாக வீண்போனது. அது மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக தகர்த்து, நல்லாட்சி அரசியல் எண்ணக்கருவையும் அழித்துவிட்டது.

நான் இன்று காலையில் மத்திய வங்கி ஆளுநருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜனாதிபதி ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட முக்கிய பரிந்துரையான தடையவியல் கணக்காய்வு இன்றுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்று கேட்டேன். இன்றுவரை அது செய்யப்படவில்லை. மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடியின் பெறுமதி இவ்வளவுதான் என்று இன்னும் சரியாக கூறமுடியாதுள்ளது என ஜனாதிபதி ஆணைக்குழு தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இது பல வருடங்களாக இடம்பெற்று வந்துள்ளது. 2007, 2008 ஆம் ஆண்டுகளிலிருந்து இந்த நிகழ்வுகள் இடம்பெற்று வந்துள்ளதாக ஆணைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக இடம்பெற்று வந்துள்ள இந்த மோசடியினால் ஆயிரம் பில்லியனுக்கும் மேல் மோசடி செய்யப்பட்டுள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் என்னிடம் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாலொன்றின்போது தெரிவித்தனர். இன்றுவரை எந்தவொரு கணக்காய்வின் மூலமும் இது பற்றி கண்டறியப்படவில்லை என ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பிரச்சினை பற்றி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தெரியும். அர்ஜுன மகேந்திரன் மத்திய வங்கியின் ஆளுநராக தெரிவுசெய்யப்பட்ட போது நான் அதனை கடுமையாக எதிர்த்தேன். என்றாலும் நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு ஒரு வாரத்தில் நன்றியுள்ள ஒருவன் என்ற வகையில் ரணில் விக்ரமசிங்கவுடன் எனக்கு எவ்வித பிரச்சினையும் அவசியமற்றது என்ற காரணத்தினால் அவரது அழுத்தமான கோரிக்கையின் பேரில் நான் அர்ஜுன மகேந்திரனை ஆளுநராக நியமித்தேன். அப்படி தெரிவு செய்யப்பட்ட அர்ஜுன மகேந்திரனின் இத்தகைய செயற்பாட்டினால் இந்த நிகழ்வுகள் இடம்பெற்று நாட்டில் பாரிய பிரச்சினையொன்று உருவானது. இது பாராளுமன்றத்திலும் நாட்டின் அரசியலிலும் முக்கிய பேசுபொருளாக மாறியது.

அந்த நிலைமையில் மத்திய வங்கியின் பணிக்குழாம் செயலிழந்த நிலையை அடைந்தது. அச்சந்தர்ப்பத்தில் நான் மத்திய வங்கிக்கு செல்வதற்கு தீர்மானித்தேன். நான் மத்திய வங்கிக்கு செல்ல தீர்மானித்ததன் பின்னர் நான் அங்கு செல்லப்போவதை அறிந்து பிரதமர் எனது வீட்டுக்கு வருகை தந்திருந்தார். அன்று என்னிடம் அவர் நீங்கள் மத்திய வங்கிக்கு செல்லப்போகின்றீர்களா? என கேட்டார். ஆம் நான் அங்கு செல்லப் போகிறேன் என கூறிய போது அதற்கு அவர் நான் அங்கு செல்வதை விரும்பவில்லை. மத்திய வங்கி எனக்குக் கீழ் உள்ளது என்றார். அதற்கு நான் உண்மைதான் ஜனாதிபதி என்ற வகையில் நான் அங்கு செல்ல முடியும் தானே எனக் கூறிச் சென்றேன். நான் அங்கு செல்கின்றபோது பிரதமருடன் அர்ஜுன மகேந்திரனும் அங்கிருந்தார். அர்ஜுன மகேந்திரன் எனக்கு வழங்கிய வெற்றிலையை நான் ஒரு கையினால் எடுத்துக்கொண்டு அவரது முகத்தையும் பார்க்காமல் உள்ளே சென்றேன். இந்த நிகழ்வின் வரலாற்றை எடுத்துக் கொண்டால் அர்ஜுன மகேந்திரன் இன்று இல்லை. அவரை கைது செய்யும் நடவடிக்கைகள் உரிய முறையில் இடம்பெறவில்லை.

இந்த மோசடி தொடர்ந்து ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் அச்சுறுத்தல் வந்தன. அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. அவர்களுக்கு எதிராக விசாரணைகள் இடம்பெற்றன. அமைச்சர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டார்கள் எனக் கூறி தனியான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. இறுதியில் பிரதமரினதும் அமைச்சர்களினதும் தொலைபேசிகள் ஒட்டக் கேட்கப்படவில்லை என ஆணைக்குழு அறிவிப்பு செய்தது. பேர்பசுவல் டிரசரிஸ் நிறுவனத்தின் இன்று சிறையிலிருக்கும் சந்தேக நபர்களின் தொலைபேசிகளை பரிசீலனை செய்தபோது அமைச்சர்களினதும் தொலைபேசி அழைப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளமை பற்றி தெரிய வந்தது. எனவே இன்று கூட ஆயிரம் பில்லியனுக்கும் அதிகம் எனக் கூறும் இந்த மோசடிகளுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி நான் மிகவும் கவலையடைகிறேன்.

