Wednesday, November 25, 2015

யார் இந்த சமந்தா பவர் மற்றும் அவர் ஏன் ஸ்ரீலங்காவுக்கு விஜயம் செய்திருக்கிறார்? - சுலோச்சனா ராமையா மோகன்

“ஸ்ரீலங்காவின் விடயத்தில் ஒரு இறையாண்மையுள்ள அரசு அதன் எல்லைக்குsamanthaள் மிகவும் கொடூரமான எல்.ரீ.ரீ,ஈ யினைப் போன்ற ஒரு கிளர்ச்சியாளர்களை கீழடக்குவதற்கு உள்ள உரிமையை பற்றி யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை, ஆனால் அங்கு எழும் கேள்வி என்னவென்றால் அதை நீங்கள் எப்படிச் செய்யப் போகிறீர்கள் மற்றும் யுத்தம் நடத்துவதில் உள்ள சட்ட விதிகளை நீங்கள் அவதானிக்கிறீர்களா என்பதுதான். திரும்பவும் எனது அரசாங்கத்தின் லூயிஸ் ஆர்பர் சர்வதேச நெருக்கடி குழுவின் சார்பாக இங்கு உள்ளார் ஸ்ரீலங்கா பற்றிய அங்குள்ள கள நிலமைகள், நடந்தவை தொடர்பாக பல முக்கிய பணிகளை அவர் நிறைவேற்றியுள்ளார். மீண்டும் எங்களிடம் உள்ள கொள்கைகள் காரணமாக நாங்கள் அவர்கள் பக்கம் நிற்கவேண்டி உள்ளது.

அவர்கள் அங்கிருந்து அகற்றப்பட்ட சம்பவத்தின்போதும் அதன் பின்னரும் அங்கு விபரீதமான பல விளைவுகள் ஏற்பட்டிருக்க முடியும், ஆனால் திரும்பவும் எங்கள் போராட்டங்களை பகுத்தறிவுடன் நியாயப்படுத்தி மற்றும் அவை அடிக்கடி நடப்பதைக் காட்டிலும் அதிக பிணைப்பு உள்ளதாக இருக்கும் என்பதை உறுதி செய்ய நினைக்கிறேன்”. சமந்தா பவர், இனப்படுகொலை மற்றும் பெரும் அட்டூழியங்களை தடுப்பது பற்றிய ஒரு கருத்தரங்கில் தெரிவித்தது, அதேவேளை இவர் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனித உரிமைகள் மற்றும் பன்முக விவகாரங்கள் தொடர்பான சிறப்பு உதவியாளராகவும் பணியாற்றிவருகிறார்.

சமந்தா பவர் ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்காவுக்கான தூதுவராக உள்ளார் மற்றும் அவரது உயர் அந்தஸ்தான பதவி,மனித உரிமைகள் ஆர்வலர் என்கிற அவரது பணியுடன் கைகோர்த்துச் செல்கிறது. 1993 முதல் 1996 வரை அவர் யுகோஸ்லாவிய யுத்தம் பற்றி அமெரிக்க செய்திகள் மற்றும் உலக அறிக்கை, த பொஸ்ரன் குளோப், த எகானமிஸ்ட் மற்றும் த நியு ரிபப்ளிக் போன்றவற்றுக்காக செய்திகள் சேகரிக்கும் ஒரு யுத்த நிருபராக பணியாற்றியிருந்தார்.

குவிய நபர்

அமெரிக்க ஜனாதிபதி பராக் உபாமாவின் ஆர்வமுள்ள பல விடயங்களின் மையப்புள்ளியான ஒரு ஆளாகவும் அவர் கருதப்பட்டார், நிருவாகத்தின் தனித்துவமான புரிந்துணர்வுக்காக மனித உரிமைகள் செயற்பாடுகள்,மனித உரிமைகள் பற்றிய கொள்கைகளில் புலனாய்வு,ஆராய்ச்சி என்பனவற்றை மேற்கொண்டு அதை நிறுவுதல், இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் என்பனவற்றை அவர் கண்காணித்து வந்தார்.

