Sunday, October 7, 2018

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாமான நிரந்தர தீர்வுடன் கூடிய திட்ட வரைபை வழங்குவார்களாம் மஹிந்த தரப்பு. ஜி.எல்

சிறுபான்மை இனம் என்ற சொற்பதத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கொள்கை ரீதியாகவே எதிர்க்கின்றது என்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை வழங்க திட்ட வரைபை வெளியிடுவோம் என்றும் அத்தீர்வானது ஆகாயத்தில் மாளிகைகள் கட்டுவதாக அமையாது என்றும் தெரிவித்துள்ளார் பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ்.

வீரசேகரியின் வார மஞ்சரிக்கு வழங்கிய நேர்காணலில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அவர், நடைமுறையில் சாத்தியப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய தீர்வு திட்ட வரைபை வெளியிடுவோம். தேர்தல் காலங்களில் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக உறுதிமொழிகளை வழங்கி பின்னர் ஏமாற்றுவதாக எமது செயற்பாடுகள் அமையாது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இனி இடைநடுவில் கைவிட அனுமதிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வீரகேசரிக்கு வழங்கிய நேர்காணலின் முழுவடிவம் :

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எவ்வாறான தீர்வை பெற்றுக்கொடுக்கும் ?

எதிர்வரும் தேர்தல்களை கருத்தில் கொண்டு பொதுஜன பெரமுன தயார்ப்படுத்தல்களை மேற்கொண்டு வருகின்றது. தேர்தல்களை வெற்றிக்கொள்வது மாத்திரம் எமது நோக்கமாக அமையாது . தற்போதைய அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை கவிழ்ப்பதற்கு முயற்சித்ததே தவிர அடுத்த கட்ட ஆட்சிக்கான கொள்கைகள் குறித்து கவனத்தில் கொள்ளவில்லை.

ஆட்சி முறைமையை எவ்வாறு முன்னெடுப்பது என்று கூட அவர்கள் சிந்திக்க வில்லை. ஆகவே நாங்களும் புதிய கட்சி என்ற வகையில் அந்த நிலைக்குள் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. எனவே தான் நாங்கள் இன்றிலிருந்தே தேசிய பிரச்சினை , பொருளாதாரம் , அரசியல் ,தேசிய வளங்களை பாதுகாத்தல் , சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் உள்ளிட்ட விடயங்களுக்கான நிபுணர் குழுக்களை அமைத்து ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

இதில் உள்ளடக்கமாக நாட்டின் அனைத்து இன மக்களும் உள்ளனர். அவர்கள் சிங்களம் தமிழ் என்ற வேறுபாடில்லை . குறிப்பாக அனைத்து இன மக்களுக்கான உரிமைகள் குறித்து ஆழமாக கவனத்தில் கொண்டு செயற்படுகின்றோம். ஆனால் இதனை முழுமையாக்குவதற்கு இன்னும் நாட்கள் உள்ளன.

தற்போதைய அரசாங்கத்திடமிருந்து உறுதிமொழிகளை பெற்றுக்கொள்ளல் மிகவும் எளிதான விடயமாகும். ஆனால் அந்த உறுதிமொழிகளை வழங்குவதில் அரசாங்கம் அனைத்து சந்தர்ப்பங்களிலுமே தோல்விக்கண்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ நிறைவேற்ற முடியாத உறுதி மொழிகளை வழங்கியதில்லை.

எனவே தான் சிறுபான்மை இனம் என்ற சொற்பதத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கொள்கை ரீதியாகவே எதிர்க்கின்றது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை வழங்க திட்ட வரைபை வெளியிடுவோம். ஆகாயத்தில் மாளிகைகள் கட்டுவதாக அல்ல. நடைமுறையில் சாத்தியப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய தீர்வு திட்ட வரைபை வெளியிடுவோம். தேர்தல் காலங்களில் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக உறுதிமொழிகளை வழங்கி பின்னர் ஏமாற்றுவதாக எமது செயற்பாடுகள் அமையாது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இனி இடைநடுவில் கைவிட அனுமதிக்கப் போவதில்லை.

தமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை தற்போதைய தேசிய அரசாங்கம் நிறைவேற்ற வில்லையென்றா குற்றம்சாட்டுகின்றீர்கள் ?