நான் மஹிந்த ராஜபக்ஷவை ஒக்டோபர் 26ஆம் திகதி பிரதமாராக நியமித்தேன். அதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மத்திய வங்கி மோசடியில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டியது கட்டாயம் எனக் குறிப்பிட்ட சட்டமா அதிபர் திணைக்களம் பரிந்துரை செய்த இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு திருத்தச் சட்டத்தில் சில வசனங்களே திருத்தப்பட வேண்டியிருந்தது. பாராளுமன்றத்திற்கு அது அனுப்பப்பட்டு 05 மாதங்களுக்கும் அதிகமாக அலுமாரியிலேயே வைக்கப்பட்டிருந்தது. நான் இது பற்றி பல தடவை நீதியமைச்சர் தலதா அதுகோரளவிடம் கூறினேன். அமைச்சர் கிரியெல்லவிடமும் கூறினேன். மிகுந்த சிரமத்துடனேயே அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. என்றாலும் இறுதியில் அது மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவிப் பிரமாணம் செய்வதற்கு நான்கு, ஐந்து நாட்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், அத்திருத்தம் காலவறையறையின்றி பிற்போடப்பட்டது. அவ்வாறு பிற்போடப்பட்டமையினால் அச்சட்டம் திருத்தப்படப்போவதில்லை. இன்னும் 15, 20 ஆண்டுகளுக்கு ஆயிரம் பில்லியனுக்கும் அதிகம் எனக் கூறப்படும் இந்த மோசடி பற்றி விசாரணை இடம்பெறப்போவதில்லை. குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கப்போவதும் இல்லை. அந்த நிதியை மீட்கவும் முடியாது. இது இன்னும் பாரதூரமான பிரச்சினையாகும்.

அதேபோன்று அமைச்சரவையின் தீர்மானத்திற்கேற்ப ஆரம்பிக்கப்பட்ட சீ.சீ.எம் தொடர்பிலும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. உண்மையில் நான் பிரதமருக்கு எவ்வளவு தூரம் நன்றிக்குரியவனாக இருந்தேன் என்றால் ஜனாதிபதியின் அதிகாரங்களையும் பிரதமர் எடுத்துக்கொண்டு செயற்பட்டார். நான் அதுபற்றி கேட்கவில்லை. அரச தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகளின் போதும் சர்வதேச ஒப்பந்தங்களின் போதும் அவர் அவ்வாறு செயற்பட்டார். 19ஆவது திருத்தத்தில் பிரதமருக்கு இல்லாத அதிகாரங்களை ரணில் விக்ரமசிங்க நடைமுறைப்படுத்தினார். நான் அதன்போது நன்றியுள்ள ஒருவன் என்ற வகையில் அமைதியாக இருந்தேன்.

சிங்கப்பூர் ஒப்பந்தம் பற்றி நான் ஆணைக்குழு ஒன்றை அமைத்தேன். அதன் பரிந்துரைகள் கடந்த வாரம் எனக்கு கிடைக்கப் பெற்றன. இந்த ஒப்பந்தத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பது பற்றி அந்த பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நான் இப்போது அதுபற்றி விரிவாக விளக்கப்போவதில்லை. அந்த அறிக்கையில் குறிப்பாக அந்த ஒப்பந்தத்துடன் தொடர்புடைய அதனை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்கள் வர்த்தகம், துறைமுகம், கைத்தொழில், நிதி உள்ளிட்ட குறித்த அமைச்சுக்கள் அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு பரிந்துரைகளை பெற்றுக்கொள்ள வேண்டிய பல்வேறு நிறுவனங்கள் அந்த பரிந்துரைகளை பெற்றுக்கொள்ளாது இருப்பது பாரிய தவறு என இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. எனவே சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. எனது கருத்து அதனை அரச தலையீட்டுடன் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்பதாகும். அது திருத்தப்பட வேண்டும். அந்த திருத்தங்களின் போது நிபுணர்களை கொண்டு முழுமையாகவே நீக்கப்பட வேண்டுமா? திருத்தங்களுடன் அதனை நடைமுறைப்படுத்த முடியுமா? என்பது பற்றி சட்ட, பொருளாதார நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் என்றே நான் பார்க்கிறேன். எனவே இந்த நிலைமைகளில் மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் நாம் இந்த அனுபவங்களுடன் முன்னோக்கி செல்வதற்கான முறைமை எத்தகையது என்ற விடயம் பற்றியதாகும்.

