Thursday, September 13, 2018

வாஷிங்டனுடன் சீன-விரோத “மூலோபாய-கூட்டினை” இந்தியா விஸ்தரிக்கிறது. By Keith Jones

வியாழனன்று ஆரம்பிக்கப்பட்ட அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான “2+2” மூலோபாய பேச்சுவார்த்தை, சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ-மூலோபாய தாக்குதலில் ஒரு முன்னிலை அரசாக இந்தியாவை உருமாற்றுகின்ற நோக்கமுடைய இன்னுமொரு “அடித்தளமான” இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் புதுடெல்லி கையெழுத்திட்டதுடன் முடிவடைந்தது.

வாஷிங்டன், அதன் பிரதானமான ஆசிய-பசிபிக் கூட்டாளிகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் அதன் இராணுவ-மூலோபாய உறவுகளை நிர்வகிப்பதற்கு பயன்படுத்துகின்ற முக்கியமான பொறிமுறைகளில் ஒன்றின் மாதிரியில் வடிவமைக்கப்பட்டிருக்கின்ற “2+2” பேச்சுவார்த்தை அமெரிக்கா மற்றும் இந்தியாவின் வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்களை ஒன்றாகக் கொண்டுவருகின்ற ஒரு வருடாந்திர நிகழ்வாக இருக்கும்.

அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பொம்பியோ, பாதுகாப்புச் செயலர் ஜேம்ஸ் மாட்டிஸ், இந்திய வெளியுறவு அமைச்சரான சுஷ்மா சுவராஜ், மற்றும் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரிடையிலான வரிசையான பல சந்திப்புகளின் முடிவில் வியாழனன்று அவர்களால் விடுக்கப்பட்ட கூட்டு அறிக்கையானது, இந்திய-அமெரிக்க இராணுவ மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை விஸ்தரிப்பதற்கான ஏராளமான முயற்சிகளை கோடிட்டுக் காட்டியது.

இவற்றில் மிகவும் பின்விளைவுகள் கொண்டதாக இருப்பது, வாஷிங்டன் அதன் முக்கியமான நேட்டோ மற்றும் ஒப்பந்த நேசநாடுகளுடன் கொண்டிருக்கும் உடன்பாடுகளை மாதிரியாகக் கொண்ட தகவல்தொடர்பு நிர்ணயஇணக்கம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தை (Communications Compatibility and Security Agreement — COMCASA) இந்தியா, பத்து வருட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், ஏற்றுக் கொண்டிருப்பதாகும். இது இந்திய இராணுவம் அதன் ஆயுத அமைப்புமுறைகளுக்கு முன்னேறிய அமெரிக்க தகவல்தொடர்பு சாதனங்களைப் பெறுவதற்கு வழிவகை செய்யும் என்பதுடன், அமெரிக்கா, அதன் நேசநாடுகள் மற்றும் இந்தியா ஆகியவற்றின் இராணுவங்கள் இடையே மறையாக்க தகவல்தொடர்பு (encrypted communication) மற்றும் “பரஸ்பர-இயக்கக்கூடிய தன்மை” ஆகியவற்றை மேம்படுத்தும்.

இந்த ஒப்பந்தமானது அமெரிக்க ஆயுதங்களை இந்தியா கொள்முதல் செய்வதில் —நீர்மூழ்கி-எதிர்ப்பு போர்களுக்கான, ஆயுதமேந்திய கடற்பகுதி ஆளில்லா விமானங்களை கொள்முதல் செய்வதுடன் இது அநேகமாய் ஆரம்பமாகும்— ஒரு முக்கிய பெரும் ஊக்குவிப்புக்கு பாதை வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகையதொரு ஒப்பந்தம் அமெரிக்கா தனது நடவடிக்கைகளை வேவுபார்க்க வழிவகுக்கும் என்ற அச்சத்தில் இந்திய இராணுவம் நீண்டகாலமாய் இதற்கு தயங்கி வந்திருந்தது.

