Tuesday, November 6, 2018

சைக்கிள் கடை மீது ஈபிஆர்எல்எப் - புளொட் கூட்டுத்தாக்குதல்.

தமிழ் மக்கள் பேரவையில் ஈபிஆர்எல்எப் மற்றும் புளொட் அங்கம் வகிக்க முடியாது என கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் ஆகியோர் தெரிவித்திருந்த கருத்து அக்கட்சிகளை விசனமடையச் செய்துள்ளது.

மேற்குறித்த கருத்து தொடர்பில் ஆத்திரமடைந்துள்ள மேற்படி கட்சிகளின் தலைவர்களான சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் சித்தார்தன் ஆகியோர், கஜேந்திரர்களின் பொட்டுவித்தைகளை புட்டுவைத்து வருகின்றனர்.

இவ்வார ஞாயிறு மஞ்சரிக்கு சுரேஸ் பிறேமச்சந்திரன் வழங்கியுள்ள செவ்வியில் :

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் வெளிநாட்டிலிருந்து யார் மூலம் இலங்கை திரும்பி வந்தாரென்பதும், அவரது சகோதரன் வெள்ளைவானில் கடத்தப்பட்டு யாருடைய உதவியுடன் அவர் உயிருடன் திரும்பி வந்தாரென்பதும், எந்த அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் அவர்கள் உறவுகளை வைத்திருந்தார்கள் என்பதும், இன்னும் பல விடயங்களும் எங்களுக்கு நன்றாகத் தெரியும்.' என போட்டுடைத்துள்ளார்.

அவர் வழங்கியுள்ள நீண்ட செவ்வியில் தெரிவித்துள்ளமை வருமாறு:

ஆயுதப் போராட்ட காலத்தில் வெளிநாட்டில் வாழ்ந்த கஜேந்திரகுமாரோ, பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தில் மாத்திரம் அங்கம் வகித்த கஜேந்திரனோ, தங்களை மட்டும் தேசிய வீரர்களாகவும், ஏனையவர்களை துரோகிகளாகவும் சித்தரிப்பது அசிங்கமானது.

'வேறு யாரும் இருந்தால் நாங்கள் வர மாட்டோம், கொள்கை ரீதியாக அவர்கள் தவறானவர்கள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூறுகின்ற இந்த வசனங்கள் எல்லாம் மிக மிக சிறுபிள்ளைத்தனமான வாதங்கள். ஏனெனில் முன்னணியோ அல்லது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸோ இருவரை தமிழ் மக்களுடைய உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கான ஒரு முழுமையான வரைபடத்தை வெளியிடவில்லை.

நாங்கள் இதனை எவ்வாறு செய்யப் போகின்றோம் என்று கூறவில்லை. உள்நாட்டில், வெளிநாட்டில் என்ன செய்யப் போகின்றோம், எவ்வாறு உரிமைகளை வென்றெடுக்கப் போகின்றோம் என்று இன்னும் கூறவில்லை. வெறுமனே சுமந்திரன் மீதும் சம்மந்தன் மீது குற்றச்சாட்டுக்களை மட்டும் வாசித்துக் கொண்டிருக்காமல் மாற்று வழி முறைகள் என்ன என்பதையும் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். அந்த மாற்று வழிமுறைகள் தெளிவுபடுத்தாமல் தான் இன்றுவரை அவர்கள் குற்றச்சாட்டுகளை சுமத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இப்பொழுது இன்னுமொரு படி மேலே சென்று தாங்கள் மாத்திரம் தான் சரியானவர்கள், கொள்கை வாதிகள், ஏனைய எல்லோருமே துரோகிககள் என்ற தொனியில் இருந்து இவர்கள் பேசுவது அநாகரிகமான, அசிங்கமான ஒரு நிலைப்பாடு. அவர்கள் முன்வைக்கக் கூடிய கேள்விகள் பலவற்றுக்கு நான் ஏற்கனவே பதில் சொல்லியிருக்கின்றேன். தேவை ஏற்பட்டால் இன்னுமொரு தடவை கூட நான் பதில் சொல்லத் தயாராக இருக்கின்றேன்.