அவர் இன்று நமது நகரத்தில் உள்ளார்

ஸ்ரீலங்காவை சூழ்ந்துகொண்டு அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள அது கடும் பிரயத்தனம் மேற்கொள்ளும் விடயமான இனப்படுகொலை, மனித உரிமைகள் மீறல்கள், மற்றும் மானிடத்;துக்கு எதிரான குற்றங்கள் என்பனவற்றுக்கான எதிரான உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் அவரது நடவடிக்கைகள் காரணமாக ஏற்கனவே அவரது ஸ்ரீலங்காவுக்கான விஜயம், பல முகச் சுழிப்புகள் மற்றும் சந்தேகஙகளை ஏற்படுத்தியுள்ளது.

பிவிதுரு ஹெல உருமய கட்சி செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் உதய கமன்பில அவரது கடந்தவார விஜயம் பற்றி தெரிவிக்கையில் “அது ஒரு மர்மமான விஜயம் அவரது ருவிற்றர் அல்லது முகப்புத்தகம் அல்லது வேறு சமூக ஊடகங்கள் என்பன ஸ்ரீலங்காவுக்கான அவரது வருகையை பற்றி எதுவும் குறிப்பிடாமல் மௌனம் சாதித்துள்ளன” என்றார்.

அமெரிக்க தூதுவர்

அந்த பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில் அவருக்கு அமெரிக்கா முழுவதும் பயணம் செய்வதற்கு உரிமை உள்ளது, அவர் ஐநாவுக்கான அமெரிக்க தூதுவர் என்கிறவகையில் அது நியாயமானதும் கூட.”அவர் தனது நாட்டின் நிலமைகளை ஐக்கிய நாடுகள் சபையில் தெரிவிக்கலாம் அது அவரது வேலை. ஆனால் அவர் ஏன் ஸ்ரீலங்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்? அது ஏனென்றால் அமெரிக்கர்கள் ஸ்ரீலங்கா என்பது தாங்கள் சமீபத்தில் கைப்பற்றிய ஒரு காலனித்துவ பிரதேசம் என்கிற கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் என்பதினாலா? ஸ்ரீலங்காவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக அவர்கள் கருதுகிறார்களா?” என்றெல்லாம் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அவர் வெளிப்படையாகவே இந்தப் பிரச்சினையை தேர்ந்தெடுத்திருக்கிறார் ஏனென்றால் பவர் மனித உரிமைகள் விடயத்தில் ஒரு நிபுணரும் மற்றும் இந்த விடயம் பற்றி உலகமெங்கும் விரிவுரைகளை நடத்திவருபவர். ஆனால் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளதைப் போல, இதில் தங்கியுள்ள உண்மை என்னவெனறால் இந்த பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் முந்தைய ஆட்சியாளார்கள் ஆகியோர், ஒன்றில் தமிழர் பிரச்சினைக்கு ஒரு தீர்வையோ அல்லது சமூக மறுசீரமைப்பையோ கொண்டுவருவதற்கு விருப்பம் இன்றி மேற்கிற்கு எதிராகச் சென்றுள்ளார்கள் மற்றும் அதன ;காரணமாக அதே நபர்கள்தான் மேற்கை இங்கு நடைபோடுவதற்கு வரவேற்றுள்ளார்கள்.

கடந்த காலத்தை கிளறுவது

அவர் கடந்த, நிகழ் மற்றும் எதிர்காலங்களை கிளறக்கூடிய சாத்தியம் உள்ளது என்பதை புறந்தள்ளிவிட முடியாது. முன்பு ஸ்ரீலங்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருநத அமெரிக்க ராஜாங்க உதவிச்செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், புதிய அரசாங்கம் அமெரிக்காவுடன் நெருக்கமாக செயல்பட விரும்புவதைப்போல தெரிகிறது என்று பாராட்டு தெரிவித்திருந்தார், ஆனால் அவர் குற்றம் சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றங்கள் பற்றிய உண்மையை கண்டறியும் பணி தொடர்பான விடயம் பற்றி ஒரு தாக்கத்தையோ அல்லது ஈர்ப்பையோ உருவாக்கவில்லை. கல்வியாளர்கள் மற்றும் சமூக அமைப்புகள்கூட அந்த அம்மையாரது வருகையின்போது மனித உரிமைகள் பற்றிய பிரச்சினைகள் அடிப்படையில் மூடி மறைக்கப்பட்டு விடலாம் என நினைத்தார்கள்.