ஆனால் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசாங்கமானது வாஷிங்டனின் சீன-விரோத தாக்குதலில் இந்தியாவை ஒருங்கிணைப்பதை ஒரேயடியாக விஸ்தரித்திருக்கிறது, இந்தியப் பெருங்கடலில் கப்பல் மற்றும் நீர்மூழ்கிகளது நடமாட்டங்கள் குறித்த உளவுத் தகவல்களை பரிமாறிக் கொள்ள ஒப்புதலளிப்பது மற்றும் தென் சீனக் கடல் பிரச்சினையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஒப்பிப்பது ஆகியவையும் இதில் அடங்கும்.

எந்தவொரு உண்மையான இராணுவ-மூலோபாய கூட்டிற்கும், அமெரிக்காவின் “முக்கிய பாதுகாப்புக் கூட்டாளி” என்ற அந்தஸ்தை சமீபத்தில் இந்தியாவிற்கு அது வழங்கியிருப்பதன் முழுமையான பயன்களை —பென்டகன் அதன் கூட்டாளிகளிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிற மிக முன்னேறிய ஆயுத அமைப்புகளுக்கான அணுகல் மூலமாக— இந்தியா பெறுவதற்கும் “அடித்தளமானவை”யாக வாஷிங்டன் வலியுறுத்துகின்ற மூன்று இருதரப்பு ஒப்பந்தங்களில் COMCASA இரண்டாவதாகும்.

2016 இல் கையொப்பமிடப்பட்டு, சென்ற ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்த, தடவாளப் பரிவர்த்தனை உடன்பாட்டு ஒப்பந்தத்தின் (Logistics Exchange Memorandum Agreement) கீழ், அமெரிக்க போர்விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் எரிபொருள்நிரப்பலுக்கும் சரக்குநிரப்பலுக்கும் வழமையாகப் பயன்படுத்திக் கொள்வதற்காக இந்தியா அதன் வான் தளங்கள் மற்றும் கடல் துறைமுகங்களை திறந்து விட்டிருக்கிறது.

COMCASA ஒப்பந்தத்தில் புது டெல்லி கையெழுத்திட்டிருப்பதைத் தொடர்ந்து, “அடித்தளமான” ஒப்பந்தங்களில் மூன்றாவதும் இறுதியானதுமான, புவி-வான் ஒத்துழைப்புக்கான அடிப்படை பரிவர்த்தனை மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் (Basic Exchange and Cooperation Agreement for Geo-spatial Cooperation — BECA) மீதான பேச்சுவார்த்தைகள் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய இராணுவத்தின் முப்படைகளும் பங்குகொள்ளும் முதன்முதல் கூட்டுப் பயிற்சியை அடுத்த ஆண்டில் நடத்தவிருப்பதாகவும் அத்துடன் “வளர்ந்து வரும் அபிவிருத்திகள் குறித்து தொடர்ச்சியான உயர்-மட்ட தகவல்தொடர்பை பராமரிக்க உதவுவதற்காக” இரண்டு நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இடையில் “நேரடி தொலைஇணைப்புகள்" (hotlines) அமைக்கப்படவிருப்பதாகவும் புதுடெல்லியும் வாஷிங்டனும் அறிவித்துள்ளன.

”2+2” கூட்டு அறிக்கையானது, இருதரப்பு, முத்தரப்பு, மற்றும் நான்கு-தரப்பு இராணுவ-பாதுகாப்பு ஒத்துழைப்பின் அதிகரிப்புக்கும் புதுடெல்லியையும் வாஷிங்டனையும் கடமைப்படுத்துகிறது. அறிக்கையில் அந்நாடுகளின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை என்றாலும் கூட, இறுதியாக சீனாவுக்கு எதிராய் நேட்டோ பாணியிலான அமெரிக்க-தலைமையிலான ஒரு கூட்டணியை உருவாக்கும் ஒரு நோக்கத்துடன், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் நெருக்கமான ஒத்துழைப்புக்குள் இந்தியாவைக் கொண்டுவருவது தான் அமெரிக்காவின் ஒரு நீண்டகால இலக்காக இருந்து வந்திருக்கிறது.

