Sunday, September 9, 2018

புதிய யதார்த்தம். ராஜ் செல்வபதி

அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஒருவருடத்துக்கு மேலான காலம் இருக்கின்றது. இருந்தாலும் சாத்தியமான வேட்பாளர்கள் போட்டியில் தமக்கான இடத்தை கைப்பற்றுவதில் பெரு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஐக்கிய தேசிய கட்சியினர், சுதந்திரகட்சியினர், பொதுஜன பெரமுனவினோர் தத்தமது பிரச்சாரங்களை ஆரம்பித்தும்விட்டனர். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மீண்டும் போட்டியிடுவதற்காக தனது விருப்பத்தை கோடிட்டுகாட்டியிருக்கின்றார். ஐதேக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை களமிறக்குவது உறுதியாகிவிட்டது. பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சஷ முன்னிலைப்படுத்தபடுகின்றார்.

ஆனால் இலங்கை அரசியல் என்பது ஆச்சரியங்களால் நிரம்பியது. எதிர்பாராத திருப்பமாக கூட்டு எதிர்கட்சியினர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சஷ மற்றொரு தவனைக்கு போட்டிட முடியும் என பிரகடனப்படுத்துகின்றனர். இது அரசியல் வட்டாரத்தில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்ட நிபுணர்கள் தத்தமது கட்சி சார்ந்து அரசியல் சாசனத்துக்குள் தலைகளை விட்டு துலாவிக்கொண்டுள்ளனர். கூட்டு எதிர்க்கட்சியின் கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் சிலர் ஏற்கனவே தமது அபிப்பிராயங்களை கூறதொடங்கியும் விட்டனர்.

19வது திருத்தத்தின் பிரதான நோக்கமே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சஷ எதிர்கால தேர்தல்களில் போட்டியிடுவதை தடுப்பதும் ஜனாதிபதி பதவியின் அதிகாரத்தை குறைப்பதுவுமே ஆகும் . 19-A ஆதரவாளர்களின் முகத்தில் புன்னகை தவழ்கின்றது. ஐதேக சற்று கவலையுடன் இருக்கின்றது. 19-A மற்றும் ஜனாதிபதி பதவிகாலம் பற்றிய அதன் புரிதல் முற்றிலும் வேறுபட்டுள்ளது. 19 வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதே, நிறைவேற்று ஜனாதிபதியாக இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் மற்றொரு பதவிக்காலத்தைத் நாடுவதை தடைசெய்வதற்க்குதான் என்கின்ற வகையில் உயர் கல்வி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் எந்தவொரு ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட முடியாது என்று அறிவிப்பதில் தனது நேரத்தை செலவழித்து கொண்டிருக்கின்ரார். இந்த விவகாரம் தொடர்பில் தற்போதை ஜனாதிபதியை தவிர வேறு எவரும் உச்சநீதிமன்றத்தின் கருத்தை கேட்கமுடியாது எனவும் ஜனாதிபதி வேட்பாளராகும் ஆசையில யாராவது தவறான தகவல்களை வழங்கி அதற்கு முயன்றால் ஜனாதிபதி மாளிகைக்கு செல்வதற்கு பதில் மூன்றுவருடங்களுக்கு சிறையில்தான் இருக்க வேண்டி இருக்கும் என ஜனாதிபதி சட்டதரணியாகவும் முன்னால் நீதி அமைச்சராகவும் தனது கருத்தை விஜயதாச முன்வைக்கின்றார்.

ஆனால் கூட்டு எதிரணி அல்லது பொதுஜன பெரமுனவின் சட்ட வல்லுனர்களோ விஜயதாச ராஜபக்ஷவின் இந்த கருத்தை புறந்தள்ளுகின்றனர். மாவட்ட நீதிமன்றத்தின்வாயிலாக தாங்கள் உச்சநீதிமன்றத்தை அணுக முடியும் எனபது அவர்களின் நம்பிக்கை. ஒரு சுவாரஸ்யமான சட்ட போராட்டம் ஒன்று தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளன. மேலும் உச்ச நீதிமன்றம் 19வது திருத்தத்தை எப்படி உரைபெயர்க்கப்போகின்றது எனபதுவும் ஆவலை தூண்டும் விடயமாக இருக்கின்றது.