ஒரு விடயத்தை நாங்கள் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அந்தக் கட்சியினுடைய செயலாளர் கஜேந்திரன் முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து யுத்த காலத்தில் வெளிநாட்டிற்குச் சென்று யார் மூலம் திரும்ப இந்த நாட்டிற்குள் வந்தாரென்பதும், அவரது சகோதரன் வெள்ளைவானில் கடத்தப்பட்டு யாருடைய உதவியுடன் அவர் உயிருடன் திரும்பி வந்தாரென்பதும், எந்த அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் அவர்கள் உறவுகளை வைத்திருந்தார்கள் என்பதும், இன்னும் பல விடயங்களும் எங்களுக்கு நன்றாகத் தெரியும்.

ஆனால் நாங்கள் இவை எதனையும் பற்றி பேசவில்லை. தமிழ் மக்களுடைய பிரச்சனைகளுக்கான தீர்வை பெற்றுக் கொள்வது மாத்திரம்தான் எமது நோக்கம். ஆகவே நாங்கள் வேறு வேறு கொள்கையில் பிறழ்வுபட்டுப் போகின்றோம் என்று இவர்கள் பேசுவதில் எந்தவித அர்த்தமும் கிடையாது.

ஈ.பி.ஆர்.எல்.எவ் 1979 ஆம் ஆண்டு தொடங்கியது. எங்களுக்கு நாற்பது வருட கால அரசியல் அனுபவம் இருக்கின்றது. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வெறுமனே ஒரு பாராளுமன்ற ஆசனத்தை மட்டும் நம்பி வந்த கட்சி அல்ல. ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு அரசிலுக்கு வந்த கட்சி. தமிழ் மக்களுக்கு என்ன தேவையோ அவற்றைப் பற்றிச் சிந்திக்கக் கூடிய கட்சி.

அந்த கட்சியிலுள்ள ஒருவர் பல்கலைக்கழக மாணவராகவும், மற்றையவர் வெளிநாட்டில் கற்றவராகவும் இருந்தார்களே தவிர, இவர்கள் விடுதலைப் போராட்டத்தில் என்ன பங்களிப்பைச் செலுத்தியிருக்கின்றார்கள்?

பல்கலைக்கழகத்தில் மாணவர் அணித் தலைவராக இருந்ததென்பதைத் தவிர ஆயுதப் போராட்டத்தில் கஜேந்திரனோ அவரது குடும்பத்தினரோ என்ன பங்களிப்பைச் செலுத்தியிருக்கின்றார்கள்?

ஆனால் நாங்கள் மிக ஆரம்பத்தில் இருந்தே ஒரு ஆயுதப் போராட்டத்தில் அங்கம் வகித்து ஒர் அரசியல் போராட்டத்தில் அங்கம் வகித்து பல்வேறுபட்ட தரப்புக்களுடன் பேசி போராட்டத்தை முன்கொண்டு சென்றதில் மிகப் பெரிய பங்கு எங்களுக்கு இருக்கிறது. ஆகவே எங்களை நோக்கி விரல் நீட்டுவதற்கான எந்தவித யோக்கியமும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசிற்கோ, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்று சொல்பவர்களுக்கோ கிடையாது.

நாங்கள் அமைதியாக கூட்டாகச் சேர்ந்து தமிழ் மக்களுடைய உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கு எவ்வளவு ஒரு விரிவான கூட்டாகச் செய்ய முடியுமோ அவ்வாறு சேர்ந்து செய்ய வேண்டுமென்று தான் நாங்கள் யோசிக்கின்றோம். அது அவர்களுக்கு சரியில்லாது விட்டால் அது குறித்து அவர்கள் முடிவு எடுக்க வேண்டும்.

அதைவிடுத்து, நாங்கள் தமிழ் மக்கள் பேரவையில் இருக்கக் கூடாதென்று கூறுவதற்கோ அல்லது முதலமைச்சருடைய ஒரு அணியில் நாங்கள் இருக்கக் கூடாதெனக் கூறுவதற்கோ இவர்களுக்கு எந்தவிதமான யோக்கியமும் கிடையாது.
இவர்கள் தங்களை மிகப் பிரமாண்டமாக சக்தியாக யோசிப்பார்களாக இருந்தால் நிச்சயமாக மீண்டும் ஒருமுறை மக்கள் அவர்களுக்கு அதற்கான பாடத்தைக் கற்பிப்பார்கள். அதற்குப் பிறகு தாங்கள் யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள்' என்றும் தெரிவித்தார்.

