Wednesday, February 3, 2016

மைத்திரியின் முகாமில் உள்ள புரூட்டஸ் யார்? - கஜானி வீரக்கோன்

வரப்போகும் உள்ளுராட்சி சபை தேர்தல்களில் தனது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை (எஸ்.எல்.எப்.பி) எவ்வாறு வெற்றியை நோக்கி வழி நடத்திச் செல்வது என்பது தனக்குத் தெரியும் என அவர் வலியுறுத்தியிருப்பதினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக தான் அனுபவித்து வரும் கஷ்ட நஷ்டங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறார் எனத் தோன்றுகிறது, அதனால் மற்றவர்கள் அவரது முதுகில் குத்த முயற்சி செய்யமால் அவர் அவரது வேலையை செய்ய விட்டுவிட வேண்டும்.

எஸ்.எல்.எப்.பி அங்கத்தவர்கள் மற்றும் அரசாங்க அமைச்சர்களுடன் ஜனாதிபதி சிறிசேன கடந்த ஒரு வாரத்துக்கு இடையில் அடுத்தடுத்து நடத்திய சந்திப்புகளில் அவர் ஒருமுறை மாத்திரமல்ல பல சந்தர்ப்பங்களில் உறுதியான ஒரு கொள்கையை பின்பற்றி வருகிறார் எனத் தெரிகிறது. கட்சியில் தற்போது இடம்பெற்று வரும் விரிசல்களைப் பற்றி அவர் பெரிதாகக் குரல்கொடுக்க வில்லை மற்றும் குறைந்தது அரசியல் அரங்கில் முன்னேறி வரும் விடயங்கள் தொடர்பான தனது எரிச்சலை அடக்கிக் கொள்ளப் போதுமான அளவுக்கு அவர் தன்னைப் பதப்படுத்தி உள்ளார், என்பதை நல்லாட்சி அரசாங்கத்தில் உள்ள எஸ்.எல்.எப்.பி அமைச்சர்களிடம் தன்னை கட்சியை கொண்டு நடத்த விடுவது மற்றவர்களுக்கு நல்லது எனத் தெரிவித்திருப்பதன் மூலம் தெளிவாக வெளிப்படுத்தி உள்ளார், இது அடையாளப் படுத்துவது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவரது பகுதியினரால் வெளிப்படுத்தும் அழுத்தங்களுக்கு அவர் அடங்கப் போவதில்லை என்பதையே.

ஜனாதிபதி சிறிசேன கடந்த செவ்வாயன்று (26.01.2016) காலை சிறிமாவோ பண்டாரநாயக்கா வித்தியாலயத்தில் இடம்பெற்ற ஒரு உடற்பயிற்சித் திட்டத்தில் கலந்துகொண்டபின், இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பேஜ் வீதியில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பியிருந்தார்.

எதிர்ப்பு பொறிமுறை தேவை

தற்போதைய அரசியல் விவகாரங்களைப்பற்றிய ஆரம்ப பேச்சுக்களின் பின்னர், கூட்டத்தின் கவனம் தேர்தல் பிரச்சாரங்களை நடத்துவதைப் பற்றிய கட்சியின் திட்டங்களைப் பற்றித் திரும்பியது. கூட்டு எதிர்க்கட்சி, உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்களை ஊடகங்களுக்கு முன்பாக வந்து முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஸ தேர்தல் பிரச்சாரத்துக்கு தலைமை தாங்க வேண்டும் என்று கோரிக்கை விடும்படி தூண்டி வருகிறது என எஸ்.எல்.எப்.பி அமைச்சர்கள் சுட்டிக்காட்டினார்கள். இந்தப் பிரச்சாரத்தை எதிர்ப்பதற்கும் மற்றும் கட்சியின் செயற்பாட்டை அடிமட்டத்தினரிடம் கொண்டு செல்வதற்கும் ஒரு பொறிமுறை அவசியம் என்பதை வலியுறுத்தினார்கள்.