இவ்வாறு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளில் நிறைவேற்றுத்துறையும் சட்டவாக்கத் துறையும் இதனை தீர்த்துக்கொண்டு இருந்தால் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு எமக்கு 07 வாரங்கள் எடுத்திருக்காது. இந்த பிரச்சினையை தீர்த்துக்கொள்வதற்காக கூட்டப்பட்ட அனைத்து கலந்துரையாடல்களிலும் நீங்களும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் சபாநாயகரும் பங்குபற்றிமைக்காக நான் மகிழ்ச்சியடைவதுடன், எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோன்று மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அணியினரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஜன முன்னணியும் வருகை தந்தன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய முன்னணியின் சகோதர கட்சித் தலைவர்கள் அனைவரும் இதற்கு பெரிதும் ஒத்துழைப்பு வழங்கினர். அது ஜனநாயக நாடொன்றில் உள்ள சுமுகமானதொரு நிலைமையும் முக்கியமானதொரு பண்பும் ஆகும் என்று நான் கருதுகிறேன்.

அரசியல் மேடைகளில் எதனைக் கூறியபோதும் ஒன்றாக இருந்து பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காக மனிதாபிமான நிலைமை உள்ளது. என்றாலும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் சட்டவாக்கத்திற்கும் இடையில் அந்த பிரச்சினையை தீர்த்துக்கொள்வதில் நாம் தோல்வியுற்றோம். எனவே இது நீதிமன்றத்திற்கு சென்றது. நீதித்துறை வழங்கிய தீர்ப்பு குறித்து பொதுமக்கள் என்ன கூறுகின்றார்கள்? சட்ட நிபுணர்கள் என்ன கூறுகின்றார்கள்? என்பது பற்றி நான் கேட்டுப்பார்த்தேன். வர்த்தமானி அறிவிப்பு தொடர்பில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டமை, கலைக்கப்பட்டமை, பிரதமர் நியமனம், பிரதமர் நீக்கப்பட்டமை குறித்து என்மீது மிகவும் சிறுபிள்ளைத்தனமாக விமர்சனங்கள் முன்வைக்க்படுகின்றன. ஏனென்றால் நான் ஒரு சட்டத்தரணி அல்ல என்பது முழு நாட்டுக்கும் தெரியும். நான் அந்த வர்த்தமானி அறிவித்தலை எனது சுயவிருப்பத்தின் பேரில் வெளியிடவில்லை. இந்த விடயத்தில் ஜனாதிபதி சட்டத்தரணிகள், நாட்டின் முன்னணி சட்டத்துறை நிபுணர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடன் கலந்துரையாடித்தான் அந்த வரத்தமானி அறிவித்தலை தயாரித்தார்கள். அப்படியில்லாமல் இது சிறு பிள்ளைகள் செய்த விடயம் அல்ல. இதற்கு சிறந்த உதாரணம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை செய்யப்படுகின்றபோது எனது தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நாட்டின் முன்னணி சட்ட நிபுணர்கள் ஆவர். நான் அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்.

கடந்த காலங்களில் வர்த்தமானிகளை வெளியிட்டு நான் செய்தது சிறுபிள்ளைத்தனமான செயலாக இருந்திருந்தால் அந்த வர்த்தமானியை பாதுகாப்பதற்காக சட்ட நிபுணர்கள் முன்வந்திருக்க மாட்டார்கள்.
விசேடமாக பாராளுமன்றத்தை கலைத்ததற்காகவும் மீண்டும் தேர்தலுக்கு செல்ல வேண்டாமென்றும் நீங்கள் எதிர்ப்பு தெரிவித்தீர்கள். தேர்தல் தேவையில்லை என்று நீதிமன்றத்திற்கு சென்றீர்கள். ஆனால் இந்த பிரச்சினைகளுக்கு பின்னணியில் ஊழல் சூழ்ந்திருக்கும் இந்த பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு புதியதோர் பாராளுமன்றத்தை தேர்ந்தெடுக்க வேண்டுமென்று மக்களிடையே ஒரு கருத்து உருவானது. அது ஐக்கிய தேசியக் கட்சி வாக்காளர்கள் மத்தியிலும் ஏற்பட்டதென்பதை நான் அறிவேன். ஊழலை மேற்கொள்ளும் ஐக்கிய தேசிய கட்சியினரையும் வீட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டுமென்று அவர்கள் தெரிவித்தார்கள்.

