Thursday, October 18, 2018

யாழ் போதனா வைத்தியசாலைக்குள் புதிய தொழுகை அறை இல்லையாம்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்தில் பள்ளிவாயல் அமைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்று வெளியாகிய தகவல் தொடர்பில் வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி மறுப்புத் தெரிவித்துள்ளார். வைத்தியசாலை வளாகத்துக்குள் பள்ளிவாசல் அமைப்பதற்கு எந்தவொரு அனுமதியும் வழங்கப்படவில்லை என்றும் இஸ்லாமிய சகோதரர்கள் தொழுகை செய்வதற்கு பிரத்தியேக அறை ஒன்று ஏலவே ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

எல்லா மதத்தவர்களும் தமது சமய அனுஷ்டானங்களை முன்னெடுக்க பொதுவான அறை ஒன்று ஒதுக்கப்படுவதற்கு ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. வைத்தியசாலை வளாகத்துக்குள் ஆரம்பம் முதலே இந்து மற்றும் கிருஸ்தவ ஆலயங்கள் உள்ளன. அவை தவிர்ந்த எந்தவொரு மத ஸ்தலமும் அமைப்பதற்கு வைத்தியசாலை கட்டட அமைவிடவரைவில் இடம் ஒதுக்கப்படவில்லை. எனவே உண்மைக்கு மாறான மற்றும் இன மதங்களை வேறுபடுத்தல் தொடர்பில் வெளியாகும் தகவல்களை முற்றாக நிராகரிக்கின்றேன். வைத்தியசாலையில் பிரத்தியேகமாக அறை ஒன்று ஏற்கனவே ஒதுக்கப்பட்டு இஸ்லாமியர்கள் தொழுகை செய்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் வைத்தியசாலை வளாகத்துக்குள் பள்ளிவாசல் ஒன்றை புதிதாக அமைப்பதற்கு எந்தவொரு அனுமதியும் வழங்கப்படவில்லை' என்று அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், வைத்தியசாலை வளாகத்துக்குள் பள்ளி வாசல் ஒன்றை புதிதாக அமைப்பதற்கு பல்வேறு மட்டங்களிலிருந்து கோரிக்கை முன்வைக்கப்பட்ள்ளதாகவும் இதுதொடர்பில் சுகாதாரத் துறை பிரதி அமைச்சர் பைசல் ஹாசிம் வைத்தியசாலைப் பணிப்பாளராகிய என்னிடம் பேசியிருந்தார் என்றும் வெளியாகியுள்ள செய்திகளில் உண்மையலல என தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அங்குள்ள வைததியசாலை ஊழியர்கள் பள்ளி வாசல் அமைப்பதற்கு அனுமதியளிக்கப்படுமாகவிருந்தால் வைத்தியசாலை நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளனர்.

அத்துடன் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் ஊழியர்களால் வழிபடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறு ஆலயத்தை அகற்றுவதற்காக கல்முனை நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை கல்முனை மாநகர சபை முதல்வர் தாக்கல் செய்துள்ளமை குறித்தும் பிரஸ்தாபித்து வருகின்றனர்.

எனினும் கல்முனை மாநகரசபைக்குட்பட்ட எல்லைக்குள் அமைக்கப்பட்ட சட்டவிரோதமான கட்டடம் என குறிப்பிட்டே இந்த சிறு ஆலயத்தை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com