இந்த கேள்விக்கு அரசியல் நோக்கமற்று நேர்மையாகவே பதிலளிக்கின்றேன். உறுதிமொழிகளை வழங்கி ஏமாற்றியது மாத்திரமன்றி இருப்பவற்றையும் ஆக்கிரமித்துக்கொண்ட நிலையே தேசிய அரசாங்கத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாராளுமன்ற தேர்தலின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன கூறியது.

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 13 ஆவது அரசியலமைப்பினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வு கிடைக்காது. எனவே மேலும் அதிகாரங்கள் தேவை . அவற்றை பெற்றுக்கொள்வதற்காக முழு மூச்சுடன் செயற்படுவதாகவே அன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியது. தற்போது என்ன நடந்துள்ளது.

எதிர்வரும் 23 ஆம் திகதி நள்ளிரவுடன் வட மாகாண சபை கலைக்கப்பட போகின்றது. அன்றைய தினம் வட மாகாண சபை முழுமையாக இல்லமால் போய் விடும் . 5 வருடங்கள் கடந்த பின்னர் மாகாண சபைகளுக்கு தேர்தலை நடத்தி மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட வேண்டும். ஆனால் தோல்வி ஏற்படும் என்ற அச்சத்தினால் தேர்தலை நடத்தும் நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை. ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் மாகாண சபை தேர்தலை நடத்தாது காலம் கடத்தும் .

மாகாண சபை இல்லையென்றால் முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். வட மாகாண சபையின் அமைச்சர்களும் வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலையே ஏற்படும். அதிகாரங்களை வழங்குவதற்கு பதிலாக இருந்தவற்றை மீண்டும் மத்திய அரசு தன்னகப்படுத்திக்கொண்ட நிலையே ஏற்பட்டுள்ளது. வடக்கு மக்களுக்கு தனது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் நீக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து கிடைக்கப்பெறும் கட்டளைகளின் பிரகாரமே செயற்பட வேண்டிய நிலைமை உருவாகும். அதாவது ஜனாதிபதி ஆளுநருக்கு கூறுவார். கிழக்கு மாகாண சபைக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடகாலமாக கிழக்கு மாகாண சபை இல்லை. ஜனாதிபதியின் கட்டளையின் பிரகாரம் ஆளுநர் செயற்படுகின்றார். 1987 ஆம் ஆண்டின் இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு முன்னர் இருந்த நிலையே எதிர்வரும் 23 ஆம் திகதிற்கு பின்னர் வடக்கிற்கு ஏற்பட போகின்றது.

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரமே 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் உருவாகியது. இதனூடாக மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டது. 13 ஆவது அரசியலமைப்பின் 9 ஆவது உப பிரிவில் மூன்று பகுதிகள் காணப்படுகின்றன. அதாவது மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் , மத்திய அரசிற்குறிய அதிகாரங்கள் மற்றும் இருதரப்பிற்கும் உரிய சமநிலை அதிகாரங்கள் என்பனவே அந்த பகுதிகளாகும்.

இவை அனைத்துமே இன்று இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. இது எவ்வாறு இடம்பெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பே இதற்கு முழுமையான பொறுப்பையும் கூற வேண்டும். ஐந்து நட்சத்திர ஜனநாயகம் குறித்து அரசாங்கம் வீர வசனம் பேசுகின்றது. ஆனால் ஜனநாயகத்தின் அளவுகோலான தேர்தலை நடத்துவதில்லை. இனி ஜனநாயகம் குறித்து எவ்வாறு பேச முடியும்.

அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை தமிழ் தேசிய கூட்டமைப்பே பெற்றுக்கொடுத்தது. கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களின் ஆதரவும் கிடைக்காவிட்டால் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு இல்லை. இதனை பயன்படுத்தியே அரசாங்கம் அனைத்து ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் முன்னெடுக்கின்றது.

கடந்த முன்றரை வருடத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சாதித்தது என்ன? தமிழ் மக்களுக்காக என்ன செய்தது. ஐக்கிய தேசிய கட்சியுடன் மிகவும் நெருக்கமாக தேசிய அரசாங்கத்தை பாதுகாத்ததை தவிர தமிழ் மக்களுக்காக கூட்டமைப்பு ஒன்றும் செய்ய வில்லை. இதனால் பாராளுமன்றத்தில் உள்ள கூட்டமைப்பின் 16 பேருக்கும் நன்மைகள் இருந்திருக்கலாம் . ஆனால் வடக்கு மக்களுக்கு எவ்விதமான பலனும் இல்லை.