மோடியின் கீழ் புதுடெல்லி, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இருநாடுகளுடனான முத்தரப்பு ஒத்துழைப்பை அதிகப்படுத்தியிருக்கிறது, வருடாந்திர மலபார் கடல்பிராந்திய பயிற்சியில் இந்தியா மற்றும் அமெரிக்காவுடன் சேர்த்து ஜப்பானையும் ஒரு நிரந்தரக் கூட்டாளியாக ஆக்கியதும் இதில் அடங்கும். சென்ற நவம்பரில், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் ஒரு நாற்தரப்பு பாதுகாப்பு பேச்சுவார்த்தையை நடத்தியதன் மூலம், ஒரு தசாப்தத்திற்கு முன்பாக சீனாவிடம் இருந்தான உரத்த குரலிலான எதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்டிருந்த ஒரு கூட்டத்திற்கு புத்துயிர் கொடுத்தனர்.

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் “சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒழுங்கினை”யும் “சுதந்திரமான கடற்போக்குவரத்”தையும் —அதாவது, சீனாவின் கரைகளில் ஒரு போர்க்கப்பல் வரிசையைப் பராமரிப்பதற்கு அமெரிக்க கடற்படைக்கு கடிவாளமற்ற உரிமை உள்ளிட்ட அமெரிக்க மேலாதிக்கத்தை— நிலைநாட்டுவதற்கு சமீபத்திய இந்திய-அமெரிக்க அறிக்கைகளில் அளிக்கப்பட்டிருந்த உறுதிப்பாடுகளை இந்த அறிக்கை மறுவலியுறுத்தம் செய்தது. முக்கியத்துவத்தில் சளைக்காத விதத்தில், வடகொரியா எனும் சின்னஞ்சிறிய வறுமைப்பட்ட நாட்டை ட்ரம்ப் தொடர்ந்து மிரட்டி வந்துகொண்டிருக்கின்ற நிலைமைகளின் கீழ், இரண்டு நாடுகளும் “வடகொரியாவின் பேரழிவு ஆயுதங்களை எதிர்கொள்வதற்கு இணைந்து வேலைசெய்யும்” என்றும் அது சூளுரைத்தது.

புதுடெல்லிக்கு வரும் வழியில், பொம்பியோ இஸ்லாமாபாத்தில் சற்றுநேரம் தங்கி, பாகிஸ்தானின் புதிய அரசாங்கத்திடம் கண்டிப்பு காட்டிவிட்டு வந்திருந்தார், ஆப்கானிஸ்தானில் தலிபான் கிளர்ச்சியை தணிக்க வாஷிங்டனுக்கு உதவுவதில் அது இன்னும் கூடுதல் செயல்பாட்டைக் காட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். பொம்பியோவின் மிரட்டல்கள் முதல்பார்வையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அந்நாட்டின் இராணுவ-பாதுகாப்பு ஸ்தாபகத்தை நோக்கியே செலுத்தப்பட்டதாய் தெரிந்தது. ஆயினும், அவை புதுடெல்லியை —மோடியின் தலைமையின் கீழ் இது எல்லைகடந்த இராணுவத் தாக்குதல்கள் மற்றும் தொடர்ச்சியான போர் மிரட்டல்கள் உள்ளிட, அதன் முன்பிருந்தவர்களை விடவும் பாகிஸ்தானுக்கு எதிராய் ஒரு கூடுதல் மோதல்நிலை போக்கைக் கடைப்பிடித்து வந்திருக்கிறது— பார்த்தும் கூறப்பட்டிருந்தன என்பது தெளிவு.

”2+2” அறிக்கையானது “ஆப்கானிஸ்தானின் அபிவிருத்தி மற்றும் ஸ்திரப்படுத்தலில் இந்தியாவின் மேம்பட்ட பாத்திரத்தை” வரவேற்ற வேளையில், பாகிஸ்தான் “அதன் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பிராந்தியம் மற்ற நாடுகளிலான பயங்கரவாத நடவடிக்கைகளுக்காய் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கு” அழைப்புவிடுத்தது.