மதிப்பு மிக்க கல்வியியலாளர் கலாநிதி நிகால் ஜெயவிக்கிரம உட்பட சட்ட வல்லுனரகள் மகிந்த ராஜபக்‌ஷ அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் எந்த தடைகளுமில்லை என கருதுவதாக கூட்டு எதிர்கட்சியின் முக்கியஸ்தரும் பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவருமான உதய கமன்பில ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

முன்னாள ஜனாதிபதிகள் சந்திரிகா குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்சஷ ஆகியோர் எதிவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தடைகள் எதுவும் இல்லை என்று சண்டே ஐலண்ட் பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் கலாநிதி ஜெயம்பதிவிக்கிரமரட்ண கூறுகின்றார்.

19வது திருந்த்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக இருந்த முன்னாள் ஜனாதிபதிகளுக்கு இந்த தகுதி நீக்கத்திலிருந்து "புத்திசாலித்தனமாகவோ அல்லது கவனமின்றியோ” பாராளுமன்றாம் விலக்களிக்கவில்லை. பாராளுமன்றம் இதனை தெளிவுபடுதி கூறாதவரை இந்த குழப்பங்கள் இருக்கவே செய்யும்.

இதன்படி பார்த்தால் அடிப்படையில் நிறைவேற்றதிகாரம் அற்ற, குறியீடான- சம்பிரதாயபூர்வமான ஜனாதிபதவிக்கு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் நடக்கும் போது அதில் போட்டியிடும் தகுதி தற்போது உயிருடன் இருக்கும் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுக்காவுக்கும், மகிந்த ராஜபக்சவுக்கும் கிடைக்கும் என கருதலாம்.

இங்கே கலாநிதி ஜெயவிக்ரம கூறுவதில் ”அடிப்படையில் நிறைவேற்ரதிகாரம் அற்ற, குறியீடான- சம்பிரதாயபூர்வம்,” என்பதாதான் முக்கியனாது. இதனை அவர் தனது முன்னைய கட்டுரைகளில் கற்பனையான நிறைவேற்று ஜனாதிபதி முறைமை என குறிப்பிட்டுள்ளார்.

“…நிறைவேற்று ஜனாதிபதி முறைமை தொடரவேண்டும் அல்லது ஒழிக்கப்பட வேண்டும் எனறு அனைத்து கட்சிகளையும் சேர்ந்த அரசியல் வாதிகள் கத்தி கூச்சல்போட்டாலும் அவர்கள் உண்மையை கவனிக்க தவறுகின்றனர். 1978 அரசியல் யாப்பின்படி உருவாக்கப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இப்போது இல்லை. 19வது திருத்தம் அதனை வினைதிறனுடன் இல்லாது செய்துள்ளது. இப்போது உள்ள ஜனாதிபதியால், தனது சொந்த விருப்பத்துக்கமைய, அமைச்சர்கள் தெரிவு செய்ய முடியாது. தான் விரும்பும் நேரத்தில் பாராளுமன்றத்தை கலைக்கவும் முடியாது. தன்னிச்சையாக செயல்பட்டு, நீதிபதிகளையோ, மூத்த அதிகாரிகள்ளையோ அல்லது சுயாதீன ஆணைக்குழுக்களையோ நியமிக்க முடியாது. ஜனாதிபதியின் இந்த அடிப்படை நிறைவேற்று அதிகாரங்கள் அகற்றப்பட்டுவிட்டன. இவை எல்லாவற்றையும் பார்க்கும்போது ஜனாதிபதி என்பவர் ஒர் அடிப்படையான அரசு (அரசியலமைப்புச் சட்டத்தின்) தலைவராக மட்டுமே இருக்கிறார். ஜனாதிபதி சட்டதரணிகள் நியமனம், மகாணசபை நிர்வாகம் போன்ற சில அதிகாரங்களை வைத்திருக்கின்றார் என்பதற்காக நாடளாவிய ரீதியில் மிகுந்த பொருட்செலவில் தனியான ஒருதேர்தலை நடாத்தி ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டுமா? என்கின்ற கேள்வியும் எழுகின்றது…”
கலாநிதி ஜெயவிக்ரமவின் இந்த வாதமானது தண்ணீரை பிடித்து வைத்திருப்பது போன்றுள்ளது. இங்கே கேள்வி என்னெவென்றால் கூட்டு எதிர்கட்சியினர் கலாநிதி ஜெயவிக்ரமவின் இந்த வாதத்தை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை என்பதுதான். கூட்டு எதிர்க்கட்சிதரப்பு சட்டவல்லுனர்கள் கலாநிதி ஜெயவிக்ரமவுடன் கருத்துடன் இணங்குகின்றனர் என்றால் மிகவும் குறைக்கப்பட்ட அதிகாரங்கள் மட்டுமே உள்ள தற்போதைய ஜனாதிபதி பதவியை அடைவதற்கு அவர்கள் ஏன மிகவும் ஆர்வமாக இருக்க வேண்டும்?