ஆசியாவிலேயே மிக மோசமான மோசடியாக இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியே பதிவாகியுள்ளது. இதனால் நாட்டில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்து டொலரின் விலை அதிகரித்துள்ளது. சிங்கள - தமிழ் புத்தாண்டு வருகையில் டொலரின் விலை 200 ரூபாயை தாண்டும். இந்த மோசடி தொடர்பான உண்மைகளை கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது என்ன நடந்தது ?

சிங்கள - தமிழ் மொழி பெயர்ப்பு இல்லை என கூறி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் விவாதத்தை நடத்த விடாது குழப்பினார். மோசடியின் உண்மையை மறைக்கும் பொருட்டே அன்று அவர் அவ்வாறு செயற்பட்டார். ஐக்கிய தேசிய கட்சியின் மோசடிகளை மூடி மறைத்து அவர்களை பாதுகாப்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் கடமையாக உள்ளது. இதனையா தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு குறைந்த மட்டத்திலேனும் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டதா ? அரசாங்கத்தை பாதுகாக்கும் பணியை மிக சிறப்பாக கூட்டமைப்பு செய்துக்கொண்டிருக்கின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதாக குற்றம் சுமத்தினீர்கள் . அவ்வாறானால் மாற்று அணியொன்றை தமிழ் மக்களுக்காக உருவாக்குவீர்களா ?


உறுதியாகவே கூறுகின்றோம். வடக்கு மக்களின் உணர்வுகளை புரிந்த ஒரு அணியை அறிமுகம் செய்வோம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தென்னிலங்கை மக்களை மாத்திரம் பிரதிநிதித்தும் செய்யும் கட்சியல்ல. பொறுப்புணர்வுடனேயே கூறுகின்றேன். தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்ட தலைவர்கள் எம்முடன் எதிர் காலத்தில் இணைவார்கள். எந்த தேர்தல் வந்தாலும் சிறந்த வேட்பாளர்களை நிறுத்துவோம்.

ஒரே நடென்ற வகையில் வடக்கு - கிழக்கு என்று இரு மாகாணங்களிலும் பொதுஜன பெரமுன மக்கள் ஆதரவு பெற்ற தலைவர்களுடன் சேவையை தொடங்கும். தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்று தமிழ் மக்களை ஏமாற்ற வேண்டிய தேவை எமக்கில்லை. செய்ய கூடியவற்றை கூறுவோம். தேர்தல் ஆணைக்குழுவிற்கு தேர்தலை நடத்த வேண்டும் என்ற தேவை கிடையாது.

அதே போன்று பிரதமரின் குழு மேலும் இரண்டு மாதகால அவகாசம் கேட்டப்போது சபாநாயகர் வழங்கினார். இவர்களுக்கு மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்ற தேவை கிடையர்து. எதிர்வரும் திங்கட்கிழமையுடன் மத்திய மாகாண சபையின் ஆயுட் காலமும் முடிவடைகின்றது. அதே போன்று எதிர்வரும் புதன் கிழமை வடமேல் மாகாணத்தின் ஆயுட்காலமும் முடிவடைகின்றது. தேர்தல் நடத்த வேண்டும் என்ற நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது.

ஒஸ்லோ பேச்சு வார்த்தையில் நீங்கள் கலந்துக் கொண்டிருந்தீர்கள். அதே போன்று 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அப்பால் சென்று அதிகாரங்கள் வழங்குவதாக கூறிய மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திலும் இருந்தீர்கள். இவ்வாறு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பத்தில் காலாகாலமாக இழுத்தடிப்புகளே இடம்பெறுகின்றன ..

இந்த விடயத்தில் நியாயமாக பேச வேண்டும். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் தான் வடக்கில் தேர்தல் இடம்பெற்றது. தோல்வி ஏற்படும் என்று தெரிந்தும் ஏன் வடக்கில் தேர்தலை நடத்துகின்றீர்கள் என்று அன்று அமைச்சரை கூட்டத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன.