நீதிமன்ற தீர்ப்பு எவ்வாறாக அமைந்தலும் மக்களின் விருப்பத்தின்படி இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு சிறந்த வழி என்னவென்றல் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு புதிய பாராளுமன்றத்தை உருவாக்குவதேயாகும். நீதிமன்ற தீர்ப்பால் மக்கள் ஆணையை இழந்துவிட்டோம் என்று மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அது எனது கருத்தல்ல. நான் மதகுருக்கள், அறிஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மக்களினிடையே கருத்துக்களை கேட்டறிவேன். அதன்போது மீண்டும் ஒரு தேர்தலுக்கு செல்வதே சிறந்தது என்ற கருத்தை பெரும்பான்மையானவர்கள் முன்வைத்தனர். தேர்தல் வேண்டாமென்று 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு நீதிமன்றத்திற்கு மனுதாக்கல் செய்தனர். எதிர்காலத்தில் இவ்வகையான சூழ்நிலைகளை தடுக்க வேண்டுமென்ற அடிப்படையிலேயே நான் உங்களிடம் இதை சுட்டிக்காட்டுகின்றேன்.

நான் உங்களுக்கு மற்றுமொரு விடயத்தை தெரிவிக்க வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளாக ஊழலை ஒழிப்பது தொடர்பாகவே பேசி வந்தேன். மத சக்திகள், மொழி தொடர்பிலான சக்திகள், கலாசார மற்றும் சமூக சக்திகள் மிகவும் வலுவானதென்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். நாட்டின் அநேகமான சந்தர்ப்பங்களில் ஆட்சி அமைப்பதற்கும் ஆட்சியை கவிழ்ப்பதற்கும் அரசியல் நிலைப்பாடுகளைவிட கலாசார நிலைப்பாடுகள் உறுதுணையாக அமைந்துள்ளதென்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். கடந்த காலங்களில் பிக்குகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும்போதும் பெரஹரவின்போது யானைகளின் பற்றாக்குறையினால் பலவித பிரச்சினைகள் ஏற்படும்போதும் அந்த பிரச்சினைகள் விகாரைகளுடன் தொடர்புடைய பிரச்சினைகள் அல்ல, சமூகம் சார்ந்த பிரச்சினைகள் என்று நான் தெரிவித்தேன். அப்போது நான் தெளிவாக கூறினேன். யானைகளை விடுவிப்போம். அதற்கான சட்ட அனுகூலங்களை கண்டறிவோம். தொடர்ச்சியாக பிக்குகளை கைது செய்யாதீர்கள். இறுதியில் ஒட்டுமொத்த பிக்கு சமூகத்தையும் நாம் இழந்துவிட்டோம்.

மற்றுமொன்றை நான் தெளிவாகக் கூற விரும்புகின்றேன். தீவிரவாத அமைப்பை தோற்கடித்து நாட்டுக்கு வெற்றியை ஈட்டித்தந்த முப்படையினரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டாமென்று நான் தொடர்ச்சியாக தெரிவித்தேன். ஆனால் அதற்கு செவி சாய்க்கவில்லை. எமது இராணுவம் ஒழுக்கமிக்க இராணுவமாக இருக்கும் காரணத்தினால் இந்த அனைத்தையும் அவர்கள் பொறுத்துக்கொண்டு இருக்கிறார்கள். சர்வதேசத்தின் நிலைப்பாட்டின்படி நாம் இராணுவத்தினருக்கு தண்டனை வழங்க வேண்டும். எமது இராணுவத்தினரை அழித்த பிரபாகரனின் தரப்பினருக்கு தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கைகள் இல்லை.

அவர்கள் உலக நாடுகளில் வசித்து வருகின்றார்கள். எல்ரீரீஈயின் உயர் பதவிகளை வகித்த அதிகாரிகள் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். ஆனால் சர்வதேசம் எங்கள் தரப்புக்கு மாத்திரமே விரலை நீட்டுகின்றது. இராணுவத்திற்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என்றும், மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதென்றும், சர்வதேச போர் நியதிகளை மீறி இருக்கின்றோம் என்றும் எம்மீது குற்றம் சாட்டுகின்றனர். அப்படியென்றால் எமது முப்படை, பொலிஸ், சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் நாட்டின் ஜனாதிபதி முதல் பொதுமக்கள் வரை சுமார் ஒரு இலட்சம் பேர் வரை கொலை செய்யப்பட்டுள்ளனர். அப்படியென்றால் அந்த குற்றங்களை புரிந்துவிட்டு உலக நாடுகளில் தலைமறைவாக இருப்பவர்களை இலங்கைக்கு வரவழைத்து தண்டனை வழங்கும் செயற்திட்டமொன்று எங்காவது உள்ளதா? சர்வதேசம் அதைப்பற்றியும் வாய் திறப்பதில்லை. எமது நாட்டிலும் இந்த கருத்து முன்வரவில்லை. இராணுவத்தினருக்கு தண்டனை வழங்குவதாக இருந்தால். அவர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும். அப்படியில்லை என்றால் இரு குழுவினருக்கும் தண்டனையை வழங்காது ஒரு புரிந்துணர்விற்கு வரவேண்டும்.

