Sunday, October 7, 2018

புலிகள் பற்றி பேசி அரசியல் செய்வதைவிட, புலித்தடையை நீக்க சொல்லி நீதிமன்றம் போகலாம். மனோ கணேசன்

விடுதலை புலிகள் மீண்டும் வரவேண்டும் என பகிரங்க மேடையில் பேசியதால் இன்று விஜயகலா எம்பி சிக்கலில் இருக்கிறார் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு டவர் அரங்கில் நேற்று (06) நடைபெற்ற, கொழும்பு வர்த்தக மாணவர் சங்க விருது கலை விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், நீதிமன்றத்துக்கு போய், புலிகளின் மீதான தடையை நீக்க சொல்லி எவரும் வழக்கு தொடரலாம். வாதங்களை முன் வைக்கலாம். அதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. நீதிமன்றத்தில் போய், நீதியின் பாதுகாப்பில் இருந்தபடி, இன்று புலிகள் ஆயுத போரில் இல்லை எனவும், இலங்கையில் வாழும் சுமார் 12,000 முன்னாள் போரளிகளை முன்னிலைப்படுத்தி, அவர்கள் இன்று ஜேவீபியை போல் ஜனநாயக வழிக்கு திரும்பி விட்டார்கள் எனவும் எவரும் வாதிட முடியும். அதனால் இந்நாட்டு இனப்பிரச்சினை தீர்வுக்கு இருக்கின்ற முக்கியமான தடையையும் கணிசமாக தளரும்.

புலிகளின் தலைவருக்கு சமனமாக தம்மை இன்று உருவகித்துக்கொண்டு, புலிகளை பற்றி மறைமுகமாக பேசி பேசியே, அரசியல் செய்யும் தமிழ் தலைவர்கள், முதலில் இந்த புலித்தடையை நீக்க தம் சட்ட அறிவை பயன்படுத்த வேண்டும்.

ஆனால், இதை எவரும் இதுவரை செய்ய முன்வரவில்லை. உண்மையில், புலிகளை பற்றி மக்கள் மன்றத்தில் பேசிய அப்பாவி பெண் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலாவுக்கு இருக்கும் தைரியம், இன்று சட்டத்தரணி தமிழ் தலைவர்களுக்கு இல்லையோ என்றும், முன்னாள் போராளிகளை முன்னிலை படுத்தி வழக்கு பேசினால், அந்த முன்னாள் போராளிகள் ஜனநாயக அரசியலில் எழுச்சி பெற்று விடுவார்கள் என எவரும் அஞ்சுகிறார்களோ என்று எனக்கு இன்றுவரை புரியாத புதிராக இருக்கின்றது.

சிங்கள தரப்பில் புலிகள் என்ற பெயர் இன்னமும் அவர்கள் வயிற்றில் புளியை கரைக்கிறது. அதுவே இனப்பிரச்சினை தீர்வுக்கு அவர்கள் உடன்படுவதை தடுத்து வருகிறது.

ஆகவே புலிகளை பற்றிய அபிப்பிராயத்தை மாற்ற, நமது சட்டத்தரணி அரசியல்வாதி தலைவர்கள் சட்டப்படி முயல வேண்டும். இன்று புலிகள் ஆயுத போரில் இல்லை என்பதை கூறி, ஜேவீபியை போன்று, ஜனநாயக வழிமுறைக்கு வந்துவிட்ட இலங்கையில் உள்ள முன்னாள் போராளிகளை நீதிமன்றத்தில் முன்னிலை படுத்த வேண்டும்.

ஜேவீபியை போன்று தமிழ் இளைஞர்கள் அன்று ஆயுதம் தூக்கியதன் பின்னணியில் இருந்த காரணத்தை எடுத்து தர்க்கரீதியாக கூற வேண்டும். 1972ம் ஆண்டின் குடியரசு அரசியலமைப்புக்கு எதிராக தொடுக்கப்பட்ட, “ட்ரயல்-அட்-பார்” வழக்குக்கு சமனமாக இந்த வழக்கையும் கொண்டு செல்ல வேண்டும். “ட்ரயல்-அட்-பார்” வழக்கில் தந்தை செல்வா, ஜி. ஜி. பொன்னம்பலம், திருச்செல்வம் ஆகியோர் முன்வைத்த வாதங்களை போல், இன்றைய சட்டத்தரணி தமிழ் தலைவர்களும் வாதங்களை முன் வைக்க வேண்டும்.

ஜேவிபியை போன்று விடுதலை புலிகள் இயக்கமும், இலங்கை மண்ணில் செயற்பட்ட ஒரு அரசியல் இயக்கம். அரசுக்கு எதிராக ஆயுத கிளர்ச்சியில் இந்த இரண்டு இயக்கங்களும் ஈடுபட்டன. இரண்டும் தடை செய்யப்பட்டன.

