Sunday, October 7, 2018

"Demons in Paradise " மீதான தடை கருத்துச்சுதந்திரத்திற்கு விழுந்த கல்லெறி. சுப்ரமணிய பிரபா

இயக்குனர் Jude Ratnam தயாரிப்பில் வெளியாகிய Demons in Paradise ஆவணப்படம் இம்மாதம் 3 தொடக்கம் 8 ஆம் திகதிவரை யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் என பட்டியலிடப்பட்டு பின் ஒரு சிலரின் அழுத்தத்தினால் விழாவில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது.

அது ஏன் நீக்கப்பட்டது என்பதற்கான காரணத்தினை இதுவரை நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவிக்காதபோதும் அப்படம் இலங்கையின் இனப்படுகொலைகளை பேசுவதோடு ஈழப்போராட்ட அமைப்புகளினால் மேற்கொள்ளப்பட்ட உட்கட்சி படுகொலைகளையும் ஆவணமாக்கி இருக்கிறதென்பதால் யாழ்ப்பாணத்தில் அது தடைசெய்யப்பட்டதென்று கருத்து தெரிவிக்கின்றனர்.

புலிகள் அமைப்பின் மீதும் குற்றச்சாட்டுக்களை சுமத்தும் ஒரு படத்தை யாழ்மண்ணில் வெளியிடுவது அம்மண்ணிற்கு ஏற்படும் அவமானமாக கருதுவதாக சிலர் நினைக்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக அப்படத்தில் கூறப்படும் துன்பியல் சம்பவங்கள் அதே மண்ணில் வைத்து அதே மண்ணின் மைந்தர்களால்தான் மாறி மாறி மேற்கொள்ளப்பட்டதென்பதை அவர்கள் உணர மறுக்கின்றனர்.

அப்படத்தை யாழில் தடை செய்தமை சரிதானென்று கூறுபவர்களில், அன்று தொட்டு இன்று வரை தீவிர புலி எதிர்ப்பாளர்களாக அடையாளம் காணப்படும் சிலரும் இருப்பதுதான் வேடிக்கையானது. அவர்களைப்பொறுத்தவரை தீவிர புலி எதிர்ப்பு பேசுவதாயினும், இன்றுவரை அவ் அமைப்புக்கு எதிராக செயற்படுவதாயினும் அதன் ஏக போக உரிமை தங்களுக்கு மாத்திரமே உரித்தானது, இடையில் புதிதாய் எமக்கு போட்டியாய் யாரும் வெளியில் இருந்து வந்துவிடக்கூடாதென்று நினைக்கின்றனர். அதனால் இனத்திற்கு எதிரான படம் இதுவென்று அவர்களும் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.

இது ஒருபக்கம் இருக்க இலங்கையில் இடம்பெற்ற போரில் ஒரு தரப்பு மாத்திரம் என்றில்லாமல் எல்லாத்தரப்பினருமே பாதிக்கப்பட்டிருக்கின்றனர், படுகொலைக்கு ஆளாகி இருக்கின்றனர். வலிகளை அனுபவித்தவர்கள் அதை சகித்துக்கொண்டிருக்க வேண்டும் என்று வற்புறுத்துவது உச்சகட்டவன்முறையாகும். கடந்த காலத்தில் உள்ளக முரண்பாடுகளால் பலியானவர்களுக்கும், படுகொலையானவர்களுக்கும் குரல்கள் உண்டு குடும்பங்கள் உண்டு அவர்களின் குரல்களை அவர்களைச்சேர்ந்த யாரோ ஒருவர் வெளிப்படுத்த நினைப்பது எவ்வாறு தவறாக முடியும்? இலங்கை அரசு மேற்கொண்ட படுகொலைகளுக்கு எம் குரல்கள் உலக அரங்கில் ஒலிப்பதுபோல் அவர்கள் குரல்களும் எமக்கு மத்தியில் எம்மிடையே ஒலித்துவிட்டுப்போகட்டுமேம். அதையேன் ஒடுக்க நினைக்கிறீர்கள்?

