Thursday, November 15, 2018

ஜனாதிபதியின் கடிதத்தை வாசிக்க மறுத்த சபாநாயகர்.

இன்று பாராளுமன்று கூடப்பட்டபோது முக்கியமான சில தீர்ப்புக்கள் மற்றும் மற்றும் நிலையியற்;கட்டளை தொடர்பான சில விடயங்களை சபாநாயகர் கரு ஜெயசூரிய சபையினருக்கு வாசித்தார்.

அதன் முடிவில் ஜனாதிபதியினால் தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தை இங்கே வாசித்துக்காட்டுங்கள் என பா.உ தினேஸ் குணவர்த்தன மிகவும் காட்டமாக வேண்டினார். நாடு பெரும் அசமந்த நிலையினுள் தள்ளப்பட்டுள்ள இந்நிலையில் அக்கடிதம் முக்கியத்துவம் வாய்ந்தாகும் அதை நீங்கள் தற்போது வாசிக்கவேண்டும் எனவும்2018.11.14 வற்புறுத்தினார்.

பதிலளித்த சபாநாயகர் அக்கடிதத்தை வாசிப்பதா இல்லையா என முடிவெடுப்பதற்கு எனக்கு பூரண அதிகாரம் உண்டு. குறித்த கடிதத்திற்கு நான் ஜனாதிபதிக்கு பதில் எழுதவுள்ளேன். அப்பதிலுடன் அதை நான் சபையில் தேவைப்பட்டால் வாசிப்பேன் எனத் தெரிவித்தார்.

நேற்று பாராளுமன்றில் நடைபெற்ற நம்பிக்கையில்லை பிரேரணை தொடர்பில் சபாநாயகரால் எழுத்துமூலமாக ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டதுடன் சில சிபார்சுகளை செய்திருந்தார் என்பது யாவரும் அறிந்தது. குறித்த கடிதத்திற்கு நேற்று பிற்பகலே ஜனாதிபதி சபாநாயகருக்கு பதில் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் அவர் சபாநாயகரை மிகவும் சாடியுள்ளார்:

அவருடைய முழுக்கடிதம் வருமாறு.

கௌரவ கரு ஜயசூரிய அவர்கள்,
சபாநாயகர்,
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றம்,
ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டை.

கௌரவ சபாநாயகர் அவர்களே,

2018 நவம்பர் 14 ஆம் திகதிய பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக தங்களால் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் மற்றும் அதன் இணைப்புகள் தொடர்பில் எனது கவனத்தை செலுத்தினேன்.

முதலாவதாக பாராளுமன்றம் தொடர்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள தங்களது செயற்பாடுகள் இந்த வழக்கின் தீர்ப்பிற்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாக அமையும் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

தங்களது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல், அரசியலமைப்பின் பிரகாரம் எனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாகவே என்னால் வெளியிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று முன்வைக்கப்பட வேண்டிய முறை மற்றும் அதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் அரசியலமைப்பிலும் நிலையியற் கட்டளைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அரசியலமைப்பு, நிலையியற் கட்டளைகள் மற்றும் பாராளுமன்ற சம்பிரதாயங்கள் ஆகியவற்றைக் கருத்திற் கொள்ளாது நீங்கள் செயற்பட்டுள்ளீர்கள் என்பது தெளிவாகின்றது.

அரசியலமைப்பின் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக பிரதமர் ஒருவரை நியமிக்கும் வேளையில், எனது கருத்திற்கு அமைவாக பாராளுமன்றத்தில் அதிகபட்ச நம்பிக்கையினைக் கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பிரதமராக நியமிப்பதற்கான சட்ட ஏற்பாடு காணப்படுவதுடன், பிரதமருக்கு அல்லது அரசாங்கத்திற்கு பெரும்பான்மை காணப்படுகின்றது என்பதையோ அதனை உறுதிப்படுத்த வேண்டும் என்ற பாராளுமன்ற சம்பிரதாயமோ இல்லை என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

மேலும் பாராளுமன்றத்தினால் உரியவாறு அத்தாட்சிப்படுத்தப்படாத கையொப்பங்கள் அடங்கிய ஆவணமொன்றினை எனக்கு அனுப்பி வைத்ததன் ஊடாக குறித்த பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதென உறுதிப்படுத்துவதற்கு தங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சி தொடர்பிலும் நான் கவலையடைகின்றேன்.

அவ்வாறே, 2015 ஜனவரி 09 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினைப் பிரதிநிதித்துவம் செய்த கௌரவ டி.எம். ஜயரத்னவிற்கு சார்பாக பாராளுமன்றத்தில் 162 ஆசனங்கள் காணப்பட்ட சந்தர்ப்பத்திலேயே அவரை பதவியிலிருந்து நீக்கிவிட்டு பாராளுமன்றத்தில் 41 ஆசனங்களை மட்டுமே கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களை, நீங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சியின் வேண்டுகோளுக்கு அமைவாக நியமித்தேன் என்பதையும் நினைவுறுத்துகின்றேன்.

என்னால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் அரசியலமைப்பிற்கு உட்பட்டனவா என்பதை நிர்ணயம் செய்வதற்கு பாராளுமன்றத்தில் முயற்சித்தலானது, அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை தெளிவுபடுத்துவதற்கு உயர் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள பிரத்தியேக மற்றும் அதற்கே உரித்தான அதிகாரங்களை மீறிச்செயற்படும் நடவடிக்கையாகும் எனவும் அதனூடாக நீங்கள் அரசியலமைப்பு தொடர்பில் உரியவாறு கவனம் செலுத்தவில்லை என்பதும் தெளிவாகின்றது.

இறுதியாக சபாநாயகராக நியமிக்கப்படும் ஒருவர் எந்தவொரு அரசியல் கட்சியை பிரதிநிதித்துவம் செய்பவராக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருப்பினும் மாட்சிமை மிக்க பாராளுமன்றத்தின் கௌரவத்தையும் அதன் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் பாதுகாப்பதற்காக சுயாதீனமாக செயற்பட வேண்டிய பொறுப்பினை வருத்தத்துடன், தங்களுக்கு ஞாபகப்படுத்த நேர்ந்துள்ளது. தங்களால் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மேற்குறித்த கடிதத்தில் முதலாவது பிரேரணையாக குறிப்பிடப்பட்டுள்ள விடயமாகிய குறித்த நியமனம் மற்றும் கட்டளை அரசியலமைப்பிற்கு எதிரானது என குறிப்பிடப்பட்டுள்ள பிரகடனத்தை நான் முற்றாக நிராகரிக்கின்றேன். குறித்த முதலாவது பிரேரணை தொடர்பில் நான் மேற்கொண்ட நடவடிக்கை அரசியமைப்பிற்கு ஏற்புடைய, சட்ட ரீதியான தீர்மானமாகும். தங்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்கள் அடங்கிய ஆவணத்தின் மூலப்பிரதியில் ஏற்கனவே குறிப்பிடப்பட்ட திகதி அழிக்கப்பட்டு அதன் மீது நவம்பர் 14 ஆம் திகதி என எழுதப்பட்டுள்ளது.

மேலும் அரசியலமைப்பிற்கு அமைவாக பிரதமர் ஒருவரை நியமிக்கும் பூரணமான அதிகாரத்தைக் கொண்டுள்ள நியமிப்பு அதிகாரி ஜனாதிபதியே ஆவார் என்பதையும் தங்களுக்கு தயவுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இப்படிக்கு – நம்பிக்கையுள்ள

மைத்ரிபால சிறிசேன
ஜனாதிபதி





0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com