Saturday, December 5, 2015

பொன்வாத்துக் கனவும் ஒரு தனிக் குதிரையும் – கனக சுதர்சன்

ராமாயணத்தில் சுமந்திரன் ஒரு சாதாரண பாத்திரம். ராமன் வனவாசம் போகும்போது துக்கத்துடன் தேரோட்டுவார் அந்தச் சுமந்திரன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் சுமந்திரனும் ஒரு தேரோட்டிதான். மகாபாரதத்தில் வருகின்ற தேரோட்டி பார்த்திபனைப்போல, மிகக் கடினமான பாத்திரத்தை வகித்துத் தன்னுடைய தரப்பின் வெற்றிக்காக பல காரியங்களைச் செய்யும் பாத்திரம். அதனால்தான் அவருக்கு இப்பொழுது மிகத் தீவிரமான விமர்சனங்கள் வருகின்றன.

பொன்வாத்துகள் தமக்காக முட்டையிடும் என்று நம்பும் தரப்புகள்தான் இந்த விமர்சனத்தை ஒரு படையணியைப் போலத் திரண்டு வைக்கின்றன. உண்மையில் இவை விமர்சனங்களே அல்ல. வெறும் குற்றச்சாட்டுகளே. இன்னும் சொல்லப்போனால் வெறும் எதிர்ப்புணர்வு மட்டுமே. காற்றிலே வாளைச் சுழற்றும் வீர வித்தை. மனம்போகிற போக்கில் சிந்தித்துக் கைபோகிற போக்கில் எழுதப்படும் குற்றச்சாட்டுகள். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு வரலாற்றில் பெறுமதியே கிடையாது.

இவர்களுடைய பொன்வாத்துகள் பொன் முட்டையை மட்டுமல்ல சாதாரண முட்டையைக் கூட இடுவதில்லை. இதுவரையிலும் இந்தப் பொன்வாத்துக் கற்பனையால் பல ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்ததுதான் மிச்சம். அப்படியானால் இந்தப் பலிகளுக்கும் கொலைகளுக்கும் இழப்புகளுக்கும் இந்தப் “பொன் வாத்து அணியினர்தான் பொறுப்பா?” என்று நீங்கள் கேட்டால், எந்தத் தயக்கமுமில்லாமல் என்னுடைய பதில் “ஆம்” என்பதுதான். ஆனால், இந்தப் பழியை இவர்கள் எல்லாம் பிறரின் தலையில் கட்டிவிட்டுத் தாங்கள் தப்பித்து விடுகிறார்கள். அப்படி இவர்கள் தப்பித்துக் கொள்வதற்கான அசலான முகமூடிதான் இந்தத் “தீவிரத் தமிழ்த்தேசியவாதமும் பொன்வாத்துக் கனவும்”

சரி, இந்த இடத்தில் இன்னொரு கேள்வியை நீங்கள் எழுப்பக்கூடும். அப்படியானால், சுமந்திரன் மட்டும் நிச்சயமாக நல்லதொரு முன்மாதிரியை உருவாக்குவாரா? அதற்கான உத்தரவாதங்கள் என்ன? தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகளை அவர் எப்படிப் பிரதிபலிப்பார்? அவற்றை அவர் எப்படி வென்று தருவார்? அவர் ஏற்படுத்த முனையும் மாற்றங்கள் என்ன?…..“ என்ற மாதிரி.

“சுமந்திரன் ஒரு தனிக்குதிரையாக ஒடுகிறார்” என்ற குற்றச்சாட்டின் பின்னேதான் இந்தமாதிரிக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அவரை ஒரு லக்ஷ்மன் கதிர்காமர் என்று கூடச் சிலர் மறைமுகமாகப் பேசிக்கொள்கிறார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து வலம்புரி என்ற பத்திரிகை அப்படியான தொனியில் சுமந்திரனை இலக்கு வைத்து விழித்துமிருக்கிறது. இந்தச் சந்தேகங்களை உண்மையாக்குகின்ற மாதிரிச் சுமந்திரன் செயற்படுகிறாரா என்ற கேள்விகளும் சந்தேகங்களும் தமிழ் மக்களுக்கும் ஏற்படக்கூடும்.

