Thursday, November 29, 2018

புதிய அரசாங்கத்தில் நாங்களும் இணைகின்றோம் ! தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வ கடிதம்

பாராளுமன்றில் பெரும்பாண்மையை கொண்டிருக்கக்கூடியவர் என தாங்கள் நம்பும் ஒருவரை பிரதமராக நியமிக்க கோரும் தமிழரசுக் கட்சியினர் ஐக்கிய தேசிய முன்னணியினருக்கு தமது ஆதரவை வழங்குவதாக எழுத்துமூலம் தெரியப்படுத்தியுள்ளனர்.

இன்று ஜனாதிபதிக்கு தமிழரசுக் கட்சியினர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்கள் கையொப்பம் இட்டுள்ளதன் ஊடாக ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பங்காளிகள் ஆகியுள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

கடந்த ஒக்டோபர் மதம் 26 ஆம் திகதியிலிருந்து நடந்த அனைத்து சம்பவங்களினதும் பின்னணியின் அடிப்படையில் மேற் குறித்த விடயம் தொடர்பில் நாங்கள் அக்கறைக் கொண்டு, இக் கடிதத்தை எழுதுகின்றோம்.

கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி பிரதமராக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர், அவர் நியமிக்கப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையிலும் இந்தக் காலப் பகுதியில் பல தடவைகள் பாராளுமன்றம் கூடியுள்ள போதிலும் அவரால் தனக்கு பாராளுமன்றத்தின் பெரும்பான்மை நம்பிக்கையை உள்ளது என்பனை நிரூபித்துக் காட்ட முடியாத ஒருவராக காணப்படுகின்றார்.

அதேவேளை குறித்த பாராளுமன்ற உறுப்பினர் மீது பிரதமராக இருப்பதற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் கடந்த 14, 16 ஆம் திகதிகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

'குரல்' அடிப்படையில் எடுக்கப்பட்ட வாக்குகள் 122 உறுப்பினர்களின் கையொப்பங்களினுடன் ஜனாதிபதி ஆகிய உங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதுமாத்திரமன்றி இது தொடர்பிலான சபாநாயகரின் அறிக்கைகளும் உங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த பாராளுமன்ற உறுப்பினர் பிரதமராக இருப்பதற்கு பாராளுமன்றத்தின் நம்பிக்கையை பெற்றுள்ளாரா? என்ற வினாவுக்கு பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்து எதிராகவே உள்ளது. அதுமாத்திரமன்றி சந்தேகத்திற்கிடமில்லாமல் நிரூபிக்கப்பட்டும் உள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர், பிரதமராக தான் இருப்பதற்கு பாராளுமன்றத்தில் நம்பிக்கையினைப் பெற்றுள்ளார் என்பதனை நிரூபித்துக் காட்ட இயலாது போயுள்ளது.

இந்நிலையில் அந்தப் பாராளுமன்ற உறுப்பினர் பிரதமராக இருப்பதற்கு எதிராக கடந்த 14 மற்றும் 16 ஆம் திகதிகளில் நிறைவேற்றப்பட் நம்பிக்கையில்லாத் தீர்மானங்களானது, இந்த நாட்டில் ஒரு பிரதமரோ, அமைச்சரவையோ சட்டபூர்வமாக நியமிக்கப்பட்ட அரசாங்கம் ஒன்றோ இருக்கின்றதா என்ற முரண்பாட்டை தோற்றுவித்துள்ளது.

இந் நிலைமை தொடர்ந்து நீடிக்க முடியாது என்பதை நாம் மிகவும் மரியாதையுடன் கூறிக் கொள்ள விரும்புகின்றோம்.

இதனால் பாராளுமன்றத்தின் நம்பிக்கையை பெற்றுக் கொள்ளக்கூடிய ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பிரதமராக நியமிக்கப்படுவதனை உறுதி செய்யும் வகையில் இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாக நாம் கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதிக்கு முன்னர் இருந்த ஐக்கிய தேசிய முன்னணித் தலைமையிலான அரசாங்கத்தினை மீள அமைப்பதற்கு ஆதரவளிப்போம் என்பதுடன், ஐக்கிய தேசிய முன்னணியினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை பெறக் கூடியவர் என நீங்கள் கரும் நபரை பிரதமராக நியமிக்க வேண்டும் எனவும், தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.

மேற் குறிப்பிட்ட விடயங்களை ஜனாதிபதியாகிய தங்களுக்கு தெரியப்படுத்துவதை எமது கடமையாக கருதுகின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு எழுதியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடிதத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை.சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், எஸ்.ஸ்ரீதரன், சித்தார்த்தன், சரவணபவன், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, சிவமோகன், சீனித் தம்பி யோகேஸ்வரன், சிறிநேசன், கோடீஸ்வரன் மற்றும் துரைரெட்ணசிங்கம் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com