பவர் பற்றி ஆராய்ந்துள்ள ராஜதந்திரியும் அரசியல் விஞ்ஞானியுமான கலாநிதி தயான் ஜயதிலக சமீபத்தில் தெரிவித்திருப்பது, ராஜபக்ஸ நிருவாகத்தின் முன்னணி குழுவினர், உயர்ந்த அறிவு, பிடிவாதம் மற்றும் நாவன்மை ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்த இந்தப் பெண்மணியை எதிர்த்து நின்றார்கள். அமெரிக்காவுக்கான ஸ்ரீலங்கா தூதுவர் பணிக்கு முற்றிலும் தகுதியற்றவராகவும் மற்றும் ஏமாற்றமளிப்பவராகவும் இருந்த ஜாலிய விக்கிரமசிங்க, கல்வியறிவற்ற முரட்டு தன்மையுள்ள சாஜின் டி வாஸ் குணவர்தன, மற்றும் இதையடுத்து ஆக்ரேஷமும் தன்முனைப்பும் உள்ள கிஷேனுக செனவிரத்ன போன்றோர் அந்த குழுவில் அடங்குவார்கள். ஸ்ரீலங்காவின் ராஜதந்திரம் இந்தக் காலகட்டத்தில்தான் அபத்த நிலைக்கு தள்ளப்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்காவில் பவர்

2010ம் ஆண்டில் பல வெளிநாட்டு பிரதிநிதிகளும் மேற்கொண்ட உண்மையை கண்டறியும் வழக்கமான பணியை போலில்லாது, மைத்திரி – ரணில் அரசாங்கம் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்கு உறுதி வழங்கியதின்படியும் மற்றும் அமெரிக்கத தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியதின் பின்னர், ஸ்ரீலங்காவில் பவரது பிரசன்னம் வலுவானதும் மற்றும் முட்கள் நிறைந்த கடின பாதையாகவும் இருக்கும் என்று நம்பலாம். சந்தேகமின்றி கூட்டு நடவடிக்கை ஐநா பணிக் குழுவினரை ஸ்ரீலங்காவுக்கு கொண்டு வந்ததுடன் யாரும் கால் வைக்கமுடியாத இடங்களுக்கும் செல்ல வழியேற்படுத்தியது.

யுத்தக் குற்ற விசாரணைக்கு தீர்வு காணும் தொழில்நுட்ப அம்சம் தொடர்பாக தாங்கள் இப்போது வேலை செய்து வருவதாக அரசாங்கம் கூறுகிறது, எனினும் இதுவரை அது தெளிவற்றதாகவே உள்ளது. அரசியலமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசியல் விருப்பம் குறைவாக உள்ள நிலையில், அமெரிக்க தீர்மானம் மற்றும் ஒரு உள்நாட்டு தெரிவுமுறை என்பனவற்றின் ஊடாக பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான செயற்பாடுகளுக்கு அரசாங்கம் எவ்வாறு தயார் செய்கிறது என்பதையிட்டு வெளிநாட்டு ராஜதந்திரிகள் வட்டமும் ஒரு குழப்ப நிலையில் உள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தலைமையில் துடிப்பான எதிர்காலமுள்ள புதிய ஸ்ரீலங்காவுக்கான வழியை திறந்து விடுவதில் வெளிநாட்டு தூதரகங்களும் முக்கிய பங்கினை வகித்தன. உண்மையில் அமெரிக்கா மற்றும் லங்கா இணை அனுசரணையுள்ள தீர்மானத்துக்கு ஆதரவாக அவர்கள் வாக்களித்தது இதை பிரதானப் படுத்திக் காண்பிக்கிறது.