எனது கருத்து என்னவென்றால் அப்படியாயின் அனைவரின் மீதும் வழக்கு தாக்கல் செய்யவேண்டும். அப்படி இல்லையென்றால் சர்வதேசத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இராணுவத்தை விடுவிக்க வேண்டும். தற்போது எல்ரீரீஈயினருடன் தொடர்புடைய தமிழ் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. நாங்கள் பல கலந்துரையாடல்களை முன்வைத்தோம் தமிழ் கைதிகளை விடுவிக்க வேண்டுமென்றால் எமது இராணுவத்திற்கு எதிராக சுமத்தப்பட்டிருக்கும் வழக்குகளிலிருந்து அவர்களையும் விடுவிக்க வேண்டும். அதுதான் நியாயம். ஒரு தரப்பினரை மாத்திரம் நீதிமன்றத்தின் முன்னால் கொண்டுசெல்லக் கூடாது.

அண்மையில் கடாபியை போன்றே என்னையும் இழுத்து சென்று கொலை செய்ய வேண்டுமென்று உங்கள் தரப்பினர் கருத்து தெரிவித்திருந்தனர். அதேபோன்று மஹகமசேகர வீதியில் அமைந்துள்ள எனது இல்லத்தை தீ வைத்து என்னையும் பிள்ளைகளையும் கொலை செய்ய வேண்டுமென்றும் ஊடக சந்திப்புகளை மேற்கொண்ட அரச சார்பற்ற நிறுவன உறுப்பினர்கள் கருத்து முன்வைத்திருந்தனர். இதுவரையில் இந்த நாட்டில் எந்த அரச தலைவர்களுக்கும் அந்த மாதிரியான சொற்பிரயோகங்களை பயன்படுத்தியதில்லை.

ஜெ.ஆர்.ஜயவர்தனவின் ஆட்சி காலத்தில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன. அவரது ஆட்சி காலத்தில் அநேக போராட்டங்களை முன்னெடுத்து சிறைக்கு சென்றவன் நான். பண்டாரநாயக்க அம்மையாரின் குடியுரிமையை இரத்து செய்தபோதே ஜே.ஆர்.ஜயவர்தன அவர்கள் இந்திய இலங்கை உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார். முழு நாட்டுக்கும் ஊரடங்கு சட்டத்தினை பிறப்பித்தார். நாங்கள் அதற்கு எதிராக வீதியில் உறங்கினோம். ஆனால் அத்தகைய சந்தர்ப்பங்களில் நாட்டின் மக்கள் ஜே.ஆர்.ஜயவர்தனவின் வீட்டை சுற்றி வளைப்பதாகவோ இன்று எனக்கு முன்வைத்த கருத்துக்களையோ அன்று முன்வைக்கவில்லை.

சந்திரிக்கா பண்டாரநாயக்க அம்மையாருக்கு எதிரான விடயங்கள் நாட்டில் எவ்வளவு இடம்பெற்றன? ஆனால் கடாபிக்கு இடம்பெற்றதை போன்று நடக்க வேண்டும் என ஒருவரும் கூறவில்லை. மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நாட்டில் பாரிய எதிர்ப்பு அலைகள் ஏற்பட்ட போதிலும் ஜனநாயக ரீதியிலேயே அவர் தோல்வி அடையச் செய்யப்பட்டார். கடாபியை போன்று இழுத்துச் செல்ல வேண்டும் என ஒருவரும் கூறவில்லை. அப்படியாயின் ஏன் எனக்கு மட்டும் கூறுகின்றனர்? எனக்கு அவ்வாறு செய்யமுடியும் என்பதாலேயே கூறுகின்றனர். நான் அந்தளவிற்கு எளிமையானவன் என்பதாலேயே கூறுகின்றனர். ஜே.ஆர். ஜயவர்தன முதல் இதுவரை காணப்பட்ட எந்த தலைவருக்கு அவ்வாறு கூறியிருப்பினும் அவ்வாறு கூறியவர்கள் இல்லாது செய்யப்பட்டிருப்பார்கள். ஆனால் என்னைப் போல் எளிமையானவர்களின் வீட்டினை சுற்றிவளைக்கவும் தீயிட்டுக் கொளுத்தவும் என்னை இழுத்துச் செல்லவும் முடியும் எனவும் அவர்கள் அறிவார்கள்.

