Wednesday, December 9, 2015

பாலுக்கு பூனை காவலா? படங்களுடன் பீல்டில் குதித்துள்ளார் பீல்ட்மார்சல் சரத் பொன்சேகா.

இலங்கையில் இன்று பரவலாக பேசப்படுகின்றவிடயம் அவன்கார்ட் நிறுவனம் தொடர்பான விசாரணைகள். அவன்காட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி நிஷங்க சேனாதிபதி. இவர் இலங்கை இராணுவத்தின் முன்னாள் மேஜராவார். சேவையிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்ட அவர் பாதுகாப்பு சேவை நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து படிப்படியாக முன்னேறி இன்று உலகிலுள்ள கடல்பாதுகாப்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக விளங்குகின்றது.

இந்த அபார வளர்ச்சிக்கு முன்னாள் அரசாங்கத்தின் உதவி கிடைத்திருக்கின்றது என்றும் கடற்படையினருக்கு கிடைக்ககூடிய வருமானத்தை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கி பில்லியன்கணக்கான வருமானத்தை ராஜபச்சக்கள் பகிர்ந்து கொண்டனர் என்றும் குற்றச்சாட்டப்பட்டுள்ளதுடன் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிறுவன விடயத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற மோசடிகள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபச்ச உட்பட நூற்றுக்கணக்கான அரசியல் பிரபலங்கள் மற்றும் முப்படைகளையும் சேர்ந்த அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றனர்.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபச்ச மற்றும் காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சராக இருந்த திலக் மாரப்பென ஆகியோர் இந்நிறுவனத்திற்கு சார்பாக பாராளுமன்றில் பேசியிருந்தனர். இவர்களின் பேச்சு பலதரப்பின் விமர்சனத்திற்கு உள்ளானதை தொடர்ந்து திலக்மாரப்பென பதவியையும் ராஜினாம செய்து கொண்டார், ஆனால் நீதி அமைச்சரும் பதவி விலகவேண்டும் என பலர் அழுத்தம் கொடுத்தபோதும் அவர் அதை செய்யவில்லை எனபதுடன் தனக்கும் நிஷங்க சேனாதிபதிக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நிஷங்க சேனாதிபதிக்கும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்குமிடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிவிக்கும் பீல்ட்மாசல் சரத் பொன்சேகா, இவ்விருவரும் குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்றிருந்ததற்கான புகைப்படங்களை ஊடகவியாலாளர் மாநாடொன்றில் வெளியிட்டுள்ளார்.

படங்களை வெளியிட்டு அங்கு பேசிய பீல்டமாசல் பொன்சேகா, நிசங்க சேனாதிபதியுடன் நீதியமைச்சர் ராஜபக்சவிற்குள்ள தொடர்பு யாதென்று மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டுமென்றும் அவ்வாறு தெரியப்படுத்தாவிடத்து மேலும் பல அருவருக்கத்தக்க ஆதாரங்களை வெளியிடவேண்டிவருமென்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டிற்கு பாரிய நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ள குறிப்பிட்ட நபருக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளப்படுகின்றபோது அவரின் நெருங்கிய நண்பராக நீதியமைச்சர் இருந்தால் நீதிமன்று எவ்வாறு சுயாதீனமாக செயற்பட முடியும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார் சரத் பொன்சேகா.

மேலும் விஜயதாச ராஜபச்ச அதிசுகபோக வாழ்கையை மேற்கொண்டு வருவதாகவும் அப்பணம் கிடைத்த வழியை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டுமென்றும் வேண்டுதல் விடுத்துள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com