ஒரு சிலர் அப்படத்தின் இயக்குனர் ஜூட் ரத்தினம் இறுதிப்போரில் என் மக்கள் படுகொலையாவது கவலை அளித்தாலும் புலிகள் அழிக்கப்படவேண்டும் என்பதில் விருப்போடிருந்தேன், இனியும் படுகொலைகள் தொடரக்கூடாதென்று நினைத்தேன் என பி.பி.சி யின் பேட்டியில் கூறினார். அதனால் அப்படமும் அக்கருத்தைத்தான் சொல்கிறது. எனவே அப்படம் திரையிடப்படாமை மகிழ்ச்சி அளிக்கிறது. அதனால் நாம் பெருமை அடைகிறோம் என்றெல்லாம் எழுதுகின்றனர். அவர்களிடம் ஒரு கேள்வி..

யாழினை மையமாக கொண்ட மாற்று இயக்கத்தினை சேர்ந்த எவர்கள் புலிகள் அழிக்கப்படக்கூடாதென்று நினைத்தார்கள்? ஈ.பி.டி.பி, புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் என அனைத்து மாற்றுக்குழுக்களும் இலங்கை இராணுவத்தினரோடு இணைந்து இராப்பகலாய் புலிகள் அழிக்கப்படவேண்டும் என்று தீயாக வேலைசெய்யவில்லையா? அவர்கள் எதற்காக இராணுவத்தோடு சேர்ந்தியங்கினர் புலிகளையும் மக்களையும் காக்கவா?

சித்தார்த்தனுக்கும், செல்வம் அடைக்கலநாதனுக்கும், சுரேஸ்பிரேமச்சந்திரனுக்கும், சிவசக்தி ஆனந்தனுக்கும், டக்லஸ் தேவாநந்தாவுக்கும் புலிகள் அழிக்கப்பட்டதில் பங்கில்லையா? அவர்கள் புலிகள் அழிக்கப்படவேண்டும் என நினைக்கவில்லையா? மூச்சுக்கு முன்னூறு தடவை பாசிச புலிகள் பாசிச புலிகள் என்று இதயவீணையில் கீதம் பாடிய டக்லஸ் தேவானந்தாவின் நோக்கம் புலிகள் நீடூழி வாழவேண்டும் என்பதா? புலிகள் அழிய வேண்டும் என்று நினைத்ததோடு மாத்திரமல்ல, அழிக்கவும் நேரடியாக துணைபோன மேற்குறித்த அத்தனை பேரையும் வெட்கமின்றி ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு ஒவ்வொரு தடவையும் வாக்களித்து நாடாளுமன்றம், மாகாணசபைகள் என்று அனுப்பிக்கொண்டு இருக்கும் ஒரு சமூகம், புலிகளை தவறாக நோக்கினார் என்று "ஜூட் ரத்தினத்தை" புறக்கணித்து தம்மை புனிதர்களாக காட்டிக்கொள்ள நினைப்பது வேடிக்கையானது.

மடிந்துபோனவன் எவனாக இருப்பினும் அவனுக்காய் குரல்கொடுப்பது அவன் சார்ந்தவர்களின் ஆத்மார்த்த கடமை. அதிலிருந்து விலகியிருப்பது இறந்துபோனவர்களுக்கு அவர்கள் செய்யும் துரோகம். கொன்றவனுக்கு ஒரு நியாயம் இருப்பதுபோல் கொலையானவனுக்கும் ஒரு நியாயம் இருக்கும். அதை அவனும் கூறட்டும் சமூகம் சரி பிழைகளை சரிபார்த்து ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளும். உள்ளிருந்து வரும் எதிர்க்குரல்களை கருத்துச்சுதந்திரம் என்ற பெயரில் ஏற்றுக்கொள்ளும் நீங்கள், உங்களுக்கு வெளியே இருந்துவரும் குரல்களை ஒடுக்க நினைப்பது தனிநபர் காழ்ப்புணர்வே...

Demons in Paradise யாழ் சர்வதேச திரைப்படவிழாவில் இறுதிக்கணத்தில் தடை செய்யப்பட்டது தனிப்பட்ட காழ்ப்புணர்வேயன்றி இனநலன் சார்ந்த முடிவு அல்ல.. ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதிகேட்கும் நாமே இன்னொரு குரலை ஒடுக்க நினைப்பது நியாயம் அல்ல மாற்றுக்குரல்களுக்கும் செவி கொடுப்போம். மாற்றத்தை எம்மில் இருந்து ஆரம்பிப்போம். "No Fire Zone" ஆவணப்படத்தினை இலங்கை அரசு தடைசெய்தமையும் Demons in Paradise ஆவணப்படத்தினை யாழில் திரையிட மறுக்கின்றமையும் ஒரே மனநிலை சார்ந்ததே....

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com