Wednesday, November 25, 2015

பிரெஞ்சு அரசாங்கத்தின் அவசரகால நெருக்கடி நிலை மீதான சட்டம- சோதா, ஜனநாயக உரிமைகளை அச்சுறுத்துகிறது! By Anthony Torres

செவ்வாயன்று பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி (PS) செய்தி தொடர்பாளர் Stéphane Le Foll, அவசரகால நெருக்கடி நிலையை "நவீனப்படுத்துவதற்காக", அரசியலமைப்பை மாற்றும் சோசலிஸ்ட் கட்சி சட்டமசோதாவின் முதல்கட்ட விபரங்களை வெளியிட்டார்.

நவம்பர் 13 அன்று பாரீஸில் ISIS (ஈராக் மற்றும் சிரியாவிற்கான இஸ்லாமிய அரசு) பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட மற்றும் அவசரகால நெருக்கடி நிலை கொண்டு வரப்பட்ட, Le Foll அறிவித்த கொடூரமான முறைமைகள் பிரான்சின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை அச்சுறுத்துகின்றன.

உள்துறை மந்திரி பேர்னார்ட் கசெனேவ் (Bernard Cazeneuve) மற்றும் பிரெஞ்சு பிரதம மந்திரியும், முன்னாள் உள்துறை மந்திரியாக இருந்தவருமான மானுவேல் வால்ஸ் ஆல் நேற்று பிரெஞ்சு மந்திரிசபையில் முன்வைக்கப்பட்ட அந்த சட்டமசோதா, நேரடியாக பொலிஸ் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு படைகளிடமிருந்து வெளி வருகின்றது.

இந்த முன்மொழியப்பட்ட திருத்தங்கள் பாதுகாப்பு படைகளுக்கு நிறைய அதிகாரங்கள் வழங்குகின்றன. அங்கே "பொது ஒழுங்கிற்கு" சாத்தியமான அச்சுறுத்தல் நிலவுகிறது என்ற அரசின் வெறும் வலியுறுத்தலின் அடித்தளத்திலேயே, பொலிஸால் அமைப்புகளைக் கலைக்க முடியும், மக்களை வீட்டுக் காவலில் வைக்க முடியும் மற்றும் அவர்களது வீடுகளைச் சோதனையிட முடியும். இந்த முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு முறைமைகள் பிரத்யேகமாக பயங்கரவாதத்தை மட்டும் இலக்கில் வைக்கவில்லை. உண்மையில், “பயங்கரவாதம்" என்ற பதமே Le Foll முன்வைத்த வாசகங்களில் ஒருமுறை கூட காணப்படவில்லை.

இது அதிகாரிகள் விரும்பாத வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் அல்லது கூட்டங்களை ஒழுங்கமைக்கும் எந்தவொரு முயற்சிகளையும் தடுக்கும் மற்றும் தண்டிக்கும் உரிமையை பாதுகாப்பு படைகளுக்கு வழங்குகிறது.

Le Foll இன் அறிவிப்பின்படி, “வீட்டுக்காவல் நடவடிக்கை முறை நவீனப்படுத்தப்படுகிறது, ஒருவரது நடவடிக்கைகள் பாதுகாப்பு மற்றும் பொதுஒழுங்கிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கருதுவதற்கு சீரிய காரணங்கள் இருந்தால் அந்த நபர் வரையிலும் அது விரிவடைகிறது. வீட்டுக் காவலில் வைக்கப்படும் நபர், பொதுஒழுங்கிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தயாரிப்பு செய்பவர்களாக சந்தேகிக்கப்படும் நபர்களுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு கொள்வதிலிருந்தும் தடுக்கப்படலாம்.”

அவர்களது வீட்டுக் காவல் குறித்து சவால் விடுக்க உதவும் நிர்வாக கமிட்டிகளையும் இந்த முன்மொழியப்பட்ட திருத்தம் நீக்குகிறது. இப்போது அவர்களின் நிலைமைக்கு சவால் விடுக்க வீட்டுக் காவலின் கீழ் வைக்கப்படுபவர்களுக்கு இருக்கும் ஒரே வழி, நீதிமன்றங்களில் ஒரு நீண்ட போராட்டம் நடத்துவது தான்.