”2+2” கூட்டங்களின் நிறைவில், பாதுகாப்புச் செயலரான மாட்டிஸ் கூறுகையில், “எங்களது நெருக்கமான கூட்டாளிகள் மற்றும் பங்காளிகளின் ஒரு மட்டத்திற்கு எங்களது உறவை உயர்த்துவதற்கு” வாஷிங்டன் இந்தியாவுடன் தொடர்ந்தும் இணைந்து வேலைசெய்யவிருப்பதாக தெரிவித்தார். இந்திய அமைச்சரான நிர்மலா சீதாராமன் இன்னும் பரவசம் காட்டினார். “எங்களது பாதுகாப்பு கூட்டிலான உந்துவேகமானது ஒரு மிகப்பெரும் சாத்திய ஆற்றலை நிரப்பியிருக்கிறது, அது இந்திய-அமெரிக்க உறவுகளை முன்கண்டிராத மட்டங்களுக்கு உயர்த்தியிருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.

அவரது சகாவான வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், “ஆப்கானிஸ்தானில் ட்ரம்ப்பின் கொள்கையை” —அதாவது ஆப்கானிஸ்தானில் இரத்தக்களரியை தீவிரப்படுத்துவதற்கும் இந்தியாவின் பரம-வைரியான பாகிஸ்தான் மீது பிடியை இறுக்குவதற்குமான வாஷிங்டனின் திட்டங்களை— இந்தியா வரவேற்பதாக கூறினார்.

இந்தியாவை அமெரிக்காவின் மூலோபாய சுற்றுவட்டத்திற்குள் கொண்டுவருவதும் அதனை சீனாவுக்கான ஒரு இராணுவ-மூலோபாய பிரதிஎடையாக அபிவிருத்தி செய்வதுமே, கடந்த இரண்டு தசாப்த காலத்தின் போது, குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி நிர்வாகங்களின் கீழ் ஒரேவிதத்தில், அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் ஒரு மையமான இலக்காக இருந்து வந்திருக்கிறது. இதனை நோக்கிய விதத்தில், இந்தியாவுக்கு மூலோபாய “அனுகூலங்களை” வாஷிங்டன் அள்ளிக்கொடுத்து வந்திருக்கிறது, உற்பத்திக்கான அணுசக்தி தொழில்நுட்பம் மற்றும் எரிபொருளை கொள்முதல் செய்வதற்கு இந்தியாவை அனுமதிக்கின்ற —அதன்மூலம் அதன் அணு ஆயுதங்களை அபிவிருத்தி செய்வதற்கான சொந்தநாட்டு அணு வேலைத்திட்ட்டத்தின் மீது அது கவனம்குவிக்க வழிவகுக்கும் விதத்தில்— 2008 அணுசக்தி ஒப்பந்தமும் இதில் அடங்கும்.

சீனாவை மூலோபாயரீதியாக சுற்றிவளைப்பதற்கும் கீழ்ப்படுத்துவதற்குமான வாஷிங்டனின் திட்டங்களில் இந்தியாவும் இந்தியப் பெருங்கடலும் வகிக்கக் கூடிய இன்றியமையாத பாத்திரம், அமெரிக்க கடற்படையின் பசிபிக் கட்டளையகம் (US Navy’s Pacific Command) எனும் பெயரை இந்திய-பசிபிக் கட்டளையகம் (Indo-Pacific Command) என்று பெயர்மாற்றுவதற்கு சமீபத்தில் எடுக்கப்பட்ட முடிவில் பிரதிபலிக்கிறது.

