Saturday, February 14, 2015

இலங்கை தேர்தல் முடிவும் அதன் சர்வதேச தாக்கங்களும். Deepal Jayasekera

மஹிந்த இராஜபக்ஷவை வெளியேற்றி மைத்ரிபால சிறிசேன வெற்றி பெற்ற கடந்த வியாழக்கிழமை நடந்த இலங்கை தேர்தலின் முடிவுகள், இலங்கை மற்றும் தெற்காசியாவில் மட்டுமன்றி உலகம் பூராவும் தொழிலாள வர்க்கத்திற்கு எச்சரிக்கை மிகு தாக்கங்களை கொண்டுள்ளது.

முதலில் அது, சீனாவுடனான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராஜதந்திர, பொருளாதார மற்றும் இராணுவ ரீதியிலான மோதல்களிலும் மற்றும் அதற்கு எதிரான போர் தயாரிப்புகளிலும் ஆசியாவில் உள்ள நாடுகளை இழுத்துப் போடுவதற்கு வாஷிங்டன் இடைவிடாது மேற்கொள்ளும் முயற்சிகளை வெளிப்படுத்தியுள்ளது. இரண்டாவதாக, “ஜனநாயகம்” மற்றும் “மனித உரிமைகள்” என்ற மோசடியான பதாகைகளின் கீழ் ஏகாதிபத்திய சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு நேரடியாக வசதியளிக்கும் போலி-இடது போக்குகளின் அரசியல் பங்கையும் கோடிட்டுக் காட்டுகின்றது.

இராஜபக்ஷ அரசாங்கத்தில் இருந்து சிறிசேன வெளியேறியது முதல் வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி (யூஎன்பீ) மற்றும் ஏனைய ஒரு தொகை அரசியல் போக்குகளாலும் ஒரு பொது எதிர்க் கட்சி வேட்பாளராக அவர் அங்கீகரிக்கப்பட்டது வரையும் நடந்தது என்னவெனில், ஒரு அமெரிக்க அனுசரணையிலான ஆட்சி மாற்ற நடவடிக்கையே ஆகும். இதை சிருஷ்டிப்பதில், கிளிண்டன் மன்றத்தின் ஊடாக ஒபாமா நிர்வாகத்துடனும் அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கை நிறுவனங்களுடனும் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பகிரங்கமாக பெரும் பங்காற்றியுள்ளார்.

வாஷிங்டனின் நிலைப்பாட்டில் இருந்து பார்க்கும் போது, இராஜபக்ஷவின் குற்றங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டு போரின்போது பெருந்தொகையான தமிழ் பொது மக்கள் கொல்லப்பட்டமை அல்ல, மாறாக அவரது அரசாங்கம் சீனாவுடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள உறவுகளே ஆகும். சீன அரச நிறுவனங்களிடம் இருந்து அவர் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடுகளாக பெற்றுக்கொண்டுள்ளதோடு, அமெரிக்க மற்றும் இந்திய எதிர்ப்புகளை அலட்சியம் செய்து, இலங்கை துறைமுகங்களுக்குள் சீனாவின் நீர் மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர் கப்பல்கள் வருவதற்கு அனுமதித்ததன் மூலம் இந்து சமுத்திரத்தில் அதன் கடற்படை இருப்பை அதிகரிக்கும் பெய்ஜிங்கின் குறிக்கோளுக்கு உதவி செய்யத் தொடங்கினார்.

இராஜபக்ஷவை வெளியேற்றுவதற்கு அமெரிக்கா திரை மறைவில் மேற்கொண்ட பொறிமுறைகள் தேர்தல் தினத்தன்று வெளிப்படையாகின. இராஜபக்ஷவை தொலைபேசியில் அழைத்த அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெர்ரி, வாக்களிப்பு “வன்முறை மற்றும் அச்சுறுத்தல்கள் இன்றி இடம்பெற” வகை செய்யுமாறும், அவர் தோல்வியடைந்தால் “அமைதியாக ஆட்சி கையளிக்கப்படுவதை உறுதி செய்யுமாறும்” அறிவுறுத்தினார். இலங்கை அரச அதிகாரிகள் மற்றும் இராணுவத்துக்கான செய்தி மிகச் சரியானதாக இருந்தது. சிறிசேன வெற்றி பெறுவதை தடுப்பதற்கான எந்தவொரு முயற்சியும் ஏகாதிபத்திய தலையீட்டை எதிர்கொள்ளும் என்பதே அது.

கடந்த வெள்ளியன்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, வெற்றிகரமான ஆட்சி மாற்றத்தை வரவேற்றார். “ஐக்கிய அமெரிக்கா, சகல இலங்கையர்களுக்காவும் சமாதானம், ஜனநயாகம் மற்றும் சுபீட்சத்தை வளர்ப்பதற்காக ஜனாதிபதி சிறிசேனவுடன் செயற்பட எதிர்பார்க்கின்றது...” என வலியுறுத்தினார்.

