Sunday, December 6, 2015

சாவகர்.

இந்தச் சொல்லைப் பலர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். இவர்கள் இலங்கையின் வடபகுதியை ஆண்டவர்கள் என்று கருதப்படுகிறது இவர்கள் அடிப்படிடையில் யாவா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்பட்டாலும் அதற்கான சரியான காரணங்களும் கருத்துக்களும் இன்னமும் முன்வைக்கப்படவில்லை. யுhவாவைச் சேர்ந்தவர்கள் யாகவர் என்பது தமிழில் சாவகர் என்று அழைக்கப்பட்டிருக்கலாம்.

கி.பி 1247ல் சந்திரபானு என்ற சாவகன் தெற்கு நோக்கி சிங்கள அரசின் மேல் படை எடுத்ததாகவும் அப்போ அங்கே ஆண்டு கொண்டிருந்தவன் இரண்டாம் பராக்கிரமபாகு என்றும் கருதப்படுகிறது. இந்த சாவகனான சந்திரபானு பராக்கிரமபாகுவினால் விரட்டியடிக்கப்பட்ட போது அவன் வடக்கே வந்து ஆட்சியைக் கைப்பற்றியிருக்கலாம் என்று ஒரு சிங்கள ஆய்வாளர் கூறியிருந்தாலும் அது வெறும் ஊகமாகவே உள்ளது. அதற்கான ஆதாரத்தையோ தரவுகளையோ அவர் முன்வைக்கவில்லை.

வடக்கை- யாழ்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்திகளில் ஒருவனான காலிங்க ஆரியச்சக்கரவர்த்திக்குப் பின்னர் அவன் மகன் குலோத்துங்கசிங்கை ஆரியன் அரியாசனம் ஏறியாலும் இக்காலகட்டத்தில் ஒரு சாகவன் ஆண்டதாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன. இவனுடன் வந்தவர்கள் குடியேறிய பகுதியே சாவகச்சேரி, சாவகன்சீமா, சாவகன்கோட்டை என்று இன்றும் அழைக்கப்படுகிறது.

இந்த சந்திரபானு என்ற சாகவன் பதவியா குருந்தனூர் போன்ற சிங்கள மாவட்டங்களிலிருந்த சிங்களவர்களைத் தன்பக்கம் திரட்டி இரண்டாவது தடவையாக பராக்கிரமபாகுவிற்கு எதிராகப் படை நடத்த முயன்றான் என்பதை சூழவம்சம் கூறுகிறது. இவன் சிங்கள இராட்சியத்திற்கு மேல் படை எடுப்பதற்கு முன்னர் மன்னர் சுந்தரபாண்டியன் சாவகன் சந்திரபானுவை வென்று திறை பெற்றுப்போனான். இது 1258ல் நடந்ததாகக் கருதப்படுகிறது.

சாவகமன்னன் பாண்டியனுக்கு சரியாகத் திறை செலுத்தாது இரண்டாம் பராக்கிரமபாகுபின் மேல் இரண்டாம் தடவையாகப் படையெடுத்துச் சென்றான். பராக்கிரமபாகுவிற்கு உதவுமாறும் சாகவனைத் தண்டிப்பதற்காகவும் பாண்டிய மன்னனான ஜடாவர்மன் வீரபாண்டியன் 1262ல் தன்படையை அனுப்பி சாவகமன்னனின் சிரம்கொய்தான். தன்வெற்றியைப் பொறிக்கும் முகமாக இரட்டை மீன் இலட்சணையை பாண்டியன் திருக்கோணமலையில் பொறித்துச் சொன்றான் என்று வரலாறுகள் கூறுகின்றன. இந்த இலட்சனையை திருகோணமலை கோட்டை வாயிலில் இன்றும் காணலாம்.

இதில் இருந்து நான் சிலவிடயங்களை ஊகித்துக் கொள்ளலாம். சிங்கையாரியர்கள் அடிப்படையில் யாழ்பாணத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். இவர்கள் முழுமையான அரசவம்சத்தைச் சேர்ந்தவர்களாக எங்கும் கருதப்படவில்லை. இவர்கள் சத்திரியர்களுடன் இணைந்த பிராமணர்களாகவும். வெறும் சத்திரயர்களாகவுமே காணமுடிகிறது. சிங்கை ஆயரியர்கள் என்று தம்மை அழைத்துக் கொண்டாலும் அவர்களுக்கும் ஆரியர்களுக்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. பரராசசேகரன் செகராசசேகரன் சங்கிலியன் போன்றோர் சிங்கையாரிய வம்சாவளி என்றே கருதப்படுகிறது உ.ம் யாழ்பாண வைபவமாலை.

பராக்கிரமபாகு விஜயபாகு கஜபாகு சிங்கபாகு போன்ற அரசர்கள் சிங்களவர்களாகக் கருதப்பட்டாலும் அவர்களின் அனைத்து தொடர்புகளும் சிகிரியா வரலாறும் பாண்டியர் சேரர்களுடன் தொடர்புள்ளதாகவே உள்ளது. இந்த "பாகு" என்றபெயர் அடிப்படையில் இலங்கைக்கு உரியது அல்ல. இது தொண்டைநாடு கலிங்கத்தைச் சேர்ந்தது.

இந்தச் சந்திரபானு என்பவன் தாயிலாந்து எனும் தாமிரலிங்கநாட்டை ஆட்சி செய்தவனாகக் கருதப்படுகிறான். மகாவம்சத்தின் இன்னொரு குறிப்பின்படி இவன் தாமிரலிங்க நாட்டை ஆண்ட தமிழ்கொள்ளையன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பெயரில் அவன் தமிழனாகவே காணமுடிகிறது. இவன் கட்டிய கோவில் இன்றும் தாயிலாந்தில் உள்ளது.

இந்தச் சாவகர்கள் இலங்கையில் பலகாலம் ஆட்சி கொள்ளவில்லை எனினும் பயணிகளாக வந்து நாட்டின் ஒரு சிறுபகுதியையாவது கைப்பற்றி ஆண்டார்கள் என்பது சாமர்த்தியமே. யாவகர் இருந்த சேரியே சாவகச்சேரியாகும்.


நட்புடன் நோர்வே நக்கீரா

06.12.2015.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com