Monday, September 24, 2018

எக்சைல் 1984 ; கெடுகுடி சொற்கேளாது- நடேசன்

ஜனநாயகமான கட்டமைப்பற்ற ஆயுத அமைப்புகள் தங்களுக்குள் பிரிவதும் அழிவதும், தாயின் வயிற்றில் குறைபாடான கருவொன்று அபோர்சனாக வெளியேற்றப்படுவது போன்ற இயற்கைச் செயல்பாடாகும். அது போல் இயற்கையின் வலிமையானவை நிலைப்பதும், நலிந்தவை அழிவதுமான டரர்வினியன் தத்துவமாகும் .

இப்படியான டார்வினியன் பரிணாம தத்துவம் இலங்கை தமிழ் அரசியலுக்கும் பொருந்தும். சகோதரஇயக்கங்கள் விடுதலைப்புலிகளால் அழிக்கப்பட்டது என்று பலராலும் கூறப்பட்டாலும், அது மிகையானது. ஆனால் அந்த இயக்கத்தில் இருந்தவர்கள் விடுதலைப்புலிகளால் வேட்டையாடப்பட்டார்கள் என்பதே உண்மையாகும்.

இரண்டிற்கும் என்ன வித்தியாசம் எனக் கேட்கலாம்.

மற்ற இயக்கங்கள் உள்ளக உடைவு(Implosion) மூலம் ஏற்கனவே தங்கள் தலைகளில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு விட்டார்கள். இது இயக்க வரலாறு தெரிந்தவர்களுக்குத் தெரியும். ஆனால் இனவிடுதலையை நோக்கமாக மட்டுமே வந்த இளைஞர்களைத் துடி துடிக்கச் சுட்டு எரித்ததே விடுதலைப்புலிகள் செய்த பாவகாரியம்.

அந்தப் பாவங்கள் அவர்களை நிழலாகத் தொடர்ந்தது. இறுதியில் மற்றவர்களுக்கு அவர்கள் செய்தது, அவர்களுக்கு இலங்கை அரசால் நடந்தது.

சிலருக்கு வேறுவிதமாக நடந்தது. ரெலோ இளைஞர்களைக் கொலைசெய்த கிட்டு, மாத்தையா என்பவர்கள் வயதாகி இறக்கவில்லை. அதேபோல் முள்ளிவாய்க்காலில் நிட்சயமாக பிரபாகரன் சிறிசபாரத்தினத்தின் இறுதி கணங்களை நினைக்காமல் இருந்திருக்க முடியாது . ஒருவேளை ‘இராஜபக்சாவிடம் நான் பேசிப் பார்க்கிறேன்’ என ஒரு இலங்கை இராணுவத் தளபதியிடம் சொல்லியிருக்கலாம். –

86களில் மிகவும் பலமாக இருந்த ரெலோ இயக்கம் இரண்டாகப் பிரிந்து தனது அழிவைத் தேடிக்கொண்டது. இந்தியாவில் இருந்தபோது அதைப் பார்த்தேன்;கேட்டேன்; ஓரளவு தடுப்பதற்கும் முயன்றேன். கெடுகுடி சொற்கேளாதென்ற வார்த்தைக்கு அர்த்தத்தைப் புரிந்து கொண்டேன்.

எனது அக்கால நினைவுகளை மீட்டும் போது வயிற்றுப் பேதிக்காக இரவு குடித்த கசப்பு மருந்து வாயில் வருவது போன்ற உணர்வுகள் ஏற்படும்.

86ம் ஆண்டுகளில் நானும் டாக்டர் சிவநாதனும் தமிழர் மருத்துவ நிலையத்தின் வேலைகளோடு ஒரு வித கட்டைப் பஞ்சாயத்து வேலை என இந்தியத் தமிழிலும், ஊர் விதானை வேலை என நம் ஊர்த் தமிழிலும் சொல்லக்கூடிய வேலைகளில் ஈடுபட்டிருந்தோம். அவை நாங்களாக விரும்பிச் செய்த வேலைகளில்லை. அத்துடன் எமது தொழித் திறமைக்கு உட்பட்டவையல்ல. எந்த லாபமும் இல்லை. ஆனால் இறுதியில் மனக்குழப்பத்தை உருவாக்கி, அன்றிரவு கைக்காசை செலவழித்து மதுவின் மடியில் இருவரையும் கொண்டு நிறுத்தியிருக்கும்.