இதேநேரம் 'கஜேந்திரகுமார் சின்னப் பையன்இ அவரது கருத்துக்களை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை' என கூறியுள்ளார் புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன்.

இன்று அவரது வாசஸ்தலத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, தமிழ் மக்கள் பேரவையிலிருந்து புளொட் வெளியேற்றப்பட வேண்டும் என்றும், ஏனைய கட்சிகள் அனைத்தையும் துரோகிகள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி குறிப்பிட்டு வருவது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'தமிழ் மக்கள் பேரவையில் நாங்கள் உட்பட பல கட்சிகளும் பொது அமைப்புக்களும் அங்கம் வகிக்கின்றன. அதே போன்று கஜேந்திரகுமாரின் கட்சியும் அங்கம் வகிக்கின்றன. எங்களை வெளியேற்றுமாறு கஜேந்திரகுமார் கூறியுள்ளதாக அறிந்தோம். ஆனால், வெளியேறுமாறு பேரவையைச் சேர்ந்த யாரும் எங்களுக்கு சொல்லவில்லை.

பேரவையின் எழுக தமிழ் நிகழ்வு உள்ளிட்ட அனைத்துச் செயற்பாடுகளிலும் நாங்கள் ஆதரவு அளித்திருக்கின்றோம். எம்மைப் போன்று சுரேஸ் பிறேமச்சந்திரனின் பங்கும் அளப்பரியது. ஆகவே பேரவை என்பது தனியே ஒரு கட்சியல்ல. அது பல கட்சிகள் பொது அமைப்புக்கள் இணைந்த கூட்டு ஆகும். ஆகவே அது ஒருவருக்கோ அல்லது ஒரு கட்சிக்கோ சொந்தமானது அல்ல.

கஜேந்திரகுமார் தான் எம்மை வெளியேற்றுமாறு கோரியிருக்கின்றார். அவர் ஒரு சின்னப் பொடியன். அவரின் கருத்துக்களை சீரியசாக எடுக்கத் தேவையில்லை.

கஜேந்திரகுமார் எம்மை பலரையும் தொடர்ந்தும் விமர்சித்துக் கொண்டிருக்கின்றார். ஆனால், அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை இன்னும் மக்களுக்குச் சொல்லவில்லை. முதலில் தன்னுடைய நிலைப்பாட்டை அவர் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். ஒன்றுமே செய்யாமல், மற்றயவர்களை விமர்சித்துக் கொண்டிருப்பதால் மட்டும், தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுக் கொடுக்கலாம் என்றோ, தன்னுடைய அரசியலை முன்னெடுக்கலாமென்றோ அவர் நினைக்கக் கூடாது.

தமிழ் மக்களுக்கு அவர் என்ன செய்யப் போகின்றார்?. அகிம்சை ரீதியாக அல்லது ஆயுத ரீதியாகப் போராடப் போகிறாரா? அல்லது இதனையெல்லாம் விடுத்து தொடர்ந்தும் மற்றவர்களை விமர்சித்துக் கொண்டு மட்டுமே இருக்கப் போகின்றாரா என்பதற்குப் பதிலளிக்க வேண்டும்.

கூட்டமைப்பிற்கு மக்கள் வாக்களித்துள்ளதை போல, அவரது கட்சிக்கும் வாக்களித்திருக்கின்றனர். ஆகவே வாக்களித்த மக்களுக்காவது தாம் என்ன செய்யப் போகின்றார் என்பதைப் பற்றி எதையும் கூறாமல், தொடர்ந்தும் மற்றவர்கள் என்ன செய்கின்றார்கள், ஏன் அவ்வாறு செய்கின்றார்கள் என விமர்சித்துக் கொண்டு இருக்கப் போகிறாரா?

தொடர்ந்தும் மற்றவர்களை விமர்சித்துக் கொண்டு தான் இருக்கப் போகிறார் என்றால் அது அவருடைய எதிர்காலத்திற்கு நல்லதல்ல. எனவே, தான் என்ன செய்யப் போகின்றார் என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்திவிட்டு அதனை அடைவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com