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள தனி குழுவாக இயங்குபவர்கள், அதிர்ப்தியாளர்கள், உட்கட்சி கலகங்களை தோற்றுவிப்பவர்கள் ஆகியோரை துண்டிவிடுவதே கூட்டு எதிக்கட்சியினரின் இப்போதைய அனுகுமுறையாக உள்ளது. சுதந்திர கட்சியின் பழைய உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபசவுக்கு விசுவாசமாகவே இருக்கின்றனர். பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாயாவை முன்னிறுத்துவதை அவர்கள் அவ்வளவாக விரும்பவில்லை. ஒருவேளை அவர்கள் கூட்டு எதிரணியில் இணைந்துகொள்வதாக இருந்தால் மகிந்தவின் “ மஜெண்டா துண்டாகவே” இருப்பார்கள். ஆகையால் மீண்டும் மகிந்தவை ஜனாதிபதி ஆக்குவதற்காகவே தங்களது பிரச்சாரத்தை முன்னெடுப்பார்கள்.

மகிந்த இன்னும் ஒருமுறை பதவிக்கு போட்டியிடலாம் என்கின்ற கோரிக்கை கூட்டு எதிரணியினரிடம் மட்டுமல்ல அவரின் மீள்வருகையை தடுக்க நினைக்கும் ஐதேகவினரையும் அணிதிரளும் திருப்பு முனைனையாகியுள்ளது. கட்சிதலைமையில் மாற்றத்தை விரும்பும் ஐதேக கட்சியின் அதிர்ப்தியாளர்கள்கூட ஒரு நல்ல நிர்வாகத்தை நோக்கி பிரதமர் ரணில் பின்னே அணிவகுக்கின்றனர். கூட்டு எதிரணிக்கும் பொதுஜன பெரமுனவினருக்கும் மகிந்த மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும் என்பதால் தங்களது இந்த கோரிக்கையை பிரபலயபடுத்ததுவதன் மூலம் பயனடையலாம் என நினைக்கின்றனர்.

மகிந்தவை ஜனாதிபதி வேட்பாளராக்கும் முயற்சியில கூட்டு எதிரணி வெற்றி பெற்றுவிட்டால் தேர்தல் வெற்றியை தீர்மாணிக்கும் காரணியாக உள்ள ”மிதக்கும் வாக்காளர்கள்” அதற்கு எவ்வாறு தமது பிரதிபளிப்பை வெளிப்படுத்த போகின்றனர்? அவர்களின் பெரும்பான்மையானோர நல்லாட்சி கூட்டணியை நிராகரிக்கின்றனர். ஒருவேளை சிலர் கூறுவது போன்று கடந்த உள்ளாட்சி தேர்தலின் வெளிப்பாடு ஒரு சமிஞ்சையாக இருக்குமானால் தோற்றுப்போன ஜனாதிபதியாக மகிந்த அவர்களின் அனுதாபத்தை பெற்றுக்கொண்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. இல்லாவிட்டால் அவர் தலைமைதாங்கிய பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரமானது ஐதேகவையும், சுதந்திர கட்சியையும் கடந்த பெபிரவரியில் தோற்கடித்திருக்க முடியாது. ஆனால் பொதுஜனபெரமுனவினர் யாரை தங்கள் ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுந்துகின்றனர்? மகிந்தவா அல்லது கோத்தாவா? முதலில் அவர்கள் இதற்கு ஒரு விடையை கண்டுபிடித்தாக வேண்டும். வாக்களிக்கும் பொதுமக்களின் அபிப்பிராயமாகத்தான் அது இருக்க வேண்டும். மாறாக கூட்டு எதிரணியின் அல்லது பொதுஜன பெரமுனவினரின் அபிபிராய செல்வாக்காக அந்த பதில் இருக்க முடியாது.