30 வருட கால போரில் அனைத்தையும் இழந்தவர்கள் வடக்கு மக்கள். எனவே முதலில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக தேர்தலை முதலில் நடத்துவோம் என்று ஜனாதிபதி அன்று கூறினார். மனித வாழ்வில் பொருளாதாரம் மற்றும் முக்கியமானதல்ல. அதற்கு அப்பால் சென்ற பல விடயங்கள் மனித வாழ்விற்கு அவசியமாகும்.

இதனுள் அரசியல் உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டியது முக்கியமானதாகும். வாக்குரிமை மற்றும் தேர்தல் என்பன அவசியமாகும். தமிழ் மக்களின் வாக்குரிமைக்கு மதிப்பளித்தே அன்று வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் தோல்வி அடைந்தாலும் ஜனநாயகத்தை வழங்கி வெற்றிக்கண்டோம்.

எனவே வடக்கு மக்களுக்கு அன்று மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய ஜனநாயக உரிமையினை தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று இல்லாதொழித்துள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதில் ஆர்வமாக இருப்பதாக கூறுகின்றீர்கள் . அவ்வாறானால் பொதுஜன பெரமுனவின் 2020 ஜனாதிபதி வேட்பாளர் தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்ள கூடியவராக இருப்பரா?

இல்லாத பிரச்சினையை மேலெடுத்து உண்மையான பிரச்சினைகளை மூடி மறைக்கும் செயற்பாடாகவே கோத்தபாய ராஜபக்ஷ வேட்பாளர் விவகாரத்தை கையிலெடுத்துள்ளனர். வேட்பாளர் யார் என்பதை மஹிந்த ராஜபக்ஷ தீர்மானிப்பார் . பொது எதிரிணியின் அனைத்து தரப்பினரும் அந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்வார்கள். எதிர்ப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை.

ஜனாதிபதி தேர்தல் இடம்பெற இன்னும் 14 மாதங்கள் உள்ளன. தற்போதே வேட்பாளர் குறித்து அறிவிக்க வேண்டிய தேவைப்பாடு கிடையாது. 1994 ஆம் ஆண்டிலிருந்து நான் அரசியலில் இருக்கின்றேன். நாட்டில் என்றும் இல்லாத அளவிற்கு பொருளாதாரம் வீழ்ச்சிக்கண்டுள்ளது. அவை குறித்து பேசாது வேட்பாளர் குறித்து அரசாங்கம் போலியான பிரசாரங்களை செய்கின்றது.

இதனால் மிக குறுகிய காலத்தில் மக்கள் நம்பிக்கையிலிருந்து தேசிய அரசாங்கம் நீக்கப்பட்டுள்ளது. தேசிய அரசாங்கத்திற்கு இன்னும் ஒரு வருடகாலமே உள்ளது. இந்த ஒரு வருடத்தில் நாட்டிற்கு மீள முடியாத அழிவை ஏற்படுத்த முடியும். இதனை தடுக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.

ஆட்சி பீடம் ஏறுவதற்கு ஒத்துழைப்புகளை வழங்கியவர்களின் தேவைக்காக தேசிய சொத்துக்கள் விற்கப்படுகின்றன. இவற்றிக்கு எதிரான செயற்பாடுகளே அவசியமாகும்.

பொதுஜன பெரமுனவின் தவிசாளர் என்ற வகையில் வேட்பாளர் தெரிவு குறித்து உறுதிபட கூற முடியுமா ?

மஹிந்த ராஜபக்ஷவின் தெரிவே இறுதியானதாகும். அதற்காக காத்திருக்க வேண்டும்.


கோத்தபாய ராஜபக்ஷவை வேட்பாளராக நிறுத்த வேண்டாம் என்று அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளுமே கூறியதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதன் உண்மை நிலை என்ன ?

அவ்வாறு யாரும் எமக்கு கூற வில்லை. உள்ளக விவகாரங்களில் அந்நிய நாடுகளின் தலையீடுகளை நாங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அனுமதித்ததில்லை. இலங்கைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் அதுல் கேஷாப் ஊடகங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது போன்று கூற வில்லை.

டில்லிக்கு சென்றிருந்த போதும் கூட பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஏதும் பேசவில்லை. அந்நாட்டு முன்னான் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களையும் சந்தித்தோம். அவர்கள் யாரும் இலங்கையின் உள்ளக விவகாரங்கள் குறித்து பேச வில்லை.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com