பலரும் கருதுவதைப்போல உண்மையில் சுமந்திரன் தனிக்குதிரையாக ஓடுகிறாரா?அவர் ஒரு நல்ல முன்மாதிரியை உருவாக்குவார் என்று நம்பலாமா? அதற்கான உத்தரவாதங்கள் என்ன? அல்லது அவர் கொழும்பை மகிழ்விக்கும் விளையாட்டில் ஈடுபடுகிறாரா? அதற்காகத்தான் அவர் சிங்கள வீரர்களுடன் கிரிக்கெற் விளையாடுவதும், இராணுவத்தினருக்கான மதிப்பளிக்கும் நிகழ்வில் பொப்பி மலர் அணிந்து கலந்து கொள்வதும் நடக்கிறதா?

அதனால்தான் அவர், இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே அல்ல என்று பகிரங்கமாகச் சொன்னாரா? போதாக்குறைக்கு முஸ்லிம்களைப் புலிகள் வடக்கிலிருந்து வெளியேற்றியதற்கு தமிழர்கள் அனைவரும் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றும் அது ஒரு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை என்றும் கூறினாரா?

இதெல்லாம் தமிழ் மக்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது என்று தெரிந்து கொண்டும் இதை அவர் தொடர்ந்தும் செய்கிறார் என்றால் அது எதற்காக? எதிர்த்தரப்பை மகிழ்விக்கவா?

அல்லது இப்படியெல்லாம் செய்துதான் தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியுமா? சிங்களத்தரப்பையும் தென்னிலங்கையையும் கொழும்பையும் குளிரப் பண்ணும் முயற்சியில் எத்தனையோ பெரிய கைகளும் தலைகளும் முயன்று களைத்த பிறகு சுமந்திரன் இப்பொழுது ஒரு புதிய கிறிஸ் கம்பத்தில் ஏற முயற்சிக்கிறாரா?

இந்தப் புதிய குதிரை எவ்வளவு காலத்துக்கு எவ்வளவு தூரம் ஓடப்போகிறது? எல்லாரும் ஏறிச் சறுக்கிய கழுதையில் இப்பொழுது இவரும் ஏறிச் சறுக்கத்தான் போகிறரா?

அல்லது இந்தத் தடவை நிச்சயமாக அவர் சிக்ஸர் அடிக்கத்தான் போகிறரா? இப்படியெல்லாம் ஏராளம் கேள்விகள் சுமந்திரனைச் சுற்றி வளைத்துக் கொண்டிருக்கின்றன. இந்தக் கேள்விகளில் அநேகமானவை அவருடைய எதிராளிகளால் கேட்கப்படவில்லை. பதிலாக உள்வீட்டிலும் சக கூட்டாளிகளாலும் தீவிரத் தமிழ்த்தேசியவாதிகளாலுமே அவர் சுற்றி வளைக்கப்படுகிறார். சுமந்திரனுக்கு எதிரான வியுகம் என்பது கொழும்பிலிருந்து வகுக்கப்படுவதை விட, தமிழ்த்தரப்பிலிருந்து வகுக்கப்படுவதே அதிகமாக – வலுவானதாக உள்ளது.

இத்தகைய ஒரு துயரநிலையை அவர் தொடர்ச்சியாகச் சந்தித்து வருகிறார். நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் அவர் சகபாடிகளால் கடுமையான ஒதுக்குதலுக்கும் இரகசிய ஏளனத்துக்கும் உள்ளாக்கப்பட்டார். இதைச் சுமந்திரனும் நன்றாக அறிந்திருந்தார்.