ஒரு அரசியல்வாதியை காட்டிலும் கோதபாய ஒரு இரக்கமற்ற ஆனால் திறமையான பொது அதிகாரியாக இருப்பதாக பரவலாக கருதப்படுகிறது. அரசியலை தொழிலாகவே கொண்டுள்ள போதுமான அரசியல்வாதிகள் ஏற்கனவே இருக்கும் போது சீர்கேடுகளை துடைத்து அகற்றிவிட்டு கடுமையான ஒழுக்க நெறிகளை அமுழ்படுத்தி நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுக்ககூடிய ஒரு தலைவனுக்கான தேவை உள்ளதா? பிரிவினைவாதத்தால் விரக்தியுற்ற மக்களின் உணர்வுகள், கொள்கையற்ற அரசியல், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு உயிர்கொடுக்காத அரசியல்வாதிகள், நாட்டின் முன்னேற்றதின் மீதான அக்கறை போன்றன இணைந்து மக்ரோன் வெற்ற பெற்ற போது இருந்த பிரான்ஸ் போன்றதொரு நிலையை இப்போது இலங்கையிலும் தோற்றுவித்திருக்கின்றது. இதனை சீர் செய்ய கோத்தபாயாவே பொருத்தமானவர் என கூட்டு எதிரணியினர் சிலர் நம்புகின்றனர்.

ஆனால் கோத்தபாய சில விடயங்களில் தயக்கத்தையே வெளிபடுத்துகின்றார். அவரது இரக்கமற்ற செயல்திறன் அரசியலில் ஒரு மூலதனமாக இருக்க கூடும். ஒரு மனிதனாக அவர் தனது வழியை புல்டோசஸ் கொண்டு மொழியியல் ரீதியாகவும், தனக்கான அடையாளமாகவும் உருவாக்கி கொள்ள தெரிந்தவர். நகர்ப்புற பகுதிகளில் தனது தூய்மையாக்கல் திட்டங்களை எளிதாக்க கட்டடங்களை எவ்வாறு இடித்து தள்ள உத்தரவிட்டார் என்பது பற்றிய சந்தேகம் தேவையில்லை. எல்லாவற்றையும் இராணுவ துல்லியத்துடன் செய்ய அவர் விரும்புகிறார். கனிவான போக்கு அவரது பண்பு கிடையாது. அவர் ஒரு பொது ஊழியராக செயல்பட்ட விதத்தை பார்க்கும்போது, ஒருவேளை அவர் ஜனாதிபதியாக இருந்திருந்தால் நிலைமை என்னவாக இருக்கும் என்று யாராவது தங்களை தாங்களே கேட்டுக்கொள்ள முடியும். இதனை அவர் உணர்ந்துள்ளதாலேயே அவரின் தயக்கம் வெளிப்படுகின்றது. மகிந்த ஆட்சியில் இருந்தது போன்று இனிமேல் ஜனாதிபதி பதவி அதிகாரம் மிக்கதாக இல்லாமல் போகலாம். ஆனால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியை விட அதிக அதிகாரங்களைக் கொண்டிருப்பது என்னவோ நிச்சயமானது.