வடக்கிற்கு விஜயம்

அமெரிக்க அரசாங்கத்தின் ஐநா பிரதிநிதியான பவருக்கு இப்போது ஐநா நிபுணர்கள் தங்கள் கண்டு பிடிப்புகள் பற்றி அறிவித்திருக்கலாம், மற்றும் அவர் வடக்கிற்கு விஜயம் செய்யும்போது அங்கு அவர் காணாமற்போனவர்களின் குடும்பங்களைச் சந்திக்கும்போது, உதயன் பத்திரிகைக்கு விஜயம் செய்யும்போது மற்றும் காணாமற்போனவர்கள் பிரச்சினைகள் பற்றி உரையாற்றிய பின்னர் ஸ்ரீலங்காவை மீளக்கட்டியெழுப்புவதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது அவருக்கு உணர்த்தப்பட்டதின் பின்னர் அவருக்கு ஐநா குழுவினரது கண்டுபிடிப்புகள்மீது மேலும் நம்பிக்கை உண்டாகலாம்.

அவரது வருகையை பற்றி அமெரிக்க ராஜாங்க திணைக்களம் சொல்லியிருப்பது,” ஸ்ரீலங்காவில் இருக்கும்போது தூதுவர் பவர் உள்ளுர் அரசாங்க அதிகாரிகள் ,அமைப்புகள், மற்றும் மோதலினால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் ஆகியோரைச் சந்திப்பதற்காக வடக்கு நகரமான யாழ்ப்பாணத்துக்கு பயணம் செய்யவுள்ளார். அங்கு அவர் போரின்போது தாக்குதலுக்கு இலக்காகிய உதயன் செய்திப் பத்திரிகையின் தலைமையகத்துக்கு விஜயம் செய்து உள்ளுர் ஊடக உறுப்பினர்களை சந்திப்பார். தூதுவர் பவர், மோதலின்போது கணிசமானளவு சேதங்களுக்கு உள்ளாகிய ஒஸ்மானியாக் கல்லூரியின் புதிய கட்டிடத் தொகுதியின் திறப்பு விழாவில் பங்கேற்பார்;, அதேபோல யாழ்ப்பாண நூல்நிலையத்துக்கும் விஜயம் செய்வார், அங்கு அவர் பண்டைய தமிழ் கையெழுத்துப் பிரதிகளை உள்ளுரில் மீளப் புதுப்பிக்கும் பணிக்கான அமெரிக்காவின் ஆதரவை அறிவிப்பார்” என்று.

பவரின் வடக்கிற்கான விஜயம், அரச செயற்பாட்டாளர்களின் கரங்களினால் துயரங்களுக்கு, அச்சுறுத்தல்களுக்கு மற்றும் காணாமற்போதலுக்கு ஆளான சமூகத்தினை மீளக் கட்டியெழுப்பவதற்கு அந்த அம்மையாருக்குள்ள ஆழமான ஆர்வத்தை வெளிக்காட்டுகிறது.

அரசியல் கைதிகள்

கடந்த வெள்ளியன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சில அரசியற் கைதிகள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தாலும், வவுனியாவில் உள்ள குற்றவியல் புலனாய்வுப் பிரிவுக்கு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சமூகமளிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டிருப்பது வன்னி மக்களிடையே மீண்டும் ஒரு அச்சமான மனநிலையை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியிருப்பதையடுத்து, அந்த அரசியற் கைதிகளின் சங்கடத்தையும் போக்க அவர் முயலக்கூடும்.

அமெரிக்கா, ஸ்ரீலங்காமீது ஆர்வம் காட்டுவது, சீனாவாலும்கூட கவனிக்கப்படும் கிழக்கு – மேற்கு கடற்பாதையில் தனது மூலோபாய நிலைப்பாடுகளை பலப்படுத்துவதற்கே என்று கூறப்படுவதையும் மீறி எழுந்துள்ள கேள்வி, அமெரிக்கா மற்றும் ஸ்ரீலங்கா இணை அனுசரணையான தீர்மானம், பிரதானமாக உலகளாவிய ரீதியில் வாழும் தமிழர்கள் மற்றும் ஸ்ரீலங்காவை சேர்ந்த சில தீவிர மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோர் ஆர்வத்துடன் உற்றுக் கவனித்துவரும் போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் உள்ள உண்மையை கண்டறியும் விடயத்தில் எந்த ஒரு திருப்பத்தையும் ஏற்படுத்தாமல் வெறுமே விட்டுவிடும் புதிய வடிவத்தை பெற்றுவிடுமா என்பதுதான்.

முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இனப்படுகொலை மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக கொண்டுள்ள கடுமையான நிலைப்பாடு, மற்றும் ரி.என்.ஏ யிலுள்ள சில குறிப்பிட்ட அங்கத்தவர்களை நோக்கிய திடீர் வெறுப்பு காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் தோன்றியுள்ள மோதல் சம்பந்தமாகவும் பவரின் உண்மையை கண்டறியும் யாழ்ப்பாண விஜயத்தின்போது பிரதானப்படுத்திக் காட்டப்படலாம்.

ஜூன் 2010ல் அவரது உண்மையைக் கண்டறியும் உத்தியோகபூர்வ கொழும்பு விஜயத்தின்போது, அவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் இங்கு மனித இழப்புகளே ஏற்படவில்லை என்று உருக்கமாக மறுதலித்ததுடன் மற்றும் அநேகமாக நாட்டில் உள்ள எல்லா மனித உரிமை மீறல்களுக்கும் குற்றம் சொல்லவேண்டியது எல்.ரீ.ரீ,ஈ யைத்தான் எனக்கூறிய அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரைச் சந்தித்திருந்தார்.

அமெரிக்க வெளியுறவுக் கொள்கை

வெளிப்படையாகவும் மூடிமறைக்காமல் திட்டவட்டமாகவும் பேசும் பவர், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை குறிப்பாக அநேகமான பெரும் அட்டூழியங்களை அமெரிக்கா கண்டும் காணாமல் இருப்பதாக தனது நூலான ‘நரகத்தில் இருந்து ஒரு பிரச்சினை: அமெரிக்கா மற்றும் இனப்படுகொலை யுகம்’ என்கிற நூலில் அப்பட்டமாக விமர்சித்திருந்தார், அமெரிக்கா வேண்டுமென்றே இனப்படுகொலையை அலட்சியம் செய்வதாக குறிப்பிடப்பட்டிருந்த அந்த நூல், ஜே அந்தனி லூக்காஸ் புத்தகப் பரிசு மற்றும் 2003ம் ஆண்டுக்கான பொதுவான கற்பனை அல்லாத புத்தகங்களுக்கான புலிட்சர் பரிசையும் வென்றிருந்தது. மேலும் அவர் ஹிலாரி கிளின்டனை ஒரு அரக்கி என்றும் அழைத்திருந்தார், பின்னர் அதற்காக அவரிடம் மன்னிப்புக் கோரினார்.

கடந்த ஒக்ரோபரில் மெக்ஸிக்கோவில் நடைபெற்ற “திறந்த அரசாங்க பங்காளிகளுக்கான உலகளாவிய மாநாட்டில் (ஓ.ஜி.பி)” அவர் உரையாற்றுகையில் ராஜபக்ஸ ஆட்சியைப் பற்றி சமீபத்தில் பேசுவதற்கான சிறந்த வாய்ப்பை அவர் ஏற்படுத்திக் கொண்டார். கிட்டத்தட்ட அவரது பாதிப் பேச்சு ஸ்ரீலங்காவை உள்ளடக்கியதாகவே இருந்தது. ராஜபக்ஸவின் நிருவாகத்தை பலமாகத் தாக்கிய அவர் அந்த ஆட்சி பெருமளவு பிரிவினை மற்றும் பயம் என்பனவற்றின் ஊடாகவே நடத்தப்பட்டது மற்றும் அதை விமர்சிப்பவர்களை துன்புறுத்தவும் செய்தது என்று சாடியிருந்தார்.

