Saturday, February 14, 2015

ரணில் - மஹிந்த கூட்டு குறித்து மைத்திரி சந்தேகம்!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தும் நோக்குடன் ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஸவுடன் கூட்டணி ஒன்றை ஏற்படுத்தி வருகிறார் என்ற நியாயமான சந்தேகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் எழுந்துள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதியாக தெரிவாகி ஒரு மாதம் நிறைவுற்றுள்ள நிலையில் அரசாங்கம் ஊடக கண்காட்சி காட்டுகிறதே தவிர செயற்பாட்டில் ஒன்றும் நடக்கவில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதால் ஜனாதிபதிக்கு இந்த சந்தேகம் எழுந்துள்ளது.

கண்ணுக்கு தெரியும் அளவு கடந்த அரசாங்கத்தில் குற்றம் புரிந்தவர்கள் குறித்த சாட்சிகள் இருக்கும் போது அவர்கள் கைது செய்யப்படாமல் இருப்பதால் விருப்பமின்றியேனும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருந்து செயற்பட வேண்டுடிவரும் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் அமைதி, கிறிஸ்தவ விவகார மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக ஜோன் அமரதுங்கவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமித்தமை ராஜபக்ஸக்களை பாதுகாக்கவா என்ற கேள்வி ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் இடையே எழுந்துள்ளன. இந்நிலை தொடர்ந்தால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தவிர்க்க முடியாது என ஜனாதிகதி ஆலோசகர்கள் ஜனாதிபதியிடம் கூறுகின்றனர்.

இதேவேளை பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை ஜனாதிபதி 12ம் திகதி சந்தித்தார். அதன்படி கடந்த அரசாங்கத்தில் ஊழல் மோசடி குற்றச்சாட்டில் சிக்கியவர்களை பொலிஸார் கைது செய்ய நடவடிக்கை எடுக்காவிடின் ஜோன் அமரதுங்க வசமுள்ள பொலிஸ் அதிகாரத்தை தனக்கு கீழ் கொண்டுவர ஜனாதிபதிக்கு நேரிடும் என்பது தெளிவாகப் புலப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com