ஏமாற்றமடைந்துள்ள முன்னணி பௌத்த பிக்குகள் உள்ளிட்ட சிலர் கோத்தபாய ஜனாதிபதி பதவியை பாதுகாத்து, நாட்டை இரும்பு கரம் கொண்டு ஆள வேண்டும் விரும்புகின்றனர். மதகுரு ஒருவர் சமீபத்தில் சூடான நீரில் இறங்கி நின்றுகொண்டு கோத்தபாய ஹிட்லரை போன்று நடந்துகொள்ள வேண்டும், தேவைப்பட்டால் தற்போதைய அரசியல் பொருளாதார பின்னடைவுகளில் இருந்து நாட்டை மீட்டெடுக்க முன்வர வேண்டும் என கூறினார். ஆனால் கேள்வி என்னவென்றால், ஜனாதிபதி தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் நிலையில் உள்ள சாதாரண மக்கள் பெரும்பான்மையானோர் இந்த சூதாட்டத்தை பங்குகொள்ள விரும்புவார்களா என்பதே?

மஹிந்த என்ன செய்தார் அல்லது குறைந்த பட்சம் அவர் என்ன நினைக்கிறார் என்பதையிட்டு மக்கள் அறிவர்கள். அவர் இன்னும் மக்கள் மத்தியில் செல்வாக்குடையவராக இருக்கின்றார் என்பதற்கு பொதுஜன பெரமுனவின் தேர்தல் வெற்றியே சாட்சியாக உள்ளது. அவருக்கு வாக்களிப்பது என்பது திசை தெரியாத ஒரு பயணம் அல்ல என்பது வெளிப்படையான ஒன்று. மக்களின் இந்த எண்ணமே மஹிந்தவின் பலமாகும். ஆனால் 19-A ஐ உச்சநீதிமனறம் மகிந்தவுக்கு சார்பாக உரைபெயர்த்து அவர் மீண்டும் ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டால் முன்பு தான் அதிகாரத்தில் இருந்தபோது செய்தவற்றில் இருந்து வித்தியாசமாக நடந்துகொள்ளவார் என்று எதிர்பார்க்க முடியாது. அவர் முன்பு செய்ததை விட அதிகமாக செய்ய வேண்டும் என மக்கள் விரும்புகின்றனரா? மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்க கூடாதா? தனது ”இமேஜை” மீள் உருவாக்கம் செய்துகொண்டு ஒரு ஜனாதிபதி வேட்பாளராக பொதுமக்கள் மத்தியில் மீளவும் தன்னை சந்தைபடுத்தி கொள்வாரா? அவரின் தற்போதைய செல்வாக்கு வாக்குகளாக மாறி ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு வெற்றியை பெற்றுக்கொடுக்குமா? கூட்டு எதிரணியினர் அல்லது பொதுஜன பெரமுனவினரின் முன் வைக்கப்படும் கேள்விகளாக இவை உள்ளன. உண்மையில் இவை அனைத்தும் அவர்கள் தங்களை தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகளும் கூட.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை கீழே தள்ளி விழுத்தும் அதிகாரத்தை ஐதேக 2015ல் பெற்றிருந்தது. அதாவது 19வ்து திருத்ததின் மூலம் பிரதமர் பதவியை பலம்பொருந்திய பதவியாக்குவதை தனது குறுகியகால தந்திரோபாயமாக அக்கட்சி கொண்டிருந்தது. உண்மையில் தங்களுக்கு என்ன தேவையாக உள்ளது என்பது பற்றி அறியாதவர்களாகவே அவர்கள் இருந்தது வெளிப்படையாக தெரிந்தது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதவியை அடைவதற்கான ஒரு படிக்கல்லாக பிரதமர் பதவியை பயன்படுத்திகொள்ள ரணில் அப்போது விரும்பினார். அதே வேளை நிறைவேற்று ஜனாதிபதி பதவியின் அதிகாரங்களை குறைப்பதன் மூலம் தனது பிரதமர் பதவியில் தன்னை பலப்படுத்தியும் கொண்டார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க

