Thursday, October 4, 2018

இதோ படியுங்கள் தமிழில் குற்றப்பத்திரிகை. சுமந்திரனை கொலை செய்ய முயற்சி செய்தோரின் வேண்டுதல் நிராகரிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியதாக புலிகளியக்கப் பயங்கரவாதிகளான கிளிநொச்சியைச் சேர்ந்த காராளசிங்கம் குலேந்திரன், ஞானசேகரலிங்கம் ராஜ்மதன், முருகையா தவேந்திரன், வேலாயுதன் விஜயகுமார் மற்றும் லூயிஸ் மரியநாயகம் அஜந்தன் ஆகியயோரை 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்திருந்தமை யாவரும் அறிந்த விடயம்.

எம்.ஏ. சுமந்திரனை கொலைசெய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 5 சந்தேகநபர்களுக்கு எதிராகவும் தமிழ் மொழியில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி சம்பத் ஜானகிய ராஜரத்ன முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே குறித்த 5 சந்தேகநபர்களுக்கு எதிராகவும் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தங்களின் வழக்கை யாழ்ப்பாணத்திற்கு மாற்றுமாறு பிரதிவாதிகள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும், அவர்களது கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, தேவை ஏற்படும் பட்சத்தில் அரச செலவில் சட்டத்தரணிகளை ஒழுங்குப்படுத்தி தருவதாக அறிவித்துள்ளார்.

இதேவேளை, வழக்கு விசாரணையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

ஐவருக்கும் எதிராக போதைப்பொருள் தடுப்பு கட்டளை சட்டம், நிதிச் சலவைத் தடுப்பு சட்டம் , பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதி வழங்கல் மற்றும் ஊக்குவிப்புக்கு எதிரான சட்டம் மற்றும் அபாயகரமான ஆயுதங்கள் தடுப்பு சட்டம் உள்ளிட்டவையின் கீழ் கிளிநொச்சி நீதிவான் மன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதும் பின்னர் நீதிவான் மன்றின் உத்தரவில் 5 பேரும் 9 மாதங்கள் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் பிணையில் விடுவித்தது யாவரும் அறிந்தது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com