ஜனாதிபதியும் கூட கூட்டு எதிர்க்கட்சியினரின் பிரச்சாரங்களுக்கு பதிலடி கொடுப்பதற்கு ஒரு நுட்பமான பொறிமுறை இருக்க வேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொண்டதுடன், இது தொடர்பான சந்திப்புகளை தேர்தல் அமைப்பாளர்களுடன் ஏற்பாடு செய்வதற்கான பணியை எஸ்.எல்.எப்.பி யின் பொதுச்செயலாளர் துமிந்த திசாநாயக்காவிடம் ஒப்படைத்தார். கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே துமிந்த, ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களுடன் கலந்துரையாடல்களையும் மற்றும் கருத்தரங்குகளையும் நடத்துவதற்காக அமைச்சர்களிடம் திகதிகளைப் பெற்றுக்கொண்டார். ஜனாதிபதி சிறிசேன அமைச்சர்களிடம் முறையே அவர்களது தொகுதியில் அவர்கள் எதிர்கொள்ளும் ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் கூறும்படி கேட்டுக் கொண்டபோது, அமைச்சர் பிரியங்கர ஜயரட்னதான் முதலில் பேச்சைத் தொடங்கினார்.

ஆனமடுவ அமைப்பாளராக தான் இருந்த போதிலும் கூட, முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஸ தனக்கு கூடத் தெரியாமல் ஒரு கூட்டத்திற்கு வந்திருந்ததாக அவர் சொன்னார். ஜயரட்ன மேலும் அந்தக் கூட்டம் அமைச்சர் அருந்திக பெர்ணாண்டோவின் செயலாளரால் கூட்டப்பட்டது எனவும் வெளிப்படுத்தினார். ஜனாதிபதி இந்த விடயத்தில் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு பிரச்சினைக்குரிய செயலாளரை பதவி நீக்கம் செய்யவேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்தார், ஆனால் அமைச்சர் தனது செயலாளரை பாதுகாக்கும் விதமாக முன்வந்து அவரை பதவி நீக்கம் செய்வதற்குப் பதிலாக அவருக்கு கடுமையான எச்சரிக்கை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார், ஜனாதிபதி சிறிசேனவும்கூட இதற்குச் சம்மதித்தார்.

மனக்குறைகளை தெரிவிப்பது அத்துடன் முடிவடைந்து விடவில்லை, அமைச்சர் சுதர்சினி பெர்ணாண்டோபுள்ளே கூறுகையில், ஒரு சிறிய குழுவான உள்ளுராட்சி மன்ற அங்கத்தவர்கள் மட்டுமே ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவித்து ஊடக சந்திப்புகளை நடத்திய போதிலும்கூட ஊடகங்கள் அதை அளவுக்கு மீறிய விகிதத்தில் ஊதிப் பெருப்பித்து பெரும்பான்மையான உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரித்துள்ளதாக ஒரு கருத்தைப் பரப்பியுள்ளன என்றார். அதில் இணைந்து கொண்ட சந்திம வீரக்கொடி, ஒரு சிறிய குழுவினரே கட்சிக்கு எதிராகப் போய்க்கொண்டிருக்கிறார்கள் மற்றும் அரசியல் தலைமையும் மற்றும் தேசிய மட்டத்திலான தலைவர்களும் இந்த தொகுதிகளுக்கு போய் மக்களுடன் நெருக்கமாக வேலை செய்ய ஆரம்பித்தால் இந்த விடயம் ஒரு முடிவுக்கு வந்தவிடும் எனத் தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பெர்ணாண்டோபுள்ளே பேசுகையில்,” பிரச்சினை முழுவதுமே மகிந்த ராஜபக்ஸ, தான் 8 ஜனவரி 2015ல் தோற்கடிக்கப் பட்டுவிட்டோம் என்பதை ஏற்றுக் கொள்ளாததினால்தான் உருவாகியுள்ளது எனத் தெரிவித்தார். அமைச்சர் மகிந்த சமரசிங்க இந்த விடயத்தை தான் எப்படிக் கையாண்டேன் என்பதைப் பற்றிக்கூறினார். ஒரு சிறிய குழு ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவித்து ஊடக சந்திப்பை நடத்தியபோது, தானும்கூட ஜனாதிபதி மைத்திரியின் பின்னால் ஒரு பெரிய கூட்டமே உள்ளது என்பதைக் காண்பிக்கும் வகையில் ஒரு ஊடக சந்திப்புக்கு ஏற்பாடு செய்து காட்டியதாக அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியது ஒருமுறை இப்படியான விடயங்களை செய்ய ஆரம்பித்தால் மற்றக் கட்சியினர் தங்கள் கால்களை பின்னுக்கு எடுத்துக் கொள்வார்கள் என்று.