உண்மையில் நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதி பதவி ஐதேக வின் உத்தரவின் பேரில் இன்னும் அதிக அதிகாரங்களை இழந்துவிடும் நிலையில் இருந்தது. இன்று நடைமுறையில் ஜனாதிபதியை விட பிரதமரே அதிக அதிகாரங்களை கொண்டவராக இருக்கின்றார். ஜனாதிபதியுடன் நேரடி மனவருத்தங்கள் ஏற்பட்டு அது நல்லாட்டசி அரசாங்கம் சீராக இயங்க முடியாத நிலைக்கு வழிவகுக்க கூடும் என்பதால் தனது அதிகாரங்களை பயன்படுத்துவதில்லை என பிரதமர் தீர்மானித்திருக்கின்றார். இந்த அரசாங்கம் கவிழுமாக இருந்தால் ஜனாதிபதி சிறிசேனாவால் ஐதேகவுக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படபோவதில்லை. மாறாக சுதந்திரகட்சிக்குள் அவரது பிடிதளர்ந்து போய் ராஜபக்சாவை மேலும் பலபடுத்திவிடும். இதையே தனது ஆயுதமாக சிறிசேனாவுக்கு எதிராக பிரயோகிக்க ஐதேக விரும்புகின்றது.

ஆனால் எதிர்காலத்தில் ஒருபிரதமர் அரசியல்சாசனத்தில் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தும் போது ஜனாதிபதி பதவி எவ்வளவு பலவீனமானது என்பது தெரியவரும். ரணில் ஜனாதிபதியாக வெற்றிபெற்றுவிட்டால் பிரதமர் பதவிக்காக அவர் தனக்கு நெருக்கமான ஒருவர் வருவதற்கு வழி கண்டுபிடிக்க வேண்டும். ஜனாதிபதி பதவியில் அவர் எல்லாவற்றுக்கும் வரப்போகும் பிரதமருடன் கலந்தாலோசிக்க வேண்டியிருக்கும். ஜனாதிபதியின் கட்சியை சேர்ந்தவர்தான் பிரதமராவார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதுதான் ஐதேகயை கவலையடைய செய்யும் விடயமாகும்.

முரண்பாடாக, பிரதமர் விக்கிரமசிங்க, இந்த புதிய யதார்த்தை புறக்கணித்து, அடுத்த ஜனாதிபதி தேர்தல் போட்டியில் தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளதாகவே தெரிகின்றது. இதற்கிடையில் சிறகுகள் முறிக்கப்பட்ட ஜனாதிபதி பதிவியில் இருக்கும் மைத்ரிபால சிறிசேனா அடுதத பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் பதவியை தொடர்பில் அதிக கவனம் கொள்ளவேண்டிய நிலையில் இருக்கின்றார். பதவியில் தொடர இரண்டாவது சந்தர்ப்பத்தை அவர் ஒருவேளை பெற்றுகொண்டால் வரப்போகும் பிரதமரால் அவர் சிறுமை படுத்தப்படகூடும். ஐதேக அல்லது பொதுஜன பெரமுனவில் இருந்து ஒருவர் பிரதமராகிவிட்டால் நிலைமை எப்படி இருக்கும்?

இதுதான் மகிந்தவுக்கும் பொருந்தும். மீண்டும் அவர் ஜனாதிபதியாகினால் கூட இப்போது மைத்திரியின் நிலையே அவருக்கும் ஏற்படும். பிரதமரின் நிழலிலேயே காலத்தை கடத்த் வேண்டி இருக்கும். எதிர்கால ஜனாதிபதியால் அரசியல் அமைப்பை மாற்றி தனது பதவியை அதிக பலமுளளதாக மாற்றிவிட முடியும் என்கின்ற நிலை இருப்பதாக தெரியவில்லை.

அதிசயமாக, இந்த 'புதிய யதார்த்தத்தை' ஜனாதிபதி கனவில் மிதப்பவர்களில் கவனிக்காமலேயே உள்ளனர். அல்லது அவர்களை இந்த விடயம் இன்னும் சென்றடையவில்லை. 19வது திருத்தத்தை கவனமாக அவர்கள் படிக்க வேண்டிய நேரம் இதுவே.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com