மதுவைப்பற்றிச் சொல்லாது என் இந்திய நினைவுகளைக் கடந்துபோக முடியாது.

மதுவில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் நியாயமான வித்தியாசமுள்ளது. இலங்கையில் வடிசாராயம் கூட பக்தி சிரத்தையோடு வடிக்கப்பட்டிருக்கும். அதிலும் தென்னிலங்கையர்களின் கைபக்குவம் விஷேசமானது . தங்கொட்டுவ பகுதியில் வடிக்கப்பட்டவை. தற்போதைய சிங்கிள் மோல்ட்டைவிடச் சிறந்தவை. ஆனால் இந்தியாவில் எல்லாவற்றையும் குடிக்க முடியாது. இன்றுபோல் வெளிநாட்டு மதுக்கள்
இல்லாத காலம். அடுத்தநாள் தலையிடிக்காது. எழும்பி வேலைக்குச் செல்லவேண்டுமென்ற ஆவலில் எமக்குப் பொருந்திவந்த இந்திய குடிபானம் ரோயல் சாலஞ் எனப்படும் விஸ்கிதான். விலை அதிகமானது. பார்லியில் இருந்து வடிப்பது விஸ்கி. ஆனால் ரோயல் சாலஞ் பெரும்பாலும் இருப்பது கரும்பிலிருந்து வரும் மதுசாரமே- அப்படியென்றால் ரம் அல்லது சாராயம் என்றுதானே போடவேண்டும்? இந்தியாவில் பார்லி விளையாது-கரும்பு ஏராளம். இறக்குமதியான பார்லியுடன், கரும்பில் இருந்துவரும் மதுசாரத்தைக் கலந்து தயாரித்தார்கள். அக்காலத்தில் எமக்குத் ரோயல் சாலஞ் தரமானதாகத் தெரிந்தது. அத்துடன் எனக்குப் புகைபிடிக்கும் பழக்கமும் இருந்தது.

நாங்கள் இருவரும் செய்த விதானை வேலைகள் பல தரப்படும்.

சம்பந்தப்பட்டவர்களது பெயர்களை சொல்லமுடியாததால் தொழில் வகையறாக்களை இங்கு தருகிறேன்.

பல முறை இலங்கையில் இருந்து ஐரோப்பாவுக்குச் சென்னையூடாக செல்லவிருந்த ஆண்கள், பெண்களுக்கு உதவி செய்தோம். அக்காலத்தில் இயக்கங்களில் உள்ளுடைவுகளால் ஒரு சாரரும், விடுதலைப்புலிகளால் அழிக்கப்பட்ட இயக்கங்களில் இருந்து கூட்டில் கலைந்த தேனிகளாக மற்றொரு தொகையினரும் சென்னையில் இருந்து வெளிநாடு செல்லத் தவித்தார்கள். போலிக் கடவுச் சீட்டுகள், எக்சிட் பேர்மிட்டுகள் பலரது தேவைகளாக இருந்தது.

தூள் வியாபாரம் செய்த ஒருவரிடம் விடுதலை இயக்கம் ஒன்று, சென்னையில் பணம் கேட்பதற்காகக் கடத்திவிட்டார்கள் அவரின் மனைவியர் தனது கைக்குழந்தையுடன் எங்களுடன் வந்து கெஞ்சியபோது அவர்கள் கேட்ட தொகையைப் பல மடங்கு குறைக்க உதவினோம்.

எம்மோடு நண்பனாக இருந்த ஒருவனை பின்பு இங்கிலாந்து கடவுச் சீட்டில் கனடா செல்வதற்கு உதவினோம். மெல்பேனில் பிற்காலத்தில் ரைம்ஸ் சஞ்சிகை தபாலில் எனது வீட்டுக்கு வரும்போது ஒரு காலத்தில் ஆப்பிரிக்க இனத்தவனது ஆங்கில கடவுச்சீட்டு ரைம்ஸ் சஞ்சிகையின் நடுப்பக்கத்திற்குள் வந்ததை இன்னமும் நினைக்க வைக்கிறது.