சிறிசேன ஆட்சியில் இருத்தப்பட்டதால் ஒரு காலமும் இலங்கை தொழிலாள வர்க்கத்துக்கு சமாதானம், ஜனநாயகம் மற்றும் சுபீட்சம் கிடைக்கப் போவதில்லை. நாடு, சீனவுக்கு எதிரான அமெரிக்க சதி வலையின் இன்னொரு பகுதியாக மாறும். மோசமடைந்து வரும் உலகப் பொருளாதார சரிவு நிலைமையின் கீழ், 26 ஆண்டுகளாக உள்நாட்டு போரில் அமுல்படுத்தப்பட்டு வந்த மற்றும் இராஜபக்ஷவால் விரிவாக்கப்பட்ட ஒடுக்குமுறை சட்டங்கள் மீண்டும் நடைமுறையில் இருப்பதோடு வாழ்க்கைத் தரங்கள் மீது முன்னெப்போதும் இல்லாத கடும் தாக்குதல்களை முன்னெடுக்க அவை பயன்படுத்தப்படும்.

ஜனாதிபதியாக பதிவியேற்றபோது, வாஷிங்டனின் நிகழ்ச்சி நிரலுடன் அணிசேர்வதற்கான தனது தயார் நிலையை சிறிசேன சமிக்ஞை செய்தார். “உலகின் எல்லா நாடுகளுடனும் சினேகபூர்வமான உறவுகளை கட்டியெழுப்புவதன் பேரில் வெளிநாட்டு கொள்கையில் மாற்றம் செய்வதாக” அவர் சபதம் எடுத்தார். அமெரிக்காவின் ஆசியாவில் முன்னிலை கொள்கையின் சூழலில், இதன் அர்த்தம், பெய்ஜிங்கிடம் இருந்து விலகி வாஷிங்டன் மற்றும் பிராந்தியத்தில் அதன் பங்காளிகளான ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவின் பக்கம் திரும்புவதே ஆகும்.

அமெரிக்கத் தலையீடானது, ஆசியா மற்றும் உலகம் பூராவும் இத்தகைய நடவடிக்கைகளை பின்பற்றுகின்றது. 2010ல் சீனாவுடன் மோதிக்கொள்வதற்கு மாறாக நல்லிணக்கத்தை விரும்பியமைக்காக ஜப்பானிய பிரதமர் யுகியோ ஹடோயாமா மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட்டை அகற்றுவதில் வாஷிங்டன் தலையீடு செய்திருந்தது. இரு நாடுகளும் அமெரிக்கத் தலைமையிலான போர் தயாரிப்புகளில் இப்போது முன்னணியில் உள்ளன. அச்சுறுத்தல்கள் மற்றும் நிதி உதவிகள் மூலம் பர்மாவில் இராணுவ ஆட்சி இப்போது அமெரிக்காவின் வழிக்கு கொண்டுவரப்பட்டு, சீன முதலீடுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதோடு இராணுவ உறவுகளும் கீழறுக்கப்பட்டுள்ளன.

கடந்த பெப்பிரவரியில், அமெரிக்காவானது ஜேர்மனியின் ஆதரவுடன் உக்ரேனில் பாசிஸ்டுகள் தலைமையிலான ஒரு ஆட்சி கவிழ்ப்பு சதியை தூண்டி விட்டு ஒரு ஏகாதிபத்திய-சார்பு பொம்மை அரசாங்கத்தை நிறுவியுள்ளது. மாஸ்கோவிலும் தனக்குச் சார்பான அரசாங்கம் ஒன்றை உருவாக்கும் உச்சக்கட்ட இலக்குடன், ரஷ்யாவுடன் ஒரு மோதலை தூண்டிவிடுவதே இந்த சதியின் குறிக்கோளாகும். சீனாவின் வெளிப்படையான சாத்தியமான இராணுவ பங்காளியான ரஷ்யாவை மண்டியிடச் செய்வதற்கான முயற்சியானது, ஆசியாவில் முன்னிலை கொள்கையுடன் பிரிக்க முடியாததாகும். ஆசியாவில் அமெரிக்க செல்வாக்குக்கு சவால் விடவும் வாஷிங்டனின் பூகோள மேலாதிக்கத்துக்கு குழி பறிக்கவும் சீனாவை அனுமதிக்கும் கூட்டணிகள் மற்றும் பூவிசார் செல்வாக்குகளுக்கான சாத்தியங்களைக் கூட அமெரிக்கா விட்டு வைக்கப் போவதில்லை.

இலங்கை தேர்தல் முடிவானது, சீனா எல்லா முன்னரங்குகளிலும் முற்றுகையிடப்பட்டுள்ளது என அதன் அரசாங்கமும் இராணுவமும் செய்துள்ள மதிப்பீட்டை மேலும் பலப்படுத்துவதை மட்டுமே செய்துள்ளதுடன், ஒரு சிறிய சம்பவம் கூட ஒட்டு மொத்த யுத்தத்தை வெடிக்கச் செய்யக் கூடிய ஆபத்தை உயர்த்தியுள்ளது.