அதற்கும் கூடுதலாக, "வீட்டுக் காவலின் கீழ் இருப்பவர்களை உள்ளடக்கி உள்ளதும் மற்றும் பொதுஒழுங்கிற்கு எதிராக கடுமையாக பொதுஒழுங்கை மீறும் நடவடிக்கைகளைத் தூண்டும் அல்லது பங்கெடுக்கும், அதற்கு உதவும் அமைப்புகள் அல்லது குழுக்களைக் கலைக்கவும்" அச்சட்டம் அனுமதிக்கிறது.

Le Foll இதையும் சேர்த்துக் கொண்டார்: “சகல தேடல் நடவடிக்கைகள் குறித்தும் அரசு வழக்கறிஞருக்குத் தெரிவிக்கப்படும், அதற்கும் கூடுதலாக ஒரு பொலிஸ் அதிகாரி முன்னிலையில் அது நடத்தப்படும். தேடல் நடவடிக்கைகளின் போது, பொலிஸ் படமெடுக்கலாம் மற்றும் எந்த ஊடகங்களிலும், கணினி அமைப்பு அல்லது சாதனத்திலும் தரவுகளைச் சேகரிக்கலாம்.”

அவசரகால நெருக்கடி நிலையை உள்ளடக்கிய தற்போதைய 1955 சட்டம் ஆயுதங்களைப் பறிமுதல் செய்வதற்கு மட்டுமே அனுமதிக்கிறது. பத்திரிகை செய்திகளின்படி, சோசலிஸ்ட் கட்சியின் திட்டம் கணினிகள், செல்போன்கள் மற்றும் ஏனைய டிஜிட்டல் ஊடகங்களைக் கைப்பற்ற அனுமதிக்கும். அது நவீன தகவல்தொடர்பு வழிவகைகளைக் கொண்டு பரந்த உளவுபார்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அனுமதிக்கும்.

Les Échos இன் செய்திப்படி, “அந்த மூலவாசகங்கள், குறிப்பாக தேடல் நடவடிக்கைகளைப் பிரயோகிக்கக்கூடிய பல சூழல்களை விரிவாக்குவதன் மூலமாக, அவற்றை மேற்கொள்வதை எளிமையாக்குகிறது. அது சாத்தியமானளவிற்கு நாளொன்றுக்கு நான்கு முறை அவர்களை பொலிஸ் முன் ஆஜராகவும் மற்றும் அவர்களது கடவுச்சீட்டை ஒப்படைக்கவும் செய்வதை அவசியமாக்குவது போன்ற கைதிகளின் கட்டுப்பாடு மீதான பல்வேறு நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கக்கூடும்.”

அந்த முன்மொழியப்பட்ட திருத்தம் இன்னும் நிறைய பிற்போக்குத்தனமான முன்னேற்பாடுகளைக் கொண்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான சண்டையில் சேவைகள் "புதிய தொழில்நுட்பங்களின் எல்லா வழிவகைகளையும் பிரயோகிக்க அதிகாரம் கொண்டிருக்கும்." பயங்கரவாதத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட இரட்டை குடியுரிமை கொண்ட பிரஜைகளின் பிரெஞ்சு குடியுரிமை இரத்து செய்யப்பட்டு, பிரான்சிலிருந்து வெளியேற்றப்படுவார் என்று பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டு அறிவித்தார். பொலிஸ்காரர்கள் சுய-பாதுகாப்புக்கான உரிமையை இன்னும் பரந்தளவில் பயன்படுத்தலாம், அது, அவர்களது ஆயுதங்களை இன்னும் அதிக ஆக்ரோஷத்துடன் பயன்படுத்த அவர்களை அனுமதிக்கிறது.

பிரெஞ்சு அரசியலமைப்பில் அதுபோன்றவொரு திருத்தம், பயங்கரவாதத்தை இலக்கில் வைக்கவில்லை மாறாக "பொதுஒழுங்கை" அச்சுறுத்தும் எந்தவொரு தொந்தரவையும் இலக்கில் வைக்கிறது, அது பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தால் உந்தப்படவில்லை. ISIS ஆல் நடத்தப்பட்ட அட்டூழியங்கள், ஒட்டுமொத்த மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான தாக்குதல்களுக்கு ஒரு சாக்காக சேவையாற்றுகிறது.

2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர் பரந்த பொருளாதார பொறிவின் காரணமாக சமூக ஒழுங்குமுறை சர்வதேச அளவில் ஆழமாக மதிப்பிழந்துள்ளது, போர் மற்றும் சமூக சமத்துவமின்மை அதிகரித்துள்ளது.