விடுதலைப்புலிகள் தமிழகத்தில் பத்து அணிகளைப் பயிற்றுவித்தார்கள்.அதில் கடைசி அணியில் இருந்து பலர் விலகினார்கள். தப்பிவந்தவர்கள், மற்றும் தண்டிக்கப்பட்டதால் ஓடியவர்கள் எனப் பலருக்கு உதவினோம்.

சில காதல் பிரச்சனைகள் கூட எம்மிடம் வந்தது. அவையே மிகவும் கடினமானதாக இருந்தது.

நான் குடும்பமாக இருந்ததால் பெரும்பாலான விடயங்களை நேரடியாக என்னிடம் வருவதில்லை. பல விடயங்களை டாக்டர் சிவநாதன் கொண்டு வந்து சேர்ப்பார். அவைகள் இறுதியில் எம்மிருவரது பிரச்சனையாகிவிடும். விடுதலை இயக்கங்களில் உள்பிரச்சனைகள் ஏற்படும்போது அவை எம்மிடம் தேடிவரும்.நாங்களும் தேடிப்போவதுண்டு.

86ம் ஆண்டு மே மாதம் ஆறாம் திகதி ரெலோ சிறிசபாரட்ணம் இறந்த நாளாகும். இதற்குச் சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த சம்பவம் இது.

இரவு பத்து மணிக்குச் சென்னை நகரம் இராட்சத மிருகமாக ஒலி, ஒளியுடன், தூசியையும் துர்மணத்தையும் எழுப்பியபடி அசைந்து கொண்டிருந்தது. லிபேட்டி தியேட்டரருகே இருந்த வீட்டிற்குச் செல்வதற்காக எனது பழைய TVS 50 பெரிய பாதையை கடந்து வீட்டிற்குச் செல்லும்போது EPIC தகவல் நிலையத்தருகே கருப்பு பாண்டும், வெள்ளை சட்டை அணிந்து சிந்தனை தேங்கிய முகத்துடன் என்னெதிரே நடந்து வந்துகொண்டிருந்த கொண்டிருந்த ஈழமக்கள் விடுதலை முன்னணித் தலைவர் பத்மநாபாவைக் கண்டதும் வண்டியை நிறுத்தினேன். வழக்கமாக யாரோடாவது சேர்ந்து நடப்பவர் தனிமனிதராக நடந்து வந்து கொண்டிருந்தார் என்பது ஆச்சரியத்தைக் கொடுத்தது.

“ரஞ்சன் ரெலோவிற்குள் பிரச்சனை போலிருக்கு, தாசிற்கும் பொபிக்கும் நல்லா இல்லை போலிருக்கு (ரெலோவின் ராணுவ பொறுப்பாளர் இருவரும்).

“நானும் அப்படித்தான் நினைக்கிறேன்” வருகிறீர்களா சிறியிடம் போவோம்?

“ஓம்” எனத் தலையசைத்ததும் உடனே எனது TVS 50 இல் ஏறிவிட்டார் பத்மநாபா. தலைக்கு ஹெல்மெட் இல்லை என்பதால் எங்கள் TVS 50 மெதுவாகச் சென்றது. அல்லாவிட்டாலும் அது பழைய வண்டி வேகமாகப்போகாது. போகிற வழியில் கேட்டேன் ‘பாதுகாப்புக்கு ஏதாவது ஆயுதம் உள்ளதா? ‘

“இல்லை. தோழர் நாம் ஏன் பயப்பட வேண்டும்?

அப்பொழுது எனது உடல் விறைத்தது. இதயத்துடிப்பு பல மடங்காகியது.