சுமந்திரனின் அரசியற் பிரவேசம் தேசியப்பட்டியலின் வழியாகவே அங்கீகார நிலைக்கு வந்திருந்தது. இதனால் அவர் மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற்றவராகக் கருதப்படாமல். தலைமையிலிருக்கும் சம்மந்தனின் செல்லப்பிள்ளை என்ற தொனிப்படவே கட்சியின் உள்வட்டத்தில் பேசப்பட்டார். இந்தச் செல்லப்பிள்ளை கேட்பாரில்லாமல் தன்னிச்சையாக விளையாடிக் கொண்டிருக்கிறது என்ற விமர்சனங்களும் இதைக் கண்டிப்பதற்குப் பதிலாக இன்னும் செல்லம் கொடுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளும் முனங்கலாக நீண்டகாலம் இருந்தன. குறிப்பாக கொழும்பைக் குளிர்விக்கும் வேலையை சுமந்திரன்தான் செய்கிறார். அதனால்தான் சம்மந்தன்கூட அவருக்குப் பின்னே போய்க்கொண்டிருக்கிறார் என்ற கதைகள் பரகசியம்.

இதனால் சுமந்திரனை – இந்தத் தனிக்குதிரையை அடக்கி விடுவதற்கு அல்லது இதைக் கழற்றி விடுவதற்கு பங்காளிகள் பாராளுமன்றத்தேர்தலின்போது கடுமையாக முயற்சித்தனர். சுமந்திரனுக்கு எதிராகவே சிறிதரன், சரவணபவன், சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றவர்கள் பகிரங்கமாக தேர்தற் களத்திலாடினார்கள். எப்படியாவது சுமந்திரனைத் தோற்கடிக்க வேண்டும் என்று இவர்கள் உழைத்த உழைப்பு கொஞ்சமல்ல. கூடவே புலம்பெயர் தமிழர்களில் ஒரு தொகுதியினரும் பெரும் பிரயத்தனமெல்லாம் எடுத்தனர். போதாக்குறைக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இன்னொரு முனையைத் திறந்து போர் தொடுத்தது.

ஆனால், எல்லா எதிர்ப்புகளையும் வியுகங்களையும் உடைத்துக்கொண்டு சுமந்திரன் வெற்றிவாகை சூடினார். தேர்தலில் வெற்றியடைந்த கையோடு, அவருக்கு ஒரு பரிசை வழங்கியது கட்சி. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற பதவிதான் அது.

இது பலருக்கும் ஆச்சரியமாகவும் புரியாத புதிராகவும் இருந்தது. “வாயடைத்துப்போச்சு நண்பா, வராதாம் ஒரு சொல்லும்” என்ற முருகையனுடைய கவிதையைப்போல, எல்லோரும் திகைத்துப் போய் நிற்க சுமந்திரன் களத்திலிறங்கிப் புதிய பயணங்களைச் செய்யத் தொடங்கினார்.

அதுவரையிலும் அந்தப் பதவியில் இருந்தவர் சுரேஸ் பிரேமச்சந்திரன். சுரேஸ் இருந்த காலத்தில் அவர் செய்ததெல்லாம், தமிழ்ப் பத்திரிகைகளுக்கு அறிக்கைகளை விடுத்ததுதான். ஆனால், சுமந்திரன் இந்தப் பதவியைப் பொறுப்பேற்ற கையோடு அவர் சகல தரப்பினரோடும் பேசத் தொடங்கினார். சர்வதேச சமூத்தின் பிரதிநிதிகள், தலைவர்கள், தென்னிலங்கைத் தரப்புகள், அரசாங்கத்தின் உயர்மட்டத்தலைவர்கள், சிங்கள ஊடகங்கள் எனப் பல தரப்பிலும் தன்னுடைய லொபியை விரித்தார். இதுதான் அவரைத் தனிக் குதிரையாக தமிழ்த்தேசியப் பாரம்பரியச் சிந்தனாவாதிகளிடம் உணர வைத்தது. அவர்களைப் பொறுத்தவரை அப்பத்தைச் சுட்டு அடுப்படிக்குள் பகிர்ந்துண்டால் சரி என்பதுதான் விளக்கம். அதற்கப்பால் உலக நிலைமைகளைப் பற்றிய கவலைகள் எல்லாம் கிடையாது. இப்படிப் பலரோடும் உரையாடுவது தேவையான ஒரு அரசியல் முறைமை என்பதை அவர்கள் அறியத் தயாரில்லை.