போலி இடதுகளான நவ சம சமாஜக் கட்சி, ஐக்கிய சோசலிசக் கட்சி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியும் அமெரிக்க ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கான பொறுப்பை பங்கிட்டுக்கொண்டுள்ளன. உக்ரேனில் ஒரு ஏகாதிபத்திய சதியை “ஜனநாயகப் புரட்சி” என சர்வதேச போலி இடதுகள் பிரகடனப்படுத்தியது போலவே, இலங்கையிலும் அவர்கள் இராஜபக்ஷவின் “சர்வாதிகாரத்துக்கு” எதிரான “ஜனநயாகத்துக்கான” வேட்பாளர் என சிறிசேனவை சித்தரித்தனர்.

இந்த மூன்று கட்சிகளும் தமது சொந்த ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்திய போதிலும், அவர்கள் சிறிசேனவின் அமெரிக்க-சார்பு நிகழ்ச்சிநிரலையிட்டு மௌனமாக இருந்ததோடு அவரது அரசியல் வரலாறு பற்றி இலேசான விமர்சனத்தை மட்டுமே முன்வைத்தன. உள்நாட்டு யுத்தத்தின்போது இழைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமகள் மற்றும் ஜனாநயக உரிமைகள் மீதான கொடூரமான தாக்குதல்களுக்கு இராஜபக்ஷவை போலவே சிறிசேனவும் முழு பொறுப்பாளியாவார்.

ஜனாதிபதி சிறிசேனவின் கீழ் தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினர் எதிர்கொண்ட துன்பங்கள் தணிக்கப்படும் என்ற மாயையை விதைப்பதற்காக இந்த போலி இடது குழுக்கள் தமிழ் மற்றும் முஸ்லிம் முதலாளித்துவ தட்டுக்களுடனும் கூட இணைந்துகொண்டன. தொழிற்சங்கங்களுடன் சேர்ந்துகொண்ட அவர்கள், தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற வறியவர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற போலிக் கூற்றுக்களையும் முன்னிலைப்படுத்தினர். உழைக்கும் மக்கள், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக நிலவிய உண்மையான வெகுஜன அதிருப்தியை, சிறிசேன மற்றும் அவருக்கு ஒத்துழைத்த ஏகாதிபத்திய-சார்பு வலதுசாரி கட்சிகளின் பின்னால் திருப்பிவிடுவதற்கு இந்த குட்டி முதலாளித்துவ சக்திகள் உதவி செய்தன.

போலி இடதுகள், இலங்கையை “காலனியாக்க” முயற்சிக்கும் “ஏகாதிபத்திய சக்தியாக” சீனாவை பண்புமயப்படுத்துவதன் மூலம், அவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் அணிசேர்வதற்கு எந்தளவுக்கு தயாராக உள்ளார்கள் என்பதைக் காணமுடியும். யதார்த்தத்தை மறுபக்கம் திருப்பி, சர்வதேச மூலதனத்துக்கான ஒரு மலிவு உழைப்புத் தளமாக இயங்கும் சீனாவை, சர்வதேச நிதி மூலதனத்தின் மையமான அமெரிக்காவுக்கு சமப்படுத்தி, பின்னர் சீன “விஸ்தரிப்புவாதம்” மற்றும் “ஆக்கிரமிப்பு” என கண்டனம் செய்வதானது வாஷிங்டனின் பாதையில் செல்வதாகும்.

இங்குதான் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோசக) தேர்தல் பிரச்சாரத்தின் முக்கியத்தும் உள்ளது. அது சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் தனது சொந்த வேட்பாளரான பாணி விஜேசிறிவர்தனவை தேர்தலில் நிறுத்தியது. சோசக மட்டுமே போர் ஆபத்து நெருங்கி வருவது குறித்து தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் எச்சரிக்க முயற்சித்ததோடு வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது மேற்கொள்ளப்படும் சமூக எதிர்ப்-புரட்சிக்கு எதிராக ஒரு வேலைத் திட்டத்தை அபிவிருத்தி செய்தது. அது சிறிசேன மற்றும் இராஜபக்ஷ முகாங்கள் மற்றும் போலி-இடது போக்குகள் உட்பட முதலாளித்துவத்தின் அனைத்து பகுதியினரில் இருந்தும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்துக்காக போராடியது.

அடுத்து வரும் காலத்தில் தீர்க்கமான பிரச்சினை, தொழிலாள வர்க்கத்தினுள் சோசலிச மற்றும் சர்வதேசிய நனவை அபிவிருத்தி செய்வதும், ஆசியா மற்றும் உலகம் பூராவும் சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை கட்டியெழுப்புவதுமாகும். இதுவே, போர் மற்றும் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையின் தோற்றுவாயான முதலாளித்துவம் மற்றும் அது வேரூன்றியுள்ள தேசிய-அரச அமைப்பு முறைக்கும் முடிவு கட்டுவதற்காக ஒரு சக்திவாய்ந்த போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான அடிப்படையாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com