இதற்கிடையில் உத்தேச பிக்கு கத்திகாவத்த மசோதா பற்றிப் பேசுகையில், அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா, இது ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு பொறி எனத் தான் கருதுவதால் எஸ்.எல்.எப்.பி இதிலிருந்து தூரமாக விலகவேண்டும் என்றும் இதன்படி எந்த ஒரு எஸ்.எல்.எப்.பி அமைச்சரும் இந்த விடயத்தில் அறிக்கைகளை அல்லது கருத்துக்களை வெளியிடக்கூடாது எனத் தெரிவித்தார்.

எனினும் அமைச்சர் கலாநிதி. அமுனுகம இந்த விடயத்தில் வித்தியாசமான அணுகுமுறையை கொண்டிருந்தார். இந்த விடயத்தில் ஊமையாக இருப்பதற்குப் பதிலாக உண்மையில் கட்சி, மகா சங்கத்தால் ஒப்பக்கொள்ளப்படாத எந்த ஒரு சட்டத்தையும் எஸ்.எல்.எப்.பி பின்துணைக்காது என்று ஒரு அறிக்கையை விடவேண்டும் எனத் தெரிவித்தார். ஜனாதிபதி சிறிசேனவும் அமுனுகமவின் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டதுடன் அப்படிச் செய்வதற்கும் சம்மதித்தார்.

எஸ்.எல்.எப்.பியின் பாதீட்டு குழு

எஸ்.எல்.எப்.பி அமைச்சர்கள் மேலும் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்தது, வரவு செலவு திட்டத்துக்கு தங்கள் கட்சி கொண்டுவந்த மாற்றுப் பிரேரணைகள் மற்றும் திருத்தங்கள் நடைமுறைப் படுத்தப்படவில்லை அல்லது நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்காவின் பக்கத்திலிருந்து அதை செயற்;படுத்துவதற்கான எந்த முன்னேற்றமும் காண்பிக்கப் படவில்லை என்பதை. அப்போது இந்த விடயத்தை பின்தொடருவதற்காக அமைச்சர்கள் எஸ்.பி திசாநாயக்கா, கலாநிதி. சரத் அமுனுகம, டிலான் பெரேரா மற்றும் சுதர்சினி பெர்ணாண்டோபுள்ளே ஆகியோரைக் கொண்ட ஒரு குழு நியமனம் செய்யப்பட்டது. எனினும் பின் ஒரு சந்தர்ப்பத்தில் அவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவையும் மற்றும் ஜனாதிபதி சிறிசேனாவையும் ஒரே மன்றில் வைத்து சந்தித்தபோது அவர்கள் இந்த விடயத்தை முன்வைத்தார்கள். பிரதமர் விக்கிரமசிங்கா தான் வரவு செலவு திட்ட திருத்தங்கள் அனைத்தையும்; மார்ச் மாதம் ஒன்றாக சபையில் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக வாக்குறுதி வழங்கினார், இதன்படி எஸ்.எல்.எப்.பி யினரது திருத்தங்களும்கூட அதில் ஒருங்கிணைக்கப்படும்.