பிறத்தினாரோடு பேசுவதென்பது அவர்களோடு சோரம் போவதற்குச் சமனானது என்ற சிந்தனையே இது. ஆனால், சுமந்திரன் வேறுமாதிரிச் சிந்திக்கிறார். “என்னையும் என்னுடைய பாதையையும் விளங்கிக்கொண்ட மக்கள் தன்னை ஆதரித்திருக்கிறார்கள். அவர்கள் இப்படியான ஒரு தெரிவைத்தான் விரும்புகிறார்கள். நான் பகிரங்கமாகவே என்னுடைய அணுகுமுறைகளை வெளிக்காட்டி வருகிறேன். என்னுடைய பேச்சுகளும் வெளிப்படையானவை. ஆகவே என்னிடம் ஒளித்து மறைப்பதற்கு எதுவுமே இல்லை“ என்கிறார் சுமந்திரன்.

அவர் இப்படிச் சொல்லி விட்டுச் சும்மா இருக்கவில்லை. தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருக்கிறார். அந்த இயக்கம்தான் முக்கியமானது. அதற்கு அவர் முயன்ற விதம் கவனிக்கத் தக்கது.

சுமந்திரன் கடந்த ஐந்து ஆண்டுகால நேரடி அரசியலிலும் அதற்கு முந்தியகால அரசியல் வரலாற்றிலும் கற்றுக்கொண்டது அல்லது தெரிந்து கொண்டது, இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு இந்தியா மற்றும் சர்வதேச சமூகம் என்ற மேற்குக்கூட்டணியின் வரையறைகள் எவ்வளவு என்பதும் எவை என்பதுமே. இதன்படி அவை கொழும்புக்கு எதிராகச் சிந்திக்காமல், நோகாத நிலையில் ஒரு இணக்க நிலைத் தீர்வையே விரும்புகின்றன. இதற்கு அப்பால் அவை ஒருபோதும் செல்லப்போவதுமில்லை. புதிய தூண்டல்கள் எதையும் செய்யப்போவதுமில்லை. தமது நலன்கள், தேவைகளுக்காக அவ்வப்போது இனப்பிரச்சினையையும் தமிழ்த்தரப்பையும் பயன்படுத்திக் கொள்ளுமே தவிர, புதிய மகிழ்ச்சி எதையும் தமிழர்களுக்குத் தரப்போவதில்லை என்பதுதான் அவருடைய படிப்பினை.

ஆகவே, இந்த நிலையில் தெற்குடன் எப்படி ஒரு உறவையும் தொடர்பாடலையும் பேணுவது? கொழும்பு அரசுடன் எப்படி நடந்து கொள்வது? இனப்பிரச்சினைத் தீர்வுக்கான சாத்தியங்களை இந்த நிலையில் எப்படி உண்டாக்குவது? வெளியுலகத்துடன் என்ன மாதிரியான உறவையும் தொடர்பாடல்களையும் வளர்த்தெடுப்பது என்ற கேள்விகளின் மத்தியில் இருந்து அவர் சிந்தித்தார்.

இதற்குரிய வழிகளை உண்டாக்க வேண்டும் என்பதே அந்த விளைவு. ஆகவே அவர், அதன்படியே சிந்திக்கிறார், செயற்படுகிறார். இப்படிச் செயற்படும்போது உலக ஓட்டத்திற்கமைய ஒரு பொது நிலைநின்று சில விடயங்களைச் செய்யவும் சில விடயங்களைப் பேசவும் வேண்டும். பொதுவெளிக்கு முகம் கொடுப்பதென்பது இலகுவான காரியமல்ல.