ராஜபக்ஸ நிருவாகம்

ராஜபக்ஸவின் நிருவாகத்தின்போது தலைமறைவாக இருந்த தொழிலாளர் அமைப்பாளர் ஒருவர் மீண்டும் வேலைக்குத் திரும்பியபோது சொன்னது நான் செய்பவைகளையிட்டு இனி அச்சம் என்னை குறிவைக்காது என்று. தனது செய்திகளுக்காக தொடர்ந்து தொந்தரவுகளுக்கு உட்பட்டுவந்த ஊடகவியலாளர் ஒருவர் அச்சம் அகன்று விட்டது எனத் தெரிவித்தார், என்று பவர் தனது உரையில் மேலும் கூறினார்.

அவர் மேலும் அறிவித்தது, ஸ்ரீலங்கா உட்பட ஒ.ஜி.பி அங்கத்தவர்களுக்கு வரும் வருடங்களில் , யாருடைய முயற்சி, ஊழலுக்கு எதிரான,வெளிப்படையான அல்லது பொறுப்புக்கூறலை வாதாடுவதில் ஓ.ஜி.பி யின் உணர்வினை உள்ளடக்கியிருக்கிறதோ அத்தகைய சீர்திருத்தவாதிக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஒரு பரிசினை வழங்குவார் என்று.

ஒரு ஐரிஷ் புலம்பெயர்ந்தவரான பவர் சமூகத்தில் வித்தியாசத்தை ஏற்படுத்த விரும்பும் தொண்டு நிறுவனங்கள், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறார் மற்றும் அவர்கள்தான் அவரது விருப்பமான விடயங்கள். ஸ்ரீலங்காவுக்கு வருவதற்கு முன்பு நேற்று அவர் இந்தியாவுக்கு விஜயம் செய்தது ஒரு முன்னுதாரணமாக உள்ளது, அங்கு அவர் ஆர்வலர்கள் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளைச் சந்தித்துள்ளார் மற்றும் அவர் ருவிற்றரில் எழுதுவதுடன்; முகப் புத்தகத்தில் தொடர்ச்சியாக மனித உரிமைகள் தொடர்பாக நடப்பவைகளை தேடியும் வருகிறார்.

சிரிய மோதல்

சிரிய மோதலின்போது நடத்தப்பட்ட அட்டூழியங்களை முறியடிக்க அல்லது குற்றவிசாரணை நடத்த தவறிய ஐக்கிய நாடுகள் கட்டமைப்பையும் அவர் விமர்சித்துள்ளார். ஜனாதிபதி ஒபாமாவை லிபியாவில் ராணுவ ரீதியாக தலையீடு செய்வதற்கு இணங்க வைப்பதில் முக்கிய நபராக இருந்தவர் பவர், அந்த அதே பவர்தான் வெகுஜனங்கள் மீதான அட்டூழியங்களுக்கு பதிலடி கொடுப்பதற்காக,அமெரிக்காவுக்கு எல்லா உபகரணங்களையும் மற்றும் அதற்கான பெட்டிகளையும் (இராஜதந்திர, பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ) பரிசோதிக்கும் தார்மீக கடப்பாடு உள்ளது என வாதிட்டார், மேலும் இனப்படுகொலையை தடுப்பதற்கு இராணுவத் தலையீடு சில சூழ்நிலைகளில் பொருத்தமாக இருக்கும் என்றும் வாதாடினார்.

சிவில் உரிமைகளின் வலுவான ஆதரவாளரான அமெரிக்க பேராசிரியர் அலன் டேர்சோவிற்ஸ், ஐநா தூதுவராக பவரை நியமித்தபோது சொன்னது, “ பவரின் தெரிவு மிகவும் பொருத்தமானது. மனித உரிமைகள் மீதான ஐநாவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவதற்கு அவரிடம் உண்மையான நம்பகத்தன்மை உள்ளது” என்று. அதுதான் பவரின்(சமந்தா) பவர் மற்றும் ஸ்ரீலங்கா விரும்பினாலோ அல்லது விரும்பாவிட்டாலோ அடுத்த சில வருடங்களுக்கு அது அந்த பெண்மணியை சமாளித்தே ஆகவேண்டும்.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com