எவ்வளவு விரைவாக சாலிக்கிராமம் செல்லமுடியும்? மாரி காலத்து நத்தைமாதிரி ஊர்கிறதே TVS 50! இதைவிட வேகமாகச் செல்லாது. குறுக்கு வழியில் சாலிக்கிராமம் செல்வோமா? வழியில் ஒரு ஓட்டோக்காரன் சாலையைக் கடந்தவனை ‘ஏய் வூட்டை சொல்லினையா’ என்றபோது வீட்டில் நானும் எதுவும் சொல்லாது வந்தது நினைவு வந்தது.

எனப்பல நினைவுகளுடன் மவுனமாகினேன் . மனத்தில் பயம் போகவில்லை .ஏற்கனவே இயக்கங்கள் இந்திய மண்ணில் கொசு அடிப்பது போல் தங்களுக்குள்ளும் மற்றவர்களையும் கொலைகள் செய்து விட்டிருந்தார்கள். அதை விட கடற்கரைவரையும் கடத்திச் சென்று நடுக்கடலில் புள்ளிவிவரமற்று கல்லில் கட்டி இறக்கியும், கொலை செய்யும் காலத்தில் இந்த மனிதன் தனது பாதுகாப்பைப் பற்றி கவலைப்படவில்லை. இதில் நானும் மாட்டிக் கொண்டேனே! மனத்தின் எண்ணங்கள் ஒளியின் வேகத்தில்ப்பாய , ரெலோ அலுவலகம் இருந்த சாலிக்கிராமம் நோக்கி ஊர்ந்தோம்.

ரெலோ அலுவலகத்திலிருந்தபோது இரவு பத்தரை மணியிருக்கும். அடுத்த வீட்டிலிருந்து ஒரு குழந்தையைக் கையில் ஏந்தியபடி சிறி சபாரட்ணம் வந்தார். அருகில் காண்பது முதல்தடவை. நீலக்கோட்டுச் சட்டை நினைவிருக்கிறது. அந்தப்பிள்ளை ஏற்கனவே இறந்த ரெலோ அங்கத்தவரது பிள்ளையென்றார்.

நாலுமணிவரையும் பத்மநாபாவும் சிறிசபாரத்தினமும் பல விடயங்களைப் பேசினார்கள். இப்படி எழுதுவேன் என்றால் குறித்து வைத்திருப்பேன்.

ஈழவிடுதலையில் இவர்கள் முக்கியமானவர்கள் என்ற எண்ணம் மனத்தில் ஓடியது. நான் இயக்கத்தைச் சாராதவன் என்ற எந்தத் தயக்கமுமின்றி நேரங்கள், காலங்கள், எதிர்காலத் திட்டங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். இருவரிலும் மதிப்பு வைத்திருந்தேன். uேசாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். எனது இதயத்தில் முழுக்க ரெலோ உடையப் போகிறது. இந்தச்சந்திப்பால் ஏதாவது சுமுகமான முடிவு வரவேண்டும் என்பதே நிறைந்திருந்தது. பாலஸ்தீன இயக்கங்கள் உடைபட்ட கதையை படித்திருந்தேன் .

ஐந்து மணிநேரம் பத்மநாபா சிறியிடம் பேசியது “உங்கள் உட்பிரச்சனையை பேசித் தீருங்கள் ” என்பதுதான். அமைதியாகத் தலையாட்டியபடி கேட்ட சிறிசபாரத்தினம் அன்று காலையில் கடற்கரை செல்வதாக சொன்னார். நானும் பத்மநாபாவுடன் ஏதோ ஒன்றைச் செய்துவிட்ட திருப்தியில் ஒளியற்ற அதிகாலையில் கோடம்பாக்கம் திரும்பினோம். இரவில் வீடு வராததால் முகம் சுருங்கிய மனைவி மீண்டும் சுமுக நிலையடைவதற்கு பல நாட்கள் சென்றன. வீட்டில் மனைவிக்கு மகிழ்சியைத்தர ஏதாவது செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில் சிகரெட்டைப் புகைப்பதை அந்த ஒரு மாதகாலமாக நிறுத்தியிருந்தேன் . மனைவிக்கு எனது இருமலைக் கேட்காத ஒரு மாதகாலமது .