ஜேவிபியின் மீதான தடை நீக்கப்பட்டு, அவர்கள் இன்று பாராளுமன்றம் வந்து, ஜனநாயகம் பற்றி எங்களுக்கு வகுப்பு எடுக்கிறார்கள். நல்லதுதான். ஆனால் அதேபோல், இந்த முறையில் யுத்தம் முடிந்து பத்து வருடங்கள் ஆன நிலையில், புலிகளை பற்றியும் நாம் பார்க்க வேண்டும். புலிகள் இயக்கத்தில் இருந்தார்கள், செயற்பட்டார்கள் என்ற 12,000 மேற்பட்ட ஆண், பெண் தமிழர்கள் நம் நாட்டிலேயே இன்று வாழ்கிறார்கள். அவர்களில் சிலர் சிறையில் அடைக்கப்பட்டு துன்புறுகிறார்கள். பலருக்கு கை, கால்கள், அவயங்கள் இல்லை.

ஆகவே புலிகள் இன்னமும் இருக்கிறார்கள். அவர்கள் ஆயுதம் தூக்க போகிறார்கள் என்ற தோற்றப்பாடு உண்மையா, இல்லையா என்பதை பற்றி எடுத்துக்கூற இந்த 12,000 மேற்பட்ட , கை, கால்கள், அவயங்கள் இழந்த, சிறைகளில் வாழ்கின்ற, இன்று தம் சொந்த ஊர்களில் துன்புற்று வாழ்கின்ற முன்னாள் போராளிகளுக்குதான் முடியும்.

“தாங்கள்தான் புலிகள்” என்று கூறி புலம்பெயந்த நாடுகளில் வாழும் சில குழுக்களை விட, இந்நாட்டில் இன்று வாழும் இந்த முன்னாள் போராளிகளுக்கு தான் இந்த தார்மீக உரிமை இருக்கிறது. ஆகவே இவர்களது ஆயிரக்கணக்கான, வாக்குமூலங்களை, சத்திய கடதாசிகளை, நமது சட்டத்தரணி தலைவர்கள் நீதிமன்றத்தில் எடுத்து வைக்கலாமே!

தமிழ் இளைஞர்களை அன்று ஆயுதம் தூக்க வைத்தது, தமிழ் இளைஞர்களது மனநோய் அல்ல. அதன் காரணம், பேரினவாத இராணுவ அடக்குமுறையே ஆகும். இது வரலாற்று உண்மை. ஆனால், இவற்றின் அர்த்தம், புலிகள் பிழையே செய்யாத, விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட, அணியினர் என்பது அல்ல. தமிழுலகில் மட்டுமல்ல, முழு உலகிலும் அப்படி யாரும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது.

இன்று புலிகளை மீண்டும் உயிர்பிக்க சொல்லிவிட்டார் என்று எம்பி விஜயகலாவை போட்டு சட்டம் இறுக்குகிறது. உண்மையில் புலிகள் இயக்கம் ஒரு தடை செய்யப்பட்ட இயக்கமாக இருப்பதால், அதை மீண்டும் உயிர்பிக்க சொல்வது சட்ட விரோதமாக பார்க்கப்படுகிறது. ஆனால், புலிகள் மீதான தடையை நீக்குமாறு கோரலாம்.

அது தொடர்பில், உலகின் பல நாடுகளில் நடப்பது போல் இலங்கை நீதிமன்றத்திலேயே வழக்கு தொடரலாம். சட்டத்துக்கு பயந்து மறைமுகமாக புலிகளின் பெயரை பயன்படுத்தும் தமிழ் தேசியவாத தலைவர்கள், அதை ஏன் இன்னமும் செய்யாமல் இருக்கிறார்கள்? இப்போது தேர்தல் காலம் நெருங்க நெருங்க திடீரென பல தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் தேசிய புலிகளை பற்றி அடிக்கடி பேசுவதை ஊடகங்களில் வாசிக்கிறோம். பார்க்கிறோம். கேட்கிறோம்.

ஆனால், பகிரங்க மேடையில் பேசிய அப்பாவி பெண் எம்பி விஜயகலாவுக்கு இருக்கும் தைரியம், புலிகளின் தலைவருக்கு சமானமாக தம்மை இன்று உருவகித்துக்கொள்ளும் வீரர்களுக்கு இல்லையா? நீதிமன்றத்தில் போய், நீதியின் பாதுகாப்பில் இருந்தபடிகூட வாதிட முடியாதா? இது எனக்கு ரொம்ப நாளாக விளங்காத ஒரு புதிர்.

நான் இன்று ஒரு அமைச்சராக இல்லாமலிருந்தால் இதை நானே செய்வேன். நான் அட்டைக்கத்தி வீரன் அல்ல. இதைபோன்ற பல்வேறு விடயங்களை நான் நெருக்கடி மிக்க களத்தில் இருந்தபடி துணிந்து செய்துள்ளேன். அது மக்களுக்கு தெரியும். இன்று நான் வகிக்கும் பாத்திரத்தில் இருந்தபடி இதை செய்வது உசிதமானதல்ல. அப்படியானால், நான் இதிலிருந்து வெளியேற வேண்டும். அப்புறம் நான் உள்ளே இருந்து இன்று செய்து வரும் பாத்திரம் காலியாகிவிடும். இந்த அரசியல் பரப்பில் ஒவ்வொருவருக்கும் ஒரு பாத்திரம் இருக்கிறது. நானே பல பாத்திரங்கள் வகிக்க முடியாது. அது சினிமாவில் மாத்திரமே முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com