அப்படி முகம் கொடுப்பதில் உள்ள நெருக்கடியைப் பற்றி அல்லது அதன் சவாலைப் பற்றி அறிய ஒரு நல்ல உதாரணம்.முஸ்லிம்களை வெளியேற்றிய புலிகள் அதைப்பற்றி முன்வைக்கப்பட்ட எந்த விமர்சனங்களுக்கும் பதிலளிக்கவில்லை. அதைப்போல ரஜீவ் காந்தியின் கொலையைப்பற்றிய கண்டனங்களுக்கும் கேள்விகளுக்கும் அவர்கள் எந்தப் பதிலும் அளிக்கமலே இருந்தனர். ஆனால், கிளிநொச்சியில் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டின்போது அங்கே பிரசன்னமாகியிருந்த பிரபாகரனிடம் இவற்றைப்பற்றிய கேள்விகள் முன்வைக்கப்பட்டபோது அவரால் அவற்றைத் தள்ளி விட முடியவில்லை. எதிர்த்துப் பதிலளிக்கவும் முடியவில்லை. நியாயப்படுத்தவும் இயலவில்லை. பதிலாக தவறையும் குற்றத்தையும் ஒப்புக்கொண்டார்.

பொறுப்புமிக்கவர்கள் பொது அரங்கிற்கு முகம் கொடுக்காத வரை எத்தகைய விமர்சனங்களையும் கேள்விகளையும் சுலபமாகத் தட்டி விட முடியும். ஆனால், பொதுவெளியில் நேருக்கு நேர் முகம் கொடுக்க வேண்டி வரும்போது அப்படிச் செய்ய முடியாது. ஆகவே, சுமந்திரன், தமிழ் ஊடகங்களுடனும் கற்பனாவாதத் தமிழ்த்தேசியப் பொன்வாத்து அணியினருடனும் மட்டும் பேசிக்கொண்டிருக்க முடியாது. அப்பத்தைச் சுட்டு அடுப்படிக்குள் வைத்திருப்பதால் பயனில்லை.

அவர் பொதுவெளியில் பேசும் நபராக – முக்கியஸ்தராக இருப்பதால் அதற்குரிய முறையில் தன்னையும் தன்னுடைய கருத்துகளையும் செயற்பாடுகளையும் ஜனநாயக அடிப்படையில் முன்வைக்க வேண்டும். அப்படி வகுத்துக்கொள்ள வேண்டும். அவர் அதைத்தான் செய்கிறார். தமிழ்ச் சூழலுக்கு ஜனநாயகம் கசப்பான ஒரு பானம். அது அதை விசமாகவே கருதிக்கொண்டிருக்கிறது. ஜனநாயகம்தான் சிறந்த ஒளடதம் என உலகம் நம்புகிறது. தமிழர்கள் அதை ஒரு பொல்லாத உயிர்கொல்லிப் பிசாசு என வேறுவிதமாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். புலிகள் கூட இப்படியான ஒரு சிந்தனை வரட்சியானால்தான் தங்களுடைய வெற்றிகளையும் தியாகங்களையும் சாதனைகளையும் முப்பதாண்டுகால உழைப்பையும் பஞ்சாகப் பறக்க விட்டுவிட்டுத் உயிர்ப்பலியாகினார்கள்.

ஜனநாயகம் ஒரு மீட்புச் சக்தி என்பதை உணரத்தவறியதன் விளைவாக ஒரு பேரியக்கம் அழிந்து போனதைக்கூட தமிழ்ப்பொன் மூளைகளால் கண்டுணர முடியவில்லை. பொன்வாத்துமுட்டைக் கனவு மற்ற எல்லாவற்றையும் மறக்கடிக்க வைத்து விட்டது.

சுமந்திரன்தான் பல தரப்பினரோடும் பேசும், பேசக்கூடிய ஒருவராக – பல தரப்புகளும் பேச விரும்பும் ஒருவராக இருக்கிறார். அதற்குக் காரணம் அவர் ஜனநாயகத் தளத்தில் செய்பட முற்படுகிறார் – செயற்படுகிறார் என்பதுதான்.

இரண்டாவது, அவர்தான் இன்று பலருடனும் தொடர்புகளை மேற்கொள்வதால் பல தரப்பினரும் பல்வேறு விதமான கேள்விகளையும் கேட்பார்கள். பல விடயங்களைக் குறித்தும் உரையாடுவார்கள். ஆகவே அவற்றுக்கும் அவர் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.