ஆளும் வட்டாரங்கள் மற்றும் செல்வசெழிப்பான குட்டி முதலாளித்துவம் மத்தியில் மேலோங்கியுள்ள மனோபாவம், பிரான்சின் வர்க்க கட்டமைப்பு குறித்து சமூகவியலாளர் எமானுவேல் டோட் இன் சமீபத்திய நூலின் தலைப்பான ஜனநாயகத்தை அடுத்து (After Democracy) என்பதிலேயே காணலாம்.

சோசலிஸ்ட் கட்சி பதவியேற்றதற்குப் பின்னரில் இருந்து சமூக நிலைமை மேற்கொண்டும் சீரழிந்துள்ளது, மற்றும் சோசலிஸ்ட் கட்சியின் சிக்கனத் திட்டங்களும் போர்-ஆதரவு நடவடிக்கைகளும் இன்னும் கூடுதலாக வர்க்க பதட்டங்களைக் கூர்மையாக்கி உள்ளன.

கடந்தாண்டு காசாவிற்கு எதிராக இஸ்ரேல் அரசால் நடத்தப்பட்ட போருக்கு எதிரான ஒரு அமைதியான ஆர்ப்பாட்டத்திற்குத் தடைவிதிப்பதென்ற ஒரு அசாதாரணமான முடிவை சோசலிஸ்ட் கட்சி ஏற்கனவே எடுத்திருந்தது. அதன் மீதான ஆழ்ந்த மக்கள்விரோதத்தால் பலவீனப்பட்டு மற்றும் சாத்தியமானளவில் 2017 இல் எதிர்வரவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தல்களின் தோல்வியால் அச்சுறுத்தப்பட்டுள்ள சோசலிஸ்ட் கட்சி, விரக்தியால், மூர்க்கத்தனமான நடவடிக்கைகளை எடுக்க தயாராகி உள்ளது.

ஆளும் வர்க்கம் அதன் கொள்கைகளுக்கான ஒரே சமூக அடித்தளமாக, இராணுவம் மற்றும் பொலிஸ் படைகளைத் தான் காணும். முன்கூட்டியே "கூடுதல் செலவுகளை" ஏற்று, “நீதித்துறை மற்றும் பாதுகாப்பு படைகளுக்குக் கிடைக்கும் ஆதாரவளங்களைக் கணிசமானளவிற்கு பலப்படுத்த" அவர் விரும்புவதாக பிரெஞ்சு ஜனாதிபதி திங்களன்று தெரிவித்தார். 5,000 பொலிஸ் மற்றும் ஆயுதக் காவல்படை (gendarmes), 1,000 சுங்கத்தீர்வை முகவர்கள், நீதித்துறை மற்றும் குற்ற விசாரணை முறையில் 2,500 நியமனங்கள் ஆகியவை உட்பட 10,000 பாதுகாப்புப்படை நியமனங்களைச் செய்யவும் ஜனாதிபதி ஹோலாண்ட் முன்மொழிந்துள்ளார்.

ஹோலாண்ட் தெரிவித்தார், “பாதுகாப்பு உடன்படிக்கை ஸ்திரப்பாட்டு உடன்படிக்கையை ஒன்றுமில்லாது ஆக்குகிறது,” அது வரவு செலவு திட்டக்கணக்குப் பற்றாக்குறையை மட்டுப்படுத்துகிறது. உண்மையில், இது, பல்வேறு அமைச்சகங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள வரவு செலவு ஒதுக்கீட்டை தொழிலாளர்களின் சமூக உரிமைகளுக்கு எதிராக அதிகளவில் வக்கிரமான தாக்குதல்களைக் கொண்டு ஈடுகட்டப்படும்.

அங்கே 2019 க்கு முன்னதாக பிரெஞ்சு இராணுவத்தில் எந்த குறைப்பும் இருக்காது, ஆனால் தேசிய பாதுகாப்புப் படையில் இணைய காத்திருப்போர் பட்டியலில் உள்ள சுமார் 59,000 பேர் உள்ளே எடுக்கப்படுவார்கள். தேசிய பாதுகாப்புப்படையின் செயல்பாடுகளுக்கு ஏறத்தாழ 2 பில்லியன் செலவு பிடிக்குமென பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

சோசலிஸ்ட் கட்சியின் அதிகரித்த ஜனநாயக-விரோத கொள்கைகளுக்கு பரவலாக ஊடகங்கள் ஒத்துழைக்கின்றன, அவை பரந்தளவில் பிற்போக்குத்தனமான குட்டி-முதலாளித்துவ அபிப்ராய தொனியை எதிரொலிக்கின்றன.