பலசாலியான மைத்திரி

ஜனாதிபதி சிறிசேன எஸ்.எல்.எப்.பி அமைச்சர்களுடன் நடத்திய இந்தக் கூட்டத்தின்போதுதான் அவர் முதல்முறையாக கட்சியின் தலைமையை பற்றி வாய்திறந்துள்ளார். “இந்த அரசாங்கத்தை பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை. மறுபக்கத்தில் கட்சி என்னிடம் ஒப்படைக்கப் பட்டிருப்பதால் கட்சி விடயங்களைக் கவனிப்பதற்கான சுதந்திரத்தையும் அவர்கள் எனக்குத் தரவேண்டும். இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள்தான், நான் முன்னின்று நடத்தும் முதலாவது தேர்தல் மற்றும் தற்சமயம் கட்சியில் உள்ள அனைவருக்கும் நான் நியமனங்களை நிச்சயம் வழங்குவேன். இந்தக் கட்சியை எப்படி வெற்றியை நோக்கி இயக்கிச் செல்வது என்று எனக்குத் தெரியும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து சென்று பல்வேறு அரசியற் கட்சிகளை ஆரம்பித்தவர்களுக்கு என்ன நடந்தது என்று நமக்குத் தெரியும். சந்திரிகா குமாரதுங்க உட்பட அனைவருமே கட்சிக்கு திரும்பியுள்ளார்கள். எனவே எஸ்.எல்.எப்.பி யின் வரலாறு தெரிந்தவர்கள் கட்சியைப் பிளவு படுத்த துணியமாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் சொன்னார்.

இந்தக் கூட்டம் முடிவடைந்த உடனேயே ஜனாதிபதி சிறிசேன, எஸ்.எல்.எப்.பியின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கொழும்பிலுள்ள மகாவலி மையத்துக்கு காலை 10 மணியளவில் சென்றார். எஸ்.எல்.எப்.பியின் போஷகர் மகிந்த ராஜபக்ஸ அங்கு சமூகமளிக்காத போதிலும் அவரது மகன் நாமல் ராஜபக்ஸ மற்றும் மகிந்தவின் சகோதரர் சாமல் ராஜபக்ஸ முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா, முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்ன மற்றும் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கு பல உறுப்பினர்களும் அங்கு சமூகமளித்திருந்தார்கள். ஜனாதிபதி தனது பேச்சின்போது “இந்தக் கட்சி உங்களால் என்னிடம் தரப்பட்டது. மற்றும் அது எனக்கு எதிராக எந்த வைராக்கியமும் பாராட்;டாது நல்ல நோக்கத்துடனேயே ஒப்படைக்கப் பட்டதாக நான் நம்புகிறேன். கடந்த வருடம், தங்களை கடந்த ஒரு தசாப்தமாக கட்சியில் இருந்து தூரமாக்கி வைத்திருந்த சிறுபான்மை சக்திகளை திரும்பவும் கட்சிக்குள் கொண்டுவர என்னால் முடிந்தது”. எனத் தெரிவித்தார்.

அவர் பேசும்போது அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரா எழுந்து நின்று மைத்திரி அவரது பேச்சில் மூன்று விடயங்களுக்கு பதிலளிப்பார் எனத் தான் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். அவையாவன புலனாய்வு உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு சிறைக்காவலில் வைக்கப்பட்டிருப்பது, அரசாங்கத்தின் இராணுவப் படைகளைப் பற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் விசாரணை, மற்றும் மூன்றாவதாக பிரேரிக்கப் படவுள்ள உத்தேச புதிய அரசியலமைப்பு நாட்டின் ஒற்றையாட்சிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் என எழுந்திருக்கும் கவலைகள்.