அந்த மாதத்தில் ஒருநாள் விடுதலைப்புலிகள் ரெலோவை அடிப்பதாக செய்தி வந்தது . ஈழமக்கள் விடுதலை முன்னணியினர் வயலஸ் தொலைவாங்கி வைத்திருந்த இடத்திற்குப் போனேன். அங்கிருந்தவர்கள் எனது காதில் ஒலிவாங்கியை வைத்தார்கள் . அது ஒரு அதிகாலை நேரம் . ஒரு மணி நேரமாகக் காதில் வைத்து இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் அடையாற்றில் உள்ள விடுதலைப்புலிகளுக்கும் நடந்த சம்பாசணையை கேட்க முடிந்தது. கிழக்கு மாகாணத்தில் மூதூர் விடுதலைப்புலிகளுக்குப் பொறுப்பான கணேஸ் என்பவர் ஏற்கனவே கிழக்குமாகாணத்தவர்கள் பலர் யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்டதால் மேலும் அவர்களைக் கொலை செய்வதற்குத் தயங்கிய விடயம் எனக்கு அவர்கள் பேச்சில் தெரிந்தது. ஆனால் அதற்கு எதிராகப் பல தூசண வார்த்தைகள் அடையாற்றில் இருந்து தெற்கு நோக்கி வானலைகளில் அனுமானாகப் பறந்தது.

மிகவும் மனமுடைந்து அந்த இடத்தைவிட்டு வெளியே வந்தேன். எதிரில் இருந்த ஒருவரிடம் பில்டர் அற்ற சார்மினார் சிகரட் வாங்கி நெஞ்சுக்குள் பலமாக இழுத்தேன். புகையும் நிக்கொட்டினும் ஒரு மாதத்திற்குப்பின் புது அனுபவமாக இருந்தது. சென்னையில் அதிகாலையில் மட்டுமே சிகரட்டை அனுபவிக்கமுடியும்.

யாழ்ப்பாணம் சென்ற சிறிசபாரத்தினம் தாசை யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் கொலை செய்ததும் பின்பு சிறியுடன் இருநூறுக்கு மேற்பட்டவர்களைப் புலிகள் சுட்டுக் கொன்றதும் சரித்திரமான சம்பவங்களாகும்.

ஈழமக்கள் விடுதலை முன்னணியினர் பலர் கொதித்தபடி விடுதலப்புலித்தலைவர் பிரபாகரனை துக்கியாவது இந்தக் கொலைகளை நிறுத்த முயன்றபோது பத்மநாபாவால் அது தடுக்கப்பட்டதாக அறிந்தேன். சிறி அன்றிரவு பேசிய போது சக்தி வாய்ந்த பல ஆயுதங்களை இந்தியர்கள் தந்ததாகவும் அவற்றை திருகோணமலை பிரதேசத்தில் பாவிக்கும்படி சொல்லியதாக கூறியதைக் கேட்டேன். மேலும் சிறியினது வார்த்தையில் இலங்கைக்குப் போகும்படி ரோவின் ( இந்திய உளவுத்துறை)அறிவுறுத்தல் என்பதே எனக்குப் புரிந்தது. . இப்படியானபோது விடுதலைப்புலிகள், ரெலோ இயக்கத்தை அழித்ததை இந்தியர்களால் தடுத்திருக்கமுடியும். குறைந்தபட்சமாக சிறி சபாரட்ணத்தைப் பாதுகாத்திருக்க முடியும். ஆனால் அவர்கள் எதுவும் செய்யவில்லை. ரோவின் அலுவலகத்தில் ரெலோவின் கெஞ்சியதாக நாராயணசாமியின் ரைகேர்ஸ் ஒவ் லங்காவில் உள்ளது.

ரெலோ விடயத்தில் 86 ல் அப்படி நடந்துகொண்ட இந்தியா, 2009 ல் வேறுவிதமாக நடந்துகொள்வார்கள் என விடுதலைப்புலி ஆதரவாளர்களோ விடுதலைப்புலிகளையோ நினைப்பது முரண்ணகையல்லவா ? பலமானவை பலமற்றவைகளை அழிப்பது விதியல்லவா? வரலாறு அதையே காட்டியுள்ளதல்லவா?

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com