சீனாவுடனான உறவுகளில் இந்தியாவின் “மறுஅமைவு” மற்றும் அதன் வரம்புகள்
கடந்த அரையாண்டு காலத்தில், சீன-இந்திய உறவுகளில் “மறுஅமைவு” (reset) குறித்து நிறைய பேசப்பட்டு வந்திருக்கிறது. பெய்ஜிங் உடனான பதட்டங்களை —2017 கோடையில் இமாலயத்தின் ஒரு விளிம்பு மூலையின் (டோக்லாம்) மீதான கட்டுப்பாடு குறித்த ஆயுதபாணியான மோதுநிலை, கட்டுப்பாட்டை மீற அச்சுறுத்தியது— குறைப்பதற்கு புதுடெல்லி ஏராளமான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது என்பது நிச்சயம் உண்மையே. ட்ரம்ப்பின் மூர்க்கமான “அமெரிக்கா முதலில்” கொள்கையும் பலசமயங்களிலான தவறான வெளியுறவுக் கொள்கையும் —குறிப்பாக அவரது வர்த்தக யுத்த நடவடிக்கைகள்— சீனாவுடன் உறவுகளை மேம்படுத்துவதற்கான கடைசி விசைக்கு மோடி திடீரென முன்னுரிமை கொடுத்ததில் ஒரு காரணியாக இருந்தன.

“சீனா மறுஅமைவு” இருந்தாலும் கூட, இந்திய-அமெரிக்க கூட்டணி தான் இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிக்கல்லாக தொடர்ந்தும் இருக்கிறது என்பதை இந்திய-அமெரிக்க “மூலோபாய பேச்சுவார்த்தை” தெளிவாக்குகிறது. முதலாளித்துவ முறிவு நிலைமைகளின் கீழ், விலைபோகும் இந்திய முதலாளித்துவமானது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடி எத்தனை பொறுப்பற்றதாக எத்தனை வெளிப்பட்டதாக ஆகின்றபோதும் கூட, வாஷிங்டனின் பின்னால் தன்னை நிறுத்திக் கொள்வதைத் தவிர்த்து அதன் வல்லரசு அபிலாசைகளைப் பின்தொடர்ந்து செல்வதற்கு வேறெந்த வழியையும் காணவியலாது இருக்கிறது.

எல்லாம் இருப்பினும் கூட, வீழ்ச்சியைத் தடுப்பதற்காக, எதிரிகளிடம் இருந்தும் கூட்டாளிகளிடம் இருந்தும் ஒரேபோல “அதிகமாக” எதிர்பார்க்கின்ற, வாஷிங்டனுக்கும் புதுடெல்லிக்கும் இடையில் கணிசமான பதட்டங்களும் இருக்கின்றன.

அலுமினியம் மற்றும் உருக்கு மீதான தண்டவரி விதிப்புகள் உள்ளிட்ட ட்ரம்ப்பின் பாதுகாப்புவாத நடவடிக்கைகள், இந்தியா அமெரிக்காவுடன் அதன் வர்த்தக உபரியைக் குறைக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கைகள், இந்திய தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள், திறன்பெற்ற தொழிலாளர்களை அமெரிக்காவுக்குள் கொண்டுசெல்ல ஏதுவாக இருந்து வந்திருக்கும் எச்1பி விசா திட்டத்தின் (H1B Visa program) மீதான அவரது கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் இந்தியா நிச்சயமாக திகைப்படைந்திருக்கிறது.

மூலோபாயப் பிரச்சினைகள் குறித்த பதட்டங்களும் தலைக்கு மேல் நிற்கின்றன. 2015 ஈரான் அணு ஒப்பந்தத்தின் கீழான தனது கடமைப்பாடுகளை தெஹ்ரான் பூர்த்தி செய்து வந்திருக்கிறது என்றபோதும் கூட, தடைகளை மறுஅறிமுகம் செய்து, போருக்கு நிகரான ஒரு பொருளாதார முற்றுகையை நடத்துவதன் மூலமாக ஈரானியப் பொருளாதாரத்தை சிதைப்பதற்கான தனது முனைப்பின் பின்னால் அணிவகுப்பதற்கு வாஷிங்டன் இந்தியாவிடம் கேட்டு வருகிறது.

இந்தியா ஈரானிய எண்ணெயின் மிகப்பெரும் இறக்குமதி நாடு என்பது மட்டுமல்ல, மூலோபாய செல்வாக்கிற்கும் அந்தப் பிராந்தியத்தின் பாரிய எரிசக்தி கையிருப்புகளிலான ஒரு பங்கிற்குமாய் போட்டிபோடுகின்ற விதத்தில் மத்திய ஆசியாவிற்கான ஒரு போக்குவரத்து பாதையை திறப்பதற்காக ஈரானின் சபார் துறைமுகத்தை இந்தியா அபிவிருத்தி செய்து கொண்டிருக்கிறது.