சரத் வீரசேகராவின் மூன்று கேள்விகளுக்கும் மைத்திரியினால் உடனடியாக விரிவான பதில் வழங்கப்பட்டது. “ பல்வேறு தரப்பினரும் பல்வேறு விடயங்களை, அவை நடைமுறைக்கு சாத்தியமானதா என்பதைப் பற்றி சிந்திக்க ஒரு நிமிடம் கூட ஒதுக்காமல் சொல்வார்கள். ஒரு விடயத்தை என்னால் உங்களுக்கு உறுதிப்படுத்த முடியும். நான் ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் காலம் வரை, இந்த நாட்டின் ஒற்றை ஆட்சி முறைக்கோ அல்லது வேறு எதற்கும் தீங்கு செய்ய யாரையும் அனுமதிக்க மாட்டேன். மேலும் வடக்கு மற்றும் கிழக்கு இணைப்பையும் நான் அனுமதிக்க மாட்டேன். ஆனால் தற்போது நிலவி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக நாங்கள் ஒரு புதிய அரசியலமைப்பை கட்டாயம் கொண்டுவர வேண்டியுள்ளது மற்றும் அது அந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வை வழங்க வேண்டும். ஒரு சிலர் புதிய அரசியலமைப்பு தீமையான ஒன்று என பிரதானப் படுத்தினாலும் அதைக்கண்டு யாரும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை” என அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இராணுவ படைகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளபோது, அதற்கான சிறந்த பரிகாரம் அதைப்பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டியதே என்றார். “இந்தக் குற்றச்சாட்டுகள் முதலில் எழுந்தபோதே முன்னைய அரசாங்கம் அந்தக் குற்றச்சாட்டுகள் விசாரணை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் விஷயம் இந்தளவுக்கு மோசமாகி இருந்திருக்காது. விஷயங்களை மறைப்பதற்கு முயற்சிப்பதால் நல்லது எதுவும் நடக்கப் போவதில்லை, மாறாக அமெரிக்கா போன்ற அபிவிருத்தி அடைந்த நாடுகள், எங்கள் படைகளுக்கு வழங்கும் இராணுவ பயிற்சிகளை நிறுத்திவிடும். நாங்களும் அதே பாணியில் தொடர்ந்தால் ஸ்ரீலங்கா இராணுவம் ஒரு சட்டபூர்வமான அமைப்பு என்று ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஐநா சொல்லிவிட்டால் என்ன நடக்கும்? அப்போது எங்கள் இராணுவப் படைகளுக்கு என்ன நடக்கும், அதன்பின் நமது நாட்டுக்கு என்ன நடக்கும்? ஆகவே குற்றம்; இழைத்துள்ளார்கள் என நிரூபிக்கப் பட்டவர்களுக்கு எதிராக நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

ஜனாதிபதி மேலும் தெரிவித்தது யுத்தக் குற்றச்சாட்டு பற்றிய விசாரணைகள் முற்றிலும் உள்ளுர் பொறிமுறைப்படியே நடைபெறும் மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட கலப்பு நீதிமன்றம் நாட்டிற்குள் அனுமதிக்கப்படாது என்று. அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவும் அதில் இணைந்து கொண்டு அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் பற்றி சிலர் மக்களிடத்தில் தேவையற்ற பயத்தை பரப்பி வருகிறார்கள் எனக் கருத்து தெரிவித்தார். “இது ஒரு குழந்தை பிறக்கும் முன்பே அதன் வடிவத்தை பற்றி விளக்குவதைப் போலுள்ளது என அவர் சொன்னார். எனினும் இந்த உவமைக்கு பல நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களும் பதிலளித்தார்கள், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியினால் குழந்தையின் வடிவத்தை மட்டுமல்ல அது ஆணா அல்லது பெண்ணா என்பதைக்கூம தாயின் கருவில் உள்ளபோதே ஒருவரால் தெரிந்து கொள்ள முடியும் என அவர்கள் அவருக்கு நினைவூட்டினார்கள்.

புரூட்டஸ் அடையாளம் காணப்பட்டார்

அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்காவின் வீட்டில் எஸ்.எல்.எப்.பி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுடன் அவர் நடத்திய ஒரு கூட்டத்தின் ஒலிப்பதிவை கடந்த வாரம் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ வழங்கினார் என நாங்கள் முன்னர் அறிவித்திருந்தோம். எனினும் அந்த பதிவு செய்யப்பட்ட இறுவெட்டில் எஸ்.பி.திசாநாயக்காவின் குறிப்பிட்ட அந்தக் கூட்டத்தில் நடைபெற்றவை மட்டுமன்றி, ஜனாதிபதி சிறிசேன எஸ்.எல்.எப்.பி குழுவினருடன் நடத்திய கூட்டத்தைப் பற்றிய பதிவுகளும் இடம்பெற்றிருந்தன. அதைப்பற்றிய சமீபத்தைய முன்னேற்றம் என்னவென்றால் பசில் அந்த இறுவெட்டை மகிந்தவிடம் கையளித்ததுடன் அதன் உள்ளடக்கங்களைப் பற்றியும் அவரிடம் விளக்கியுள்ளார். தனது கலந்தரையாடல்கள் வெளியில் கசிந்து விட்டது என்பதையும் ஜனாதிபதி சிறிசேனவும்கூட அறிந்து கொண்டார். அவர் அமைதியாக இந்த விடயம் பற்றிய ஒரு விசாரணையையும் முடுக்கிவிட்டார் மற்றும் தனது முகாமில் உள்ள புரூட்டஸை அடையாளம் காண்பதற்கு வேண்டிய போதிய ஆதாரங்கள் இப்போது அவரிடம் உள்ளதாகத் தெரிகிறது.

