Sunday, September 9, 2018

கடையடைப்பு மாத்திரந்தான் வழியா? ஏனைய வழிகள் பரிசீலிக்கப்பட்டனவா?

மட்டக்களப்பில் ஒரு கடையடைப்பு நடந்து முடிந்திருக்கிறது. பொதுமக்கள், ஆங்காங்கு தமது தேவைகளுக்காக சில இடங்களில் நடமாடியமை, தனியார் நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டிருந்தமை, பள்ளிக்கூடங்களில் மாணவர் வரத்துக் குறைந்திருந்தமை ஆகியவற்றை கொண்டு பார்க்கின்ற போது இது ஓரளவு வெற்றிதான், அதை நடத்தியவர்களுக்கு.

கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தவர்களை பொறுத்தவரை, புல்லுமலை தண்ணீர் போத்தல் தயாரிக்கும் நிறுவனத்துக்கு எதிராக அவர்களால் நடத்தப்பட்ட இந்த கடையடைப்புக்கான காரணம் பொதுவில் மட்டக்களப்பில் உள்ள தமிழர்களால் வரவேற்கப்பட்டுள்ளது. காரணம் குறித்து பெரியளவில் விமர்சனங்கள் எதுவும் கிடையாது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள், பொதுமக்கள் என எவரும் இதனை எதிர்ப்பதாக பெரியளவில் கூறவில்லை. ஆனால், ஹர்த்தால், கடையடைப்பு என்பது பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை குழப்பும் ஒரு விடயம் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருப்பதற்கும் வாய்ப்பு கிடையாது.

ஒரு காரியம் சட்டப்படி செய்யப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் நலனுக்கு அது பாதகமாக இருக்கிறது என்ற எதிர்ப்பு கிளம்பினால், அது குறித்து அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மீளாய்வு செய்ய முடியும். அதுவும் ஒரு மாவட்டத்தை சேர்ந்த பெரும்பான்மை மக்கள் அதில் அதிருப்தி அடையும் போது அரசாங்கம் அதனை செய்வதற்கு அதிக கடப்பாட்டை உடையதாக இருக்கிறது. அத்துடன் இந்த விடயத்தின், இனவாதத்துக்கோ ஏனைய வாதங்களுக்கோ இடம்கொடுக்க வேண்டிய தேவையும் இல்லை.

ஆனால், இங்கு பிரச்சினை என்னவென்றால், இந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்தவர்கள் மற்றும் இதற்கு ஆதரவு வழங்கிய ஏனைய அரசியல்வாதிகள் ஆகியோரைப் பொறுத்தவரை, ஒரு கடையடைப்பு என்ற நடவடிக்கையை எடுத்து, பொதுமக்களை சிரமங்களுக்கு உள்ளாக்குமளவுக்கு போக முன்னதாக, இந்த விடயத்தில் எடுப்பதற்கு அவர்களுக்கு எத்தனையோ நடவடிக்கைகள் இருந்திருக்கின்றன. அவற்றை அவர்கள் செய்துவிட்டு, இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்களா, அல்லது ஆதரவு தெரிவித்தார்களா என்பதுதான் இங்கு கேள்வி.

இந்த அரசியல்வாதிகள் பலர் எதிர்க்கட்சியில் இருந்தாலும் அரசாங்கத்துடன் நல்ல உடன்பாட்டில் உள்ளவர்கள். தமக்கும் அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கும் இடையில் இருக்கும் உறவை, இப்படியான காரியங்களை ஆரம்பக்கட்டத்திலேயே முடிவுக்கு கொண்டு வந்து தீர்வுகாண அவர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும். அதுதான் அரசியல். அதுதான் அரசியல் இராஜதந்திரம்.

பொதுவாகவே பாராளுமன்றத்தில் ஒரு விடயத்தை உரத்துப் பேசிவிட்டால் தமது கடமை முடிந்துவிட்டது என்ற ஒரு போக்கு அண்மைக்காலமாக அரசியல் தலைவர்கள் மத்தியில் அதிகரித்துவிட்டது. அங்கு பேசாமலேயே பல விடயங்களுக்கு அவர்களால் தீர்வு காணமுடியும்.

அவையும் முடியாவிட்டால், சட்ட வழியில் ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா என்று பார்த்திருக்க வேண்டும். நாடாமன்ற மட்டத்தில், தமக்கு உள்ள சிறப்பான தொடர்பு, மதிப்பு, செல்வாக்கை இவற்றுக்கு பயன்படுத்தியிருக்க வேண்டும். இவை எதுவும் நடந்ததற்கான சமிக்ஞை எதுவும் இல்லாமலேயே ஒரு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து மக்களுக்கு சிரமத்தை தருவது அவ்வளவு வரவேற்கத்தக்க விடயமல்ல.

இப்படியான விடயங்களுக்கு மக்கள் தமது ஆதரவைத் தந்ததன் மூலம் அவர்கள் தமது பொறுப்பை, பொறுப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளார்கள். ஆனால், அரசியல்வாதிகள் எந்த அளவுக்கு தமது “ஹோம்வேர்க்கை” முடித்துவிட்டு இந்த முடிவுக்கு வந்தார்கள் என்று எண்ணும்போது, இங்கு சங்கடமாகவே இருக்கின்றது.

அடுத்தகட்ட போராட்டங்கள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாகவாவது, இவை அனைத்தும் முயன்றுபார்க்கப்பட்டதா என்பதையாவது அரசியல்வாதிகள் மக்கள் முன்பாக வெளிப்படைத்தன்மையுடன் விளக்க வேண்டும்.

இல்லாவிட்டால், இந்த பிரச்சினைக்கு எவ்வளவோ போராட்டத்தை நடத்தியும் தீர்வு காணப்படமுடியாத நிலைமை ஏற்பட்டுவிடவும் முடியும். இப்படி தீர்வே இல்லாமல் போராட்டம் முடிவுக்கு வந்த மிகச் சமீப அனுபவம் நமக்கு பெரிதாகவே இருக்கிறது. அது மக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்யும். போராட்டங்களும் திசைமாறலாம்.


சீவகன் பூபாலரட்ணம் - அரங்கம்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com