அத்துமீறி இலங்கைக்குள் ஊடுருவ முற்பட்டால் கைது செய்வோம்! கடற்படை தயார் நிலையில்!
தமிழகத்தில் போராட்டம் நடத்துவோர் இலங்கைக்குள் ஊடுருவ முற்பட்டால் கைது செய்யப்படுவார்கள் என கடற் படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
இலங்கைக்குள் அத்துமீறி நுழையும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை எதிர்த்து இந்திய மீனவர்கள் இலங்கைக்கெதிராக போராட்டம் நடத்தியவாறு இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறப் போவதாக எச்சரிக்கை விடுத்திருப்பது இது மூன்றாவது தடவையாகுமென சுட்டிக் காட்டிய கொமாண்டர், இவை வெறும் வாய்வார்த்தை மாத்திரமே. அதனை அவர்களால் செயற்படுத்த முடியாதெனவும் கூறினார்.
தமிழக மீனவர்கள் இலங்கையில் கைதுசெய்யப்படுவதனை எதிர்த்து இந்தியாவில் போராட்டம் நடத்தி வரும் மீனவர்கள் ஓகஸ்ட் 02 இல் படகுகளில் வெள்ளைக் கொடி கட்டி குடும்பத்துடன் இலங்கையில் அகதிகளாக தஞ்சம் புகும் போராட்டத்தினை திட்டமிட்டபடி நடைமுறைப்படுத்த விருப்பதாக பகிரங்க அறிவிப்பு விடுத்துள்ளனர்.
இது குறித்து கடற்படை பேச்சாளர் விளக்கமளிக்குகையில் :-
இதற்கு முன்னரும் இரு தடவைகள் இந்திய மீனவர்கள் கச்சதீவில் அத்துமீறி குடியேறப் போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தனர். இருப்பினும் அவர்களால் அதனை நடைமுறைப்படுத்த முடியாமல் போனது. இந்திய பொலிஸார், இரா ணுவம் மற்றும் கரையோர காவற் படையினர் இந்திய மீனவர்களின் தன்னிச் சையான தீர்மானங்களை மேற்கொள்ள ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள்.
அவர்களை மீறி தமிழக மீனவர்களால் வெள்ளைக் கொடியுடன் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறுவதென்பது இயலாத காரியமாகும். அதனையும் மீறி அவர்கள் வருவார்களாயின் இலங்கையின் சட்ட திட்டங்களுக்கமைய அவர்களைக் கைது செய்வது உறுதியெனவும் அவர் கூறினார்.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையத்தின் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்று நடைபெற்ற போது செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக் குகையிலேயே கொமாண்டர் இவ்வாறு கூறினார்.
0 comments :
Post a Comment