கம்பகா மாவட்டத்தை சேர்ந்த இந்த அமைச்சர்தான் புரூட்டஸ் ஆக மாறியுள்ளார், மைத்திரியின் நல்லவர்களுக்கான பட்டியலில் மட்டும் இவர் இடம் பிடித்துவிடவில்லை, ஆனால் இவர் தன்னை ஒரு விசுவாசியாக முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஸவிடத்திலும் அதேபோல அவரது முன்னோடியான சந்திரிகா குமாரதுங்கவிடத்திலும் காட்டியுள்ளார்.

நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு இறுதி எச்சரிக்கை

கடந்தவார அமைச்சரவை கூட்டத்தில் குறிப்பிடத் தக்கது என்னவென்றால், அமைச்சரவை கூட்டம் முடிவடைந்ததும் ஜனாதிபதி சிறிசேனவை பிரதமர் விக்கிரமசிங்கா தலைமையில் ஐதேக அமைச்சர்கள் பிரத்தியேகமாகச் சந்தித்ததுதான். கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்பு ஜனாதிபதி தெரிவித்தது இங்கு கலந்துரையாடப்படுவது யாவும் நான்கு சுவர்களுக்குள் மட்டுமே அடங்கிவிடவேண்டும் மற்றும் இங்கு சமூகமளிக்காதவர்களின் காதுகளுக்குள் செல்லக் கூடாது என்று.

பிரதமர் விக்கிரமசிங்க அங்கு தெரிவித்தது, மீண்டும் ஒரு முறை இன வன்முறையை பரப்பி நல்லிணக்கத்தை குழப்புவதற்கான ஒரு இயக்கம் ஆரம்பமாகியுள்ளது மற்றும் ஒரு பத்திரிகை நிறுவனம் மற்றும் ஒரு தொலைக்காட்சி சேவை என்பன இதில் சம்பந்தப்பட்டுள்ளன என்று. அவர் மேலும் தெரிவித்தது இதை முளையிலேயே கிள்ளி எறிவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று, ஜனாதிபதி சிறிசேனவும் அதற்குச் சம்மதித்தார். முரண்பாடாக இந்தக் கூட்டம் முடிந்து 24 மணித்தியாலம் நிறைவடைவதற்கு முன்னரே பிரதமர் விக்கிரமசிங்கா, வெறுப்பை பரப்பி இன நல்லிணக்கத்துக்கு எதிராக மக்களைத் தூண்டுவதில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஊடகவியலாளர்களின் பெயர்களைக் கூட வெளியிட்டு அந்த ஊடகத்தை பாரளுமன்றத்தில் வெளியிடும் பணியினை மேற்கொண்டார்.