எனது அரசியல் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளுக்கு மத்தியில் நாட்டில் சிறந்த பண்பான சமூகத்தினர் ஒருபுறத்தில் ஒன்றுசேர்வதைப் போன்று குற்றவாளிகள், பாதான உலகத்தினர் மற்றும் மிலேச்ச குணமுடையவர்களே அத்தகைய கூற்றுக்களை தெரிவித்துள்ளனர். என்னைக் கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் தொடர்பில் நீங்கள் இவ்வாறு கருத்துக்களை வெளியிடவில்லை. அது தொடர்பிலேயே பிரச்சினை உள்ளது. அந்த கொலை திட்டமிடல் நிரூபிக்கப்பட்டுள்ளது. பல விடயங்கள் அதனுடன் தொடர்புபட்டுள்ளன. தற்போது சிலகாலம் பொலிஸ் எனது பொறுப்பில் காணப்படுவதால் அந்த விசாரணைகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளன. ஆயினும் துரதிஷ்டவசமாக நாட்டின் ஜனாதிபதி கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் இடம்பெறும்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் எவரும் அங்கு சமூகமளித்திருக்கவில்லை. நான் அது தொடர்பில் அவர்களிடம் விசாரித்தபோது தவறுதலாக வருகைதர முடியாது போய்விட்டது மன்னித்து விடுங்கள் என நூறு தடவைகள் மன்னிப்பு கேட்டார்கள். மன்னிப்பு கேட்பதல்ல முக்கியம் நாட்டின் ஜனாதிபதியை கொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பிலான விசாரணை தொடர்பில் அவர்களது கவனயீனமே இவ்விடத்தில் கருத்திற்கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். எவ்வாறாயினும் அந்த விசாரணைகளில் தற்போது கிடைத்துள்ள தகவல்களுக்கு ஏற்ப பல தெளிவாகியுள்ளன.

இந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக கூறுவதாயின், நாட்டின் தலைசிறந்த சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டதன் பின்னர் மிக உன்னத நோக்கத்துடனேயே நான் அதனை வெளியிட்டேன். நாட்டின் அரசியலமைப்பினை மீறிச் செயற்பட வேண்டுமென்ற தீய எண்ணத்துடன் அதனை நான் மேற்கொள்ளவில்லை. நாட்டில் பாரியதொரு அரசியல் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனை தீர்ப்பதற்கான சிறந்த வழி தேர்தலொன்றை நடத்துவதாகும். பாராளுமன்றத்தின் 122 உறுப்பினர்களே இந்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர். ஆனால் இந்த நாட்டில் 155 இலட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த 122 பேரை விடவும் நாட்டின் 155 இலட்சம் வாக்காளர்களே மக்களின் இறைமை தொடர்பில் தீர்மானிக்க வேண்டியவர்கள் என்றும் அதுவே உலகத்தினர் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையாக அமையும் என்றும் நான் கருதியதாலேயே அந்த முடிவினை மேற்கொண்டேன். மிகத் தூய்மையான எண்ணத்தோடு நான் மேற்கொண்ட அந்த நடவடிக்கைகளுக்காக எனக்கு தண்டனை கொடுப்பதாயின், எனக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவதாயின் அதுபற்றி நான் வருந்தப் போவதில்லை. ஆயினும் இவ்விடயம் வரலாற்றில் குறிப்பிடப்படும். வேறு எவரும் குறிப்பிடவில்லையாயின் நானே அவற்றை எழுதுவேன். தற்போது நான் இவற்றையெல்லாம் எழுதி வருகின்றேன். அந்த புத்தகத்தை ஜனவரி மாதம் இறுதியில் அல்லது பெப்ரவரி மாதத்தில் வெளியிட முடியுமென்று நினைக்கின்றேன். அந்த புத்தகத்தில் நீதிமன்றம் இவ்வாறான தீர்ப்பை வழங்கியிருந்தாலும் எனது நிலைப்பாடு என்ன? 155 இலட்ச மக்களின் ஆணை 122 பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்கைவிட பெரிது என்று நான் எண்ணியது தொடர்பிலும் இந்த புத்தகத்தில் எழுதுவதற்கு நான் எண்ணியுள்ளேன்.

நான் எனது அரசியல் வாழ்க்கையில் ஐந்து, ஆறு முறைகள் செத்து பிழைத்தவன். முதல் முறையாக 1971ல் ஜே.வி.பிக்கு எவ்வித சம்பந்தமும் இல்லாத என்னை சேகுவேரா ஆதரவாளன் என்று அடித்து இழுத்து சென்று மட்டக்களப்பு சிறைச்சாலையில் ஒன்றரை வருடங்கள் அடைத்து வைத்தார்கள். அந்த சந்தர்ப்பத்தின்போது முதன்முறையாக இறைவன் என்னை காப்பாற்றினார்.