அவ்விதத்தில், Nouvel Obs க்கு எழுதும் ஒரு சட்ட பேராசிரியரும் மற்றும் சோசலிஸ்ட் கட்சிக்கு நெருக்கமான ஒரு கட்சியான பசுமைக் கட்சியின் ஐரோப்பிய சுற்றுச்சூழல் அமைப்பின் ஓர் அங்கத்தவருமான François Bastien, முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு திருத்தத்தை ஆதரிக்கிறார், இதை அவர் ஒரு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையாக மட்டுமே இருப்பதாக முன்வைக்கிறார்.

Bastien கருத்துப்படி, அரசியலைப்பின் மாற்றமைவானது, "அரசு 'நீண்டகாலத்திற்கு' பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்த்து போராட அனுமதிக்கும் வகையில் "ஒரு 'நெருக்கடிக்கான படைத்துறைசாரா ஆட்சிமுறையை' உருவாக்க நோக்கம் கொண்டிருக்கிறது. ஏனென்றால் குறிப்பாக இது தேசிய உரிமையின் அடித்தளங்களை மீறுவதுடன், அல்லது பொதுவாக ஜிஹாதிஸ்டுகள் என்று சந்தேகத்திற்குரியவர்களை வீட்டுக்காவலில் வைப்பதுடனும் சம்பந்தப்பட்டுள்ளது மற்றும் இவ்வாறாக பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதற்காக, அடிப்படை உரிமைகளைக் கைவிட்ட ஒரு ஆட்சிமுறையை வரையறுக்கிறது, அரசியலமைப்பு திருத்தம் நிச்சயம் அவசியமாகும்,” என்கிறார்.

காங்கிரஸின் முன்னால் ஹோலாண்டினது நடவடிக்கைகளால் பத்திரிகைகள் ஒருமித்து சிலிர்த்துப் போயின. “காங்கிரஸில் ஹோலாண்ட்: சார்க்கோசிக்கு ஜனாதிபதி கண்ணியம் குறித்த ஒரு படிப்பினை" என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரையில், ஹோலாண்டைச் சுற்றி தேசிய ஒற்றுமையில் ஆச்சரியமூட்டும் சவால்கள் உருவாகி வருகின்றன என்று அது வாதிடுகிறது.

நிதியியல் இதழ் எழுதியது: “அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பின்னர் முதல்முறையாக, காங்கிரஸை முகங்கொடுக்கையில், பிரான்சுவா ஹோலாண்ட் இந்தளவிற்கு ஒருபோதும் குடியரசின், பிரான்சின் ஒரு குறிப்பிட்ட கருத்தின் அதிகாரபூர்வத்தன்மைக்கு உருவடிவம் கொடுத்ததில்லை. அரசின் தலைவராக, காங்கிரஸ் பீடத்தில் நின்று கொண்டிருக்கையில், எல்லா நாட்டு பிரதிநிதிகளின் பாராட்டுக்களோடு, அனைவரும் பிரான்சின் தேசிய கீதம் பாடிக்கொண்டிருக்கும் ஒரு சித்திரமாக விளங்கும். … ஐயத்திற்கிடமின்றி, பல பிரெஞ்சு மக்களின் கண்களில், வரலாற்றில் துன்பியலான கூறுபாடுகளால் நிர்பந்திக்கப்பட்டு, அவர் நிறைவான ஜனாதிபதியாகி உள்ளார். முழுமையான ஜனாதிபதியாகி உள்ளார். பரிபூரண ஜனாதிபதியாகி உள்ளார்.”

தேசிய ஒற்றுமைக்கு மற்றும் தலைமை அதிகாரபூர்வத்தன்மை குறித்த இந்த துதிப்பாடல், விச்சி ஆட்சியில் நாஜி-ஒத்துழைப்பாளர்களது பிரச்சாரத்தின் மத்திய கருத்துருவைப் போன்றுள்ளது, இது பிரான்சின் ஜனநாயக உரிமைகள் மீதான ஆழ்ந்த தாக்குதல்களை உள்ளடக்கிய பிற்போக்குத்தனமான ஆளும் வர்க்கத்திற்குள் நிலவும் உணர்ச்சிப் பெருக்கின் உண்மையான பிரதிபலிப்பாக உள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com