ஈரான் மீதான தடைகள் நவம்பர் 4 அன்று முழு வீச்சில் அமலுக்கு வந்தபின், ஈரானிய எண்ணெய் இறக்குமதிகளை சார்ந்திருக்கக் கூடிய நாடுகளுக்கு, ஒபாமாவைப் போல, எந்த “விலக்கு”ம் அளிக்கப் போவதில்லை என்பதில், வியாழக்கிழமை கூட்டத்திற்கு முன்பாக, ட்ரம்ப் நிர்வாகம் பிடிவாதம் காட்டி வந்திருந்தது. புதுடெல்லியை விட்டு கிளம்பும்போது, பொம்பியோ சற்று விட்டுக்கொடுப்பாகப் பேசினார், இந்தியாவுக்கு ஒரு விலக்கு வழங்கப்படக் கூடும் என்றும் ஆனால் அது ஒரு சிறு காலத்திற்கு மட்டுமே என்றுமாய் அவர் சூசகப்படுத்தினார். “பொருத்தமான இடங்களில் விலக்குகளை நாங்கள் பரிசீலிப்போம்” என்றார் அமெரிக்க வெளியுறவுச் செயலர், “ஆயினும் ஈரானிடம் இருந்தான கச்சா எண்ணெய் கொள்முதல் பூச்சியத்தை எட்ட வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு, இல்லையேல் தடைகள் விதிக்கப்படும்.”

முடிவெடுக்கும் கட்டாயம் வரும்போது புதுடெல்லி, அமெரிக்காவுடனான “கூட்டினை” சங்கடப்படுத்தக் கூடாது என்பதற்காக, புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகத்தின் ஈரானுக்கு எதிரான பிரச்சாரத்தின் சமயத்தில் அது செய்ததைப் போலவே, வாஷிங்டனின் கட்டளைகளுக்கு அடிபணிந்து செல்லும்.

ரஷ்யா விடயத்தில் விடயங்கள் இன்னும் அதிக சச்சரவுமிக்கதாய் இருக்கின்றன. பல தசாப்தங்களாக மாஸ்கோ புது டெல்லியின் மிக முக்கியமான மூலோபாயக் கூட்டாளியாக இருந்து வந்திருப்பதோடு இந்தியாவுக்கு அது இன்றியமையாத போர் சாதனங்களைத் தொடர்ந்தும் வழங்கி வருகிறது, அதன் அணுசக்தி திட்டத்தில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கிறது.

ரஷ்யாவின் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்யும் நிகழ்முறையில் இந்தியா இருப்பது குறித்து வாஷிங்டன் கோபமடைந்திருக்கிறது, தடைகள் மூலமாக அமெரிக்க எதிரிகளை எதிர்கொள்ளும் சட்டத்தின் (CAATSA) கீழ் இது தடைகளுக்கு இட்டுச்செல்ல முடியும் என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ட்ரம்ப் நிர்வாகம் ரஷ்ய பிரச்சினையில் பிளவுபட்டு நிற்கிறது, இதற்காக இந்திய-அமெரிக்க கூட்டை சங்கடத்திற்குள்ளாக்குவது ஒரு பிழையாகி விடும் என்று மாட்டிஸ் பகிரங்கமாக வாதிடுகிறார். எஸ்-400 விடயத்தில் இந்தியாவுக்கு விலக்கு வழங்க வாஷிங்டன் முடிவெடுத்தாலுமே கூட, இந்தியாவுக்கான நீண்டகாலத்திற்கான தாக்கம் தெளிவாய் இருக்கிறது: ரஷ்யாவுடனான இந்தியாவின் கூட்டை சீர்குலைப்பதும் இறுதியாக உடைப்பதுமே அமெரிக்காவின் நோக்கமாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com