ஜனாதிபதி சிறிசேன நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவு தொடர்பாக எழுந்துள்ள கவலைகளைப் பற்றி தெரிவித்தார். நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவு தனது விசாரணைகளை மெதுவாக நடத்துவது பற்றி எஸ்.எல்.எப்.பி நிறைவேற்றுக் குழுவிலும் விவாதிக்கப்பட்டது. நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவு அவர்களுக்காக நியமிக்கப்பட்ட பகுதியின் எல்லைகளுக்கு அப்பால் சென்று விசாரணைகளை மேற்கொள்வதால் அது பலவிதமான பிரச்சினைகளில் சிக்கும் நிலைக்குச் சென்றுள்ளது என அவர் சொன்னார். குறைந்தது முக்கியமான விடயங்களிலாவது விசாரணைகளை நிறைவு செய்யும்படி அவர்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. அவர் மேலும் ஐதேக அமைச்சர்களிடம் எஸ்.எல்.எப்.பி அங்கத்தவர்களுடன் இணைந்து அந்தந்த மாவட்டங்களுக்கான அபிவிருத்தி திட்ட வேலைகளை செயல்படுத்த ஒற்றமையாக வேலை செய்யுமாறு ஆலோசனை தெரிவித்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் மற்றும்; இணைத் தலைவர் ஆகியோர் ஒருமித்து பணியாற்ற வேண்டும் என அவர் சொன்னார்.

நாமல் எச்சரிக்கை செய்யப்பட்டார்.

நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவு காள்ட்டன் விளையாட்டு வலையமைப்பின் (சி.எஸ்.என்) உயர் மட்டத்தினரை நேற்று விசாரணை செய்தபோது நிகழ்வுகளில் ஆச்சரியமான திருப்பம் நடந்தேறியது. அதன்படி அந்த தொலைக்காட்சி சேவையின் தவைரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் ஊடகப் பேச்சாளருமான றோகான் வெலிவிட்ட, மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி நிசாந்த ரணதுங்க ஆகியோர் நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த அதேவேளை அதன் பணிப்பாளர் யோசித்த ராஜபக்ஸ விசாரணைக்காக கடற்படை தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவு கிட்டத்தட்ட காலை 9.30 மணியளவில் யோசித்த ராஜபக்ஸாவை விசாரணை செய்ய ஆரம்பித்து தொடர்ந்து ஆறு மணித்தியாலங்களுக்கும் அதிகமான நேரம் விசாரணை செய்தது. கடற்படை வட்டாரங்களின் தகவல்களின்படி அவரது பொய்யான கல்வித் தகமைகள், வெளிநாட்டில் அவரது இராணுவப் பயிற்சிக்கான செலவுகளை மேற்கொண்ட வட்டாரங்கள் மற்றும் மேலும் பல நிதி விடயங்கள் சம்பந்தமாக யோசித்தவிடம் விசாரிக்கப் பட்டதாம். அவர் கடற்படைத் தலைமையகத்தில் விசாரணை செய்யப்பட்டுக் கொண்டிருந்த அதேவேளை, அவரது தாயாரும் முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ஸ மற்றும் அவரது சகோதரர் நாமல் ராஜபக்ஸ ஆகியோர் உட்பட அவரது குடும்ப அங்கத்தினர்கள் அவர் அன்று மாலை ஆஜர் படுத்தப்பட்ட கடுவெல நீதிமன்றின் முன்பாக காத்துக் கிடந்தார்கள்.

கடந்த வாரம் ஜனாதிபதி சிறிசேனாவை இரகசியமாகச் சந்தித்த நாமல் ராஜபக்ஸ, தன்னை அநேக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் அதேபோல தனது தந்தையும் தானோ அல்லது தனது சகோதரனோ விசாரணைக்காக விரைவில் அழைக்கப்படுவோம் என எச்சரிக்கை செய்திருப்பதாக தெரிவித்தாராம். அவர் மேலும் தெரிவித்தது தனது தந்தை தன்னிடம் விசேடமாகத் தெரிவித்தது தான்(நாமல்) மற்றும் தனது சகோதரர்(யோசித்த) ஆகியோர் கம்பிகளின் பின்னால் அடைபட வேண்டிய நிலை ஏற்பட்டாலும் கூட அதை எதிர்கொள்ள தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று. “ஒரு அரசியல் குடும்பம் அதுவும் முன்னாள் முதல் குடும்ப அங்கத்தவாகளாக இருந்தோம் என்பதினால் நாங்கள் அப்படியான ஒரு அனுபவத்தையும் அதேபோல பெறவேண்டியிருக்கும் என எனது தந்தை என்னிடம் தெரிவித்தார்” என்று அவர் சொன்னார்.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com