“தர்ம வழியில் வாழ்பவனை தர்மமே காக்கும்” நான் ஆன்மீக வழியில் வாழ்பவன். இதற்கு முன்னைய ஜென்மங்களிலும் அவ்வாறான வாழ்க்கையைதான் நான் வாழ்ந்திருப்பேன் என்று நம்புகின்றேன். அதனால்தான் நான் உயிர் பிழைத்தேன் என்பதை நான் அறிவேன். எல்ரீரீஈ.யினர் என் மீது ஐந்து தடவைகள் தாக்குதல்களை மேற்கொண்டனர். ஆனாலும் எனக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அதனால்தான் “தர்ம வழியில் வாழ்பவனை தர்மமே காக்கும்” என்று நான் தெரிவித்தேன். என்னை கொலை செய்ய வந்த எல்ரீரீஈ. தரப்பினர் பல சந்தர்ப்பங்களில் பொலன்னறுவையிலேயே சயனைட் சாப்பிட்டு மரணமடைந்தனர். என்னை கொலை செய்வதற்காக வந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒருவரை அண்மையில் நான் விடுதலை செய்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இறுதியாக பொரலஸ்கமுவையில் என்மீது தாக்குதல் மேற்கொண்டபோது எனக்கு எவ்வித சேதமும் ஏற்படாவிட்டாலும் அப்பாவி மக்கள் சிலர் அந்த தாக்குதலால் மரணமடைந்தனர். அவசரகால சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு வரும்போது ராஜகிரிய என்.எம்.பெரேரா உருவச்சிலை அமைந்திருக்கும் சந்தியில் எல்ரீரீஈ.யினர் என்மீது எவ்வாறு தாக்குதல்களை மேற்கொண்டார்கள் என்பதை பிரதமரும் நீங்கள் அனைவரும் மறந்திருக்க மாட்டீர்கள் என நான் நினைக்கின்றேன். நான் அந்த இடத்தில் சிக்கிக்கொண்டேன். என் மனைவியும், பிள்ளைகளும் வருகை தந்த வாகனம் சம்பவ இடத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்தபோது எல்ரீரீஈ.யினர் அந்த வாகனத்திலேயே ஏறி தப்பி சென்றனர். அந்த வாகனத்தை மல்வான பிரதேசத்தில் விட்டுவிட்டு சென்றிருந்தனர். இவ்வாறான பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 1971ல் எனது வயது 19 ஆகும். தற்போது எனது வயது 67 ஆகும். 19 வயது முதல் பல சந்தர்ப்பங்களில் உயிர் தப்பியுள்ளேன். ஐந்து சந்தர்ப்பங்களில் இறைவன் என் உயிரை காப்பாற்றியுள்ளார்.

அதனால் கடாபியை போன்றே என்னையும் இழுத்துச் சென்று கொலை செய்யலாம் அது தொடர்பில் எனக்கு எவ்வித மறுப்பும் இல்லை. இராணுவத்தையோ அதிரடிப்படையினரையோ அனுப்பி அவர்களை சுட்டுக்கொள்ள மாட்டேன். எந்த சந்தர்ப்பத்தில் என்மீது தாக்குதல் மேற்கொள்ள வந்தாலும் நான் பிரதான வாயிலை திறந்துவிடுவேன். இராணுவத்தினரையும் அதிரடிப்படையினரையும் வெளியேறச் சொல்லிவிடுவேன். கொலை செய்ய வந்தவர்கள் என்னையும் என் வீட்டையும் கொளுத்திவிட்டு செல்லலாம். அரச சார்பற்ற நிறுவனத்தினருக்கும் இங்கு அமர்ந்திருக்கும் அவ்வாறான கருத்துக்களை தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நான் இதை தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

இத்தகைய அனுபவங்களுடன் நாம் எவ்வாறு முன்னோக்கி பயணிக்க வேண்டுமென்பதை சிந்தித்து செயல்பட வேண்டும். இத்தகைய பிரச்சினைகளுடன் அரசாங்கத்தை தொடர்ந்து கொண்டு செல்ல போகின்றோமா? உங்களிடையேயுள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தொலைபேசியின் ஊடாக அழைப்பினை மேற்கொண்டும் நேரடியாக சந்தித்தும் ஒன்றிணைந்து பயணிப்போம் என்று தெரிவித்தனர். ஆனால் அந்த பயணத்திற்கான உத்தரவாதம் எதுவென நான் அறியமாட்டேன். பிரச்சினைகளை தோற்றுவிப்பது எனது எண்ணம் இல்லை. பிரச்சினைகளின் மூலம் நாடு வீழ்ச்சியை சந்திக்கின்றது. தற்போது நிலவும் ஊழல் சூழ்நிலை மிக வலிமையடைந்துள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். பாராளுமன்றத்தில் ஊழல் செய்யும் அரசியல் குழுவொன்று உள்ளது. அமைச்சரவையிலும் ஊழல் செய்பவர்கள் இருக்கிறார்கள். நாம் மக்களுக்கு வழங்கிய நல்லாட்சி அரசியல் வாக்குறுதிகள் கண்ணெதிரே அழிக்கப்பட்டுள்ளன. இந்த செயலுக்கான குற்றவாளி நான் இல்லை என்பதை தெளிவாகக் கூறிகொள்ள விரும்புகின்றேன். நான் அனைத்து அர்ப்பணிப்புகளையும் மேற்கொண்டேன். ஆனால் அவை அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. எனக்கு வாக்களித்த பெரும்பான்மை ஐக்கிய தேசியக் கட்சி வாக்காளர்கள் இவற்றை அறிய மாட்டார்கள். அவர்கள் இந்த அரசியல் சாக்கடையை பற்றி எதையும் அறிய மாட்டார்கள். அவர்களுக்கு அதைப்பற்றி தெரிந்திருந்தால் போராட்டங்களுக்கோ ஊர்வலங்களுக்கோ கூச்சலிடவோ முன்வந்திருக்க மாட்டார்கள் என்பதை நான் அறிவேன்.

