Wednesday, October 10, 2018

முதலீடு செய்யவரும் புலம்பெயர் தமிழரின் புலிகளுடனான தொடர்பினை மத்திய வங்கி விசாரணை செய்யும் - சம்பிக்க

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள விரும்பம் தெரிவிக்கும் புலம்பெயர் தமிழர்கள், புலிகளுடன் தொடர்புடையவர்களா – இல்லையா என்பது குறித்து மத்திய வங்கி ஊடாக ஆராயப்படும் என மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது மேற்கண்டவாறு கூறிய அவர் , விடுதலைப் புலிகளுக்கு வாகனங்கள், தொலைப்பேசிகளை கடந்த காலங்களில் விற்றவர்கள், அவர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க பணம் வழங்கியவர்கள் எல்லாம் கொழும்பில் தற்போது சொகுசு வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டு இதற்கு எதிர்ப்பினைத் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள் எனச் சாடினார்.

அதேநேரம் புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள அரசாங்கம் வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

'வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் அதிக முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பிலான திட்டத்தை அரசாங்கம் எனும் ரீதியில் நாம் வகுத்து வருகிறோம்.

அதற்கிணங்க, வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களிடமும் நாம் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடினோம். அவர்களும் இதற்கு ஆதரவினைத் தெரிவித்துள்ளார்கள்.

இலங்கையில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு நாம் இடமளிக்க வேண்டும். தமிழ் – சிங்கள பேதங்களை மறந்து, நாம் இந்த விடயத்தில் செயற்பட வேண்டும்.

மேலும், அவர்கள் இடையூறுகள் இன்றி முதலீடுகளை மேற்கொள்ள அரசாங்கம் எனும் வகையில், இன்னும் நாம் வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

அத்தோடு, பொருளாதார கொள்கையைப் பொறுத்தவரை கடந்த அரசாங்கம் மட்டுமன்றி, நல்லாட்சி அரசாங்கத்திலும் நிறையக் குறைகள் காணப்படுகின்றன. இவற்றையும் நாம் நிவர்த்தி செய்ய வேண்டும்' என தெரிவித்துள்ளார

எது எவ்வாறாயினும் புலிகளின் முக்கியஸ்தர்கள் பலர் இலங்கையில் பல்வேறு வியாபாரங்களை ஆரம்பித்து சொகுசு வாழ்வு வாழ்கின்றனர் என்பதும் புலம்பெயர் தேசத்தில் சேகரிக்கப்பட்ட கறுப்பு பணம் இலங்கையில் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பது யாவரும் அறிந்த விடயம்.

அமைச்சர் இவ்வாறு புலம்பெயர் தமிழர்களின் புலித்தொடர்பு தொடர்பில் பேசினாலும் இலங்கையின் பிரபல அரசியல்வாதிகள் புலிகளுடன் இரகசிய தொடர்புகளை வைத்துள்ளனர் என்பதும் அவர்களின் வியாபார பங்காளிகளாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com