இதே பிரச்சினை புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் பாலசிங்கத்துக்கும் வந்தது என்பதை முன்னே குறிப்பிட்டிருக்கிறேன். அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த முற்பட்ட வேளை பலருடைய கேள்விகளையும் நேரில் சந்திக்கும்போதுதான் ரஜீவின் கொலை ஒரு துன்பியல் நிகழ்வு எனவும் முஸ்லிம்களின் வெளியேற்றம் வருத்தப்பட வேண்டிய – மன்னிப்புக் கோரப்பட வேண்டிய ஒன்று எனவும் கூற வேண்டி வந்தது.

எனவே, நாங்கள் எங்களுடைய பிரச்சினையைக் குறித்து உரையாடும்போது எங்களிடமுள்ள குறைபாடுகளையும் தவறுகளையும் நிவர்த்திக்கத் தயாராக இருக்கிறோம். நாங்கள் ஒரு ஜனநாயகத்தளத்தை நிர்மாணிப்பதில் ஆர்வமாக உள்ளோம் என்று சொல்ல வேண்டியிருப்பது தவிர்க்க முடியாதது. அப்படி வலியுறுத்துவதில் இருந்துதான் மற்றவர்களையும் அந்தத் தளத்தை நோக்கி அழைக்க முடியும்.

“பொப்பி மலர்களைச் சூடிக்கொண்டு, நான் உங்கள் படை வீரர்களைக் கௌரவிக்கும் நிகழ்வுக்கு வந்திருக்கிறேன். அதைப்போல நீங்களும் எங்கள் மறைந்த வீரர்களைக் கௌரவப்படுத்தும் நிகழ்வை மதிக்க வேண்டும்” என்று சிங்களச் சமூகத்தை நோக்கியும் அரசை நோக்கியும் சுமந்திரன் கேட்டது இங்கே கவனிக்கத்தக்கது.

“இப்படி நான் வரும்போது எனக்கும் என்னுடைய தமிழ்மக்களிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால், அதைக் கடந்தே நான் ஒரு நல்ல சமிக்ஞையைக் காட்ட விரும்பினேன். அதைப்போல உங்களுக்கு வரக்கூடும் என்ற அச்சத்தை நீங்கள் கடந்து வரத்தான் வேணும்” என்ற அணுகுமுறை ஒரு இராஜதந்திர நடவடிக்கையே.

சரி, இப்படியெல்லாம் பல விட்டுக்கொடுப்புகளைச் சுமந்திரன் செய்தாலும் சிங்கள இனவாதம் அதற்கு மதிப்பளிக்குமா? அரசாங்கம் இணங்கி வருமா? நம்பத்தகுந்த காரியங்கள் நடக்குமா? இந்தத் தனிநபர் இணக்கத்தினால் எட்டப்படும் நன்மைகளின் அளவு என்ன?

இதைப்போல ஆயிரம் கேள்விகள் உண்டு.

இவற்றைத் தனியாக நாம் ஆராய வேண்டும். உண்மையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு எப்படி அமையவேண்டும் என்று சிந்திப்பது எவ்வளவு முக்கியமானதோ அவ்வளவு அதைச் சாத்தியப்படுத்துவதற்கான அணுகுமுறைகளைப் பற்றிச் சிந்திப்பதும் அவசியமானது. ஆனால், இதைப்பற்றித் தமிழில் யாரும் சிந்திப்பதில்லை. அப்படி ஒன்று இருப்பதாகவே பலரும் கருதிக்கொள்வதில்லை.

இன்றைய உலக யதார்த்தத்தில் முரட்டுத்தனத்துக்கும் ஒற்றைப்படைத்தன்மைக்கும் இடமேயில்லை. இதை நாமும் அனுபவத்தில் கண்டிருக்கிறோம். இப்பொழுது நாம் தீர்வு காண முயற்சிப்பது ஜனநாயக வழிமுறையின் ஊடாக. அப்படியென்றால் அதற்கான ஒழுங்குகளின் வழியேதான் அதைச் செய்ய முடியும்.


நன்றி தேசம்நெற்


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com