இலங்கை ஒரு அதிர்ஷ்டமான நாடு என்பதை நாம் அறிவோம். ஆனால் அத்தகைய மகத்துவம் பெற்ற இந்த நாட்டின் எதிர்காலத்தை கட்டியமைப்பதற்கு ஊழலை தவிர்த்து செயற்படும் எத்தனை அரசியல்வாதிகள் உள்ளார்கள்? ஊழலற்ற அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கு தேவையானவர்கள் யார்? அவர்களின் ஒன்றுகூடுதல் மிகவும் அவசியமாக உள்ளது. சிறந்ததொரு நாட்டைக் கட்டியெழுப்ப, அபிவிருத்தியை உருவாக்க, ஊழல் அற்ற ஆட்சியை கொண்டுசெல்வதற்காக நாம் முன்வைத்து தோல்வியடைந்த நல்லாட்சி கொள்கைகளை மீண்டும் செயற்படுத்த வேண்டும். நாட்டை நேசிக்கும் நாட்டின் கலாசார பெறுமதிகளை தர்ம நெறிகளுடன் கூடிய சமூக கட்டமைப்புக்கு மதிப்பளிக்கும் நாடுகள்தான் உலகில் வளர்ச்சியடைந்திருக்கின்றன.

அவ்வாறான ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்கான குழுவினர்கள் எங்கே உள்ளார்கள் என்ற ஒரு பிரச்சினை எழுகின்றது. இதை தனியொரு நபரால் செய்ய முடியாது. இதற்கு ஒரு சிறந்த குழு தேவையாக உள்ளது. மக்களுக்கு தலைமையேற்க சிறந்த குழுவொன்று அவசியமாக உள்ளது. நாட்டு மக்களுக்கு நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். பாராளுமன்றத்தில் 225 உறுப்பினர்களும் கைச்சாத்திட்டாலும் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்க மாட்டேன் என்று நான் தெரிவித்ததை அடிப்படையாகக்கொண்டு சிலர் கேள்வி எழுப்பலாம். என்னை தரக் குறைவாக பேசலாம். எனது பேச்சை கேலிக்குள்ளாக்கலாம். ஆனால் அது எனது தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடாகும். அதன் தீவிரத்தன்மை காரணமாகவே நான் அவ்வாறு தெரிவித்தேன். அப்போது நீங்கள் பாராளுமன்றத்தில் 117 பெரும்பான்மையை நிருபித்துக் காட்டினீர்கள். பிரதமரை நியமிப்பதற்காக ஜனாதிபதிக்கு பரிந்துரைகளை வழங்கவோ கட்டளையிடவோ அரசியலமைப்பின்படி பாராளுமன்றத்திற்கு எவ்வித அதிகாரமும் வழங்கப்படவில்லை. நான் அறிந்த வரையில் நீதிமன்றத்திற்கும் அந்த அதிகாரம் இல்லை. அந்த அதிகாரம் தெளிவாக நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிக்கே வழங்கப்பட்டுள்ளது.

ஆனாலும் பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஒழுக்கத்திற்கும் மதிப்பளித்து பாராளுமன்றத்திலும் 117 வாக்குகளின் மூலம் பெரும்பான்மையை நிருபித்ததால், ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்க நான் முடிவு செய்தேன். 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் கைச்சாத்திட்டாலும் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்க மாட்டேன் என்பதே எனது நிலைப்பாடாக இருந்தது. இன்றும் அதில் எவ்வித மாற்றமும் இல்லை. ஆனால் பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளித்து அவருக்கு பிரதமர் பதவியை வழங்க வேண்டுமென்று நான் முடிவெடுத்தேன். என்னைப் பொறுத்தவரையில் ஜனநாயக சமூகத்தின் சிறப்பம்சமாகவே இந்த செயற்பாட்டை நான் கருதுகின்றேன்.0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com